போதகம் 3 எவ்வாறு சர்வேசுரன் தம் பரிபூரண வாழ்வில் நாம் பங்குபெறச் செய்கிறார்?

(அ) செடிகள் மேல் கதிர்வீசும் சூரியனைப் போல்,

(ஆ) முந்திரிகைச் செடி தன் கொடிகளுக்கு ஈரப் பசையளித்து, பசுமை அடையச் செய்வது போல்,

(இ) சிரசு, உடலின் இதர பாகங்களுக்கு உயிர் அளிப்பது போல்.

(அ) செடிகளின் மேல் ஒளிக்கதிர்களை வீசும் சூரிய னைப் பாருங்கள். செடிகளுக்குச் சூரியன் ஒளியும் உஷ்ணமும் தருகிறது. எவ்வாறு என்று கவனியுங்கள். சூரியனிடமிருந்து சக்தி பெறாவிட்டால், செடிகள் வளர முடியாது. சக்தியைத் தரும் பெரும் ஊற்றாகச் சூரியன் விளங்குகிறது. செடிகள் வளர்ச்சி அடையவும், பக்குவம் அடைந்து பலன் தருவதற்கும் சூரியனுடைய சக்தி அவசியம். செடிகளின் மேல் சூரியன் செயல்படுகிறான். சூரியக் கதிர் நுழையாத இருண்ட இடங்களில் வைக்கப் படும் செடிகள் வாடிக் கருகி விடுகின்றன. இதிலிருந்து செடிகள் சூரியனிடமிருந்து சக்தி பெறுகின்றன என்பது தெளிவு. இது எவ்வாறு நடைபெறுகிறது என நாம் அறிவதில்லை . ஆனால் சூரியன் செடிகள் மேல் பிரகாசிக்கும் போதெல்லாம் இது நடைபெறுகிறது என்பதை அறிகிறோம். இப்பெரிய ஆற்றலைச் சூரிய னுக்குக் கடவுள் தந்துள்ளார்.

சர்வேசுரனும் சகல படைப்புப் பொருட்கள் மேலும் செயல்புரிகிறார். மனிதர் மேல் விசே விதமாக செயலாற்றுகிறார். நாம் மனித வாழ்வு வாழ்ந்து, மனிதனுக் குரிய செயல்களை நிறைவேற்றுவதற்கு, நமக்குச் சக்தி தருகிறார். நம் புத்தித் திறனை நாம் உபயோகித்து, அறிவை வளர்க்கவும், நம் மனதைப் பயன்படுத்தி அன்பு செலுத்தவும் செய்கிறார்.

அத்துடன் நில்லாது, மேலும் அதிசயமான முறையில் செயலாற்றுகிறார். நாம் அவரை அறிந்து, குறைவான அன்பைச் செலுத்துவதற்கு அல்ல; மாறாக, அவரை நம் தந்தையென அறியவும், அதற்குரிய அன்பைக் காட்டவும் தக்க ஆற்றலை நமக்குத் தந்து, தகுந்த வழியும் வகுத் துள்ளார். நாமிருந்த பிச்சைக்கார நிலையிலிருந்து நம்மைத் தம் அன்புக்குரிய சுவீகாரப் பிள்ளைகளாக உயர்த்தியுள்ளார் என்னும் மகிழ்ச்சியூட்டும் உண்மையை நாம் உணரச் செய்துள்ளார். இயல்பிலேயே நாம் இருக்க வேண்டிய நிலைமைக்கு உயர்வான , சுபாவத்திற்கு மேலான நிலைக்கு நம்மை உயர்த்தியுள்ளதை நாம் உணரச் செய்கிறார். சர்வேசுரனுடைய வல்லமை நம்மேல் அதிசயமான விதத்தில் இயங்கி செயல்புரிகிறது. நம் இயற்கைச் சக்திக்கு மேற்பட்ட வாழ்வை வாழ்வதற்கு நமக்குத் தெய்வீக சக்தியைத் தருகிறது. இவ்வாறே நம் முதற் பெற்றோரான ஆதாம் ஏவாளை சுபாவத்திற்கு மேலான வாழ்வுக்கு உயர்த்தினார். அதாவது, சர்வேசுரன் நம் முதல் பெற்றோ ருக்கு வரப்பிரசாதக் கொடையை - தேவ இஷ்ரப் பிரசாதத்தை - வழங்கினார்.

