சுவாமி பாடுபட்ட சுரூபத்தை பார்த்துத் தியானிக்கும் ஜெபம்

என் ஆசைக்குரிய சேசு மரித்தாரோ? ஒருநாளும் மரிக்கக் கூடாதவர் மரித்தாரோ?  சகல மனிதர் உயிரைக் கடந்த மேலான உயிருள்ளவர் உயிர்விட்டாரோ?  எல்லாருக்கும் உயிரளிப்பவர் உயிர் விட்டாரோ? மனுமக்களுக்காகத் தேவ சுதன் இறந்தாரோ? ஆண்டவர் அடிமைகளுக்காக இறந்தாரோ? பாவிகளுக்காகப் பரிசுத்தர் உயிரிழந்தாரோ? ஓநாய்களுக்காகச் செம்மறிப் புருவை மாய்ந்ததோ? என் சேசுவே!  நீரோ இந்தச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது? சீவன் பிரிந்து உடல் விறைத்திருக்கும் உம்மையே சிநேகித்து ஆராதித்துப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி ஸ்துதித்து வணங்கி நமஸ்கரிக்கிறேன் சுவாமி.

சம்மனசுகளால் ஆராதிக்கப்படும் தேவ சிரசே! மனிதருக்காகக் கல்லிலும் புல்லிலும் சயனித்ததுமாய், முண்முடி அழுத்தின காயத்தால் ஒழுகி வடிந்த திரு இரத்தத்தில் தோய்ந்து மூர்ச்சையடைந்து உயிர் விட்டுக் கவிழ்ந்திருக்கும் என் சேசுவின் திருச்சிரசே!  இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன். கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து நீ மனிதருக்காகப் பட்ட அவமானத்தையும் அடைந்த நிந்தையையும் குறித்து என் அகங்கார கர்வத்தைப் போக்கித் தாழ்ச்சி உள்ளவனாகச் செய்வாயாக.

சம்மனசுகளுக்கு அனந்த சந்தோஷங் கொடுக்கிறதுமாய் சூரியனை மங்கடிக்குஞ்சோதி பிரகாச சுந்தர ஒளியுள்ளதுமாய் மனுமக்களில் ரூபலாவண்ய அலங்காரம் உள்ளதுமாய் இருக்கிற சேசுவின் திருமுகமே!  மனிதரின் அசுத்த உமிழ் நீரால் அழுக்கடைந்து அடிகளால் கன்றி, சிரசின் காயத்தில் நின்று ஓடிவிழும் இரத்தத்தால் சிவந்து, உயிர் பிரிந்ததினால் வெளுத்திருக்கும் என் சேசுவின் திருமுகமே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீ மனு­ருக்காக வேறுபட்டு வேற்றுருவானதைக் குறித்து பாவத்தால் நான் கொண்ட அவலட்சண சொரூபத்தை மாற்றி இஷ்டப்பிர சாதத்தால் அழகுள்ளவனாகச் செய்வாயாக.

எங்கள் பாவத்திற்காக அழுது சிலுவை முதலான உபத்திரவங்களைச் சந்தோ­மாகத் தரிசித்து கிருபாகடாட்சத்தோடு எங்களை நோக்கி எங்கள் குற்றங்களைப் பார்க்கச் சகிக்க மாட்டாமல் மூடியிருக்கும் என் சேசுவின் திரு விழிகளே!  இந்தச் சிலுவையில் உங்களை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீங்கள் எனக்காக சிந்தின கண்ணீரின் பலனை நான் இழந்து போகாதபடி உங்கள் கண்ணீரோடு என் கண்ணீரையும் ஒருமிக்கச் சேர்க்க எனக்கு வேண்டிய மனஸ்தாபத்தைத் தந்தருள்வீர்களாக.

அமிர்த பிரசங்கங்களைச் சொல்லி அரிதான தருமங்களை எளிதாகச் செய்ய போதித்து அனைவருக்கும் மோட்ச வழியைப் படிப்பித்து அருந்தாகத்திற்குப் பிச்சும் புளித்த திராட்சைபழ இரசத்தையும் சுவைபார்த்த என் சேசுவின் திரு நாவே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்கு கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, நீர் போதித்த நெறி வழியில் வழுவாமல் நடந்து என் சேசுவின் திருநாமம் ஒன்றே என் நாவுக்கு இனிதா யிருக்கும்படி உலக காரியமெல்லாம் எனக்குக் கசப்பாயிருக்கச் செய்வாயாக.

