சகுன சாஸ்திரம்

1. சகுன சாஸ்திரம் ஆவதென்ன?

சுபாவமான காரணங்களினால் அறிந்துகொள்ள இயலாததை அறியும்படி, பசாசை நேரே அழைப்பது, அல்லது அதைக் கூப்பிடுவதற்குக் குறிக்கப்பட்டவைகளை உபயோகிப்பது சகுன சாஸ்திரமாம்.


2. பசாசைக் கூப்பிடுவதற்கானவைகள் எவை? 

சுபாவமான காரணங்களினால் அறிந்து கொள்ளக் கூடாததை அறிவிக்கத் தம் சுபாவ சக்தியினால் இயலாதவைகளான உபாயங்கள்தான்.  உதாரணமாக: கைரேகை பார்த்து, இனி நடக்கப் போகும் விசேஷங்களை அறியப் பிரயாசைப்படுகிறது.


3. வீண் சாஸ்திரத்துக்கும் சகுன சாஸ்திரத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன?

உண்டாக முடியாத ஒரு காரியத்தை உண்டாக்கத் தேடுகிறது  வீண் சாஸ்திரம்; அறியமுடியாத காரியங்களை அறியப் பார்க்கிறது சகுன சாஸ்திரம்.


4. சகுன சாஸ்திரங்களில் சிலவற்றைச் சொல்லு. 

ஜோதிட சாஸ்திரம், வள்ளுவ சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், பட்சி (பறவை) சாஸ்திரம், திருவுளச் சீட்டுப் போடுதல், அரூபி களின் சகவாசம் முதலியன.


5. அதிர்ஷ்டமோ இல்லையோவென்று அறியும்படி சோதிட சாஸ்திரம் பார்க்கலாமா?

ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்துச் சோசியம் கேட்பது எப்போதும் பாவமாகும். ஆகையினாலே:

(1)  நட்சத்திரம், கிரகங்கள் முதலானவைகளைக் கணித்துத் தன் அதிர்ஷ்டத்தைத் தெரிவிக்கும்படி ஜோசியனிடம் கேட்பதும்,

(2) சாதகங்கள் கேட்பதும் அல்லது கேட்டிருந்தால், நம்பி அவைகளை வைத்திருப்பதும்,

(3)  கலியாணம் வைத்துக் கொள்வதற்கான சுபநாள் அல்லது முகூர்த்த நாளைப் பற்றி கேட்பதும்,

(4)  யாதொரு பெரிய காரியத்தை ஆரம்பிப்பதற்குத் தகுந்த நாள், மணி முதலியவற்றைச் ஜோசியனிடத்தில் விசாரிப்பதும், எப்போதும் சாவான பாவமாகும்.


6. காணாமற்போன பொருளைக் கண்டுபிடிப்பதற்கான வழியை ஜோசியனிடம் கேட்கலாமா? 

கேட்கவே கூடாது.


7. இனிமேல், தனக்கு நடக்கப்போகும் விசேஷங்களை அறிந்து கொள்ளும்படி கைகாட்டி ஜோசியன் முதலானவர்களைக் கேட்கலாமா?

அது சகுன சாஸ்திரமாகையால், அப்படிச் செய்யக் கூடாது. அதை நம்பிக் கேட்டால், சாவான பாவமாகும்.


8. நாளை மழை பெய்யுமா அல்லது வெயில் அடிக்குமா என்று அறிய சில குருவிகள் பறந்துபோவதைக் கொண்டு, அல்லது வானத்தையோ, சந்திர வட்டத்தையோ பார்த்து அறிவது சகுன சாஸ்திரமா?

இல்லை; ஏனெனில், அவைகள் இயற்கை அறிகுறிகள்தான்.


9. திருவுளச் சீட்டுப் போடலாமா?

(1)  பங்கு பாகம் பிரித்துக் கொள்ளும்போதும், யாதொரு தர்க்கத்தை முடிப்பதற்கும், திருவுளச்சீட்டுப் போடுவது பாவமல்ல.

(2)  ஒரு கனமான விஷயத்தை நன்றாய் ஆராய்ந்து பார்த்த பின், அதை முடிக்கக்கூடாதபோதும், நல்ல தீர்மானம் செய்வதற்கு, தக்க புத்தி சொல்வோர் யாரும் பக்கத்தில் இல்லாத போதும், தாழ்ச்சியோடும், விசுவாசத்தோடும், வணக்கத்தோடும் திருவுளச் சீட்டுப் போட்டால், பாவமாயிராது. 

