சேசு மரிய இருதயங்களுக்கு நிந்தைப் பரிகாரம்.

இனிவரும் நிந்தைப் பரிகார செபங்களை நிறுத்தி, நேரம் எடுத்து, தெளிவாக தியானித்து வாசிக்கவும்.

"சேசுவின் திரு இருதயத்திற்கும் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கும் நிந்தைப் பரிகாரம் ஏன் செய்ய வேண்டும்?'' என்று பக்தியுள்ள கத்தோலிக்கர்கள் கூட சில சமயங்களில் கேட்கின்றனர்.

உலகத்தில் செய்யப்படும் ஒவ்வொரு பாவமும் கடவுளுக்கு எதிரானது. அவருக்கு நிந்தை துரோகம் அவமானம் வருவிப்பது "தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசஞ்செய்யும்'' சேசுவின் திரு இருதயம் ஒவ்வொரு பாவத்தாலும் நிந்தை துரோகத்துக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறது. ஆதலால் சேசுவின் திரு இருதயத்துக்கு ஆறுதலாக பரிகார முயற்சி செய்வது என்பது கடவுளுக்கே நேரடியான பரிகாரம் செய்வதாகும்.

மேலும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது சேசுவின் தெளிவான விருப்பம். தம்முடைய இருதயத்துடன் தன் தாயின் இருதயத்தையும் இணையாக வைத்து நிந்தைப் பரிகாரம் செய்யுமாறு சேசு கேட்டிருக்கின்றார். பாத்திமா செய்திகளின் சாரமே உலகில் மரியாயின் மாசற்ற இருதய பக்தியை நிலை நாட்டுவதுதான். தாயின் இருதயத்துக்குச் செய்யப்படும் நிந்தைப் பரிகாரம் உடனே குமாரனிடம் சேர்ப்பிக்கப்படுவதால் இதுவும் கடவுளுக்குச் செய்யப்படும் நிந்தைப் பரிகாரமேயாகும்.

பரிகாரம் செய்யப்பட வேண்டிய பாவங்களுக்கோ ஒரு அளவு இல்லை. ஆதாமின் மீறுதலிலிருந்தே உலகம் சாத்தானுக்கு அடிமையாகி பாவத்தால் நிரம்பி வந்துள்ளது. ஆனால் இக்காலத்தில் இப்பாவங்கள் தொகையில் மட்டுமல்ல வகையிலும் வரை கடந்து விட்டன. உடனடியாகப் பரிகாரம் செய்யப்படாவிடில் உலகம் நிலைக்க முடியாது. இந்தப் பரிகார முயற்சியை நாம் செய்ய வந்திருக்கின்றோம். நன்றாகச் செய்ய உதவி கேட்போமாக.

குறிப்பு: நிந்தைப் பரிகாரம் எதிலே அடங்கியிருக்கிறதென்றால், பகைத்து பழிக்கப்படும் சேசு மரிய இருதயங்களை நாம் அன்புடன் நேசித்து, ஆன்மாக்கள் மனந்திரும்ப மன்றாடி, செப தவம் செய்வதில்தான். நாம் மேற்கொள்ளும் செபமும் பரித்தியாக முயற்சிகளும் அன்பால் தூண்டப்பட்டு ஆன்மாக்களின் மீட்புக்காகப் பயன்பட வேண்டும். அந்த மனப்பான்மையோடு இத் திருமணியை ஒப்புக் கொடுப்போம்.

கடவுளின் பிள்ளைகளான மனிதர்கள் அவரின் பகைவனான பசாசுக்கு பாவத்தால் அடிமைப்பட்டு ஊழியம் செய்வதால் கடவுளுக்கு ஏற்படும் நிந்தைக்குப் பரிகாரமாக.
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.

சர்வேசுரனை நினையாமலும் அவர் கட்டளைகளை அனுசரியாமலும் இருப்பதே போதிய பாவமாக இருக்கிறது. ஆனால் கடவுளை நேசியாதிருப்பது மட்டுமல்ல, அவரைப் பகைப்பதற்கும் பழிப்பதற்கும் என்றே உலகில் "சாத்தான் மதம்" என்று பசாசுக்கு மதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பெரும் துரோகத்துக்குப் பரிகாரமாக.
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.

பசாசையும் அதன் கிரிகைகளயும் அதன் ஆரவாரங்களையும் விட்டுவிடுகிறேன் என்று வாக்களித்த மக்கள், தந்தையாம் சர்வேசுரனைப் பகைவனாகக் கருதி, அவரைத் தூஷிக்கவும், பசாசை ஆராதித்து சகல பாவங்களையும் செய்வேன் என்று பசாசுக்கு வாக்குறுதி கொடுக்கும் அளவிற்கும் வந்துள்ளனரே! நல்ல தேவன் இவ்விதம் நிந்திக்கப் படும் மாபெரிய பாவத்துக்குப் பரிகாரமாக.
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.