பரலோக பூலோக பாதாளத்தைப் படைத்து பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் உறவுகட்டி பரகதி வாசலைத் திறந்து பாவிகளுக்குத் தஞ்சமாக கைவிரித்து பாரஆணிகளால் சிலுவையில் அறை யுண்ட என் சேசுவின் திருக்கரங்களே!  இந்தச் சிலுவையில் உங்களை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து எனக்காக விரிக்கப்பட்ட திருக்கரங்களே, நான் ஒருபோதும் என் சேசுவை விட்டுப் பிரியாதபடி நேச ஆணிகளால் என்னையும் உங்களோடு சேர்த்து அறைவீர்களாக.

கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட் டிலும் சுற்றித் திரிந்து என்னைத் தேடி அலைந்து பாவத்தால் என் காலில் விழுந்த தளையை அறுக்க சிலுவையில் அறைபட்ட என் சேசுவின் திருப் பாதங்களே! இந்தச் சிலுவையில் உம்மை வணங்குகிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து இனி நான் அவரை விட்டு அகலாதபடி என்னை உங்கள் அருகில் சேர்த்துக் கொள்வீர் களாக.

போர் வீரனின் ஈட்டியின் வலிமையினால் குத்துண்டு காயப்பட்டதைவிட எங்கள் பேரில் வைத்த நேசப் பெருக்கத்தால் அதிக காயப்பட்டு இரத்தமெல்லாம் சிந்தி சிநேக அக்கினி மயமாய்ப் பற்றிஎரியும் என் சேசுவின் திரு இருதயமே!  இந்தச் சிலுவையில் உம்மை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.  கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து சேசுவின் சிநேகம் என்னிடத்தில் குடி கொண்டு இருக்கும்படி குத்துண்டு திறந்த திரு விலாக் காயத்தால் என்னுள்ளத்தில் எழுந்தருளி வந்து உனக்குப் பதிலாக என் இருதயத்தைச் சேசுவின் இடத்தில் வைப்பாயாக.  ஆ! என் சேசுவே! ஆசைக்குரிய சேசுவே! சிநேக தேவனான சேசுவே, உம்மை இத்தனை நிஷ்டூரமாய் வாதித் ததார்?  கொடிய நெஞ்சமுள்ள பிரதான குருக் களும், வேதபாரகரும், யூதரும் துஷ்ட குணமுள்ள சேவகருமோ உம்மை இப்படி வதைத்தார்கள்?  உம்மைத் தேவனென்றும் தேவ சுதனென்றும் மனிதரை மீட்டுஇரட்சிக்கவந்த இரட்சகர் என்றும் விசுவசியாத அந்தக் குருடர் அல்லவே உம்மை வதைத்தவர்கள்!  உம்மைத் தேவனென் றும் இரட்சகரென்றும் அங்கீகரிக்கிற நானல்லவோ வெட்கமும் ஈவும் இரக்கமுமில்லாமல் உமது திரு முகத்தில் துப்பினேன்?  நானல்லவா உமது தசை கிழிய அடித்து முண்முடியைச் சிரசில் பதித்தேன்? நான் அல்லவோ உமது கைகால்களையும் விலாவையும் குத்தித் திறந்தேன்? பரலோகமும் பூலோகமும் சாட்சியாயிருக்க நான் அல்லவோ உம்மைக் கொன்று கொலைப்படுத்தினேன்?  ஐயோ என் ஆண்டவரே, நான் செய்த கொடு மைக்கு இனி என்ன செய்வேன்?  நான் இத்தனை நிஷ்டூரங்களைச் செய்தும் இன்னும் என்மேற் தயை பாராட்டி என் உயிரைப் பறியாமல் எனக்கு உமது இஷ்டப்பிரசாதத்தைக் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிற என் நல்ல சேசுவே!  நீர் படும் உபாதைகளைக் கண்டு கருங்கல்லும் பாறையும் வாய் விட்டழுகிறதுபோல் பிளந்து நிற்க, கல்லிலும் ஈரமற்ற என் இருதயம் ஒன்றே கலங்காது நிற்கிறது. நீர் படும் உபாதைகளையும் அந்த உபாதைகளுக் குக் காரணமான உமது சிநேகப் பெருக்கத்தையும் கண்டு என் இருதயம் தணலில் விழுந்த மெழுகு போல் இளகுகிறது.  இந்த மட்டும் நான் உமக்குச் செய்த நிஷ்டூரம் போதும்; இனியாகிலும் நான் உமக்குத் துரோகம் செய்யாதிருக்க எனக்கு வேண்டிய இஷ்டப்பிரசாதத்தைத் தந்தருளும்.

