அர்ச்சியசிஷ்ட மிக்கேல் சம்மனசு சங்காரமாலை.


காப்பு.

மூவா முதல்வா! முக்தியின் மகிவா!
தேவா! துயவா, அமரர் கோவே;
காவாய்! கனிவாய் கருணை முகிலே
பாவால் பாடிட வரமருள் எந்தாய்!

நவவிலாச சபை தலைவராம் - தூய மிக்கேல்
தவ நிறை மேலோர் போற்றும் உயர்திரு நெறியாளர்
குவலயத்தோரின் நண்பன் தன்னொளியாளனாமே
உவமையிலாதவர் - பதங்களில் இந்நூலை வைத்து ஆசீர் வேண்டுதுமே!

1. தாரகை அம்புலியும் - செஞ்சுடர் வானமதும்
தரணியுமதும் தந்த - தூய இறைவனாகும்
பரதூதர் கணங்களைப் படைத்தனர் பணிந்திட
நரர் தமைப் படைத்தனர் - தன் தாழ் தொழுதிட.

2. இறைசாயலிலே ஆன - இறைமக்கள் மேல் சினந்து
மறைந்தவர் மடியவே - மாயவலை விரித்தது
குறை எதுமிலா - ஆதி பிதாக்களையே
கறைமிகும் மாந்தராக்கி - களித்தது கூளியுமே.

3. எரிதீயில் - வீழ்ந்த தீயலகையின் வினை நீக்க
புரியினும் தவம்பல் - அருளின்றி ஆவதுண்டோ
விரிகரம் தன்னிலெமைத் தாங்கினால் நீங்கும் துயர்
அரிமா போல் ஆர்த்து வர - வேண்டுகின்றோம் விண் தூதரே!

4. சிலுவை யடையாளமாதலால் சினந்த பேய்கள்
வலுகட்டாயமாக ஓட்டுவீர் - மிக்கேலாரே!
கொலு இருந்தாலுமவர் - வலுவினைப் போக்கியே நீர்
பலுகிடும் தீய மாசு - தன்னில் நின்றே காப்பீர்.

5. விடிவெள்ளி என்ற லூஸி - தூதனும் செருக்குற்றான்
கொடிய தூஷணை பல மடியின்றி உரைத்திட்டான்
இடியென ஒலித்ததும் - வீர முழக்கமாமே
அடி மேலடியடித்து அடைத்தீர் நரகதனில்.

6. உம்பர் கோன் உம்மை எந்தன் நண்பராய் ஈந்ததினால்
வம்புகள் பல செய்யும் - குணுங்குகள் தொல்லை நின்று
எம்பிரான் அருள் தன்னால் - எம்மையே காக்க வல்லீர்
உம்மையாம் பணிகின்றோம் - தூரத்திடும் பேய்களையே!

7. மாவினால் உரு சமைத்து - மந்திரம் பல இசைத்து
தீவினை செய்து எம்மை - வீழ்த்திட எண்ணமுற்றோர்
மேவினார் மாற்றானுடன் - படைப்பு பல அளித்தார்
ஈவின்றி பாய்ந்து வரும் - வஞ்சினப் பேயதுவின்,

8. ஆணவ ஆங்காரமும் - பஞ்சாய்ப் பறந்திடவே
வாணாள் முழுதும் எம்முன் - வாலினை ஆட்டிடாது
வீணான சதிகளை வீசி எறிந்திடாது
விண்ணகத் தூதுவரே - விரைந்தெழுந்தருள்வீரே!

9. பில்லி சூனியமும் - ஏவலும் சீட்டுகளும்
பொல்லாக்கைவளமும் - எறிந்திட எழுவீரே!
தொல்லைப் பிணிகளெமை - வெல்லாது நீக்கி விடும்
சொல்லொணா இன்னல்கள் - அல்லல்கள் யாவும் போக்கும்.

