டிசம்பர் 06

 அர்ச். நிக்கொலாஸ் - ஆயர் - (கி.பி. 343).

கணக்கற்ற அற்புத ஆச்சரியங்களைச் செய்து, கீர்த்தி மகிமையுடன் பிரகாசித்த மீரா நகரின் ஆயரான நிக்கொலாஸ் புண்ணியவாளரும் தனவந்தருமான பெற்றோரிடமிருந்து பிறந்து, புண்ணிய வாழ்விலும் ஒழுக்கத்தில் வளர்ந்து வந்தார். இவர் குழந்தையாயிருந்தபோது புதன், வெள்ளிக்கிழமைகளில் தன் தாயினிடத்தில், அமுதுண்ணாமலிருந்தார். இவருக்கு வயது வந்தபின், அந்நாட்களில் ஒருசந்தி இருப்பார். வேதசாஸ்திரத்தைப் படித்து குருப்பட்டம் பெற்றபின், ஒரு மடத்திற்கு மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரிடத்தில் சகல புண்ணியங்களும் நிறைந்திருந்ததுமன்றி விசேஷமாய் தர்ம குணம் அதிகமாய் பிரகாசித்தது.  ஒருவன் தன் மூன்று குமாரத்திகளையும் திருமணம் செய்து கொடுக்க தன் கையில் பணமில்லாததினால், அவர்களை வேசிகளாக்கிவிட நினைத்திருப்பதை நிக்கொலாஸ் அறிந்து, அந்தப் பெண்களுடைய திருமணத்திற்கு வேண்டிய பணத்தை மூன்று தடவை இரகசியமாய்ச் செலுத்தினதினால் அம்மூவருக்கும் திருமணம் நடைபெற்று, அவர்கள் பெரும் பாவத்திலிருந்து தப்பித்துக்கொண்டார்கள். பின்பு இவர் அற்புதமாய் மீரா நகருக்கு அதிமேற்றிராணியாராக நியமிக்கப்பட்டபின் வெகு கவனத்துடன் கிறீஸ்தவர்களை கவனித்து, பாவிகளை மனந்திருப்பி, பதிதரையும் பிற மதத்தினரையும் சத்தியவேதத்தில் சேர்த்துக்கொண்டார். ஒரு துஷ்டனால் கொலை செய்யப்பட்ட மூன்று குழந்தைகளுக்கு உயிர் கொடுத்தார். அநியாயமாய் மரணத்திற்கு தீர்வையிடப்பட்ட மூன்று பெரிய உத்தியோகஸ்தர் தம்மை மன்றாடினபோது, அவர்களை சாவினின்று இவர் அற்புதமாகக் காப்பாற்றினார். இவர் அர்ச்சியசிஷ்டவராய் மரித்தபின், இவருடைய எலும்பினின்று புறப்பட்ட அற்புதமான ஒருவித மதுர இரசத்தால் கணக்கற்ற நோயாளிகள் சுகமடைந்தார்கள்.  

யோசனை

நல்ல நிலைமையில் வாழ்ந்து, வறுமையுற்று, தர்மம் கேட்க வெட்கப்படுவோருக்கு, இரகசியமாக உதவி செய்வோமாக.