அர்ச்சியசிஷ்ட சிந்தாயாத்திரை மாதாவை நோக்கி மன்றாட்டு.

எங்கள் அன்பான அன்னையே! சிந்தாயாத்திரை மாதாவே! உமது எழில் வதனத்தைக் காணவும், உம்மைப் போற்றி புகழவும் உமது அருள் துணையை வேண்டவும் உமது திருக்கோவிலைத் தேடி வந்துள்ளோம்.

உம் பிள்ளைகளாகிய எங்களைக் கைவிடாதேயும் தாயே! உம் திருக்கரத்தில் நீர் எந்தியிருக்கும் உமது திருமகன் இயேசுவே எங்களையும் உமக்கு பிள்ளைகளாகத் தந்துள்ளார் என்பதை எண்ணி உரிமையோடு உம்மை வேண்டுகிறோம்.

உலகமாகிய கடலிலே அலைமோதும் படகுபோல் எங்கள் வாழ்க்கையின் பல்வேறு கவலைகளாலும் சுமைகளாலும் நோய்களாலும் அலைகழிக்கப்படுகிறோம். நாங்கள் பயணம் செய்யும் இந்த உலகில் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி விண்ணகத்துறை சேர அருள்புரியும்.

கடலிலே எழும் காற்றிலும், புயலிலும், கொடிய அலைகளிலும் சிக்குண்டு எங்கள் தோணிகளும், படகுகளும் தத்தளிக்காமல், கடல் பயணம் செய்த உமது திருமகன் இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி எல்லா மரக்கலங்களையும் அவைகளில் பயணம் செய்வோரையும் பாதுகாத்தருளும்.

அம்மா சிந்தாயாத்திரைத் தாயே! அன்று திபேரியாக் கடலில் நடந்த அற்புதத்தைப் போல் எங்கள் எளிய படகுகளையும் மீன்களால் நிரப்ப உம் திருமகனை மன்றாடும்.  நீர் கையில் ஏந்தியுள்ள கப்பலைப்போல் எங்கள் ஒவ்வொருவரின் குடும்பக் கப்பலையும் உமது அரவனைப்பில் வைத்துப் பாதுகாத்தருளும்.

அன்னைக்குரிய பாசத்தோடு எங்களையும் எங்கள் குழந்தைகளையும் எங்கள் நகரில் வாழும் எல்லா மக்களையும் நல்ல உடல் நலத்தோடும் ஆன்மீக வளத்தோடும் பொருளாதார செழிப்போடும் வாழ வைத்தருளும். எங்கள் இளைய தலைமுறையினரும், ஆபத்தான வழிகளில் சென்று வாழ்க்கைப் படகை சீரழித்துவிடாமல் நல்வழி காட்டியருளும் அம்மா!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மக்களின் தொழில் முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற அருள்புரியும். நோவாவின் பேழையை வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாத்த இறைத்தந்தையின் பரிவிரக்கத்தை பாவிகளாகிய எங்களுக்கும் என்றென்றும் பெற்றுத்தாரும் தாயே!

ஆமென்.