நம் வேதத்தின் உகந்த வழிபாடு திருப்பலி பூசை இதை நேர்மாறாக மாற்றி சாத்தானுக்கு ''கரும் பூசை" என்று மகா பயங்கரமான அசுத்த சடங்கு சாத்தான் வேதத்தில் நடைபெறுகிறது. கரும்பூசையில் பசாசுக்கு தங்களை முழுவதும் ஒப்புக் கொடுத்ததவர்கள் பங்கெடுக்கிறார்கள். பசாசை வரவழைத்து ஆராதிக்கிறார்கள். குருரமான கொலை, அங்கயீனம் செய்தல் முதலிய கொடுமைகளையும் கற்புக்கு விரோதமான மகாகொடிய வெட்கத்துக்குரிய பாதகங்களையும், சாத்தான் மதக்கோலமாய் பெண்கள் அந்தப் பேய்ச் சடங்கில் உதவி செய்கிறார்கள். இத்தகைய அவமான துரோகங்களுக்குப் பரிகாரமாக.
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.

கரும்பூசையில் சாத்தான் யேசுகிறிஸ்துவின் மீது தனக்குசுள்ள பகை முழுவதையும் பழி தீர்த்துக் கொள்ளுகிறது. அதன் ஏவலாட்கள் கத்தோலிக்க கோவில்களில் நற்கருணைப் பெட்டிகளை உடைத்து சேசுவைக் களவாடிக் கொண்டு செல்கிறார்கள். அல்லது கத்தோலிக்க கோவில்களில் நற்கருணை வழங்கும் போது தந்திரமாய் நன்மை வாங்கி உடனே யேசுவை வெளியே எடுத்து துணியில் மறைத்து சாத்தான் மதக் கோவிலுக்குக் கொண்டு செல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கையில் அகப்பட்ட மாசற்ற செம்மறியான நம் சேசுவை கரும் பூசை செய்யும் நீசர்கள் தரையில் எறிந்து, காலால் மிதித்து, காரி உமிழ்ந்து நீதானே சேசு? இதோ உனக்கு சரியான மரியாதை, பெற்றுக் கொள் என்று கோபாவேசத்துடன் வைது நிந்திக்கிறார்கள். கேட்கும் போதே நம் இரத்தம் உறைகிறது. இந்த சகிக்க முடியாத அவமானங்களுக்குப் பரிகாரமாக...
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.

ஆண்டவராகிய சேசுவே! பரிசுத்த கன்னித் தாயே! சாத்தான் மதம், அதில் கரும்பூசை என்ற மகா பயங்கரமான அவமான துரோகங்களைப் பற்றி அறியும் நாங்கள் உங்கள் மீது மிகுந்த ஆழமான உண்மையான அன்பும் அனுதாபமும் கொள்கின்றோம். இந்த அளவுக்கு உங்கள் பிள்ளைகளான மானிடர் உங்களை நிந்திப்பார்கள் என நாங்கள் ஒரு போதும் நினைத்ததில்லை. இங்கு சாத்தான் மதம் பற்றியும் கரும்பூசை பற்றியும் கூறப்பட்டவைகள் மிகவும் கொஞ்சமே. நடைபெறும் அவமானங்களோ வெளியே சொல்ல முடியாதவை. அத்தனை அரோசிகமும் வெட்கத்துக்குரியவையுமாய் அவை உள்ளன இந்த அளவுக்கு மனிதர்கள் செல்ல முடியுமா? ஆண்டவரே? மானிடர் உம்மை நிந்திப்பதில் எல்லா வரம்பையும் தாண்டிவிட்டார்களே! நாங்கள் என்ன செய்வோம்! பரிகாரத்துக்கு எங்கள் மாதிரிகையாயிருக்கிற மாமரித்தாயே! உமது திருக்குமாரனுக்கு பசாசின் மக்கள் செய்யும் மன்னிக்க முடியாத இப்பழிகளையும் மன்னித்து இரட்சிக்கும்படி மன்றாடுங்கள். அவரால் இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட ஆன்மாக்கள் இவை என்று அவர்களுக்கு நினைவூட்டி இக் கொடிய பாவங்களைப் பொறுத்தருளும்படி மன்றாடுங்கள். அம்மா, இப்பாதகர்கள் நரகத்திற்குச் சென்றால் சேசுவின் இரத்தம் தானே வீணாகின்றது? ''உன் பாவங்கள் இரத்தம் போல் சிவந்திருந்தாலும் அவைகளை வெண்பணிபோல் ஆக்குவேன்' என்ற இறைவனின் அளவற்ற அன்பின் வாக்குறுதியை நினைவு கூறவும், மானிட குலம் புரியும் இப்பாதகங்களை மன்னித்தருளவும் சேசுவிடம் மன்றாடிக் கேட்பீர்களாக.
சேசு மரியே! உங்களை நேசிக்கிறோம். ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.