(ஆ) ஆனால் சர்வேசுரன் இன்னும் ஏராளமாகத் தம் திருவாழ்வில் நமக்குப் பங்கு வழங்க விரும்பினார். நம் முதல் பெற்றோருக்கு வழங்கிய நன்கொடைகளுடன் அவர் திருப்தி காணவில்லை போலும். சூரியன் செடி கொடிகள் மேல் செயலாற்றுவது போல் குறைந்த அளவில், தம் செயலை நிறுத்திக் கொள்ள அவர் விரும்பவில்லை. மேலும் அபரிமிதமாக மனிதனுக்கு அருள் விரும்பினார். இன்னும் நெருங்கிய விதத்தில் மனிதனுடன் உறவு கொள்ள விரும்பி னார். இத்தகைய அந்நியோந்நிய உறவை உருவாக்க, சர்வேசுரன் தம்முடன் மனிதனை இணைய வைக்கும் அற்புத சாதனமாக பாலம் ஒன்றை நிறுவினார் - அதாவது மத்தியஸ்தரை ஏற்படுத்தினார்.

மனிதனுக்கும், சர்வேசுர னுக்கும் இடையில் இருக்கும் தூரத்தைக் குறைத்து, எட்ட இருக்கும் கடவுளைக் கிட்டே கொணர்பவரைப் போன்ற ஒருவரை மத்தியஸ்தராக ஏற்படுத்தினார். இவரே மெய்யான கடவுளும், மெய்யான மனிதனுமான கிறீஸ்து. இவர் மனிதனுக்கு ஞான வேராகவும், அடிப்படையாகவும் ஆகிறார். அதன் பயனாக, "அவருக்குள் வேரூன்றினவர்களாகவும், அவர் மேல் கட்டப்பட்டவர்களாகவும்" (கொலோ. 2:7) இருக் கிறோம். அதாவது கிறீஸ்து முந்திரிகைச் செடியாகிறார். நாம் அதன் கொடிகள் ஆகிறோம். அதன் பயனாக தெய்வீக வேரான, தெய்வ வாழ்வின் ஊற்றான கிறீஸ்து, கொடி களான நமக்குத் தெய்வீக உயிரிலும் வாழ்விலும் பங்கு தருகிறார்.

இருநூறு அல்லது முன்னூறு அடி உயரமாக வளர்ந் தோங்கும் மரத்தைப் பாருங்கள். அதன் வேரிலிருந்து உச்சி வரையிலுள்ள கிளைகளைக் கவனியுங்கள். எத்தனை பெருங் கிளைகள், கப்பும் கவருமாக விரிந்து பரவும் அதன் கிளை களை, இலைகளை எண்ணிக் கணக்கிட முடியுமா? அதன் ஒவ்வொரு இலையும் வேரிலிருந்து எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது. ஆயினும் வேரினின்று ஈரப்பசை பெற்று பசுமை யுடன் விளங்குகிறதல்லவா? மரம் முழுவதிலும், அதன் ஒவ்வொரு பாகத்திலும் உயிரைத் தரும் அதே ஈரப் பசை ஓடிப் பாய்கிறதல்லவா? அவ்வாறே கிறீஸ்துவிலுள்ள அதே தெய்வீக உயிர் நம்முள்ளும் இருக்கிறது? முன்பு குறிப்பிட் டுள்ளது போல், சூரியன் தன் கதிரொளிகளைச் செடிகள் மேல் பாய்ச்சி, அதன் மூலம் செடிகள் சக்தி பெறச் செய் கிறான். ஆனால் சூரியனிலுள்ள சக்தியும், செடிகள் அடைந் துள்ள சக்தியும் ஒரே சக்திதான் எனக் கூறமுடியாது.

மாறாக, சர்வேசுரனில் உள்ள அதே உயிர்தான் கிறீஸ்துவின் மூலம் நமக்கு அருளப்படுகிறது. ஆகவே சர்வேசுரனுக்கும், மனிதனுக்குமிடையே நிலவும் பரஸ்பர ஐக்கியம் மிகவும் ஆழ்ந்தது. முன்பை விட - அதாவது முதல் பெற்றோருக்கு அளித்ததை விட அதிகமாக சர்வேசுரன் தம் ஜீவ சக்தியை மனிதனுக்கு வாரி வழங்குகிறார். இதனால் தான் நம் ஆண்டவர், ''அவர்கள் ஜீவனடையவும், அதை மென்மேலும் ஏராளமாய் அடையவும் வந்தேன்" (அரு. 10:10) என்று கூறினார். இதிலிருந்து, நம் முதல் பெற்றோருக்கு அருளப்பட்டு, அவர்கள் இழந்த அதே தெய்வீக வாழ்வை, சுபாவத்திற்கு மேலான வாழ்வை, நமக்கு மீண்டும் தருவதற்கும், மென்மேலும் ஏராளமாகத் தருவதற்குமே அவர் பரலோகத்தைத் துறந்து, பூலோகத்திற்கு வந்துள்ளார் என்பது தெளிவு. இவ்வாறு மனிதனுக்கும், சர்வேசுரனுக்கும் நெருங்கிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் சாதனமாக அவரே அமைந்து விட்டார்.