தயாபரரான சேசுவே!  நீர் என்னைப் பற்றியும் என்னாலும்தானே இத்தனை உபாதைப்பட்டும் இன்னும் உமது பேரில் இரங்காதிருப்பேனோ!  ஆண்டவரே! உம்மை மிகவும் சிநேகித்து உமது திருப் பாடுகளின் மேல் இரங்கி, இடைவிடாதழுது அங்க லாய்த்தவர்களோடு நானும் ஒருவனாகச் சேர்ந்து அங்கலாய்க்கிறேன்.  அர்ச்சியசிஷ்ட மரியாயே! சேசுநாதர் பாடுபடும்பொழுதும் சிலுவையில் தொங்கிச் சீவன் விடும்பொழுதும், சீவன் பிரிந்த திருச்சரீரத்தை உமது திருமடியில் வைத்திருக்கும் பொழுதும் நீர் அனுபவித்த சொல்லிலடங்காத துக்க வியாகுலம் இப்பொழுது உமக்கொன்றும் அவசியமில்லாததினால் அந்த துக்க வியாகுலமெல் லாம் எனக்குதந்தருளும்.  என்மேல் வைத்த இரக்கத்தால் உயிர்விட்ட அவரைக்கண்டு நானும் அவர்மேல் இரக்கத்தால் உயிர்விடக் கடவேனாக.

சேசுவே!  என் உடலைவிட்டு இன்னும் உயிர் பிரிய  தேவரீர் திருவுளமாகாததினால் என் தோஷ துரோகத்தைக் கண்டு கூச்சப்பட்டு மனஸ்தாப மிகுதியால் உமது பாதத்தில் விழுந்து இடை விடாது கண்ணீர்சொரிய அநுக்கிரகம் செய் தருளும். ஆண்டவரே! மனஸ்தாப மிகுதியால் அநேக ஆத்துமாக்களின் இருதயம் பொடிப்பொடியாய் நொறுங்கினாற்போல என் இருதயமும் நொறுங் கவும் என் கண்கள் இரண்டும் ஓயாமல் கண்ணீர் சொரியும் ஊற்றுகளாயும், என் கண்ணீர் இரத்தக் கண்ணீராகவும் செய்தருளும்.  உமது பாடுகளின் மேலுள்ள உருக்கத்தாலும், என் பாவங்களுக்காகப் படும் மனஸ்தாப மிகுதியினாலும் என் உயிர் பிரிய உமக்குச் சம்மதமில்லாவிட்டாலும் என் பாவங் களுக்குப் பொறுத்தலாவது கட்டளையிட்டருளும்.

ஆயிரம் பதினாயிரம் முறை நரகத்திற்குப் பாத்திரமான என் பாவங்களைப் பொறுத்தருள நியாயமில்லையயன்றாலும் உமது நன்மைத் தனத்தை மறந்து உம்மை மறுதலித்த இராயப் பருக்கும் உம்மிடம் பொறுத்தல் கேட்ட நல்ல கள்ளனுக்கும் பாவப் பொறுத்தல் கட்டளையிட் டீரென்கிறதினால் நான் உமது தயையை நம்பி என் பாவங்களுக்குப் பொறுத்தல் கேட்கிறேன். உம்மை வதைத்த கொடிய சத்துருக்களுக்காக உமது திவ்விய பிதாவை இரந்து கொண்டதி னாலும், உமது கொலைகாரரில் ஒருவனாகிற எனக்கும் அந்த மன்றாட்டின் பலன் கிடைக்க வேண்டியதல்லோ! என் பாவங்களைப் பொறுத் தருள வேண்டுமென்று உம்மை நான் மன்றாடும் மன்றாட்டு உமது மன்றாட்டின் பலன் அல்லாமல் என்சத்துவமல்ல என்கிறதினால் உமது மன்றாட்டும் ஒருமிக்க வீண் போகாதபடி நீர் துவக்கினதை நீரே முடித்தருளும்.