பகிரங்க மன்னிப்பு மன்றாட்டு:



ஒரு நண்பனையோ அல்லது அந்நியனையோ கூட மனவருத்தப்படுத்தி விட்டால் மன்னிப்புக் கேட்பது அவசியமாகிறது. நம் கடவுளும் மிகச்சிறந்த அன்பருமான சேசுவை நாம் எத்தனை விசை மனம் நோகச் செய்துள்ளோம்! ஓ சேசுவே! உம்முடைய தெய்வீக மகத்துவத்தை ஆராதியாமலும், உமது கட்டளைகளை அனுசரியாமலும் நாங்கள் செய்த பாவங்களையும், மறதி அசட்டைத்தனங்களையும் மன்னிக்கும்படி உம்மிடம் பகிரங்கமாகப் பொறுத்தல் கேட்கிறோம்.

கடவுளின் தேவ சிநேகக் கட்டளையை மறந்து உம்மை நேசியாத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! உம்முடைய பிறர் சிநேகக் கட்டளையை மறந்து எங்கள் அயலாரை சிநேகியாத குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! பாவபரிகாரத்துக்குச் சிறந்த வழி திருப்பலி பூசை என்பதை அறிந்தும் நாங்கள் காணத் தவறிய பூசைகளுக்காகவும், நிந்தை பரிகாரமாக உம்மை நற்கருணையில் அன்புடன் உட்க்கொள்ளும்படி நீர் கேட்பதை அறிந்திருந்தும் நன்மை வாங்கக் கூடிய சந்தர்ப்பங்களைத் தவற விட்டதற்காகவும், உமக்கு ஆறுதல் தருவதற்கு நற்கருணையில் உம்மைச் சந்திப்பது எவ்வளவு அவசியம் என அறிந்தும் நற்கருணை சந்தியாமல்
அசட்டையாக இருந்ததற்காகவும் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! ஞாயிறு கடன் திருநாட்களை சர்வேசுரனுடைய நாளாக அனுசரியாமலும் ஒருசந்தி சுத்தபோசனம் ஒறுத்தல்கள் செய்யாமலும் ஓய்வு நாளில் விலக்கப்பட்ட வேலை செய்தும் நாங்கள் கட்டிக் கொண்ட குற்றங்களுக்கு மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! பேசத்தகாத வார்த்தைகளைப் பேசி, சபித்து, தூஷணம் கக்கி, கடவுளின் திரு நாமத்தை வீணாகச் சொல்லி, அவசங்கைப் படுத்தியத்தற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! பெற்றோர், பிள்ளைகளுக்கு முன்
மாதிரிகையாய் இராமலும், சேர்ந்து குடும்பசெபம் செய்யாமலும், பிள்ளைகளுக்குத் துன்மாதிரிகையாய் நடந்தும், ஆசிரியர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களுக்கு சேசு மாமரி பற்றி ஒரு வார்த்தை பேசாமலும் கத்தோலிக்க வாழ்வில் அவர்களைப் பழக்காமலும் அசிரத்தையாக இருந்ததற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே, எங்களை மன்னித்தருளும்.

தேவ ஊழியரின் துர்மாதிரிகையாலும், திருச்சபையின் போதனையை மாற்றியோ குறைத்தோ கூட்டியோ கற்பிப்பதாலும் ஞான ஆபத்துக்களை ஏற்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! திரைப்படம், ரேடியோ, டெலிவிஷன், பத்திரிகை, புத்தகங்கள் வாயிலாக பரப்பப்படும் எண்ணற்ற ஆபாசப் படங்கள் பாடல்கள் வெட்கக் கேடுகளுக்காகவும், தீய இல்லங்களில் கற்பு என்னும் மிகப் பரிசுத்த புண்ணியம் பங்கப்படுவதற்காகவும், மாசற்றவர்களை மயக்கி வலையிடப்படும் அசுத்த துர்மாதிரிகைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! நாடெங்கும் பரவி வரும் ஆடைக்குறைப்பு, அலங்கோலமாய் ஆடையணியும் முறை, கத்தோலிக்கர்கூட மேற்கொண்டு வரும் ஆபாச உடைப்பாணிகளுக்காகவும், பெற்றோர் இவ்விஷயத்தில் தங்கள் பிள்ளைகளை கண்டியாத தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! எங்கள் இந்திய நாட்டிலும் தாய் வயிற்றில் சிசுவைக் கொலை செய்ய சட்ட பூர்வமாக உத்தரவு தரப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு என்று கூறி உயிர் தோன்றவிடாமல் தடைசெய்யும் பெரிய அக்கிரமம் ஆதரிக்கப்படுகிறது. இவற்றால் ஏற்படும் கடவுள் பழிப்புக்காகவும் நடைபெறும் லட்சக்கணக்கான சிசுக் கொலைகளுக்காகவும் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே எங்களை மன்னித்தருளும்.