10. தந்தை போலெமக் குதவும் - தற்பரன் அதிதூதர்
மைந்தர் யாம் அழுதிட - மனம் இசையீர் அல்லவோ;
நிந்தைகள் எதுவரினும் - உந்தன் அருள் உளதேல்
சிந்தைகள் மகிழயவை - சீக்கிரம் மாறிடுமே.

11. வெட்டியே விலங்கினை - அட்டியில் படைத்தனர்
துஷ்டப் பேயழைத்து - நட்டம் பல இழைத்தார்;
பெட்டியில் பாம்பினைப்போடு - இட்டிடும் கூளிதனை
மட்டிலாக் கருணையால் - வாட்டும் இடர் நீக்கும்.

12. காளி, காட்டேரி, கூளி - கருப்பண்ணன் சங்கிலியும்
போளியுடன் அடிசில் - கேட்டிடும் அங்கண்ணனும்
தாளிசப் பொரியல் - வேண்டும் மாடன், தேவர்களும்
கேளிக்கை செய்திடாது - ஒழித்திடும் மிக்கேலாரே!

13. காமுகரைக் கடவுள் - ஆக்கியதே அலகை
கார்முகிலொரு கடவுள் - கருடனும் கடவுளாமே
காளையுமோர் கடவுள் - கரியதும் கடவுளாமே
காத்திட இவர் உம்மை தவறாது வேண்டுமென்று,

14. சாத்திரங்களை அமைத்து - சகுனம் நல்லதென்று
யாத்திர புராணங்களே - மெய்வேதம் என்றதுமே
ஆத்திரமுற்ற சாத்தான் - ஆண்டவர் மீது கொண்ட
பக்தியை நீக்கிட இத்தந்திரம் கொண்டதுவே!

15. பல்லி அடித்தலுக்கு பலன் காண்பார் பலருண்டு
எல்லாம் போயிற்றென்று - ஆந்தையழுதால் சோர்வார்
நல்ல சகுணம் காக்கை - கழுதை கத்தினால் என்று
சொல்லிட வைக்கும் பேயை - எள்ளியே தள்ளிடுவீர்!

16. பல்லிளிக்கும் பல்லவி பாடும் - பிளிறும், அலறும், பிணக்குகள் செய்யும்
கல்லெறியும் சலசலக்கும், ஊழையிடும் ஊமையுமாகும்
வில்லைப் போலுடலை - வளைத்தே உறுமும்
பொல்லாப் பேய்கள் தனின் - பல்லை உடைத்தெறிவீர்!

17. சாதி நீதி பேசும் - திதி கூறும் துதிபாடும்
விதியென்றும், சதியென்றும் விவரமாய் எடுத்தோதும்
மதிவாணர் மனதையும் நொடிதனில் மாற்றிவிடும்
கதியிலா பேயதனை - மிதியென மிதித்திடும் மிக்கேலாரே!

18. எட்டுத் திசையுடனே - ஈரெட்டு முக்கும்
கொட்டி முழக்கம் - பாழ் கெட்ட குறள்களை
எட்டிப் பாராது - மாய - வெட்டியே வீழ்த்திடுவீர்
மட்டிலா புகழ்மிகு எழில் - நிறை தூதா வாரும்!

19. சீதேவி மூதேவி பூதேவி நாதேவி!
சரம்பல தாங்கி நிற்கும் - நீலியும் மோகினியும்
சிக்கலில் சிக்க வைக்கும் - கொள்ளிவாய் குணங்களும்
சீக்கிரம் பயந்தோட - தூயவா வருவீர்!

20. சுடலைப் பிணமதை விரும்பிடும் பைசாசமும்
கடலைப்பொரி சுண்டல் - வேண்டிடும் அணங்கதுவும்
படலை படலையாக பழம் கேட்கும் அரக்கனும்
திடமிழந் தெழுந்தோட - படை நாதா வந்திடுவாய்!

