புனித மரிய பெர்னதத் : மாதாவை 18 தடவை பார்த்த சிறுமி (1844 – 1879) –தொடர்ச்சி

மாதாவின் வணக்கமாத சிந்தனைகள் - 17 : “ நாமே அமல உற்பவம் “ – மாதா-2

1858-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ம் நாள் மிக மிக குளிராயிருந்தது. பெர்னதத்தின் தந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில் அனல் மூட்டுவதற்காக விறகு தேவைப்பட்டதால் அந்தக் குளிரில் விறகு சேகரிக்க புறப்பட்டாள். ஆஸ்துமாவினால் அவதியுறும் மகளை அனுப்பத் தயங்கினாலும், 

“ அம்மா கவலைப்படாதீர்கள், ஆடு மேய்க்கும் நாட்களில் கடுங்குளிரிலும் வெளியே போய்ப் பழகியிருக்கிறேன் “ என்றாள். தாய் தன் மகளை வெள்ளைக் கம்பளியால் போர்த்தி அனுப்பினாள். பெர்னதத்துடன் அவள் தங்கை மேரியும், பக்கத்து வீட்டுப் பெண் ஜேனியும் நிறைய விறகு கிடைக்கக்கூடிய ஒரு குகையை நோக்கி சென்றனர். அங்கே கேல் நதியின் அருகே ஒரு குகை இருந்தது. அந்த ஓடையை கடந்து மேரியும், ஜேனியும் சென்று விட்ட நிலையில் குளிராக இருந்ததால் சற்று தயங்கி நின்றாள். பலத்த காற்று வீசியது. அந்தக் குகையில் ஒரு அழகிய சீமாட்டியைக் கண்டாள். கனவா? நனைவா என்றறிய கண்களைத் துடைத்து கொண்டு உற்று நோக்கிய போது உண்மையான காட்சி என்பது புரிந்தது.

தாய் மரியாள் விவரிக்க இயலாத அழகுடன் அங்கே காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். 

பெர்னதத தன் தங்கையிடமும், ஜேனியிடமும், 

“ பதினாறு அல்லது பதினேழு வயது பெண் ஒருத்தி வெள்ளை நிற ஆடையுடனும் இடையில் நீல நிற கச்சையுடனும் காணப்பட்டாள். அவளுடைய தலையில் வெள்ளை நிற முக்காடு ஒன்று பின்பகுதியை மறைத்தும், அவளுடைய கால்களில் ரோஜாப் பூக்களும், அவளுடைய கரத்தில் வெள்ளை நிற மணிகளைத் தங்க செயினால் சேர்க்கப்பட்ட ஜெபமாலையும் இருந்தது”. என்று விவரித்த போது அவர்களால் நம்பாமல் இருக்க முடியவில்லை. அந்த இருவரும் சென்று அவரது தாயிடம் ஒன்றுவிடாமல் சொல்லி விட்டனர். இதைக் கேள்வியுற்ற அவள் தாய் பேயின் சூழ்ச்சி என்று சொல்லி இனிமேல் குகைக்குப்போகக் கூடாது என்றாள்..

இரண்டு நாள் கழித்து அவள் தோழிகள் அழைத்தபோது அவளது தாய் அனுமதித்தாள். அங்கு சென்று மண்டியிட்டு ஜெபமாலை செய்தார்கள், முதல் பத்து மணி முடிந்ததும், 

“ இதோ அந்தப் அம்மா அங்கு நிற்கிறார்கள். என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.” என்று சொன்னபோது பெர்னதெத்தின் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது. பெர்னதெத் தீர்த்தத்தை எடுத்து தெளித்து, 

“ கடவுளிடமிருந்து நீர் வந்தால் முன்னே வாரும்; இல்லாவிட்டால் ஓடிப்போம் “ என்று சொன்னாள். அந்த அன்னை புண்ணகை செய்தபோது உற்றுப்பார்த்த பெர்னதெத்தின் ஆன்மா விண்ணக மகிழ்ச்சியால் நிறைந்து வழிந்தது. அந்தக் காட்சி மறையும் வேளை அங்கே வந்த அவரது தந்தை தன் மகளை இத்தனை அழகுடன் பார்த்ததே இல்லை. அவளை வீட்டிற்கு அழைத்து வந்தபோது தாய்க்கு ஒரே கோபம். தன் மகள் மக்களை ஏமாற்றுவதாக சொல்லி அவளை அடிப்பதற்காக குச்சியை எடுத்தபோது தந்தை தடுத்து “ அவளை ஒன்றும் செய்யாதே, அவள் வானகத்தூதர் “ என்றார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை அந்தப் பங்கை சேர்ந்த இரண்டு பெண்கள் வந்து பெர்னதெத்தை அந்தக் குகைக்கு அழைத்துச் சென்றார்கள். மூவரும் முழந்தாழிட்டு ஜெபமாலை செய்தனர். அப்போது அன்னை மீண்டும் காட்சி கொடுத்தபோது ஒரு பெண் தாள், மை, எழுதுகோல் ஆகியவற்றைக் கொடுத்து அன்னை விரும்புவதை எழுதித் தரும்படி கேட்கச் சொன்னாள்.

“ என் ஆண்டவளே, தயவு செய்து உமது பெயரையும், உமக்கு என்ன வேண்டும் என்பதையும் எழுதுவீர்களா? “ என்று கேட்டபோது, அன்னை நெருங்கி அவள் அருகே வந்து,

“ நான் விரும்புவதை எழுதத்தேவையில்லை. நீ பதினைந்து நாட்கள் தொடர்ந்து இங்கே வருவாயா? “ என்று கேட்டார்.

மகிழ்ச்சிப் பெருக்குடன் “ கட்டாயம் வருகிறேண் என் ஆண்டவளே “ என்று சிறுமி பதில் சொன்னாள்.

“ நான் இவ்வுலகில் மகிழ்ச்சியை வாக்களிக்க மாட்டேன்; மறு உலகில்தான் “ என்றாள். அந்தக்காட்சி ஒருமணி நேரம் நீடித்தது. அன்னை அந்த இருவரையும் பார்த்து பல முறை புண்முறுவல் செய்தாலும் அவர்களால் பார்க்க இயலவில்லை. தூய உள்ளம் தெய்வீகக் காட்சி காணத் தேவை என்று புரிகிறது. அந்த நாளிலிருந்து 15 நாட்கள் அன்னை பெர்னதத்திற்கு காட்சி கொடுத்து பேசினார்.

நன்றி : நூல் - தேவனின் திருச்சபை மலர்கள், எழுதியவர்கள் அருட்தந்தை பால் பீட்டர், அருட்தந்தை M. டொமினிக்.

ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே…… ஜெபிப்போம்… ஜெபிப்போம்… ஜெபமாலை….

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !