செப்டம்பர் 25

அர்ச். ஃபிர்மின் - ஆயர், வேதசாட்சி - (கி.பி. 303).

பிர்மின் கல்லியா தேசத்தில் பிறமதத்தைச் சார்ந்த தாய் தந்தையிடமிருந்து பிறந்து, பொய் தேவர்களை ஆராதித்து வந்தார். அவர் ஒருநாள் பொய் தேவர்களின் திருநாளன்று தன் தந்தையுடன் பேய் கோவிலுக்குப் போகும்போது, வழியில் ஒரு குருவானவர் கிறீஸ்தவ வேதமே சத்தியவேதம், மற்ற வேதங்கள் அபத்தமென்று ஞானப்பிரசங்கம் செய்வதை அவரும் அவருடைய தந்தையும் தாயும் கவனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குச் சென்றபின் மேற்கூரிய குருவானவரைத் தங்கள் வீட்டிற்கு வரவழைத்து சத்தியவேதத்தை அவர் மூலமாய் தீர்க்கமாய்க் கற்றறிந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். பிறகு தங்கள் குமாரனை சத்தியவேதத்தில் வளர்க்கும்படி அவரை அந்தக் குருவானவரிடம் ஒப்படைத்தார்கள். ஃபிர்மின் உலக கல்வியையும் வேதசாஸ்திரங்களையும் படித்து குருப்பட்டம் பெற்று, பிறருடைய ஆன்ம இரட்சண்யத்திற்காக வெகு கவனத்துடன் உழைத்து வந்தார். அவருடைய அர்ச்சியசிஷ்டதனத்தைப் பார்த்து அவருக்கு ஆயர் பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்குப்பின், ஃபிர்மின் நாடு நாடாய்ப் போய் பிரசங்கித்து, பேய் கோவில்களை இடித்து, எண்ணற்ற மக்களை சத்தியவேதத்தில் சேர்த்துக்கொண்டார். அநேக நகரங்களும் பட்டணங்களும் கிறீஸ்தவ வேதத்தைத் தழுவுவதைப் கண்டு, அப்பட்டணத்தார் அவரை பிடித்து வேதத்திற்காக கொலை செய்தார்கள். அவர் புதைக்கப்பட்ட கல்லறை, அநேக வருடங்களுக்குப்பின் அற்புதமாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் அநேக புதுமைகள் நடந்தேறி வருகின்றன.           

யோசனை

ஞானப்பிரசங்கம் என்றால் அநேகருக்கு கசப்பு. அந்நேரத்தில்தான் கோவிலைவிட்டு வெளியே போவார்கள். இது தவறு. நாம் எப்போதும் ஞானப்பிரசங்கத்தை ஆசையுடன் கேட்டு அதனால் பயனடைய முயற்சிப்போமாக.