அதிசய இளைஞன்

"மகனே நீ ஞானத்தை விரும்புவாயாகில் நீதியைக் காப்பாற்று, கடவுள் உனக்கு அதை அளிப்பார்" (சீராக்: 133)

மாய வலையில் விழாத தலைவன்

சிறுவயதிலிருந்தே உயிரூட்டமுள்ள விசுவாசம் பெர்தினாந்திடம் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது. எனவேதான் இளவயதில் பல புதுமைகளைச் செய்தார். 15 வயதுவரை பெற்றோருடன் இருந்தார்.

சாங்கோ அரசன் தீயநெறியாளன். தன் பக்கம் வாலிபர்களைத் திரட்ட, பணத்தையும், பதவிகளையும், பொருட்களையும், உல்லாச வாழ்க்கையையும் கொடுத்து தன் படையில் சேர்ந்து தனக்கு அடி பணிந்து பாவவாழ்க்கை நடத்த பல இளைஞர்களை ஊக்குவித்தான். ஆனால் நம் தூயவரோ அவன் விரித்த பேயின் வலையில் விழவில்லை . பட்டம், பதவிகளை உதறித்தள்ளியதோடு தீயவரின் நச்சுரைக்கு அவர் சிறிதும் இடம் அளிக்கவில்லை . எரியும் விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டிலாகவும் இல்லை .

சாத்தானை விரட்டிய சாந்தசீலன்

திருப்பலிக்கு பெர்தினாந்து தினந்தோறும் உதவி செய்து வந்தார். ஒருநாள் அலகை, கோர உருவத்தில் ஆலயத்தில் அவர்முன் தோன்றியது. நடுங்கினார். ஆனால் சற்றும் தயக்கமின்றி சிலுவை அடையாளத்தை பளிங்குத் தரைமீது வரைந்தார். அவ்வடையாளம் தரைமீது பதிந்து விட்டது. அதனை இன்றும் காணலாம். பேயும் "ஐயோ” என அலறி ஓட்டம் பிடித்தது. அதைக்கண்ட குருவானவர் வியந்தார். இத்தகைய சிறுவன் பிற்காலத்தில் பெரும் புனிதனாவான் என் நெஞ்சார், வாயார வாழ்த்தினார். அந்தோனியார் பேயை பீடத்தின் முன் கட்டி விட்டதாகவும், திருப்பலி முடிந்ததும் குருவானவர் அதன் மீது தீர்த்தம் தெளிக்க, துர்வாடையுடன் புகை மண்டலத்தோடு பேய் ஓடியதாயும் சில வரலாற்று நூல்களில் எழுதப்பட்டுள்ளது.

இப்புதுமை விஸ்பனில் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களின் மனதை, மிகவும் கவர்ந்தது, சிறுவன் பெர்தினாந்து பூசை உடுப்பு அணிந்து பக்தியுடன் பூசைக்குச் செல்வது போன்ற ஒரு சொரூபம் லிஸ்பன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை இன்றும் காணலாம்.

உடைந்த குடம் ஒட்டுதல்

ஒரு சிறுமி தண்ணீர் எடுத்து வந்த குடம் கீழே விழுந்து உடைந்துவிட்டது. அவள் எஜமானி கடுமையானவள். சிறுமி அழுதாள். பெர்தினாந்து அவள் மேல் இரக்கமுற்று உடைந்த துண்டுகளைப் பொருத்தினார். குடம் ஒட்டிக்கொண்டது. சிறுமியும் மகிழ்வுடன் சென்றாள். இதனைப் பார்த்த மேலாளர், "என்ன விசுவாசம்! என்ன பக்தி!'' என வியந்ததோடு பலரிடம் இதைப் பற்றிச் சொல்லி பரமானந்தம் அடைந்தனர்.

குருவிகள் பணிந்தன!

