நன்றியறிந்த தோத்திரம்.

சர்வேசுரா சுவாமி, என்னை ஒன்றுமில்லாதிருக்கையிலே ஒரு மனிதனாக உண்டாக்கினீரே. சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

நான் செய்த பாவங்களினாலே நரகத்துக்குப் போகக் கடனுண்டாயிற்றே. அந்தக் கடனை என்னால் உத்தரிக்கக் கூடாதென்று தேவரீர் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு உத்தரித்தீரே. சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

அந்தப் புண்ணிய பலன்களையெல்லாம் ஞானஸ்நானத்தின் வழியாக எனக்குத் தந்தருளினீரே. சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

நான் ஞானஸ்நானம் பெற்ற பிற்பாடு அநேக முறை பாவங்களை செய்தேனே. அந்தப் பாவங்களையெல்லாம் பாவசங்கீர்த்தன வழியாகப் பொறுத்து என்னை நரகத்திலே தள்ளாமல் மோட்சத்துக்குப் போகிற வழியிலே நடத்திக் கொண்டிருக்கிறீரே. சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

நீர் இன்றெனக்கு எண்ணிறந்த உபகாரங்களையெல்லாம் செய்ததுமல்லாமல் பசாசு எனக்கு நினைத்திருந்த அநேக பொல்லாப்புகளையும் விலக்கினீரே. சுவாமி உமக்கே தோத்திரமுண்டாகக் கடவது.

நான் இன்று செய்த பாவங்களெல்லாம் என் நினைவிலே வரவும் அவைகளுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்படவும் உம்முடைய ஒத்தாசையை கட்டளை பண்ணியருளும் சுவாமி.

(போன ஆத்தும சோதனை தொடங்கி இந்நேரமட்டும் சிந்தனை, சொல், செயலினாலே செய்த பாவங்களையெல்லாம் பத்துக் கற்பனை பிரகாரமாக நினைக்கத்தக்கதாக பத்துக் கற்பனையும், திருச்சபைக் கட்டளையும் சொல்லவும். பின் ஆத்தும சோதனை செய்து பாவசங்கீர்த்தன மந்திரம் சொல்லவும்)