சகாய மாதாவுக்கு சத்தியப்பிரமாணம்.

அர்ச்சிஷ்ட மரியாயே, மகா சக்தியுள்ள கன்னிகையே, இரக்கத்தின் அன்னையே, விண்ணக அரசியே, பாவிகளுக்கு அடைக்கலமே உம்முடைய மாசற்ற திரு இருதயத்திற்கு எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம்.

எங்கள் வாழ்வையும், நாங்கள் நேசிக்கும் அனைத்தையும், எங்கள் உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் எங்கள் வீட்டையும், நாட்டையும் எங்கள் குடும்பங்களையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.

எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உமக்கு உகந்ததாக்கவும், உமது உன்னதமான தாயன்பில் அவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.  இந்த உடன்படிக்கை நீடித்திருக்க எங்கள் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் போது செய்துகொண்ட உறுதி மொழிகளை நாங்கள் இன்று நினைத்து புதுப்பித்துக் கொள்கிறோம்.

எங்கள் திருத்தந்தை மற்றும் பேராயர்களின் சீறிய வழி நடத்துதலின் படி உண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழவும்,எங்களது பரிசுத்தமான விசுவாசத்தை உண்மையாகவும் தைரியமாகவும் எப்பொழுதும் அறிக்கையிடவும் உறுதி கூறுகிறோம்.

கடவுளின் கட்டளைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் குறிப்பாக கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாக அனுசரிக்கவும் உறுதி கூறுகிறோம்.

கத்தோலிக்க மதக் கோட்பாடுகளின் படி மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் , எங்கள் வாழ்வில் அங்கமாக கலந்து விட்ட பரிசுத்த திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்தவும் உறுதி கூறுகிறோம்.

ஓ மகிமை நிறைந்த அன்னையே, மாந்தர்களின் அன்னையே, உம்முடைய இறைத் திட்டங்களில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், உம் மாசில்லா திரு இருதயத்தின் உன்னதமான அன்பை சுவீகரித்துக் கொள்ளவும்,  எங்கள் இதயங்களிலும் எங்கள் நாடு மற்றும் உலக மாந்தர் அனைவரின் இதயங்களிலும் உமது திருமகனின் திரு இருதயத்தின் அரசை விண்ணக வாசிகள் ஏற்றுக் கொண்டது போல் மண்ணகத்தில் நாங்களும் ஏற்று வாழவும் உறுதி கூறுகிறோம்.

ஆமென்.