1. அடைக்கல மாதாவே! நீர் உண்மைக் கடவுளை அறிந்து ஆராதித்து உயர்வடைந்தீரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள், உண்மைக் கடவுளான பிதா, சுதன், பரிசுத்த ஆவியை நன்கு அறிந்து அவரை மட்டும் ஆர்வத்துடன் ஆராதித்து அவருக்கு உகந்த மக்களாய் வாழ்ந்து வருவதற்கு உதவி புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
2. உலக மீட்பரை அரிய முறையில் ஈன்றெடுத்து உலகுக்கு அளித்த அடைக்கலத் தாயே, இயேசு மீட்பரால் இந்த உலகம், குறிப்பாக எங்கள் தாய் நாடும் பெற்றுள்ள 1 பெற்று வருகின்ற அளவற்ற நன்மைகளுக்காக நாங்கள் நாள்தோறும் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். எமது சிறிய நன்றியறிதலை நீர் ஏற்று பரமன் திருவடியில் வைக்குமாறு உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
3. அமல உற்பவத்தாயே நீர் எக்காலமும் இறைவன் அருளால் நிறைந்திருந்து முக்காலமும் கன்னியாக நிலைத்திருந்து புண்ணிய நறுமணம் கமழும் தாயாக விளங்கினீரே, உமது குழந்தைகளாகிய நாங்கள் பாவத்தில் பிறந்து பாவச் சோதனைகளால் அல்லலுற்று வருகின்றோம் என்பதை தாழ்மையுடன் உணர்கிறோம். எங்கள் கணக்கற்ற பாவங்களை உமது திருமகன் இயேசுதாராள மனதுடன் மன்னிக்குமாறு எமக்காக வேண்டிக் கொள்ளும் படி உம்மை மன்றாடுகிறோம்.
9 அருள். பிதா.
4 வரங்களை வாரி வழங்கும் அன்னையே , அன்று திருமண வீட்டில் இரசம் இல்லை என்ற குறையை உமது திருமகனிடம் எடுத்துக் கூறி நிறைவு செய்தீரே. அந்த தாயுளத்தோடு இன்று எமது இல்லங்களிலும் உள்ளங்களிலும் இருக்கும் குற்றங் குறைகளை தீர்த்து விடவும் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்றுத் தரவும் விரைந்து வரும் படி உம்மை மன்றாடுகிறோம்
9 அருள். பிதா.
5. தாழ்மை நிறைந்த தாயே , உம்மை ஆண்டவரின் அடிமை என அறிவித்து , அவருடைய வார்த்தையின்படி எல்லாம் ஆக வேண்டுமென விரும்பினீரே, நாங்கள் எமது சொந்த உரிமை பேசும் பழக்கத்தை கைவிட்டு ஆண்டவரின் திருச்சித்தத்தை நன்கு அறிந்து அதை முழுவதும் நிறைவேற்றும் கடமையை உணர உதவி செய்யும்படி உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
6. சிலுவையடியில் நின்ற வீரம் செறிந்த தாயே , துன்ப துயரம் வந்த போது நாங்கள் இயேசுவின் ஊழியத்தில் தளர்ந்துவிடாமல் பொறுமையும் தாராள மனதும் கொண்டவர்களாய் வாழ வழிகாட்ட வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
7. அணைக்கும் அடைக்கலத்தாயே , 18ஆம் நூற்றாண்டில் மெய்மறைக்கு ஏற்பட்ட இடையூறுகளைத் தடுத்து என் முன்னோருக்கு அடைக்கலம் தந்தருளினீரே, இக்காலத்திலும் எமது கத்தோலிக்க வாழ்விற்கு ஏற்படும் இன்னல்களை நாங்கள் வெல்லவும் , பிற மதத்தினவருக்கு நாங்கள் குன்றில் மேலிட்ட விளக்கென ஒளி தந்து விளங்கவும் உதவி செய்யுமாறு உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
8. தவறிய குழந்தையைத் தூக்குவதற்கு விரித்த கைகளுடன் விரைந்து வரும் அன்னையே , பாவிகளாகிய நாங்கள் எவ்வளவுதான் தாழ்ந்து ஊதாரிகலாகிவிட்டாலும் எம்மை அன்போடு வரவேற்று அரவணைக்கும் அன்னை நீர் உண்டு என்னும் உண்மையை எமது உள்ளத்தில் பதியச் செய்ய வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
9 அருள். பிதா.
9. விண்ணுலக வீட்டின் வாயில் எனப்படும் தாயே ! எம்மை இந்தக் கண்ணீர் கணவாயில் காத்தது போல , இறுதி நேரத்தில் ஏற்படும் சோதனைகளில் இருந்தும் எம்மைக்காத்து விண்ணுலக வீட்டில் சேர்த்தருள வேண்டுமென உம்மை மன்றாடுகின்றோம்.
ஆமென்.
செபிப்போமாக.
எங்கள் அடைக்கலமும் ஆறுதலுமான ஆண்டவரே, உமது அடைக்கலத்தின் வெளி அடையாளமாக மரியன்னையை அமைத்தீரே. அந்த மாபெரும் நன்மைக்கு நன்றி கூறி, அந்த அன்னையின் அடைக்கலத்தில் அகமகிழ்ந்து வாழ நாங்கள் தாழ்மையோடும் நம்பிக்கையோடும் செய்த இந்த மன்றாட்டுக்களை தயவாய் ஏற்றருளும்படி உம்மை இறைஞ்சுகிறோம். இந்த மன்றாட்டுக்களை எங்கள் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.
ஆமென்.