21. வேளைக்கோர் வேஷமிட்டு - அந்தியிலும் சந்தியிலும்
ஆளைக் கெடுத்திட மரத்திலும் - மலையிலும்
பாளைப் பனையதிலும் - கோர உருவில் தோன்றி
மூளைக்கோளாறு தரும் - கணங்களை பிணைப்பீரே!

22. முக்கண்ணன் - முழுக்கண்ணன் பிடாரனாயிரம் கண்ணன்
பக்கத்தில் பலகையுள்ள நையாண்டி தேவர்களும்
திக்கு முக்காடிடவே - திகிலுடன் ஓடிடவே
பக்தர்களின் பரிபாலா - அக்களிப்பின் அருளான அருள் புரிவீர்!

23. கடகடவென சாத்தான் வெருண்டோட
படபடவென அவன் மாய்கைகள் வீழ
நடநடவென திடமுடன் நவின்று
சடசடவென நரகில் வீழ்த்துவார் மிக்கேலாரே!

24. கோழிக்கறி சமைத்து - முட்டையும் மதுவும் வார்த்து
நாழிநெல்லும் - பூக்களும் சேர்த்து நயமுடன் கூடி
வாழிய பிசாசென சாந்தி - போற்றி ஆட்டமாடி சங்கூதி
வீழிய இவன் என - விரைந்து செல்ல ஓலம் விட்டு,

25. கள்ளும் கொள்ளும் புள்ளும் எள்ளும்
தெள்ளிய அமுதும் - வள்ளிக்கிழங்கும் வகையாய்ச் சேர்த்து
அள்ளிடு துள்ளிடு எள்ளிடு தள்ளிடு என்றிடும்
வள்ளலார் வினைகளை - கிள்ளி எறிவீர் தூய தூதரே!

26. கருவாலும் உருவாலும் எருவாலும் புருவாலும்
அருளில்லாக் கயவர் செய்திடும் ஏவலை
கருணை முகிலாம் அருள்நெறி அண்ணலாம்
திருப்பரன் தூதரே! எரித்தெமை காப்பீர் - பரிவுடனே நீர்.

27. ஒன்று இரண்டு எட்டு மூன்று எனப்பல எண்களை
இன்னல் ஈந்திடும் - மந்திரமோதி மனமிகப் பொலிந்து
அன்பிலா நண்பர்கள் செய்திடும் ஏவலை
இன்றே எரித்திட - வருவீர் தூயரே! வந்தெமைக் காரும்.

28. ஒன்றேயாயினும் - பலபலவாயினும் ஒருக்கணித்து எமில் நுழையுமாயின்
துன்பம் பலபல விளையும் - ஆடச் செய்யும் - பாடச் செய்யும்
பன்மொழி தூஷணங் கக்கச் செய்யும் இன்மொழி யாவும் பறந்திடச் செய்து
புன்னகை வாயில் நுரையை எழுப்பி பீதியூட்டும் பேய்களை ஓட்டும்!

29. பாதத்தடியின் மண்தனையெடுத்து போதாதெனத் தலைமுடியும் சேர்த்து
தீதரஸ்வாளர் வெஞ்சினங் கொண்டு - பசாசுதனை பக்கத்திலாக்கி
மாதவன் மைந்தரை - ஒழிந்திட செய்திடும்
வாதைகளனைத்தும் - வாளால் மாய்ப்பீர் - வான் தூதர் தலைவர்.

30. முப்பத்து முக்கோடி தேவரை - ஈட்டியால் குத்தி எரிப்பீர் கொற்றவா நீரும்
தப்பாது பேய்கணங்களை எரித்திடும் - தப்பிட அவர் சூதினை எரித்திடும்
எப்போதோ நாட்டிய ஆணிகள்! எரிக்க மண்ணில் புதைத்த நறுக்குகள் எரிக!
ஒப்பிலா இறைவன் - இணையிலா தூதுவா - துகள்தனைத் துடைத்து நலமெலாம் அருளும்.