ஓ சேசுவே! இளவயதினரை அவசியமானால் கண்டித்து நல்வழிப்படுத்தாமல், அவர்கள் போக்கிலே விட்டுவிடும் தவறுக்காகவும், பாவத்தைப் பாவம் என்று கூறத் தயங்கும் கோழைத்தனத்துக்காகவும், பாவம் மட்டுமல்ல பாவசந்தர்ப்பங்களும், தீமை என்று விலக்கப்படாமல் பாவசந்தர்ப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் மாறுபட்ட போக்கிற்காகவும் மன்னிப்புக் கேட்கிறோம்.
ஆண்டவரே எங்களை மன்னித்தருளும்.

மந்திரிக்கப்பட்ட பொருட்களையும், விசேஷமாக மந்திரிப்பு பெற்ற தீர்த்தத் தண்ணீரையும் கண்டு பசாசு அஞ்சுகிறது. எனவே மந்திரித்த பொருள்களையும் தீர்த்தத்தையும் நாம் அடிக்கடி உபயோகித்து பசாசைத் துரத்த வேண்டும். ஆகாரத்தின் மீதுகூட சிலுவை அடையாளமிட்டு ஆசீர்வதித்து உண்ண வேண்டும். இப்படிப்பட்ட நற்பழக்கங்கள் நம்மை விட்டு நீங்குவதன் காரணம் நம்முடைய விசுவாசக்குறைவேயாம். இப்பொழுது நாம் சேர்ந்து நம் விசுவாசத்தை எண்பிக்க விசுவாசப் பிரமாணம் சொல்வோம்.

ஒரே சர்வேசுரனை விசுவசிக்கிறேன். வானமும் பூமியும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லாம் வல்ல பிதா அவரே. சர்வேசுரனின் ஏக சுதனாய் செனித்த ஒரே ஆண்டவர், இயேசுக்கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் யுகங்களுக்கு எல்லாம் முன்பே பிதாவினின்று செனித்தார். கடவுளில் நின்று கடவுளாக, ஒளியினில் நின்று ஒளியாக, மெய்யங் கடவுளில் நின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர். பிதாவோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மானிடரான நமக்காகவும், நம் மீட்புக்காகவும், வானகம் இருந்து இறங்கினார். பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதன் ஆனார். மேலும் நமக்காக போஞ்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். வேதாகமத்தின்படியே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். வானகத்திற்கு எழுந்தருளி, பிதாவின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க, மாட்சிமையுடன் மீண்டும் வரவிருக்கிறார். அவரது அரசுக்கு முடிவிராது. பிதாவினில் நின்றும், சுதனில் நின்றும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். இவர் பிதாவோடும் சுதனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகிறார். தீர்க்கதரிசிகளின் வாயிலாக பேசியவர் இவரே. ஏக பரிசுத்த கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையையும் விசுவசிக்கிறேன். பாவமன்னிப்புக்கான ஒரே ஞானஸ்நானத்தையும் ஏற்றுக் கொள்கிறேன். மரித்தோர் உத்தானத்தையும் வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.
ஆமென்.

சாதாரண சிறு மனவல்ய செபங்கள் நம்மை பசாசின் பிடியிலிருந்து விடுவிக்கும் சக்தி பெற்றவை. மனவல்ய செபங்களைச் சொல்லும் பழக்கம் குறைந்துவிடாமல் நாம் கைக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் சில பயனுள்ள மனவல்ய செபங்களைச் சொல்வோம்.

சேசுவின் திரு இருதயமே உம்முடைய இராச்சியம் வருக.



சேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது மேல் வைக்கிறேன்.




இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுள்ள சேசுவே, என் இருதயம் உம்முடைய இருதயத்தைப் போலாகும்படி செய்தருளும்.