பெர்தினாந்தின் தந்தை மார்த்தீன் நம் புனிதரை வயல் காவலுக்கு அனுப்பினார். அங்கு விளைந்த கதிர்கள் ஏராளம். ஆயிரக் கணக்கான குருவிகளின் தொல்லை. காலைவேளை திருப்பலி சமயம். திருப்பலிக்குச் செல்ல வேண்டுமென்பது சிறுவனின் ஆசை. "தந்தை கட்டளையை எவ்வாறு மீறுவது”? என்ற தயக்கம். ஆனால் நம்பிக்கை பிறந்தது?

"வான் தூதர்களே நான் கோயில் செல்ல வேண்டும் தந்தைக்கும் பணிய வேண்டும். இந்தக் குருவிகளை மாளிகைக்குள் அடைத்து வையுங்களேன்” என மன்றாடினார். அத்தனை குருவிகளும் மொத்தமாய் மாளிகைக்குள் புகுந்தன. அவரும் ஆலயம் சென்றார். தந்தை வயலுக்கு வந்தபோது மகனை அங்கே காணவில்லை. நடந்ததை அறியாத தந்தை பூசை முடிந்து ஆனந்தமாக வெளியே வந்த மகனை கடிந்து கொண்டார். பின்னர் மாளிகையினுள் குருவிகள் அமைதியாக இருந்ததையும் அங்கிருந்த தானியத்தை உண்ணாததையும் கண்ட தந்தை இத்தகைய மகனைத் தனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்.

உன் இதயம் எனக்கே தருவாயா?

ஒரு குளிர் கால மாலையில் ஐந்து வயது அந்தோனியார் தன் வீட்டின் அறைக்குள் இருந்தார். கதவு தட்டப்படும் ஓசை, கதவைத் திறந்தார். அழகு மிகும் ஐந்து வயது பாலகன் தன் முன் நிற்கக் கண்டார். அந்த திவ்விய மழலை குழந்தை, பிச்சைக்காரனைப்போல் ஒரு பையை தோளில் போட்டவாறு அவர் முன் நின்றது.

நமது பெர்தினாந்து,
''உனக்கு என்ன வேண்டும்?''
"பிச்சை '' 
'பசிக்கவில்லையா ரொட்டி வேண்டாமா?
"என் பசி வேறு, உன் பசிவேறு'' 
"அப்படியானால் உனக்கு என்ன தான் வேண்டும்”
"இதோ என் பையைப்பார்” 
"என்ன சிவப்பு வைடூரியங்கள் மின்னுகின்றனவே?”
''இவை நல் இதயங்கள், இவற்றையே நான் தேடிச் செல்கிறேன்" 
''அப்படியானால், நீ யார்?
“ஆம் நான் குழந்தை இயேசு! உன் இதயத்தை எனக்குத் தருவாயா? என்றுமே தருவாயா?" 
"ஆண்டவரே! நீரே எனக்கு எல்லாம். என் இதயம் உமக்கே! உம் அரசு வருக! எல்லாம் உம் செயல்"
குழந்தை மறைந்தது.

பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இதுவே முறை. "தாய் தந்தையைப் போற்று" என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைக்குள் முதலாவது. "அப்போது மண்ணுலகில் நீ நலம் பெறுவாய், நீடூழி வாழ்வாய்" என்பது அவ்வாக்குறுதி.

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள். அவர்களை கண்டித்து திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும்.

"தன் தாய் தந்தையரிடமிருந்து யாதொன்றை அபகரித்தும், அது பாவமில்லை என்கிறவன், கொலை பாதகத்தின் பங்காளியாய் இருக்கிறான்" (பழமொழி 28.1.24) திருச்சபையின் தூயவர். பெர்தினாந்து என்ற அந்தோனியார் இறுதிவரை பெற்றோருக்கும் துறவறமடத்து மேலாளருக்கும் கீழ்ப்படிந்தே வாழ்ந்தார். அவரிடம் அகந்தை என்பதே இல்லை .