உமது பிதாவானவர் இப்பொழுது உம்மை சகல படைக்கப்பட்ட வஸ்துக்களுக்கும் அதிபதி கர்த்தாவாகவும் சகல சீவியர்களுக்கும் மரித்தவர்களுக்கும் மத்தியஸ்தராகவும் ஸ்தாபித்திருக்கிற தினால் அப்பொழுது நீர் அவரைக் கேட்டுக் கொண்ட மன்றாட்டை இப்பொழுது நீர்தாமே கட்டளையிட வல்லவராயிருக்கிறதினால், அப்பொழுது நீர் ஆசைப்பட்டுக் கேட்ட எங்கள் பாவப் பொறுத்தலை இப்பொழுது நீரே எங்களுக்குக் கட்டளையிட்டருளும்.

ஆண்டவரே! நீர் விருத்தசேதனம் செய்து கொண்டபொழுதும், பூங்காவனத்தில் அவஸ் தைப்பட்ட பொழுதும், கற்றூணில் கட்டி அடிபட்ட பொழுதும், முள்முடி தரிக்கப்பட்ட பொழுதும், இரத்தத்தோடு ஒட்டியிருந்த உமது வஸ்திரத்தை உரிந்தபொழுதும், உமது கை கால்களில் ஆணி அறைந்தபொழுதும், திருவிலா வைக் குத்தித் திறந்தபொழுதும், ஒழுகி வடிந்த உமது திரு உதிரத்தைப் பார்த்து, என் பாவங் களையும் இன்னும் மற்றுமுண்டான மனிதருடைய பாவங்களையும், நான் யாருக்காக மன்றாட வேண்டியிருக்குமோ அவர்களுடைய பாவங் களையும், என் தப்பிதத்தினால் பாவத்தைக் கட்டிக் கொண்டவர்களுடைய பாவங்களையும் பொறுத்தருளும்.  எங்கள் பாவங்களினிமித்தம் எங்களுக்காகச் சிந்தப்பட்ட திரு இரத்தத்தைக் குறித்து எங்கள் பேரில் கிருபையாயிருக்க மன்றாடு கிறோம். எங்களை பழிவாங்கக் கேளாமல் எங்க ளுக்கு இரக்கம் செய்ய அபயமிடும் உம் இரத்தத் தைக் குறித்து எங்கள் மேல் இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் தோ­ துரோகங்களை அளவு கடந்த பேறுள்ள உமது இரத்தத்தைக் குறித்து எங்கள் மேல் கருணையாயிருக்க மன்றாடுகிறோம்.  எங்களுக்காக மனுப்பேசும் திரு இரத்தத்தைக் கொண்டுதானே தயையுள்ள சேசுவே!  தயையாயிரும் சுவாமி தயையாயிரும் என்று அலறி அழுகிறோம்.  அந்தத் திரு உதிரத்தில் ஒரு துளி எங்கள் இருதயத்தில் தெளித்தருளும், எங்கள் பாவ தோஷங்களெல்லாம் நிர்மூலமாய்ப் போகும்.

ஆண்டவரே! எங்கள் மன்றாட்டுக்கு இரங்கி எங்கள் பாவங்களைப் பொறுத்தருளினதினால் இத்தனை துரோகங்களைச் செய்தபின், எங்கள் நன்றிகெட்டதன்மையைப் பாராமல் இன்னமும் உமது கிருபையைத் தானே குறித்துத் தயைபுரிந் தீரென்று நினைத்து உமது மேல் அதிக நன்றி பாராட்டி எங்கள் குற்றங்களுக்காக அதிக மனஸ்தாபப்படுவோம். ஆ!  என் நல்ல சேசுவே! எங்கள் நன்றிகெட்ட தன்மை கரை காணாததாயிருந்தாலும் உமது நன்மைத்தன்மை அதிலும் கரை காணாத கருணைக் கடலாயிருக்கிறது.  சேசுவே! என் பாவப் பெருக்கத்தையும் உமது நன்மையின் விசாலத்தையும் நீர் அனுபவித்த வேதனை நோவுகளின் அகோரத்தையும் உமது அன்பின் பூரிப்பையும் காணும்பொழுது என் னிடத்தில் பிறக்கும் விம்மல் தேம்பல் பெருமூச் சினால் என் இருதயம் வெடித்து நாவடைத்துப் போகிறது.  இனி உமது திருப்பாதத்தைக் கட்டி அணைத்துக் கொண்டு, ஆ! சேசுவே!  ஆ! என் பாவமே!  ஆ!  என் கொடுமையே!  ஆ!  நன்மையே! ஆ! சிநேகமே!  ஆ! அன்பே!  அன்பே! என்று சொல்லுவேன். 

ஆமென்.