மெய்யான திருச்சபையின் குணங்கள்பேரிலும் அதன் போதனையின் பேரிலும்.

89. இந்த சத்திய திருச்சபை இன்னதென்று காண்பிக்கும் குணங்கள் யாவை? 

1-வது - ஏகம். 
2-வது - பரிசுத்தம். 
3-வது - பொது, 
4-வது - அப்போஸ்தலத்துவம். 
ஆகிய இந்நான்குமே மெய்யான திருச்சபையின் குணங்களாம்.


90. மெய்யான திருச்சபை ஏகமாயிருக்கிற தெப்படி?

திருச்சபைக்குட்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லோரும் வித்தியாசமின்றி ஒரேவிதமான கற்பனைகளை அனுசரித்து. ஒரேவிதமான தேவதிரவிய அனுமானங்களைப் பெற்றுக்கொண்டு, ஒரேஒரு பாப்பாண்டவருக்குக் கீழ்படிந்து வருகிறதினாலேதான்.


91. மெய்யான திருச்சபை பரிசுத்தமாயிருக்கிறதெப்படி? 

திருச்சபையை ஸ்தாபித்தவராகிய யேசுகிறிஸ்து நாதர் பரிசுத்தரும், திருச்சபை படிப்பிக்கிற போதனை பரிசுத்தமும், அந்த போதனையின் படி நடக்கிறவர்கள் பரிசுத்தர்களுமாய் இருக்கிறதினாலேதான்.


92. மெய்யான திருச்சபை பொது வாயிருக்கிறதெப்படி?

மெய்யான திருச்சபை எக்காலத்திலும் நிலை கொண்டு, எத்திசையிலும் எல்லா விதசனங்களுக்கும் தனது பரிசுத்த போதனையைப் படிப்பித்து வருகிறதினாலேதான். 


93. மெய்யான திருச்சபை அப்போஸ்தொலிக்காக இருப்பதெப்படி? 

மெய்யான திருச்சபை அப்போஸ்தலர்களுடைய போதனையைப் போதித்து, அவர்களிலிருந்து ஞான அதிகாரத்தை உண்மையாய்ப் பெற்றவர்களால் ஆளப்பட்டு வருகிறதினாலேதான்.


94, திருச்சபையின் சொற்படி கேளாதவர்கட்கு மோட்சம் உண்டோ? 

இல்லை.


95. இல்லை என்கிறதற்குத் திருஷ்டாந்தம் என்ன?

திருச்சபையின் சொற்படி கேளாதவன் அக்கியானியைப்போல் உனக்கு ஆகக்கடவான் என்று கர்த்தர் திருவுளம் பற்றினார்


96. இந்தத் திருச்சபைக்கு யேசுநாதர் என்னபிரதான உறுதி வாக்குகளைக் கொடுத்தார்? 

இது பூலோக முடிவு பரியந்தம் அழியாமல் நிலையாய் நிற்கும் என்றும். தவறின்றி சத்திய வேதத்தைத் தவறாமல் போதிக்கும் எனவும் வாக்குக் கொடுத்தார். 


97. திருச்சபை போதிக்கும் வேதசத்தியங்கள் எதில் அடங்கியிருக்கின்றன? 

வேதப்புத்தங்களிலும் பாரம்பரையான போதனைகளிலும் அடங்கியிருக்கின்றன. 


98. வேதப்புஸ்தகங்கள் ஆவதென்ன?

பரிசுத்த ஆவியின் ஏவுதலின்படி எழுதப்பட்ட சத்தியவேத ஆகமங்கள் தான். 


99. வேத ஆகமங்களில் எத்தனை பாகங்கள் உண்டு?

இரண்டு பாகங்கள் உண்டு. அதாவது யேசுநாதர் சுவாமி வருவதற்கு முன் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு ஒன்றும், அவர் வந்தபிறகு எழுதப்பட்ட புதிய ஏற்பாடு ஒன்றுமாம். 


100. பாரம்பரைப் போதனை ஆவதென்ன?

அப்போஸ்தலர்கள் காலம் முதல், தலைமுறை தலைமுறையாக வாய்மொழியில் திருச்சபையில் படிப்பிக்கப்பட்ட வேத சத்தியங்களேயாம்.