சேசுமரியே உங்களை நேசிக்கிறேன், ஆத்துமங்களைக் காப்பாற்றுங்கள்.




சேசுமரி சூசை என் ஆத்துமத்தையும், சரீரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்.



நிந்தைப் பரிகார வழிபாடு:

நம் பிதாவான கடவுளுக்கு விரோதமாகச் செய்யப்படும் பொறுக்க முடியாத இந்த நிந்தைகளுக்குப் பரிகாரமாக, அவருடைய பிள்ளைகளாகிய நாம் நம் இதயபூர்வமான விசுவாசத்தையும் ஆராதனையையும் நம்பிக்கையையும் அன்பையும் தெரிவிப்போமாக.

மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் மீது நம்முடைய தளரா விசுவாசத்தையும் பிரமாணிக்கத்தையும் வெளிப்படுத்தும்படி மும்முறை திரித்துவ தோத்திரம் சொல்வோம்.

பிதாவுக்கும், சுதனுக்கும், இஸ்பிரீத்துசாந்துவுக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது, ஆதியிலே இருந்தது போல இப்பொழுதும், எப்பொழுதும், அநாதி சதாகாலமும் இருக்கும்படியே. ஆமென் சேசு. (3).

நற்கருணையில் சேசு பிரசன்னமாயிருக்கிறார் என்பதை
சாத்தான் அறியும். சாத்தான் மதம் அதை விசுவசிக்கிறது. அதனால்தான் கத்தோலிக்க கோவில்களிலிருந்து எடுக்கப்பட்ட நற்கருணையை அவசங்கைப்படுத்துகிறது. அவர்கள் விசுவாசித்துப் பகைக்கிறார்கள். அதற்கு ஈடாகவும் அதற்கு மேலாகவும் நாம் விசுவசித்து நேசிப்போம். ஆராதிப்போம். இதை வெளிப்படுத்தும்படி இப்போது எல்லோரும் "நித்திய ஸ்துதிக்குரிய" என்ற செபத்தைப் பக்தியுடன் மும்முறை பாடுவோம்.

நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்கு சதா காலமும் ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (3).

சாத்தானின் கை ஓங்குவதன் காரணம் என்ன? சாத்தானை முறியடித்த சேசுவின் சிலுவை எந்த அளவுக்கு மங்குகிறதோ அந்த அளவிற்கு பசாவின் வல்லமை ஓங்குகிறது. மீட்பளிக்கும் சிலுவையாகிய துன்பங்களை நாம் பரித்தியாக உணர்வோடு ஏற்றுக் கொள்ளாவிட்டால் சேசுவின் சிலுவையை நாம் புறக்கணிக்கிறோம். கிறீஸ்தவ வாழ்வின் கடமைகளைச் சரிவரச் செய்வதில் ஏற்படும் சிரமங்களை பரித்தியாகமாக ஏற்கும்படி பாத்திமாவில் தேவ அன்னை கூறினார்கள், இக்காலத்தில் "சிலுவை அடையாளம்" கூட மூடிமறைக்கப்பட்டு வருகிறது. சிலுவையைப் பகிரங்கமாக நட வேண்டிய இடங்களில் நடுவதில்லை. நம் நெற்றியிலும் வாயிலும் மார்பிலும் மீட்பின் சின்னமாகிய சிலுவை அடையாளம் வரைந்து கொள்ளும் வழக்கம் மறைந்து வருகிறது. பசாசு ஒரு இடத்தில் புகுமுன் அதனால் சகிக்கவே முடியாத சிலுவை அடையாளம் அங்கே இல்லாதபடி அகற்றுகிறது. இதை உணரும் நாம் பசாசை வெல்லும் சேசுவின் சிலுவை அடையாளத்தை நம்மீது இப்போது வரைந்து கொள்வோம்.



(✠ சிலுவை வரைந்து கொண்டே) அர்ச்சியஷ்ட சிலுவை (✠ நெற்றியில்) அடையாளத்தினாலே, எங்கள் சத்துருக்களிடமிருந்து (✠ வாயில்) எங்களை, இரட்சித்தருளும், எங்கள் சர்வேசுரா (✠ மார்பில்) பிதாவுடையவும், சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே! ஆமென்.



வாசகம்:

எழுபத்து மூன்றாம் சங்கீதத்திலிருந்து வாசகம். (சங். 73).

