செப்டம்பர் 07

அர்ச். ரெஜினா - கன்னிகை, வேதசாட்சி - (கி.பி. 256).

ரெஜினா பிரான்ஸ் தேசத்தில், பிறமதத்தைச் சார்ந்த பெற்றோரிடமிருந்து பிறந்தாள். இவள் பிறந்த சில நாட்களுக்குள் இவளுடைய தாய் இறந்தபடியால், இவளுக்கு பாலூட்டி வளர்க்கும்படி நற்குணமுள்ள ஒரு கிறீஸ்தவ பெண்ணிடம் இவள் தந்தை கொடுத்தார். அந்த ஸ்திரீ இவளைக் கவனத்துடன் வளர்த்து, இவளுக்கு வயது வந்தபோது, சத்திய வேதத்தை இவளுக்கு உணர்த்தினதினால், ரெஜினா ஞானஸ்நானம் பெற்று, சத்திய வேதக் கடமைகளை சரிவர அனுசரித்து, தன் கன்னிமையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள். இந்த செய்தியை அறியாத இவள் தந்தை இவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டான். கபடமற்ற ரெஜினா அடிக்கடி தனியாக வெளியே போய் உலாவி வரும்போது இவளுடைய அழகைக் கண்ட அநேக வாலிபர் இவளை மணமுடித்துக்கொள்ள விரும்பி, இவளுடைய தந்தையிடம் தங்கள் கருத்தை வெளியிட்டார்கள். அவர் திருமணத்தைப்பற்றி மகளோடு பேசியபோது, இவள் அதற்குச் சம்மதியாததையும் இவள் கிறீஸ்தவளாயிருப்பதையும் இவள் தந்தை அறிந்து, இவளைத் தன் வீட்டினின்று துரத்தி விட்டார். ரெஜினா தன்னை வளர்த்த தாயினிடம் போய்ச் சேர்ந்தாள். இதையறிந்த அதிகாரி இவளை வரவழைத்து கிறிஸ்தவ வேதத்தை விட்டுவிட்டு தன்னைக் திருமணம் செய்துகொள்ளும்படியாக கட்டாயப்படுத்தினான். அதற்கு இவள் சம்மதியாததை அவன் கண்டு இவளை கொடூரமாய் அடித்து உபாதித்தபோது, அங்கு கூடியிருந்த திரளான பிறமதத்தினருக்கு சத்திய வேதத்தின் மகிமையைப்பற்றி எடுத்துரைத்தாள். அப்போது ஒரு மாடப்புறா ஒரு முடியை மூக்கால் கவ்விக்கொண்டு வந்து அவள் தலைமேல் வைத்தது.  இதைக் கண்ட மக்களில் 751 பேர் கிறீஸ்தவர்களானார்கள். இதனால் அதிகாரி சினங்கொண்டு வேதசாட்சியின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டான்.

யோசனை

வாலிபப் பெண்கள் தக்க துணையின்றி வெளியிடங்களுக்குச் செல்வது ஒழுங்கல்ல.