கிறீஸ்துநாதர் அநுசாரம் - முகவுரை.

கிறீஸ்துநாதர் அநுசாரம் என்னும் உத்தமநூலை எழுதித் தந்தவர் தாமஸ் அ. கெம்பிஸ் என்ற புண்ணியவாளர் ஆவார். “மனிதரால் உண்டாக்கப்பட்ட புத்தகங்களுக்குள்ளாக, - சுவிசேஷம் மனிதனால் உண்டானதல்ல, தேவனால் உண்டானது - கிறீஸ்துநாதர் அநுசாரமே அதி உத்தம முதன்மையான புத்தகம்” என்று புண்ணிய சாங்கோபாங்கத்தில் (கிறீஸ்துவைப் பின்பற்றி வாழும் பரிசுத்த ஜீவியத்தில்) தேர்ந்த அநேக சாஸ்திரிகள் கூறியிருக்கிறார்கள்.

உண்மையில், இந்த அற்புதமான நூலிலே பரலோகத்தின் மெய்யான போதனை விளங்குகின்றது. சர்வ வல்லபமுள்ள கடவுளை முகமுகமாய்த் தரிசிக்கும் பரிசுத்த அரூபிகளில் ஒருவர் நமக்குத் தோன்றி நமக்குப் போதிக்கிறது போலவே நமது எண்ணத்தில் ஏற்படுகின்றது. இதில் அடங்கிய புத்திமதிகள் ஆத்துமத்தைப் போஷிக்கின்றன. அதைப் பலப்படுத்துகின்றன. யாதோர் கலக்க மின்றி புண்ணிய வழியைக் கைப்பற்றி அதில் சுறுசுறுப்பாய் நடந்து செல்லும்படி செய்கின்றன. எம்மாவுஸ் பட்டணம் சென்ற சீஷரின் உள்ளத்தில் உயிர்த்த கர்த்தருடைய சம்பாஷணை (உரையாடல்) உண்டாக்கின உருக்கப் பற்றுதலைப்போல் இப்புத்தகத்தில் அடங்கின போதகங்களும் உண்டாக்குகின்றன. “அவர் வழியில் நம்முடன் சம்பாஷித்து, வேத வாக்கியங்களை விளக்கம் பண்ணினபோது நமது இருதயம் உள்ளத்தில் பற்றி எரியவில்லையோ?”

கிறீஸ்துநாதர் அநுசாரம் ஓர் சந்நியாசியால் தம் சகோதரச் சந்நியாசிகளுக்கு எழுதப்பட்டது. ஆதலால் சாங்கோபாங்கத்தில் உயர்ந்தவர்களுக்கு மாத்திரம் தகுந்த புத்தகமென்று அநேகர் எண்ணுவார்கள். அது மெய்யாயிருந்த போதிலும், எந்த அந்தஸ்தினருக்கும் மிக்க பிரயோசனமான புத்தகமென்று நாம் அஞ்சாமல் சொல்லலாம். ஏனெனில் அதை இயற்றியவர் நமது துர்க்குணங்களை மாத்திரமல்ல, அவைகளை ஒழித்துவிடும் வழிகளையும் வழிவகைகளையும் நமக்குத் தெளிவாய் விளக்கிக் காண்பிக்கிறார்; அவநம்பிக்கையை அகற்றி நமது இருதயத்தில் நம்பிக்கையை எழுப்புகிறார். ஆனதால் நமது ஆத்துமத்தில் சமாதானமும் அமரிக்கையும் உண்டாகின்றன.

விசுவாசத்தினால் உண்டாகும் வாக்கினால் சொல்ல முடியாத சந்தோஷத்திற்கு முன்பாக பூலோக இன்பங்கள் எவ்வளவோ சொற்பம்! நிமிஷத்தில் ஒழிந்து போகும் சொற்ப இன்பத்தை முன்னிட்டுப் பரலோக நித்திய சந்தோஷத்தைப் போக்கடித்துக் கொள்வது எவ்வளவோ மதியீனம்! “ஓ, சர்வேசுரனுடைய வரப்பிரசாதத்தை நீ அறிந்திருப்பாயென்றால், உன்னை அன்போடு அழைக்கிறவர் யாரென்று நீ அறிந்திருப்பாயென்றால்,” அவர் தம்மை உனக்குக் கொடுக்கும்படியாக, நீ உன்னை முழுமையும் அவருக்குக் கையளித்து விட உன்னைத் தூண்டுகிறார். ஆனதால் “ஆண்டவர் எவ்வளவு இனிமையாயிருக்கிறாரென்று வந்து சுவைத்துப் பார்.” இப்போது நீ சீவிப்பதில்லை. ஏனெனில் “நாமே உண்மையும் சீவியமுமாயிருக்கிறோம்” என்று திருவுளம்பற்றினவரிடத்தினின்று பிரிந்திருப்பது மெய்யான சீவியமாகுமோ? ஆனால் நீ அவரை அறிந்தபோது, உன் இருதயம் களைத்துப்போய் அவர் இருதயத்தின்மேல் சாய்ந்து இன்பமாய் இளைப்பாறும்போது, “என் நேசர் எனக்கு, நான் அவருக்கு” “என் ஆத்துமம் நேசிப்பவரை நான் கண்டுகொண்டேன், அவரைப் பிடித்துக் கொண்டேன், போகவிடமாட்டேன்” என்று உண்மையாகவே நீ சொல்லலாம்.

