கார்மேல் மாதா நவநாள் செபம்.

மிகவும் மதுரமுள்ள அர்ச்சியசிஷ்ட கன்னிகையே! பரம தேவ தாயே! உம்முடைய முந்தையோராகிய பிதாப்பிதாக்களுள் மிகவும் பூச்சியமான கீர்த்தி பெற்றவராகிய ஆபிரகாம் என்கிறவருக்கு சர்வேசுரன் கொடுத்த வார்த்தைப்பாட்டின்படி, உம்முடைய திருப்புத்திரனாகிய சேசுநாதரிடத்தில் சகல ஜாதி ஜனங்களும் இரட்சிக்கவும், ஆசீர்வதிக்கவும் பட்டதைப் பற்றி உம்மோடே அகமகிழ்ந்து உம்மை வாழ்த்தி ஸ்துதித்து வணங்குகிறோம்.

சர்வலோகத்துக்கும் ஆனந்தமான இராக்கினியே! சகலருக்கும் தயாபரியான ஆண்டவளே, பாவிகளுக்கு அடைக்கலமே, பரிதவிப்போருக்கு ஆதரவே , பாவப்பிணியை நீக்கும் பரம தேவ தாயே , உமக்கு உத்தம வணக்க தோத்திரம் பண்ணுகிற பக்தி சபைகளுக்குள்ளே உமக்கு விஷேஷ பிரியமும் மகிமையுமாயிருப்பதற்கு புனித உத்தரிய சபையை ஏற்படுத்தச் சித்தமாகி, அத்தியந்த பக்தியால் உமக்கு உகந்தவரான அர்ச்சியசிஷ்ட சிமியோன் ஸ்டோக் என்கிற மகத்துவமானவருக்கு திரு உத்தரியத்தைத் தந்தருளினீரே! அடியோர்களுக்கும் உமது ஆதரவின் ஈடாகத் தந்தருளிய இத்திரு ஆடையைப் பற்றி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

மீளவும் சாதாரண திருச்சபைக்குப் பிதாவும், தலைமையான குருவுமான புனித பாப்பானவருக்கு மிகுந்த கிருபையுடனே தரிசனமாகி, உம்முடைய திரு உத்தரிய சபைக்கு உட்பட்டவர்களில் யாராவது ஒருவர் பூவுலகில் பக்திச் சுமுத்திரையுடனே நடந்த பிறகு, மரித்து உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு போவார்களேயாகில், அதற்குப் பின் முதற் சனிக்கிழமையில் நீர் அவர்களை அத்தீயில் இருந்து மீட்டுக் கொண்டு, மோட்ச ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கப் பண்ணுவதாகத் திரு உளம் பற்றினீரென்றுவேத சாஸ்திரிகர் அநேகர் எழுதி வைத்தார்களே. இந்த வர்த்தமானம் உம்முடைய திருவடியார்களுக்கு எவ்வளவோ சந்தோஷத்திற்கும் நம்பிக்கைக்கும் இடமாயிருக்கிறது.

ஆ தயாளமுள்ள தாயே!! அடியேன் மிகவும் பாவியாயிருந்தாலும் உமது அத்தியந்த தயாளத்தை நம்பி உம்முடைய திருக்குமாரனிடத்தில்எனக்குக் கிருபை கிடைக்கும்படி செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அன்புள்ள தாயே! உமது திரு உத்தரியத்தைத் தரிசிக்கிற அடியேனைப் புறக்கணியாமல் உம்முடைய திருக்கரங்கொண்டு நடப்பித்தருளும்.

பின்னும் என் மரண சமயத்தில் எனக்கு வேண்டிய சகாயங்களைச் செய்து சகல சோதனை பொல்லாப்பு ஆக்கினைகளிலே நின்றும் உமது வேண்டுதலினால் என்னை இரட்சித்து, உம்முடைய திருக்குமாரனுடைய சமூகத்தில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுத்து, எனக்கு நித்திய மோட்ச பேரின்பத்தைப் பெறுவிக்க வேணுமென்று உம்மை மிகுந்த நம்பிக்கைப் பக்தி நேசத்துடனே வேண்டிக் கொள்ளுகிறேன் ஆண்டவளே!

ஆமென்.