மரியாளை 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைப்பது ஏன்?

பழைய உடன்படிக்கையின் அடையாளமாக பொன் தகடு வேய்ந்த பேழை இருந்தது போல, புதிய உடன்படிக்கையின் அடையாளமாக தாழ்ச்சியால் அணி செய்யப்பட்ட அன்னை மரியாள் திகழ்கிறார். "உடன்படிக்கைப் பேழையில் மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன." (எபிரேயர் 9:4) புதிய உடன்படிக்கைப் பேழையான அன்னை மரியாளிடமும் இத்தகையப் பொருட்கள் இருந்ததைக் காண்கிறோம். வானத்தில் இருந்து பொழியப்பட்ட உணவாகிய மன்னாவைக் கொண்ட பொற்சாடிக்கு நிகராக, "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவாகிய" (யோவான் 6:51) இயேசுவைத் தாங்கிய கருப்பை மரியாளிடம் இருக்கிறது. உயிர்ப்புக்கு அடையாளமான ஆரோனின் கோலுக்கு மாற்றாக, "உயிரும் உயிர்ப்புமான" (யோவான் 11:25) இயேசுவைக் காண்கிறோம். இறைவார்த்தையைத் தாங்கிய கற்பலகைகளுக்கு பதிலாக, "மனிதரான இறைவார்த்தையே" (யோவான் 1:14) மரியாளின் வயிற்றில் இருந்தார்.

இவ்வாறு, மரியாள் உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்வதற்கு விவிலியமே சான்று பகர்வதைக் காண்கிறோம். மேலும், "சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலை நாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்" (கொலோசையர் 1:20) என்பதால், இயேசுவே மனிதகுலத்தோடு தந்தையாம் கடவுள் செய்துகொண்ட புதிய உடன்படிக்கையாகத் திகழ்கிறார். எனவே, இயேசுவைக் கருத்தாங்கிய அன்னை மரியாள் 'உடன்படிக்கைப் பேழை' என்று அழைக்கப்படுகிறார். மோசே வழியாக செய்யப்பட்ட பழைய உடன்படிக்கைக்கு கடவுளின் திருச்சட்டம் அடிப்படையாக இருந்தது போல, புதிய உடன்படிக்கையில் கிறிஸ்து இயேசு போதித்த அன்பே ஆதாரமாக விளங்குகிறது. இந்த அன்பின் உடன்படிக்கையை உலகிற்கு கொண்டுவந்த பேழையாக அன்னை மரியாள் திகழ்கிறார்.

மேலும், 'மரியாள் புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' (லூக்கா 1:39) என்று காண்கிறோம். பழைய உடன்படிக்கைப் பேழையும் யூதேய மலை நாட்டில் பயணித்ததை விவிலியம் எடுத்துரைக்கிறது: 'தாவீதும் அவரோடு இருந்த மக்கள் அனைவரும் கடவுளின் பேழையைக் கொண்டுவர பாலை யூதாவுக்குச் சென்றனர்.' (2 சாமுவேல் 6:2) 'மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.' (லூக்கா 1:41) அவ்வாறே, 'தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தார்கள்.' (2 சாமுவேல் 6:5) "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:43) என்று எலிசபெத்து கேட்டது போன்றே, "ஆண்டவரின் பேழையை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்வேன்?" (2 சாமுவேல் 6:9) என்று தாவீது வினவியதைக் காண்கிறோம். 'மரியாள் மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு வீடு திரும்பினார்.' (லூக்கா 1:56) 'ஆண்டவரின் பேழை ஓபோது ஏதோமின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கிற்று.' (2 சாமுவேல் 6:11)