நவம்பர் 25

அர்ச். கத்தரீன் - கன்னிகை, வேதசாட்சி - (கி.பி. 305).

கத்தரீன், அலெக்சாந்திரியா நகரில் செல்வந்தரும் உயர்குலத்தைச் சார்ந்தவர்களுமான தாய் தந்தையிடமிருந்து பிறந்தாள். இவளுக்கு ஞானமும் அறிவும் இருந்தமையால், கல்வியிலும், கலைகளிலும், தத்துவ சாஸ்திரங்களை கற்பதிலும் சிறந்து விளங்கினாள். சத்தியவேதத்தின் உண்மையை அறிந்து, ஞானஸ்நானம் பெற்று, புண்ணிய வாழ்வு வாழ்ந்து வந்தாள். அக்காலத்தில் உண்டான வேத கலகத்தில் கத்தரீன் பிடிபட்டு, இராயன் முன்னிலையில் நிறுத்தப்பட்டபோது, இவளுடைய அறிவையும் ஞானத்தையும் இராயன் அறிந்து அதிசயித்து, இவளுடன் வேதத் தர்க்கம் செய்யும்படி சாஸ்திரிகளான 50 பேரை கத்தரீனுக்கு முன் நிறுத்தினான். இவள் எடுத்துக்கூறிய வேத நியாயங்களை அந்த சாஸ்திரிகள் கேட்டு அதிசயித்து, கிறீஸ்தவ வேதமே சத்தியவேதமென்று நன்றாய் அறிந்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். இதனால் இராயன் அந்த 50 சாஸ்திரிகளையும் கொலை செய்தான். பின்பு கத்தரீன்மேல் அதிக பிரியத்தைக் காட்டி, தனக்கு மனைவியாகும்படி கூறினான். சேசுநாதரான தன் ஞானப் பத்தாவுக்குத் தன் கன்னிமையை ஒப்புக்கொடுத்து விட்டதாக கூறி, அவனை மணக்க மறுத்துவிட்டாள். இதைக் கேட்ட இராயன் அவளைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டான். இரவு வேளையில் இராயனுடைய மனைவியும், தளபதியும் சிறைச்சாலைக்குச் சென்று, கத்தரீனுடன் பேசியபோது, இவள் கூறிய புத்திமதியால் இருவரும் கிறீஸ்தவர்களானார்கள். இதைக் கேள்விப்பட்டு அவ்விருவரையும், மனமாற்றம் அடைந்ததற்காக இராயன் கொல்லக் கட்டளையிட்டான். கத்தரீனாளை சக்கர இயந்திரத்தில் கட்டி வதைக்கும்படிக் கூறினான். இவள் அந்த இயந்திரத்தின் அருகில் போய் ஜெபித்த மாத்திரத்தில் அது துண்டு துண்டாய் உடைந்து போயிற்று. உடனே இராயன் சினங்கொண்டு, இவள் தலையை வெட்டும்படி கட்டளையிட்டான்.

யோசனை

நாம் இதர மதத்தாருடன் வேத தர்க்கம் செய்யாத போதிலும் அவர்கள் மனந்திரும்பும்படியாவது வேண்டிக்கொள்வோமாக.