அர்ச். இராயப்பருக்குச் ஜெபம்

(ரோமை கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் பாப்பானவர்) (திருநாள் : ஜு ன் 29)

“பூலோகத்தில் நீர் கட்டுகிறதெல்லாம் பரலோகத்தில் கட்டப்படும்.  பூலோகத்தில் நீர் அவிழ்க்கிறதெல்லாம் பரலோகத்தில் அவிழ்க்கப்படும்” என்று கர்த்தர் சொன்னதால் மகா அதிகாரத்தைப் பெற்ற அர்ச். இராயப்பரே, திருச்சபைக்குத் தலைவராய் உம்மை ஏற்படுத்த சேசுநாதர் நினைத்திருந்தமையால், மனிதர் பலவீனம் உம்மில் காணப்பட, தேவஞானத்தில் தீர்மானிக்கப்பட்டதை யோசித்து, எனக்குள் ஒடுங்கி பயந்து நிற்கிறேன். 

சர்வேசுரன் தயையின்றி மனிதரால் ஒன்றும் ஆகாதென்று திருச்சபையின் தலைவராகிய உம்மிடத்திலே காண்பித்த ஞானக் கடலாகிய ஆண்டவருடைய அருமையான இரகசிய ஆலோசனைகளுக்கு என் சித்தம், புத்தி, நினைவு எப்போதும் ஒத்திருக்க தேவனை எனக்காக மன்றாடும். உமது துர்ப்பலத்தைக் கண்டுகொள்ளுமுன்னும், இஸ்பிரீத்துசாந்துவை சம்பூரணமாய் அடையுமுன்னும் நீர் செய்த பிசகுகளை நினைத்து சாகும் காலமட்டும் நொறுங்குண்ட இருதயத்தோடு திரளான கண்ணீர் சொரிந்துகொண்டு அழுதீரே. 

சொல்லுக் கெட்டா உபகாரங்களைக் கடவுளிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட நான், என் மேல் கொண்ட வீண் நம்பிக்கையால் தேவ அருளை ஆவலாய்த் தேடாமல் கட்டிக்கொண்ட தேவ துரோகங்களுக்கு சம்பூரண பொறுத்தல் அடைய அவரை மன்றாடும்.  

என் பாவங்கள் கடற்கரை மணலை விட ஏராளமாகி, என் தலைக்கு மிஞ்சின பாரமாயிற்றே! என் அக்கிரமம் வானம் வரை உயர்ந்தமையால், ஆயிரத்திற் கொன்று உத்தரவு சொல்லக் கூடாத நான் என்ன செய்வேன்? விஷ மரத்திலிருந்து புறப்பட்ட ஆகாத கிளை போலானேன். எனக்குள் சுகமேயில்லை. ஊற்றிலிருந்து தண்ணீர் சுரப்பது போல் என் இருதயத்திலிருந்து வீண் பெருமை, தற்சிநேகம், வீணாசை, கீழ்ப்படியாமை, கோபம், பொறாமை, துர்இச்சை, பொருளாசை முதலான துர்க்குணங்கள் புறப்படுகின்றன. 

நான் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விலக்கினவைகளைச் செய்யத் தூண்டப்படுவதால் மெத்தவும் கலங்குகிறேன். தேவரீர் இப்போது சகல பாக்கியங்களையும் கொண்டு சுவாமி அருகிலிருப்பதால், ஒரு விண்ணப்பம் எனக்காகச் செய்தால், அவர் உமது சொல்லைத் தட்டி விடுவாரோ? அதில்லையே! ஆகையால் நான் என் பாவதோஷங்களால் சீவனை விட்டு மரணத்திற்கும், நித்திய பாக்கியத்தை விட்டு நரகத்திற்கும் உள்ளாகாத படி எனக்காக ஆண்டவரை மன்றாடும்.  

பதினாயிரம் தாலேந்தென்னும் நாணயங்களை என் எஜமானாகிய தேவனிடத்தில் வாங்கியபின், அவைகளை என் தப்பிதத்தால் கொள்ளை கொடுத்து, தேவ சாயலை இழந்து, தோஷங்களால் காயப்பட்ட நிர்ப்பாக்கியப் பாவி நான்தானே! தேவனுடைய விசே­ கிருபையின்றி நான் எப்படி குணமாவேன்?  

அர்ச்சியசிஷ்ட இராயப்பரே, காணாமற் போன ஆடு நானாகையால், எனக்கு ஏராளமான வரப்பிரசாதத்தை வாங்கித் தந்து, மோட்சத்துக்கு ஏற இருப்பவர்களுடைய மந்தையில் சேர்த்தருளும். நறுக்குண்ட புத்தியையும், நொறுங்குண்ட இருதயத்தையும் நான் அடையச் செய்தருளும்.  நான் உம்மைப் போல் என் பாவங்களை நினைத்து ஆயுள் முழுவதும் அழும் வரத்தை நான் அடைய ஆண்டவரை மன்றாடும். நான் வானத்திற்கு விரோதமாகவும், என் தகப்பனாகிய சேசுநாதருக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன். நான் அவர் பிள்ளையயன்று அழைக்கப்படப் பாத்திரவான் அல்லவென்பது மெய்தான். ஆனால் தேவரீர் எனக்காக மனுப் பேசி என் பாவங்களுக்குப் பரிபூரண மன்னிப்பை அடைந்து கொடுத்தருளும்.  

ஆமென்.