கபிரியேல் சம்மனசு தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதைத் தியானிப்போமாக.

மரியா - ஓர் மிக இள வயதுப் பெண். அதிகமானால் பதினைந்து வயதிருக்கும். அவர்கள் ஒரு நீண்ட சதுர வடிவமான அறையில் இருக்கிறார்கள் - ஒரு நங்கைக்கு மிகப் பொருத்தமான அறை. அங்கே ஒரு தாழ்ந்த சாய்வில்லா இருக்கை ஒன்றில் கன்னிகை அமர்ந்திருக்கிறார்கள். பனியைப்போல் வெண்மையும், பட்டுப் போல் மெல்லியதுமான லினன் நூல் நூற்கிறார்கள். அவர்களின் அழகிய முகம் முன்புறமாக சற்றுக் கவிழ்ந்திருக்கிறது. ஏதோ இனிய நினைவுகளில் ஈடுபட்டிருப்பது போல் முகத்தில் சிறு நகை அரும்புகிறது.

மரியா மெல்லிய குரலில் பாடத் தொடங்குகிறார்கள். பின், குரல் சற்று உயருகிறது; ஆயினும் சத்தமாக இல்லை. அப்பாடலில் மரியாயின் குரல் அச்சிறிய அறையில் அதிர்கிறது. அதிலே அவர் களின் ஆன்மா அதிர்வதை உணர முடிகிறது. பஞ்சையும் தக்களி யையும் கையில் பிடித்தபடியே கையை மடியில் வைத்து தலையை நிமிர்த்தி சுவரில் சாய்ந்துள்ள மரியாயின் முகம் அழகாகச் சிவந்து விழிகள் பின்னால் மறைகின்றன..... என்ன இனிய நினைவோ! கண் களில் நீர் துளிர்த்து நிற்கிறது. கீழே பாயவில்லை. அது கண்களைப் பெரிதாக்கிக் காட்டுகிறது. அக்கண்கள் புன்னகை செய்கின்றன. மரியா இந்தப் பூவுலகத்திற்கப்பால் கவரப்பட்டிருக்கிறார்கள்.

பாடல் ஒரு ஜெபமாக மாறுகிறது : "மகா உன்னத சர்வேசுரா! உலகிற்கு சமாதானம் கொண்டுவர உமது ஊழியரை அனுப்ப இனியும் தாமதியாதேயும். உம்முடைய கிறீஸ்து வருவதற்குரிய அனுக்கிரகமான காலத்தையும், தூய வளமுள்ள கன்னியையும் எங்களுக்குத் தந்தருளும். தந்தையே! பரிசுத்த பிதாவே! இதற்காக உமது அடியாளாகிய என் வாழ்வை அர்ப்பணிக்க கிருபை புரியும்.

உமது ஒளியையும், உமது நீதியையும் இவ்வுலகில் கண்டு எங்கள் இரட்சண்யம் நிறைவேறி விட்டது என்று அறிந்த பிறகே நான் மரணமடையச் செய்யும். பரிசுத்தரான பிதாவே, தீர்க்கதரிசிகள் வாக்களித்தவரை பூமிக்கு அனுப்பும். என் உயிர் பிரியும் வேளை யில், உமது இல்லம் எனக்குத் திறக்கப்படும்படியாக, அதன் கதவுகள் உம்மை நம்பின அனைவருக்கும் உம்முடைய கிறீஸ்து வால் திறக்கப்பட்டதாக இருப்பதால், உமது அடியாளுக்கு உம் இரட்சகரை அனுப்பியருளும். வாரும் ஆண்டவரின் ஆவியான வரே! வாரும்! உம்மை எதிர்பார்த்திருக்கிற உம் விசுவாசிகளிடம் எழுந்து வாரும்! ஓ சமாதானத்தின் இளவரசே வருவீராக!...'' தன்னை மறந்தவர்களாய் மரியா அமர்ந்திருக்கிறார்கள்.....

