மே 21

அர்ச். பெலிக்ஸ். துதியர் (கி.பி. 1587) 

கான்றாலிசியோ என்னும் ஊரில் ஏழைக் குடும்பத்தினின்று பெலிக்ஸ் பிறந்து சிறுவயதில் ஆடுமாடுகளை மேய்த்து வந்தார். இவருக்கு வயது வந்த பின் விவசாயம் செய்துவந்தார்.

எவ்வளவு அவசரமான வேலையிருந்த போதிலும், இவர் ஜெபத் தியானத்தை மறக்க மாட்டார். 

திவ்விய பூசையை பக்தியுடன் கண்டபின்பே வேலையைத் தொடங்குவார். வயலில் வேலை முடிந்த பின் மாடுகளை மேயவிட்டு, ஒரு மரத்தின்கீழ் உட்கார்ந்து ஜெபஞ் செய்வார்.

கர்த்தர் கற்பித்த ஜெபம் முதலிய ஜெபங்களின் அர்த்தத்தை நினைத்து தியானிப்பார். 

கர்த்தருடைய திருப்பாடுகளை நினைத்து துக்கித்து அழுவார். மற்றவர்கள் இவரை அர்ச்சியசிஷ்டவர் என்று அழைப்பர்கள்.

இவர் புண்ணிய வாழ்வில் வளருங் கருத்துடன் பிரான்சீஸ்கு சபையில் தப சந்நியாசியாக சேர்ந்தார். 

மடத்தின் ஒழுங்குகளை வெகு கவனமாக அனுசரித்து இடை விடாமல் ஜெபத் தியானம் புரிந்து, கடினமும் நீசமுமான வேலைகளைச் சந்தோஷமாகச் செய்துவந்தார்.

தளர்ந்த வயதிலும் சிரேஷ்டருடைய உத்தரவுடன் கடின வேலை செய்வார். 

தன்னைப் பெரும் பாவியாகப் பாவித்து, மடத்தின் ஒழுங்கில் குறிக்கப்பட்ட தபசு போதாதென்று எண்ணி, வேறு தவக் செயல்களை அனுஷ்டிப்பார். 

இவருக்கு வாசிக்கத் தெரியாவிடினும் உத்தமமான புண்ணியவாளர் கூட இவருடைய ஆலோசனையைத் தேடுவார்கள். 

கடைசியாய், பெலிக்ஸ் தமது புண்ணியத்தாலும் கடுந் தபத்தாலும் மடத்தாருக்கும் ஊராருக்கும் ஞான கண்ணாடியாகப் பிரகாசித்து தமது 72-ம் வயதில் இம்மையை விட்டு மறுமையை அடைந்தார்.

யோசனை

தங்கள் சரீரப் பிழைப்புக்காக அல்லும் பகலும் உழைப்பவர்கள் தங்கள் ஆத்தும் வேலையை மறவாதிருப்பார்களாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். காட்ரிக், வ.
அர்ச். ஒஸ்பீசியுஸ், த.