சுவாமியுடைய திரு ஆத்துமம் திருச்சரீரத்தை விட்டுப் பிரிந்ததென்று சிந்தித்து, பிதாவாகிய சர்வேசுரா! உமக்கு மிகவும் பிரியமுள்ள திருக்குமாரன் மகா நிர்ப்பந்தத்தோடு கற்றூணில் கட்டுண்டு வெகுவாய் அடிபட்டதையும், கூர்மையுள்ள முண்முடியைத் திருத்தலையில் அழுத்தி முட்கள் உருவின காயங்களால் திருமுகம் வீங்கியிருந்ததையும், அந்தக் காயங்களின் வழியாகப் புறப்பட்ட இரத்தத்தால் திருமுகத்தழகு மங்கியிருந்ததையும், திருக்கன்னத்தில் அநேக முறை பட்ட அடியால் திருக்கன்னம் வீங்கிக் கன்றிக் கருத்திருந்ததையும், கொலைஞருடைய அசுத்த உமிழ்நீர்களினால் அவர் திருமுகம் அழுக்கடைந்திருந்ததையும், திருச்சரீரத்தில் பட்ட அடிகளால் அவர் திருச்சதைகள் கிழிந்து துண்டு துண்டாய் விழுந்ததையும் திருப்பாதம் துவக்கி திருச்சிரசு வரைக்கும் பட்ட காயங்களால் சர்வாங்கமும் நொந்திருக்கிறவர் பாரமான சிலுவையைத் திருத் தோளில் சுமந்ததையும் இரண்டு கள்ளருக்கு நடுவில் நிஷ்டூரமாய் அறையப்பட்டுச் சிலுவையில் தொங்கியிருந்ததையும், பலபல தூஷணமான அவமான நிந்தைகளைக் கேட்டதையும், பேரொலியாகக் கூப்பிட்டு திருத்தலை குனிந்து திருக்கண் பஞ்சடைந்து திருவாய் திறந்து மரித்ததையும் குறித்து
இப்படியே தயை வருத்துவிக்கிற உமது திருக்குமாரனுடைய திருமுகத்தைப் பார்த்துத் தயையுள்ள பிதாவே! எங்களுக்குத் தயைபண்ணியருளும்.
ஆண்டவராயிருக்கிற சேசுக்கிறிஸ்துவே! உலகத்தினுடைய பாவங்களை போக்குகிறவரே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
(மூன்று விசை.)
எங்களுக்குப் பொல்லாப்புச் செய்கிறவர்களுக்கு நன்மை செய்து இரட்சியும். உம்முடைய சத்திய வேதத்தை பரவச் செய்யும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
ஆமென்.