டிசம்பர் 10

அர்ச். எயுலேலியா, கன்னிகை, வேதசாட்சி - கி.பி. 304)

ஸ்பெயின் தேசத்தில் சிறந்த குடும்பத்தைச் சார்ந்த எயுலேலியா, இளம் வயதில் ஜெபதபம், அடக்கவொடுக்கம், தாழ்ச்சி முதலிய புண்ணியங்களை அனுசரித்து, கன்னிமையை விரும்பி, நேர்த்தியான ஆடையாபரணங்களைப் புறக்கணித்து, புண்ணிய வழியில் நடந்து வந்தாள். தியோக்கிளேசியன் உத்தரவுப்படி வேத கலாபனை நடந்து வந்த காலத்தில்,  12 வயது நிரம்பிய இவள், தான் வேதசாட்சியாக மரிக்க விருப்பம் கொண்டு, இதைப்பற்றி உற்சாகத்துடன் மற்றவர்களோடு பேசுவாள். இதைக் கேட்ட இவள் தாயார், அந்நகரை விட்டு, நாட்டு மாளிகைக்கு தன் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போனாள். வேதசாட்சியாக மரிக்க ஆசைப்பட்ட எயுலேலியா, ஒரு நாள் இரவில் தன் தாயாருக்குத் தெரியாமல் தான் முன்பு இருந்த நகருக்குப் புறப்பட்டுப் போய், தான் கிறீஸ்தவளென்று கூறியதினால், இவள் பிடிபட்டு அதிகாரி முன்னிலையில் நிறுத்தப்பட்டாள். இவளுடைய இளம் வயதையும் அழகையும் கண்ட அதிகாரி, இவள் மட்டில் இரக்கம் கொண்டு, இவள் தன் விரலால் சாம்பிராணியைத் தொட்டால் இவளை விடுதலை செய்வதாகக் கூறினான். வேதசாட்சி அதற்குச் சம்மதியாமல் தனக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த சிலையைக் கீழே தள்ளிவிட்டாள். இதைக் கண்ட அதிகாரி சினங்கொண்டு, இவளைத் துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடக் கட்டளையிட்டான். அவ்வாறே இவள்மீது விடப்பட்ட கரடி ஒன்று இவளைக் கடிக்காமல், கரடியை விட்டவனைக் கடித்தது. பிறகு அதிபதியின் கட்டளைப்படி இவள் கொடூரமாய் அடிக்கப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டாள்.

யோசனை

பிறரை பாவத்தில் விழும்படி தங்களை அலங்கரித்துக்கொள்ளும் பெண்கள், அந்த பாவப் பழக்கத்தை விலக்கக் கடவார்களாக.