"ஆண்டவரே! உமது பரிசுத்த ஸ்தலத்தில் சத்துரு எவ்வளவு பொல்லாப்பு செய்தான்! உமது பகைவர், உமக்குத் தோத்திரமான திருச்சடங்கு நேரத்தில் பெருமை பாராட்டினார்கள். தங்கள் செய்கையின் அக்கிரமத்தை உணராமல் தேவாலயத்தின் சிகரத்திலும் வாசற்படிகளிலும் தங்கள் கொடிகளை வெற்றியின் அடையாளமாக நாட்டினார்கள். கோடாரிகளினால் காட்டில் மரங்களை வெட்டுகிறார்போல் தேவலாயத்தின் கதவுகளைப் பிளந்து போட்டார்கள். கோடாரியாலும் சம்மட்டியாலும் உம்முடைய சுதந்திரத்தை இடித்தார்கள். உமது ஆலயத்தில் நெருப்பு வைத்தார்கள். பூமியில் உமது திரு நாமத்தின் கூடாரத்தைப் பங்கப்படுத்தினார்கள். அவர்கள் ஒரு மிக்கக்கூடி தங்கள் இருதயத்தில் சொன்னதாவது: பூமியில் தேவனுக்கு திருநாள் அற்றுப் போகும்படிச் செய்வோம். எங்களுக்கு உதவியாக அற்புதங்களை நாங்கள் காணவில்லை. எங்களில் உதவியாக அற்புதங்களை நாங்கள் காணவில்லை. எங்களில் தீர்க்கதரிசியுமில்லை; ஒருவரும் எங்களை அறியமாட்டார்கள்.

'சர்வேசுரா! எதுவரைக்கும் சத்துரு எங்களை நிந்திப்பான்? எதிரிகள் முடிவுவரை உமது நாமத்தைப் பரிகசிப்பார்களோ?'

தாவீதரசனின் இவ்வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டன. நாஸ்திகரும் தெய்வ நிந்தையாளரும் செய்யும் அக்கிரம் பழிகள் அளவை மிஞ்சி வருகின்றன. இதற்கெல்லாம் நாம் பரிகாரம் செய்தல் அவசியம்.

ஆண்டவர் இயேசுவுக்கும் அன்னை மரியாளுக்கும் மன்றாட்டு:

கிறிஸ்துவின் ஆத்துமமே , என்னைப் புனிதப்படுத்தும்.
மரியாயின் மாசற்ற இருதயமே, எனக்கு உதவும்.

கிறிஸ்துவின் திருவுடலே, என்னைக் காப்பாற்றும்.
என் ஆன்மாவின் அன்னையே, என்னை மனந்திருப்பும்.

கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை மகிழ்வியும்.
மரியாயின் துயரங்களே, என்னை ஊடுருவும்.

கிறிஸ்துவிலாவிலிருந்து வழியும் திருநீரே. என்னைக் கழுவும்.
மரியாயின் கண்ணிரே , என்னைத் தூய்மையாக்கும்.

கிறிஸ்துவின் பாடுகளே, என்னை ஆறுதல் படுத்தும்.
மரியாயின் தனிமையே, என்னை வீழ்ச்சியிலிருந்து தூக்கிவிடும்.

ஓ! என் நல்ல இயேசுவே, என் மன்றாட்டைக் கேட்டருளும்.
ஒ! மரியாயின் மென்மையே, என்னைக் கண்ணோக்கும்.

ஓ! இயசுேவே, உமது திருக்காயங்களில் என்னை மறைத்துக் கொள்ளும்.
ஓ! மரியே உமது ஆன்மாவின் ஆழத்தில், என்னை பற்றி எரியச் செய்யும்.

ஓ! இயேசுவே, தீமையிலிருந்து என்னை தப்புவியும்.
ஒ! மரியே நான் சாகும்போது, என்னை உம் அன்புகரத்தில் தாங்கிக் கொள்ளும்.

ஓ! இயேசுவே, உமது சம்மனசுக்கள் புனிதர்களுடைய குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளும்.
ஒ! மரியே விண்ணகத்தில் உம்மைக் கண்டடைய எனக்குக் கட்டளையிடும்.
ஆமென்.

மரியாயின் இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம்:

இப்போது நாம் மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயத்திற்குப் பரிகாரம் செய்வோம். மாமரிக்கெதிராக அப்படி என்ன பாவம் செய்யப்படுகிறது, அவற்றை இங்கு நினைவுபடுத்தி நம்மால் இயன்ற நிந்தைப் பரிகாரம் செய்வோம்.

