மகிமை மாதாவுக்குப் பிரார்த்தனை.

சுவாமி கிருபையாயிரும். 2
கிறிஸ்துவே கிருபையாயிரும். 2
சுவாமி கிருபையாயிரும். 2

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்.

கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மகிமை தங்கிய புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆதி பிதா அருளால் அதிரூபலாவண்ணிய வடிவு கொண்டு ஏவை வினை தீர்த்து அலகை சர்ப்பத்தை நரகில் அடைத்த ஜெயசீலியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆனந்த ஞானித் திருமேனி உடைய சுயஞ்சீவி கர்த்தரை, மன்னுயிரை மீட்க மனு உருவாய் ஈன்றெடுத்த கன்னிசுத்தங்கெடாத மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஏழு வரப்பிரசாத திருக்கொடைக் கர்த்தனாய்ப் புறா வடிவாகிய சோதி இஸ்பிரீத்து சாந்துவுக்கு இன்பமுள்ள பத்தினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தானாதி இயேசு தமத்திருத்துவத்தின் சோதி அருள் கொண்டு வீற்றிருக்கும் தேவாலயமாகிய மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வானவர்கள் தவத்திற்குரிய முனிவர்கள் முதலிய நல்லோர் நாவில் ஊரும் தேனாகிய திரு நாமம் உடைத்தான மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மாசற்ற நிர்மல மகிமைப் பிரகாச சோதி அருள் துலங்கும் தெய்வீக மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பரிசுத்தத்தனத்தால் இவ்வுலக பாவ அந்தகாரம் அகற்றும் சந்திர ஒளியாய் அமைந்த மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

துர்க்கந்தப் பாவமற நற்கந்தம் வீசும்  லீலி புஷ்பமாகிய மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பக்தி விசுவாச பரம நன்மைகளைப் பகிர்ந்தளிக்கும் பொக்கிஷத்தின் பாக்கிய நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஒன்றான தேவனை ஒன்பது திங்கள் தாங்கும் கருப்ப சிங்காசன சவுந்தரியாகிய மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் புதல்வி என பெயர் பெற்றோங்க ஆபிரகாமின் வங்கிஷத்தில் வரும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆதி பிதாவை ஆராதித்து ஸ்தோத்தரிக்க அசைந்தொலிக்கும் நாதமணியாய் உதித்த மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் தேவாலயத்தில் பிரகாச ஒளி வீச வேத விளக்கமாய் விளங்கும்
மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாவின் சிங்காசனத்தில் பிரகாசிக்கும் மாசு மறுவில்லாத மாணிக்கமே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

திவ்விய பூசையின் திவ்விய பரிமள வாச மலராய் அமைந்த மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பூலோகமெங்கும் புகழ்ந்து ஆராதித்து வர வானலோகத்தில் அமைந்த விடியற்காலத்து நட்சத்திரமே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வான ராச்சியத்தை மகிழ்ந்து அரசாளும் மாட்சிமை கொண்டவளான மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆதி மனிதனால் அடர்ந்த பகையை தீர்த்து இரட்சிக்கும் மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தானாதியான சர்வேசுரனால் சர்வலோகத்துக்கும் உபகாரமளித்திட வானாதிபரனால் அமைந்த மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வெற்றி சேர் மன்னர் அடிபணிந்து மிக வணங்கி ஸ்துதி புரிய எத்திசையும் பிரகாசிக்க எழுந்தருளும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம புத்தி விரத்தர்களுடைய கற்பை நித்தமும் உறுதிப்படுத்தி நிலை நிறுத்தும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சத்திய போதக தவ முனிவர் தவறாத நன்னெறியில் நிலைக்கும் ஊக்கமாகிய மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தம மறையின் திருச்சபைகள் ஓங்கிக் கற்பனைப்படி ஏறத் தத்துவ ஞான திடனளிக்கும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கன்னியர் கற்புக்கு உறுதிநிலை தந்து தவத்தைக் கைக்கொள்ள முன்னின்று உதவி அருள் புரியும் முத்திப்பேறு பெற்ற மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

களைத்தவர்கள் தெளிவு பெறக் கதிர் வீசித் தாபரித்து செழித்தோங்க மனமிரங்கும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பசித்தோர்கள் உண்ண பரமானந்த சுவை மிகுந்த சென்னேல்லாய் விளைந்த மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

எளியோரை உயிர்ப்பித்து ஈடேற்றி இரட்சிக்கும் அளவில்லா நன்மை பெற்ற அலங்கார மகிமை நாயகியே,  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தரித்திரத்தால் தவிப்பவர்க்கு ஆறுதலாய் அவர்களை உயர்த்திப் பெருகவைக்கும் உபகார மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

கஸ்தி வியாகுலமுடையோருக்கு அருள் புரிந்து மன மகிழ்ச்சி விளைவிக்கும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வியாதி வேதனைப்படுகிறவர்களுக்கு வேண்டும்  சஞ்சீவி மாத்திரையைப் பாவிக்கும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பில்லி சூனியங்கள் பேய் பலத்தால் செய்து வரும் சல்லிய மாந்தரீகங்கள் ஆனதெல்லாம் நில்லாதொழித்துவிட நிகரில்லா வரம் பெற்று எல்லோருக்கும் உதவி செய்யும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அலைகடலில் திசை தப்பித் தேறுதல் இல்லாமல்  திகைப்பவர்களுக்கு ஊரும் வழியுமாகிய மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

மதியீனங்கொண்டு  மாய்கை வலைக்குள்ளாகிப் பதிவான நிலை தவறிப் பறந்து தவிப்பவர்க்கு அதிக தயை கொண்டு தப்பிப்போகாதபடி விசுவாசத்தில் நிறுத்தும் மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஊமைச்  செவிடருக்கும்  ஊனமிகு  முடவருக்கும் உதவி செய்து தற்காத்து தேற்றும்  மகிமை நாயகியே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகமதைப் பாராமல்  உலவும் கபோதிகட்குப் பல நலன்கள்  செய்க பாக்கிய மிகு  மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சம்மனசுகளின்  சந்தோசமாகிய  மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

பிதாப் பிதாக்களின்  எண்ணமாகிய  மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

வானமகிழும் கட்டழகியாகிய  மகிமை  நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

தீர்க்கதரிசிகளின்  தேர்ச்சி யாகிய  மகி நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

அப்போஸ்தலர்களின் திடனான  மகிமை நாயகியே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

சகல அர்ச்சிஷ்டவர்களின் கிரீடமாகிய  மகிமை நாயகியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்கள் மன்றாட்டை தயவாய்க் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய சேசுவே, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

செபிப்போமாக
நித்திய இயேசு சர்வேசுரா சுவாமி! ஒரு ஸ்திரீயால் மாசு கொண்டு  உமது தெய்வீக சித்தத்துக்கு விரோதம்  செய்த பூலோக நரர்களை மாசு கொள்ளாத வேறோர் ஸ்திரீயால் காப்பாற்றச் சித்தமானீரே! அப்படிப்பட்ட  மேலான வரங்களையும்  பூலேக மனிதருக்குத்  தாயென்னும்  பட்டத்தையும் கொண்ட மரியாயி  என்னும் பரம ஸ்திரீயின் திருமுகத்தைப் பார்த்து, நாங்கள் ஏவையின் பாச வழி நடவாமல் இந்தத் தூய  ஆண்டவளுடைய அருள்  வழியைக்  கண்டறிந்து  நடக்க எங்களுக்கு வேண்டிய வரங்களைத்  தந்தருள  வேண்டுமென்று அத் திருத்தாயைக் குறித்து உம்மை மன்றாடுகிறோம்!

ஆமென்.