அப்போது கதவின் திரை வேகமாய் அசைகிறது. பின்னால் இருந்து யாரோ அதைத் திறப்பது போல் அல்லது அதை இழுக்க அசைப்பது போல் தெரிகிறது. முத்துப் போன்ற வெண் ஒளியுடன் சுத்த வெள்ளியின் பிரகாசம் கலந்தது போன்ற ஒரு வெளிச்சம் அவ்வறையின் மெல்லிய மஞ்சள் சுவர்களைத் துலங்க வைக்கிறது. துணிகளை ஒளிரச் செய்கிறது. அவர்களின் நிமிர்ந்த முகத்தை மேலும் ஞானத் தன்மையாய்க் காட்டுகிறது. அந்த ஒளியில், நிறைவேறப் போகிற திருநிகழ்ச்சி மீது திரை மூடப்பட்டவாறே இருக்க, அங்கே, அதிதூதரான சம்மனசு சாஷ்டாங்கமாகப் பணிந்து காணப்படுகிறார். இப்போது திரை அசையவில்லை. அது இரண்டு கதவு நிலைகளுக்குமிடையில் தடுப்புச் சுவர்போல் விறைப்பாய் நிற்கிறது.

சம்மனசானவர் எப்படியும் மனித வடிவத்தைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. ஆயினும் அது ஆழ்ந்த மனிதத் தோற்றமா யிருக்கிறது. இவ்வழகிய, பிரகாசிக்கிற உருவம் என்ன மூலப் பொருளால் செய்யப்பட்டுள்ளது? கன்னிகையின் புலன்களுக்கு எட்டும்படி என்ன பொருளைக் கொண்டு கடவுள் இதைச் செய் தார்? அவர் மட்டுமே இத்தகைய பொருள்களைக் கொண்டிருக் கவும், இத்தனை சிறப்பாய்ப் பயன்படுத்தவும் கூடும். அந்த முகம், சரீரம், கண், வாய், முடி, கரங்கள் எல்லாம் நம்முடையவைகளைப் போலவே இருக்கின்றன. மாமிசம், கண், முடி, உதடுகள் எல்லாம், அசைந்து புன்னகை செய்து பார்த்துப் பேசுகிற நிறங்களாகியுள்ள ஒளியே அது.

"வாழ்க மரியா! வரப்பிரசாதத்தினால் நிறைந்தவர்களே! வாழ்க!'' விலையேறப் பெற்ற உலோகத் தட்டில் கொட்டப்படும் முத்துக்களின் இனிய இசையொலியாக அக்குரல் ஒலிக்கிறது!

மரியா தலையைத் தாழ்த்துகிறார்கள். தன்னிடமிருந்து ஏறக் குறைய ஒரு மீட்டர் தூரத்தில் ஒளிரும் அந்த உருவம் தன் கைகளை மார்பில் குறுக்காக சார்த்தியபடி முழங்காலிட்டு தன்னை அளவில் லாத வணக்கத்துடன் நோக்குவதைப் பார்த்து மரியா மேலும் அதிகமாகக் கலக்கமடைகிறார்கள். தன்னையறியாமலே தன் கைகளை தன் அகன்ற முழுக்கைச் சட்டையின் கைகளுக்குள் வைத்து நெஞ்சில் சார்த்தி அதை மறைக்கிறார்கள். குனிந்து தன் சரீரத்தை எவ்வளவு மறைக்கக் கூடுமோ அவ்வளவு மறைக்கிறார்கள். சாந்தமுள்ள அடக்கவொடுக்கமான தோற்றமாயிருக்கிறார்கள்.

"மரியா அஞ்சாதீர்! ஆண்டவர் உம்முடன் இருக்கின்றார்! எல்லா பெண்களுக்குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்!'' என்கிறார் அதிதூதர்.

மரியா இன்னும் தயங்கியபடியே நிற்கிறார்கள். “மரியா! அஞ்சாதீர்” என்று மீண்டும் கூறுகிறார் அதிதூதர். ''நான் கபிரியேல். கடவுளின் தூதன். என் ஆண்டவர் உம்மிடம் என்னை அனுப்பியிருக்கிறார். பயப்படாதீர். ஏனென்றால் சர்வேசுர னுடைய கண்களில் கிருபை பெற்றிருக்கிறீர். நீர் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்று அவரை "சேசு " என அழைப்பீர். அவர் பெரியவராயிருப்பார்; உந்நதரின் மகன் எனப்படுவார். அவர் உள்ளபடியே தேவ சுதனாக இருப்பார். ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அவருடைய முன்னோரான தாவீதின் சிம்மாசனத்தைக் கொடுப்பார். யாக்கோபின் வீட்டை அவர் என்றென்றும் அரசாள் வார். அவரது அரசாட்சிக்கு முடிவிராது. கடவுளால் நேசிக்கப் படுகிற பரிசுத்த கன்னிகையே, அவரால் ஆசீர்வதிக்கப்பட்ட மகளே, அவரது சுதனின் தாயாக இருக்க அழைக்கப் பட்டவரே! எத்தகைய மகனைப் பெற்றெடுப்பீர் என்பதைக் கண்டுபிடியும்.''