அப்படியே யூதாஸ் தவறி விட்ட ஊழியத்துக்கும், அப்போஸ்தலத்துவத்துக்கும் யாரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று தெரியாததால், அர்ச். இராயப்பர் சர்வேசுரனை வேண்டிக் கொண்டு, திருவுளச் சீட்டுப் போட்டாரென்று வேதாகமத்தில் வாசித்துப் பார்க்கலாம்     (அப். நட. 1:24-26).

(3)  காரணமில்லாதபோது, அதாவது தான் செய்ய வேண்டிய தீர்மானத்தைச் சிரமமின்றி முடிப்பதற்காக மட்டும், அல்லது ஒரு காரியத்தை அறிந்துகொள்ளும்பொருட்டு, உதாரணமாக: பெண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளை யாரென்றும், மாப்பிள்ளைக்குத் தகுந்த பெண் எவளென்றும் அறிவதற்காகத் திருவுளச் சீட்டுப் போட்டால், பாவமாகும்.


10. அரூபிகளின் சகவாசம் ஆவதென்ன?

அரூபிகளோடு அல்லது இறந்துபோனவர்களின் ஆத்துமங்களோடு கூட்டுறவு பண்ணி, மனிதனுடைய சுபாவ அறிவினால் தெரிந்து கொள்ள முடியாத மறைந்த விஷயங்களை, அந்த அரூபிகளின் உதவியால் அறியும்படி பிரயாசைப்படுவதாம்.  இப்படிச் செய்வது விசுவாசத்துக்கு விரோதமான கனமான பாவம்.


11. நாம் காணும் கனவுகளை நம்பலாமா?

சர்வேசுரனுடைய சித்தத்தால் கனவு வரக்கூடும் என்றாலும், அப்பேர்ப்பட்ட கனவு வருதல் வெகு அபூர்வம்.  வழக்கமாய் இயற்கைக் காரணங்களினின்று கனவு வருகிறது. ஆகவே, நாம் காணும் கனவுப்படி காரியம் நடக்குமென்று நம்பக் கூடாது. “உன் மனதைக் கனவுகளில் வையாதே.  கனவுகள் அநேகரை மோசம் போகப் பண்ணின; அவைகளில் நம்பிக்கை வைத்தவர்கள் ஏமாறினார்கள்” என்று வேதாகமத்தில் சொல்லியிருக்கிறது (சர்.பிர. 34:6,7).


12. கனவுகளை நம்புவது பாவமா? 

தற்செயலால் வரும் கனவால் இனி நடக்கப் போகும் சம்பவங்களை அறியக் கூடும் என்று நம்புவது பாவமாம். ஏனெனில், அது வீண் சாஸ்திரம் பார்க்கிறதற்கு ஒப்பாயிருக்கிறது. “கனவுகளையும், சகுனங்களையும் பார்க்கிறவனும்... உங்களுக்குள் இருக்கலாகாது” என்று சர்வேசுரனுடைய கட்டளைப்படி மோயீசன் வசனித்திருக்கிறார் (உபா. 18:10).  ஆனாலும், அது பெரும்பாலும் சாவான பாவமாகாது.  உதாரணமாக, இன்னின்ன காரியத்தைச் செய்வதினால் தின்மை உண்டாகுமென்று கனவில் கண்டதினால், அதைச் செய்யாமல் போவது அற்பப் பாவமாகும்.  


சரித்திரம்

ஒக்கோசியாஸ் என்னும் ஒரு யூத இராஜா தன் அரண்மனையின் மேல் மெத்தையிலிருந்து சன்னலின் வழியாகக் கீழே விழுந்து மிகவும் வியாதியாயிருக்கையில், அவன் இறந்து போவேனோ உயிர் பிழைப்பேனோ என்று அறிய ஆசையினால், அக்கரோன் பொய்த்தேவனாகிய பெல்செபூத்தை விசாரிக்க தன் சேவகர்களை அனுப்பினான்.  அவர்கள் போகிறபோது ஆண்டவருடைய ஏவுதலின் பேரில் எலியாஸ் தீர்க்கதரிசி அவர்களுக்கு எதிராய் வந்து, “உங்கள் இராஜா பெயல்செபூத்திடத்தில் உங்களை அனுப்பினபடியால் ஆண்டவர் திருவுளம்பற்றுகிறதேதெனில்: இராசா தன் படுக்கையினின்று எழுந்திராமல் சாகவே சாவான்” என்று சொன்னார்  (4 அரசர் 1).