மைந்தனின் நிந்தை எப்படி மாதாவைப் பாதிக்கிறதோ அதே போல் மாதாவின் நிந்தை மைந்தனை மிகவும் வேதனைப்படுத்துகின்றது. இதனாலேயே சேசு தன் அன்னையின் மாசற்ற இருதயத்திற்கும் நிந்தை பரிகாரம் செய்யப்படும்படி கேட்கிறார். 1925-ம் வருடம் டிசம்பர் 10-ம் நாள் பாத்திமா காட்சி பெற்று சகோதரி லூஸியாவுக்கு சேசு தம் அன்னையுடன் தோன்றினார். மாதாவின் வலது கரத்தில் குத்தி ஓடுருவும் முட்களால் சூழப்பட்ட ஓர் இருதயம் இருந்தது. சேசு லூஸியாவுக்கு அந்த இருதயத்தைக் காட்டி. "உன்னுடைய மிகப்புனித அன்னையின் இருதயத்தின் மீது இரக்கப்படு.
நன்றியற்ற மனிதர்கள் அதை ஒவ்வொரு விநாடியும் ஊடுருவக் குத்தும் முட்களால் இது சூழப்பட்டுள்ளது. பரிகார முயற்சி செய்து அம் முட்களை அகற்ற யாருமில்லை'' என்றார். நம் அன்னையின் இருதயத்துக்கு ஆறுதல் தர சேசு எவ்வளவு ஆசிக்கின்றார், என்று இதிலிருந்து நாம் உணர முடியும். இக்காட்சி நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பின் 1926- பெப்ருவரி 15-ம் நாள் சேசு மீண்டும் லூஸியாவுக்குத் தோன்றி என் தாயின் மாசற்ற இருதயப் பக்தியைப் பரப்ப இதுவரை என்ன செய்யப்பட்டுள்ளது'' என்று கேட்டார். மரியாயின் இருதயத்துக்கு ஆறுதலை தாமதமில்லாமல் செய்ய வேண்டும் என இதனால் சேசு உணர்த்துகிறார். சேசு விரும்பிக் கேட்ட பரிகாரத்தை நாம் கொடுப்போம்.

(1) ஓ எங்கள் அமலோற்பவத் தாயே! உங்களின் அமல உற்பவமே பாவ உலகில் மனிதரின் ஒரே பாக்கியமாக உள்ளது. ஜென்மப் பாவமின்றி உற்பவித்த நீங்கள்தான் பசாசின் தலையை நசுக்கி வெல்ல முடியும். இவ்வுண்மையை மறுத்து உங்களின் அமலோற்பவத்தை மறுக்கும் வகையில் பிதற்றத் துணிந்துள்ளவர்களுக்காக நாங்கள் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம். உங்கள் மாசற்ற இருதயத்தை இவ்வாறு துயரத்துக்குள்ளாக்குவோரின் பாவத்துக்குப் பரிகாரம் செய்து உங்களை வாழ்த்துகிறோம்.
மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!

(2) ஓ எங்கள் கன்னித்தாயே! முப்பொழுதும் பழுதற்ற கன்னிகையே! பதிதக் கொள்கையுடைய சிலர் உங்களுடைய நித்திய புனித கன்னிமைகளுக்குக் களங்கம் கற்பித்து வருகிறார்கள். பேயின் தூதரான சில மனிதர் வாயால் கூறக்கூடாத அளவு இதில் உங்களைப் பழித்து உரைக்கின்றார். மேடையிலும் புத்தகங்களிலும் பத்திரிகையிலும் உங்களது தூய கன்னிமையை இழிவாகப் பேசியும் எழுதியும் சித்தரித்தும் வருகின்றனர். இந்த அவமானத்துக்கு தகுந்த பரிகாரமாக உங்கள் நேசப் பிள்ளைகளாகிய நாங்கள் "பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே'" என்று சத்தியத் திருச்சபையுடனும், எண்ணற்ற புனிதர் சம்மனசுக்களுடனும் உங்களை வாழ்த்திப் போற்றுகிறோம்.
மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!

(3) கடவுளின் தாயாகும் மாபெரும் பேறு பெற்ற மாமரியே! நெஸ்டோரியுஸ் முதல் இன்று வரையிலும் உங்களின் தெய்வத் தாய்மையை மறுக்கும் அனைவருக்காகவும் நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம். உண்மையாகவே நீங்கள் இறைவனின் அன்னை. எங்களின் தாய் என்று பெருமையுடன் உங்களை அழைத்து, "கிறீஸ்துவின் மாதாவே! தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே! சிருஷ்டிகருடைய மாதாவே!" என்று உங்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!

