அர்ச்சியசிஷ்ட பொம்பே மாதாவுக்கு 5-வது மன்றாட்டு.

ஓ, ஜெபமாலை இராக்கினியும் கன்னிகையுமானவளே, பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியும், சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரும், பரிசுத்த ஆவியின் பத்தினியும், அதி பரிசுத்த திரித்துவத்தினிடத்தில் சர்வ சக்தியுடையவருமானவரே! எனக்கு இவ்வளவு அவசியமாகிய இவ் வரப்பிரசாதம் என் இரட்சண்ணியத்துக்கு இடையூறாயிராவிடில், அதை நீர் எனக்கு அடைந்து தந்தருள வேண்டும்.

(இன்னதென்று  உறுதியாகச் சொல்லவும்)

அடியேன் இந்த மன்றாட்டை உமது அமலோற்பவத்தைக் குறித்தும் நீர் தேவதாயாரானதைக் குறித்தும் உமது சந்தோஷங்கள், வியாகுலங்கள், வெற்றிகளைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறேன்.

அன்றியும் உமது நேச இயேசுவின் திருஇருதயத்தைக் குறித்தும், நீர் அவரை உமது உதரத்தில் தரித்திருந்த ஒன்பது மாதங்களைக் குறித்தும், அவர் தமது ஜீவிய காலத்தில் அனுபவித்த துன்ப துரி தங்களைக் குறித்தும், பட்ட கொடிய பாடுகளைக் குறித்தும், சிலுவையிலடைந்த மரணத்தைக் குறித்தும் ,அவருடைய மகா பரிசுத்த நாமத்தைக் குறித்தும் ,அவரது  விலையேறப் பெற்ற திரு இரத்தத்தைக் குறித்தும் உம்மை மன்றாடுகிறேன்.

கடைசியாய் உமது அத்தியந்த மதுரமான திருஇருதயத்தைக் குறித்தும், ஓ, மரியாயே! சமுத்திரத்தின் நட்சத்திரமே!  வல்லபமுள்ள இராக்கினியே! பரலோகத்தினுடைய வாசலும் சகலவரப்பிரசாதங்களின் தாயாருமாகிய உம்மை நோக்கி மன்றாடுகிறேன். உம்மை நம்பினேன்; உம்மால் சகல நன்மைகளும் அடைவேனென்று உறுதியாயிருக்கிறேன். நீரே என்னை இரட்சிக்கக்கடவீர்.

(கிருபை தயாபத்து ஜெபம்)

ஆமென்.

திருக்கன்னிகையே நான் உம்மைத் துதிக்கக் கிருபை செய்தருளும். உமது பகையாளிகளுக்கு விரோதமாய் எனக்குத் தைரியமும் பலமும் தந்தருளும்.

இயேசுக்கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத் தங்களுக்கு நாங்கள் பாத்திர வான்களாய் இருக்கத்தக்கதாக, மிகவும் பரிசுத்த ஜெபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக.

தமது சீவியத்தாலும் மரணத்தாலும் உத்தானத்தாலும் எங்களுக்கு நித்திய இரட்சணிய சம்பாவனையை சம்பாதித்தருளிய ஏக புத்திரனின் பிதாவாகிய சர்வேசுரா சுவாமி, அந்தத் தேவ இரகசியங்களை முத்திப்பேறு பெற்ற கன்னி மரியாயின் மகா பரிசுத்த ஜெபமாலை வழியாய் நினைவு கூரும். அடியோர்கள் அவைகளுக்கொப்ப நடந்து அதிலுள்ள வாக்குத்தத்தங்களின் பேறடையத்தக்கதாக உதவி புரிந்தருளும்  . இவைகளை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.