பிரதான மந்திரங்கள்

சிலுவை அடையாளம்

பிதா, சுதன், இஸ்பிரீத்துசாந்துவின் (பரிசுத்த ஆவியின்) பெயராலே .  ஆமென்.


அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளம்

அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும்.  எங்கள் சர்வேசுரா, பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்துவின் பெயராலே. ஆமென்.


திரித்துவ தோத்திரம்

பிதாவுக்கும், சுதனுக்கும் இஸ்பிரீத்து சாந்துவுக்கும் (பரிசுத்த ஆவிக்கும்) மகிமை உண்டாவதாக.  ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.  ஆமென்.


சுருக்கமான இஸ்பிரீத்துசாந்து செபம்

திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே, தேவரீர் எழுந்தருளி வாரும். உம்முடைய விசுவாசி களுடைய இருதயங்களை நிரப்பும். அவைகளில் உம்முடைய சிநேக அக்கினியை மூட்டியருளும். உம்முடைய ஞானக் கதிர்களை வரவிடும். அதனால் உலகத்தின் முகத்தைப் புதுப்பிப்பீர்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வேசுரா சுவாமி, விசுவாசிகளுடைய இருதயங்களை இஸ்பிரீத்துசாந்துவின் பிரகாசத் தால் படிப்பித்தருளினீரே. அதே இஸ்பிரீத்து சாந்துவினால் நாங்கள் சரியானவைகளை உணரவும், அவருடைய ஆறுதலால் எப்போதும் மகிழ்ந்திருக்கவும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். இவைகளையயல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.  ஆமென்.

ஆண்டவரே, நாங்கள் சரீரக் கற்புடனே உமக்கு ஊழியம் செய்யவும் இருதய சுத்தத் துடனே உமக்குப் பிரியப்பட நடக்கவும் உம் முடைய இஸ்பிரீத்துசாந்துவின் அக்கினியினால் எங்கள் இருதயம் பற்றி எரியவும் தயை செய்தருளும் சுவாமி. எங்கள் கிரியைகள் வார்த்தைகளெல்லாம் உம்மைக் கொண்டு தொடங்கவும், உம்மிலே முடியவும் வேண்டியதாகையால், நாங்கள் அதைச் செய்கிறதற்கு முன்னமே உம்முடைய ஏவுதலைத் தந்தருளும்.  செய்யும் போது உமது உதவியைத் தந்து நடத்தும் ஆண்டவரே.  ஆமென்.


பரலோக மந்திரம்

பரலோகத்திலே இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.  உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.  ஆமென்.


அருள் நிறைந்த மந்திரம்

அருள் நிறைந்த மரியாயே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.  உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய சேசுவும் ஆசீர்வதிக்கப் பட்டவரே.

அர்ச்சியசிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.  ஆமென்.


விசுவாச மந்திரம்

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் சேசுகிறீஸ்துவை விசுவசிக்கிறேன். இவர் இஸ்பிரீத்துசாந்துவினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சியசிஷ்ட கன்னி மரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளங்களில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். இஸ்பிரீத்துசாந்துவை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீத பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். ஆமென்.


பத்துக் கற்பனைகள்

சர்வேசுரன் நமக்கு அருளிச் செய்த வேத கற்பனைகள் பத்து:

1 வது. உனக்குக் கர்த்தாவான சர்வேசுரன் நாமே; நம்மைத் தவிர வேறே சர்வேசுரன் உனக்கு இல்லாமல் போவதாக.

2 வது.  சர்வேசுரனுடைய திருநாமத்தை  வீணாகச் சொல்லாதிருப்பாயாக.

3 வது. சர்வேசுரனுடைய திருநாட்களை பரிசுத்தமாய் அனுசரிக்க மறவாதிருப்பாயாக.

4 வது.  பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக.

5 வது.  கொலை செய்யாதிருப்பாயாக.

6 வது. மோக பாவம் செய்யாதிருப்பாயாக.

7 வது.  களவு செய்யாதிருப்பாயாக.

8 வது.  பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

9 வது.  பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாயாக.

10 வது.  பிறர் உடமையை விரும்பாதிருப்பாயாக.

இந்தப் பத்துக் கற்பனைகளும் இரண்டு கற்பனைகளில் அடங்கும்:

1 வது.  எல்லாவற்றிற்கும் மேலாக சர்வேசுரனை நேசிப்பது.

2 வது.  தன்னைத்தான் நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பது.


திருச்சபைக் கட்டளைகள்

1 வது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

2 வது.  வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

3 வது.  பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்ளுகிறது.

4 வது.  வெள்ளிக்கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒருசந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.

5 வது.  விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கினமுள்ள (திருச்சபை தடை செய்திருக்கிற) உறவு முறையாரோடும் கலியாணம் செய்யாதிருக்கிறது.

6 வது.  நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.


உத்தம மனஸ்தாப மந்திரம்

சர்வேசுரா சுவாமி!  தேவரீர் அளவில்லாத சகல நன்மையும் நிறைந்தவராகையால் எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் முழுமனதோடு நேசிக்கிறேன்.  இப்படிப்பட்ட தேவரீருக்குப் பொருந்தாத பாவங்களைச் செய்தேனே என்று மிகவும் மனம் நொந்து மெத்த மனஸ்தாபப் படுகிறேன். எனக்கு இதுவே மனஸ்தாபமில்லாமல் வேறே மனஸ்தாபமில்லை.  எனக்கு இதுவே துக்கமில்லாமல் வேறே துக்கமில்லை.  இனிமேல் ஒருபொழுதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லை என்று உறுதியான மனதுடனே பிரதிக்கினை செய்கிறேன்.

மேலும் எனக்குப் பலம் போதாததால், சேசுநாதர் சுவாமி பாடுபட்டுச் சிந்தின திரு இரத்தப் பலன்களைப் பார்த்து, என் பாவங்களையெல்லாம் பொறுத்து, எனக்கு உம்முடைய வரப்பிரசாதங்களையும் மோட்ச பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்பியிருக் கிறேன்.

திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்கிற சத்தியங்களையெல்லாம் தேவரீர் தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன்.  ஆமென்.