தொழிலாளியின் ஜெபம்.

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே! நான் என் வேலைகளை விரும்புவும், அன்பு செய்யவும் அருள்வீராக!

நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும், பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணக்கமான கவனத்துடன் உழைப்பேனாக, எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தாருக்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.

தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே; உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாற்றுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடம் மன்றாடுவீராக.

ஆமென்.