''நான் மனிதனை அறியாதிருக்கையில் இது எங்ஙனமாகும்? ஒரு வேளை ஆண்டவராகிய சர்வேசுரன் தம் அடிமையின் காணிக்கையை ஏற்க மாட்டாரோ? அவருடைய அன்பிற்காக நான் கன்னிகையாயிருக்க அவர் விரும்பவில்லையோ?''

"மனித செயலால் நீர் மாதா ஆக மாட்டீர். நீரே நித்திய கன்னிகை, கடவுளின் பரிசுத்த கன்னியாயிருக்கிறீர். பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உந்நதரின் வல்லபம் உம்மைத் தன் நிழலால் சூழும். ஆதலால் உம்மிடம் பிறக்கும் குழந்தை பரிசுத்தர் என்றும், கடவுளின் குமாரன் என்றும் அழைக்கப்படுவார். நம் ஆண்டவராகிய கடவுள் எல்லாம் செய்ய வல்லவராயிருக்கிறார். மலடியான எலிசபெத் தன் முதிர் வயதில் ஒரு மகனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள். அந்தக் குழந்தை உமது திருக்குமாரனின் தீர்க்கதரிசியாயிருந்து அவருடைய வழிகளை ஆயத்தம் செய்வார். ஆண்டவராகிய கடவுள் எலிசபெத்தின் இகழ்ச்சியை நீக்கி விட்டார். அவளுடைய மகனின் பெயர் உம் திருக்குமாரனின் பெயருடன் இணைக்கப்படுவது போல் அவளது ஞாபகம் உமது ஞாபகத்துடன் ஜனங்கள் மத்தியில் இருக்கும். உங்கள் இருவருக்கும், விசேஷமாய் உமக்கும் வந்துள்ள தேவ வரப் பிரசாதத்தினிமித்தம் இறுதித் தலைமுறை வரை நீர் பாக்கியவதி என்று அழைக்கப்படுவீர். உம் வழியாக எல்லா மக்களுக்கும் வரப்பிரசாதம் வந்துள்ளது. எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம். அவளின் சுமை அவளை மகிழ்விக்கிறது. உமது மகிழ்ச்சியை அவள் கேள்விப்படும்போது இதைவிட இன்னும் அதிக மகிழ்ச்சிக்கு உயர்த்தப்படுவாள். வரப்பிரசாதத்தால் நிறைந்துள்ள மரியாயே! ஆண்டவரால் ஆகாதது எதுவுமில்லை. என் ஆண்டவரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்? எந்த நினைவும் உம்மை சலனப்படுத்த வேண்டாம். அவரை நீர் நம்பினால் அவர் உம்முடைய காரியங் களையெல்லாம் பாதுகாத்துக் கொள்வார். உலகமும் மோட்சமும் நித்திய பிதாவும் உம்முடைய வார்த்தைக்குக் காத்திருக்கிறார்கள்.''

அப்போது மரியம்மாள் தன் கரங்களைக் குறுக்காக தன் நெஞ்சில் சார்த்தி, தாழ்ந்து பணிந்து : "இதோ ஆண்டவருடைய அடிமையானவள். உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'' என்கிறார்கள். மகிழ்ச்சியினால் தூதர் ஒளிருகிறார். முழந்தாளிட்டு ஆராதனை செய்கிறார். காரணம், சம்மதித்துப் பணிகிற கன்னிகையின் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்குவதை நிச்சயம் அவர் காண்கிறார். பின் திரை அசையாமலே மறைகிறார். புனித திருநிகழ்ச்சியின் மேல் திரைமூடியே இருக்கிறது.