31. மூச்சு ஐயோ! எம் பெருமூச்சு என் செய்வோம்,
பேச்சு எதற்கு - பேதையர் எமக்கு - வாட்டுதே வாதைகள்
தீச்சுடர் போலெம் உளமெரிகின்றதே - உளமெரிகின்றதே
பாய்ச்சி ஈட்டியை வாதைகள் மீதே மீட்பீரெம்மை மிக்கேலாரே .

சரணம்.

32. அலகையைக் காலால் மிதித்தவரே சரணம்
உலகைக் காத்திடும் உம்பரே சரணம்
பலவகைப் பகைவரின் பயம் நீர் சரணம்
நலம் பல அருளிடும் - நாயகா சரணம்.

33. இன்றும் என்றும் புகலிடமாவாய்
அன்றி எமக்குத் துணை வேறுயாரோ?
நன்றியென்றும் உமக்களித்திடவே
என்றும் எம்முடன் இருந்தெமைக் காப்பீர்!

முடிவு தொடா நிலை.

34. மூவா முதல்வீன் பதம் பணிகின்றோம்
சீவ நாளெல்லாம் மறவோம் அவரை
தேவ குமாரன் அடி பணிகின்றோம்
ஆவலாய் அவரை ஏத்துகின்றோம்.

35. தூய ஆவியாம் இறைவனைப் போற்றி
நேய அவரருள் வேண்டுகின்றோம்;
தாயார் தேவ அன்னை அமலி
தீய பேய் தன் தலையை மிதித்தாள்.

36. அன்னையவளின் நாமம் போற்றுதும்
சின்னவானவர் தூயவர் அம்பரர்
என்றும் உதவிடும் மிக்கேல் தூதுவர்
தன்னைப் பணிந்து வாழ்த்துதல் கூறி,

37. சிரம் பணிகின்றோம் வரம் வேண்டி
பரமிகுந் தெமக்கு - வரம்பலப் பொழிவீர்!
உரமுடன் பாரில் வாழ அருள்வீர்
நரரெம் பகைவன் பேயினை ஓட்டி.
வாழச் செய்வீர்! வாழச் செய்வீர்!
போற்றி எனும்போது மலரினைத் தூவலாம்

38. தமதிருத்துவம் போற்றி போற்றி!
திருச்சிலுவை போற்றி! போற்றி!
தேவ அன்னை போற்றி! போற்றி!
தூய ஸ்நாபகர் போற்றி! போற்றி!
சகல அப்போஸ்தலர் போற்றி! போற்றி!
அனைத்து வேதசாட்சிகள் போற்றி! போற்றி!
தூயவர் யாவரும் போற்றி! போற்றி!
தூதர் கபிரியேல் போற்றி! போற்றி
தூதர் இரபேல் போற்றி! போற்றி
அதிதூதர் மிக்கேல் போற்றி! போற்றி

முற்றுப்பா.

39. பக்திச் சுவாலகர் பத்திராசனருடன்
ஞானாதிக்கர் - நாத கிருத்தியர்
சத்துவர் - பிலவத்தருமிணைந்து
பிராதமீகர் - தூதாதி தூதர்
எனும் நவகணங்கள் இடையறா திறைய
பரிசுத்தர் என பன்முறைப்பாடி
வாழ்ந்திடுங்காலை - நறுமணத்தூபம்
பசும்பொன் கலசத்தில் எழும்பிடும் வேளை
வாழ்வெனும் நிழலில் வாழும் எமக்காய்
தாழ்மை நிறைமிகு மிக்கேல் தூதரே!
வீழ்ந்து பணிந்து வேண்டிடுவீரே
நலமும் அருளும் பொருளும் தருவீர்
பலமும் நலமும் இல்லமும் ஈவீர்
தலக்கொடியாம் எம் சேயரைக் காப்பீர்
மலர்தலை உலகில் - எமை மறவாதீர்
எனயாம் பணிந்து வேண்டுகின்றோம்
வேண்டுதல் ஏற்பீர்! அபயம் அருள்வீர்
ஐயனே நாளும்! ஐயனே என்றும்!

ஆமென்.