நோயாளிகள் சொல்லத்தகும் செபம்.

ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார்  என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில்  தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.

மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும், எனக்காகவும் சிலுவையில் மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.

ஓ, என் தேவனே! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவிசெய்யும்.

அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா! நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும்படி எனக்கு உதவி செய்யும்.

என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன்.

ஓ என் தேவனே! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும்படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.

ஓ என் தேவனே! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.

என் அன்புள்ள இறைவா! என் பேரில் இரக்கமாயிரும்.

ஆமென்.