(4) மகா அன்புக்குப் பாத்திரமான மாதாவான மாமரியே! கடவுளை எதிர்ப்பவர்கள் உங்களையும் எதிர்க்கிறார்கள், பகைக்கிறார்கள், வெறுக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதோடு நில்லாமல் பிறரையும் விசேஷமாக இளம் உள்ளங்களையும் இத்தீமையில் உட்படுத்துகிறார்கள். மாசற்ற மாமரியைப் பழித்துப் பகைக்கும்படி தூண்டுகிறார்கள். கற்றுத் தருகிறார்கள்! அளவுக்கு மிஞ்சிய இந்த அக்கிரமத்துக்காக உங்களிடம் மன்னிப்பு வேண்டி உங்களை எங்கள் மனமார நேசித்து வாழ்த்தி
வரவேற்கிறோம்.
மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!

(5) தாவீது இராஜாவின் உப்பரிகையான மாமரியே! உங்களின் மீது பேயின் தூதர்களுக்கு எவ்வளவு வெறுப்பென்றால் உங்கள் திரு உருவங்களையும், படங்களையும் அவர்களால் பொறுக்க முடியவில்லை. உங்களை நினைப்பூட்டும் எந்தப் பொருளும் அவர்களுக்குப் பொருந்தாததாக இருக்கின்றது. திட்டமிட்டு அவைகளை ஆலயங்களிலிருந்தும் பீடங்களிலிருந்தும், வீடுகளிலிருந்தும், சேத்திரங்கள் பிரசுரங்களிலிருந்தும் அகற்றி வருகிறார்கள். உங்கள் அன்பின் அடையாளமான செபமாலை, உத்தரியம், அற்புத சுரூபம், சபைச்சின்னம் முதலியவற்றை புறக்கணிப்புச் செய்கிறார்கள். இவர்களின் பழிப்புக்கெல்லாம் பரிகாரமாக நாங்கள் உங்கள் உருவங்களையும், படங்களையும், பக்திப் பொருள்களையும், அன்புடன் பாதுகாத்து உபயோகிப்பதால் உங்கள் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் செய்கிறோம்.
மரியாயின் துயரம் நிறைந்த மாசற்ற இருதயமே வாழ்க!



அர்ச்சியசிஷ்ட தேவ மாதாவின் பிரார்த்தனை.



சுவாமி கிருபையாயிரும் (2)
கிறிஸ்துவே கிருபையாயிரும் (2)
சுவாமி கிருபையாயிரும் (2)

கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும்

அர்ச்சிஷ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

அர்ச்சிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச்சிஷ்ட கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்துவினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச்சபையினுடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ வரப்பிரசாதத்தின் மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா பரிசுத்த மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பழுதற்ற கன்னிகையாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னி சுத்தங் கெடாத மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆச்சரியத்துக்குரிய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நல்ல ஆலோசனை மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சிருஷ்டிகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இரட்சகருடைய மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா புத்தியுடைத்தான கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகா வணக்கத்துக்குரிய கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சக்தியுடையவளாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தயையுள்ள கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விசுவாசியாயிருக்கிற கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தர்மத்தினுடைய கண்ணாடியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானத்துக்கு இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்கள் சந்தோஷத்தினுடைய காரணமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஞானப் பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மகிமைக்குரிய பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அத்தியந்த பக்தியுடைத்தான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீது இராஜாவினுடைய உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தந்தமயமாயிருக்கிற உப்பரிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வாக்குத்தத்தத்தின் பெட்டியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோகத்தினுடைய வாசலே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

விடியற்காலத்தின் நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வியாதிக்காரருக்கு ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பாவிகளுக்கு அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கஸ்திப்படுகிறவர்களுக்குத் தேற்றரவே ., எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கிறிஸ்தவர்களுடைய சகாயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அப்போஸ்தலர்களுடைய இராக்கினயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

வேதசாட்சிகளுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஸ்துதியருடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னியர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல அர்ச்சிஷ்டவர்களுடைய இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மோட்ச ஆரோபணமான இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திரு ஜெபமாலையின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குருக்களின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சமாதானத்தின் இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

குடும்பங்களின் ராக்கினியே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களை போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையை கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களை தயை பண்ணி இரட்சியும் சுவாமி

சேசு கிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாயிருக்கத்தக்கதாக, சர்வேசுரனுடைய அர்ச்சிஷ்ட மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜெபிப்போமாக.
சுவாமி முழுமனதோடே தண்டனாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்தி பேறு பெற்ற மரியாயுடைய வேண்டுதலினாலே சகல சத்துருக்களுடைய சற்பனைகளிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்றாட்டுகளை யெல்லாம் எங்கள் ஆண்டவராகிய சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்.