திருச்சிலுவையைத் தரிசித்துச் செபிக்கும் செபம்


தெய்வீக சேசுகிறீஸ்துநாதர் உன்னைச் சுமந்து கொண்டு போகவும் உன்மீதில் அறையப்பட்டுப் பிராணத்தியாகம் செய்யவும் பேறு பெற்ற திருச் சிலுவையே, அடியேன் உம்மை வணங்குகிறேன்.

என் திவ்விய இரட்சகர் உன்னைக் கொண்டு பசாசுகளிடம் இருந்து அடியோர்களை மீட்டு இரட்சித்து ஆனந்தக் களிப்படையத் திருவுளமானார். இன்னமும் உன்னைக் கொண்டு எங்களைச் சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் திருவுளமாயிருக்கிறார்.

நித்திய இரட்சணியத்திற்கு உரியவர்களாய்த் தெரிந்து கொள்ளப் பட்ட கிறிஸ்துவர்களுக்கு அடைக்கலமும் அடையாளமும் நீயே. உன்னாலே நிலை கொண்டு, யுத்தஞ் செய்து இரட்சணிய விகற்பனான சத்துருக்களைத் துரத்தி ஜெயங்கொள்ள அவர்களுக்கு வெற்றிக்கொடியும் நீயே.

சேசு கிறிஸ்துநாதருக்கு ஆனந்தக் களிப்பாயிருந்தது நீயே. ஆதலால் அடியோர்களுக்கு ஆறுதலும் திடனும் நீயே ஆகக்கடவாய்.

அடியோர்களும் ஆராதனைக்குரிய இந்த திவ்விய இரட்சகரைப் போலவும் அவருடைய சிநேகப் பக்தர்களைப்போலவும் ஆவலுடன் உன்னை விசுவசிக்கத்தக்கதாகப் பரிசுத்தர்களாய் இல்லாதிருந்தாலும், சர்வ பிரயாசத் துடனே உன்னை அங்கீகரித்து பொறுமையோடு சுமக்கக் கடவோமாக.

சிலுவை மீது உயிர்ப்பலி தந்த சேசுவே அடியோருக்கு அரசே, தேவரீர் சிலுவை மீது அமைத்து வைத்த தயாளப் பொக்கிஷம் இன்ன பொக்கிஷ மென்று அடியோர்களுக்குத் தெரியப்படுத்தும்.

இவ்வுலகத்திலே அடியோர்களை அடர்ந்து வருகிற துன்ப துரிதங்களைப் பொறுமையுடன் அனுபவித்து, தேவரீரைப் பின்சென்று திருச் சிலுவையைச் சுமந்துக் கொண்டு போகத்தக்க திடனைத் தந்தருளும்.

தேவரீர் இந்தத் திருச் சிலுவையின் மூலமாக அடியோர்களுக்காகத் தேடிய நித்திய பாக்கிய சுகத்தில் அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

ஆமென்.