13. குரு பாத்திரத்தை உயர எழுந்தருளப் பண்ணுகிற போது


மிகவும் மிகுந்த மதுரமான சேசு கிறிஸ்துவின் விலை மதியாத திரு இரத்தமே! மனிதர் செய்த பாவங்களுக்காகச் சிலுவை மரத்திலே நின்று சிந்தப்பட்ட உமக்கே நமஸ்காரம். பாவ விமோசனத்துக்காக சிந்தப்பட்ட திரு இரத்தமே! எங்கள் பாவங்களைப் போக்கியருளும்.

சேசுநாதருடைய திருக்காயங்களிலே நின்று ஓடி விழுந்த திரு இரத்தமே! உமக்கே நமஸ்காரமும் தோத்திரமும் உண்டாகக் கடவது.

அப்ப ரசத்தின் வர்ணம், வாசனை, ருசி, பிரமாணம் முதலான குணங்களில் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவத்துவமே! உம்மை வணங்கி நமஸ்கரிக்கிறேன்.

உம்மை யோசிக்கிறதில் என் இருதயம் முழுதும் அயர்ந்து போகிறதினால் என் சித்தம் முழுதும் உமக்கே கீழ்ப்படிந்திருக்கிறது. கண், ஸ்பரிசம், ருசி எதற்கும் காணப்படாமல் கேள்வியினால் மாத்திரமே விசுவசிக்க வேண்டியிருக்கிறது.

சத்திய வார்த்தையான தேவசுதனின் வார்த்தையை விடச் சத்தியமானது ஒன்றுமில்லையென்கிறதினாலே அவர் திருவுளம் பற்றின எல்லாவற்றையும் உறுதியாக விசுவசிக்கிறேன்.

தேவத்துவம் மாத்திரமே சிலுவையில் மறைந்திருந்தது. இதிலோவென்றால் தேவத்துவத்துடன் மனுஷத்துவமும் மறைந்திருக்கிறது.

தேவநற்கருணையிலே தேவ சுபாவமும் மனுஷ சுபாவமும் கூடியிருக்கிறதென்று விசுவசித்துச் சங்கீர்த்தனம் பண்ணி பச்சாத்தாபக் கள்ளன் கேட்ட வரத்தை நானும் கேட்கிறேன்.

அர்ச்சியசிஷ்ட தோமையாரைப் போலே தேவரீருடைய காயங்களின் துவாரங்களைக் காணேனென்றாலும் உம்மை என் தேவனென்று பிரசித்தமாய்ச் சொல்லுகிறேன். நான் உம்மிலே எப்போதும் அதிகமதிகமாய் விசுவாசம் நம்பிக்கை சிநேகமாயிருக்கக் கிருபை செய்தருளும்.

சேசுநாதரின் மரணத்தை ஞாபகப்படுத்தி மனிதருக்கு உயிரளிக்கும் சீவனுள்ள அப்பமே! என் ஆத்துமம் உம்மிலே சீவிக்கவும், எக்காலமும் நீர் அதற்கு மதுரமாயிருக்கவும் கிருபை செய்யும்.

குறையற்ற கருணையுள்ள பெலிக்கானான சேசுவே! பாவத்தினால் அசுத்தனாயிருக்கிற அடியேனை உம்முடைய திரு இரத்தத்தால் சுத்தனாகச் செய்தருளும்.

உமது திரு இரத்தத்தின் ஒரு துளி சகல உலக பாவங்களையும் கழுவித்துடைக்க வல்லதாகையால், மிகுந்த அசுத்தனாயிருக்கிற என்னை உமது திரு இரத்தத்தினால் சுத்திகரித்தருளும்.

சேசுவே! இப்போது மறைவில் உம்மைத் தரிசிக்கிற நான் இனி மறைவின்றித் தரிசிக்க மிகவும் ஆசிக்கிற உமதானந்த தரிசனையால் பாக்கியவானாகும்படி கிருபை செய்ய வேணுமென்று மன்றாடுகிறேன்.

ஆமென்.

மிகுந்த வியாகுல காரணத்தினால் சுவாமியின் சரீரத்தினின்று வியர்வையாகப் புறப்பட்டு நிலத்தில் சிந்தப்பட்ட சேசுவின் விலை மதியாத திரு இரத்தமே! இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன். கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து என் பாவத்தால் எனக்கு வந்த ஒழியாத துக்கத்தை நீக்குவீராக.

கற்றூணோடே கட்டப்பட்டு, ஆண்டவர் வெகுவாய் அடிபட்ட அடியின் வழியாகப் புறப்பட்டு, அவருடைய திவ்விய அங்க நிறத்தைக் கறைப்படுத்தி திருமேனியில் நின்று விழுந்து பூமியைப் பூச்சியமாகச் செய்த சேசுவின் விலை மதியாத திரு இரத்தமே! இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.

கிருபையுடைத்தான சேசுவைப்பார்த்து, என் பாவத்தின் கட்டறுபட பாவரூபத்தைத் தள்ளி இஷ்டப்பிரசாதத்தால் என்னை அழகுள்ளவனாகப் பண்ணியருளும்.

முள்ளாலே முடி செய்து, சேசுநாதருடைய திருச்சிரசிலே வைத்தடித்ததினாலே முள்ளுகள் தைத்த காயங்கள் வழியாய் வடிந்து விழுந்து சேசுவின் திருமுகத்தழகை நீக்கின என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே, இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.

கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, பாவ கர்வத்தால் எனக்கு வந்த அஞ்ஞான இருளை நீக்குவீராக.

பாவத்தினின்று என்னை மீட்டிரட்சிக்கப் பார ஆணிகளால் சிலுவையில் அறையுண்டு பலியான கை கால்களின் துவாரத்திலே நின்று புறப்பட்டுப் பேய்க்கு அடிமையாயிருந்த என்னை மீட்கக் கிரயமான என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே! இந்தப் பாத்திரத் தில் உம்மை வணங்குகிறேன்.

உம்மோடு கூட நான் மோட்ச இராச்சியத்திற்கு எழுந்தருளும்படி கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, என்னை அவர் திருப்பாதத்தில் சேர்த்தருளுவீராக.

சேசுநாதரின் திருவிலாவை நிஷ்டூரனொருவன் ஈட்டியினால் குத்தித் திறக்க அதிலே நின்று அற்புத மாகத் தண்ணீரோடு கூட புறப்பட்டு ஞான அபிஷேகத்தினாலே பாவிகளை ஞான முறைமையின் நற்பிறப்பை அடையச் செய்து ஆண்டவருடைய காயத்தால் ஞானத்திலே வளருகிறோம் என்கிறதற்குச் சந்தேகமற்ற இலட்சணமாயிருக்கிற என் சேசுவின் விலைமதியாத திரு இரத்தமே! இந்தப் பாத்திரத்தில் உம்மை வணங்குகிறேன்.

கிருபையுடைத்தான சேசுவைப் பார்த்து, உம்மால் மீட்டு இரட்சிக்கப்பட்ட என்னை முழுதும் உமது கைவசப்படுத்தினால், உம்மையல்லாமல் மற்றப் பொருளெனப்பட்ட யாவையும் மறப்பேன் சுவாமி.

ஆமென்.