தவ/ஒருத்தல் முயற்சிகள் செய்ய வழிகள் தொடர்ச்சி..
1. உங்கள் மனம் பகல் கனவில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்
உடனடியாக உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
2. உங்களிடம் உள்ள பொறுமையின்மை, எரிச்சல், கோபம் இவற்றை விரட்டியடியுங்கள்.
3. குற்றமற்ற செயல்களில் கூட மனதை அதிகம் ஈடுபடுத்தாதீர்கள்.
4. இரக்கப்படுவது, நேசிப்பது தவறல்ல, ஆனால் கடவுளை விட நேசத்திற்குரியவர்
எவருமல்ல என்று கண்டுபிடித்து, செயல்படுத்துவது பெரிய தபசு.
5. பயனற்ற கற்பனைகளை விரட்டியடியுங்கள். செப நேரத்தில் மட்டுமல்ல, இதர
நேரத்திலும் பராக்குக்கு இடம் தராதீர்கள்.
6. பெரிய தவ முயற்சிகளில் ஒன்று நாவைக் கட்டுபடுத்துவது. பேசிக்
கொண்டிருப்பதில் இன்பம் காண்பதை விட தேவையின்றி பேசாதிருப்பதும், புறணி
பேசாதிருப்பதும் சிறந்த தவ முயற்சியாகும்.
7. உங்களோடு பேசுவோருக்கு அதிக நேரம் கொடுங்கள். அதாவது பேசுவதை விட
அதிகம் கவனியுங்கள்.
8. பிறர் பேசும்போது வீணாகக் குறிக்கிடாதீர்கள்.
9. பேசும்போது ஒரே குரலில் பேசுங்கள். குரலை உயர்த்தி பேசுவது,
ஊளையிடுவது, கிண்டல் செய்வது போன்ற செயல்களுக்காக அல்ல ஆண்டவர் நாக்கை
தந்தது.
10. எளிமையாக இருங்கள். நேர்மையாக நடங்கள். தந்திரம் நடிப்பு, நழுவல்
இதையெல்லாம் தவ முயற்சியை குறைத்து விடும்.
11. பயனற்ற சொல் ஒன்று கூட சொல்லாதீர்கள். உங்கள் பேச்சு ஆம் என்றால்
ஆம், இல்லையன்றால் இல்லை என்று இருக்கட்டும்.
12. உங்கள் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி ஆண்டவர் சித்தம் எது என்று
தெறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
13. உங்களை யாராவது சிறுமைபடுத்தினால் பழிவாங்கத் தேடாதீர்கள். மாறாக
அவர்களுக்காக ஜெபியுங்கள். நோயாளிகளை சந்தித்து பேசுங்கள்.
14. உங்களை எல்லோரும் நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்று விரும்பாதீர்கள்.
15. கடமைகளை நிறைவேற்றும் போது வரும் சிலுவைகளைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
16. உங்கள் குறைகளைப் பற்றி ரொம்ப அலட்டாதீர்கள். சுய நேசமே உங்கள்
கவலைக்குக் காரணம்.
17. நீங்கள் என்ன பணி செய்தாலும் அதனை முழு மனதுடன் செய்யுங்கள்.
18. ஜெபிக்கும் போது கூடுமானமட்டும் முழங்காலில் இருங்கள்.
19. உங்கள் அயலாரிடம் காணும் குறைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.
20. கோபம் வந்தால் ஆண்டவரை முன்னிட்டு சாந்தமாய் இருங்கள்.
21. யாரையாவது பழிவாங்க வேண்டுமா? அவருக்கு நன்மை செய்யுங்கள். யார்
மேலாவது கடுகடுப்பாக இருக்கிறீர்களா? அவரைப்பார்த்து புன்முறுவல்
செய்யுங்கள். யாரையாவது சந்திக்க மனமில்லையா? அவரைத் தேடிப்போய்
வாழ்த்துங்கள். யாரையாவது பிடிக்கவில்லையா? அவரைப் புகழ்ந்து பேசுங்கள்.
22. சர்வேசுவரனை விசுவதியாதவர்களுக்காகவும், ஆராதிக்காதவர்களுக்காகவும்,
நம்பாதவர்களுக்காகவும், நேசியாதவர்களுக்காகவும் சேர்த்து நாம் அவரை
விசுவசிப்பதும், ஆராதிப்பதும், நம்புவதும், நேசிப்பதுமே உண்மையான தவமும்,
பரித்தியாகமுமாக இருக்கிறது.
இந்த உண்மையான கருத்துடன் ஜெப தவ பரித்தியாக முயற்சிகளைச் செய்து,
ஆண்டவரோடும், மாதாவோடும் சேர்ந்து ஆத்துமங்களை இரட்சித்து, அவர்கள்
இருவருக்கும் சேர்த்து ஆறுதல் தர ஆவலோடு முன்வருவோமாக. சேசுவும்,
மாதாவும் இவற்றையே மாதாவின் பிள்ளைகளிடமும், குறிப்பாக மாதாவின்
அப்போஸ்தலர்களிடமும் கேட்கிறார்கள்.
நன்றி : ஆன்ம இரட்சணியத்திற்குரிய எளிய பக்தி முயற்சிகள் புத்தகம், மாதா
அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. போன் : 0461-2361989, சகோ. பால்ராஜ் :
9487609983
இயேசுவுக்கே புகழ்! மரியாயே வாழ்க!
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