துன்பப்படுகிற நீங்கள், உலகத்தினால் துன்புறுத்தப்படுகிற நீங்கள், சேசுநாதர் அருகில் நீங்களும் வந்து சேருங்கள். அவர் உங்கள் கண்ணீர்களை ஆசீர்வதிப்பார். தமது தயாளமுள்ள கரங்களால் அவை களைத் துடைப்பார். அவர் ஆத்துமம் அன்பும் இரக்கமும் நிறைந்தது. “நமது பலவீனங்களை அவர் அறிந்திருக்கிறார். அழுது புலம்புகிறது என்னவென்று அவருக்குத் தெரியும்.”

கிறீஸ்துநாதர் அநுசாரத்தில் ஆத்துமத்தை இளகச் செய்யும் யோசனைகள் மாத்திரமல்ல, இன்னும் சீவிய காலத்தின் சகல சமயங்களிலும் உதவக்கூடுமான ஆச்சரியத்திற்குரிய புத்திமதிகளும் உள்ளன. யார் யார் எந்தெந்த அந்தஸ்தினராயிருந்த போதிலும் கிறீஸ்துநாதர் அநுசாரத்தை வாசிப்பதால் மகத்தான பயன்களை அடையலாம். லா ஹார்ப் (La Harpe) என்ற கவிஞர் எழுதி வைத்திருப்பதைக் கேளுங்கள்: “நான் என் சிறைச்சாலையில், தனியே ஓர் சிற்றறையில் வெகு துயரமாயிருந்தேன். கொஞ்ச நாளாய் சங்கீதங்களையும், சுவிசேஷத்தையும் வேறு சில நல்ல புத்தகங்களையும் வாசித்துக் கொண்டிருந்தேன்; அதனால் எனக்குப் படிப்படியாய் மிகுந்த பிரயோசனமுண்டாயிற்று. அவிசுவாசியாயிருந்த என் இருதயத்தில் கொஞ்சங் கொஞ்சமாய் விசுவாசம் ஏற்பட்டது. புதிதான ஞான ஒளியைக் கண்டேன். அதன் வெளிச்சத்தில், நாற்பது வருஷங்களாய் நான் கட்டிக்கொண்ட துரோகங்களைக் கண்டு பயந்து நடுங்கி ஏக்கத்தில் அமிழ்ந்தேன். எவ்விடத்திலும் நின்று ஆறுதலையாவது தேறுதலையாவது காணோம். ஒரு பக்கத்தில் என் சீவியம் முழுமையும் என் கண் முன்பாக இருந்தது. மற்றோர் பக்கத்தில் கொடிய மரணம் என்னை நாள்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. குருவானவரைக் காணலாமென்கிற நம்பிக்கைக்கும் இடமில்லாத காலமாயிருந்தது. என் ஆத்துமம் துக்க சாகரத்தில் அமிழ்ந்து, நான் கொஞ்ச காலமாய் மாத்திரம் அறியத் துவக்கின கடவுளை நோக்கினது. நான் செய்ய வேண்டியதென்ன? என்னவாகப் போகிறேன் என்று அவரை மன்றாடின பிறகு, பக்கத்தில் மேசையின் மேல், கிறீஸ்துநாதர் அநுசாரம் பிரதி ஒன்றிருந்தது. அதைத் திறந்து பார்த்தால் அநேகமாய் அவரவர் எண்ணத்திற்குத் தகுதியான பதிலைக் காணலாமென்று அநேகர் சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தேன், எழுதப்பட்டிருந்த வாக்கியத்தை வாசித்தேன். “இதோ வந்தேன், என் மகனே, நீ என்னை அழைத்தபடியால் நான் உன்னருகில் வருகிறேன்” என்றிருந்தது. ஆச்சரியமடைந்தேன், மனஸ்தாபக் கண்ணீர் சொரிந்தேன், முகங்குப்புற விழுந்து சர்வதயாபரரான சர்வேசுரனுக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்தினேன், ஆறுதலடைந்தேன், என் ஆத்துமம் நித்திய அமரிக்கையில் (அமைதியில்) மூழ்கினது” என்று எழுதி வைத்திருக்கிறார். 

இப்பேர்ப்பட்ட உன்னத சாங்கோபாங்கம் அடங்கிய புத்தகத்தை வாசிக்கும் என் பிரிய சகோதரரே! என் பிரிய சகோதரிகளே! உங்களுக்கு இந்த வாசகத்தால் ஞானப்பலன் உண்டாக வேண்டுமானால், தாழ்ச்சியோடு இதை வாசியுங்கள். விசுவாசமும் தேவ சிநேகமும் நமக்குத் தந்தருளப்படும். நம்மைத்தாமே தாழ்த்துவோம். ஆங்காரத்தின் மேல் நாம் கொண்ட வெற்றியின் சம்பாவனையாக நித்திய இரட்சணியமடைவோம். நமது ஆண்டவரான சேசு கிறீஸ்துநாதர் சுவாமி பூமியில் வசித்தபோது தமது சீஷருக்கு மோட்ச வழியைக் காண்பிக்க அவர் செய்தது என்னவென்றால் சேசுநாதர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்களுடைய மத்தியில் நிறுத்திச் சொன்னதாவது: “மெய்யாகவே, நான் உங்களுக்கு கூறுவது என்னவென்றால், நீங்கள் மனந்திரும்பி சிறுபிள்ளைகளைப் போல் ஆகாமற் போனால், பரலோக இராச்சியத்தில் பிரவேசிக்கவே மாட்டீர்கள்” என்றார்.