இயேசுவின் திரு இருதய வணக்க மாதம். 30-ம் தேதி.

இயேசுவின் திரு இருதயத்துக்கு உகந்த ஓர் குடும்பம்.

இயேசுவின் திரு இருதயத்துக்குத் தங்களைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் கத்தோலிக்க குடும்பங்களெல்லாம் நசரேத்தூர் திருக்குடும்பத்தின் புண்ணிய மாதிரிகைகளை உத்தம் விதமாய்ப் பின்பற்றப் பிரயாசப்பட வேண்டும். அங்கே புனித சூசையப்பரும் மரியன்னையும் கட்டளையிட்டார்கள். திவ்விய இயேசு அவர்களுக்குக் கீழ்ப்படிந்தார். என்றாலும், ஆண்டவருடைய சுபாவந்தான் சகலத்தையும் நடத்திக் கொண்டு வந்தது. அவர்களுடைய ஜெபம், வேலை, அசனம், சம்பாஷனை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புண்ணிய முயற்சியாகவும், பக்தி முயற்சியாகவும், நன்மாதிரிகைக் குரியதாகவுமிருந்தது. இந்தக் குடும்பத்திலுள்ள மூவரும் தங்கள் சொந்த வீடாகிய தேவாலயத்தில் தங்கள் பாக்கியத்தைக் கண்டடைந்தார்கள். மாலைப் பொழுதில் மூவரும் ஒன்று சேர்ந்து சம்பாஷனை செய்வார்கள். அந்த சாம்பாஷனை பக்திக்கடுத்ததாகவே இருக்கும். திவ்விய இயேசுவின் வார்த்தைகள் அவருடைய திரு இருதயத்திலிருந்து புறப்படும் வார்த்தைகள். அவர் வேதம் போதிக்கும்போது ஜனத்திரளின் இருதயத்தை இளக்கி அவர் பரிசமாய் இழுத்தது அவரது தெய்வீக வார்த்தைகள்தான்.

திவ்விய இயேசு வெளியரங்க வாழ்வில் தமது பிள்ளைகளாகிய அப்போஸ்தலர்கள் நடுவில் இருந்தபோதும், குடும்பத்தின் தகப்பன்மார்களுக்கும் உத்தம் மாதிரிகையாய் விளங்கினார். அவர்களுடைய ஆத்தும சரீர நன்மையைப் பற்றி மிக கவலை எடுத்துக் கொள்கிறார். அவர்களுக்குப் போதிக்கிறார். பட்சத்தோடும் உறுதியோடும் அவர்கள் குற்றத்தைக் கண்டித்துத் திருத்துகிறார். அவர்கள் நடுவில் சமாதானமும், தகப்பனுக்கும் பிள்ளைக்குமுள்ள ஒற்றுமையும் குடிகொண்டிருக்கச் செய்கிறார். அவர்கள் ஆத்தும் சரீரத்துக்கு அபாயம் வருவிக்கும் எதிரிகளிடத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். மாறாத பிறரன்போடு அவர்களோடு புழங்குகிறார். கடைசியாய்ச் சகல புண்ணியங்களையும் அனுசரித்து அவர்களுக்கு இடைவிடாமல் நன்மாதிரிகை காண்பிக்கிறார்.

அப்போஸ்தலர்கள் நடுவில் திவ்விய இயேசு நடந்தது போல் நல்ல கத்தோலிக்கக் குடும்பத்திலுள்ள தாய்தந்தையர்களும் தங்கள் பிள்ளைகளின் நடுவில் நடப்பார்கள். தங்கள் பிள்ளைகளின் படிப்பினைக்கும், ஆத்தும் மீட்புக்கும் உத்திரவாதிகளான அவர்கள், தாங்கள் இயேசுக் கிறீஸ்துவின் பதிலாளிகள் என்று எண்ணிக் கொள்ளக் கடவார்கள். அவர்களுடைய இளம்பிராயத்திலேதானே, விசுவாசத்தின் பிரதான சாத்தியங்களையும், எங்குமிருந்து எல்லாவற்றையும் பார்க்கிற தேவ சன்னிதானத்தையும், அவர்கள் அடைய வேண்டிய மோட்ச பாக்கியத்தின் நினைவையும், விலக்கவேண்டிய நரகத்தின் நினைவையும், ஆத்துமத்துக்குக் கேடு வருவிக்கிற பாவத்தின் மேல் பகையையும், கடைசியில் சகல கிறீஸ்துவப் புண்ணியங்களின் அனுசரிப்பையும் அவர்களுடைய மனதிலும் இருதயத்திலும் பதியும்படி செய்யவேண்டியது.

பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களின் நற்புத்திமதிகளையும், நன்மாதிரிகைகளையும் எப்போதும் நினைத்துக் கொள்வார்களென்பது ஒரு பக்கத்தில் உண்மையானால், வேறொரு பக்கத்தில் அவர்கள் பெற்றோர்களிடம் கண்ட துர்மாதிரிகைகளும் அவர்கள் ஞாபகத்தைவிட்டு ஒருபோதும் விலகாது. இந்த ஞாபகம் அவர்களுடைய மீட்பு விஷயத்தில் வெகு ஆபத்தான விசாரத்தை விளைவிக்கும்.

இயேசுவின் திரு இருதயப் பக்தியில் விளங்கும் பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தையும் வீட்டையும் அத்திரு இருதயத்தின் தேவாலயமாக ஏற்படுத்துவார்கள். இந்தத் தேவாலயம் பரிசுத்ததனத்திலும், புனித தனத்திலும் விளங்கும்படி காப்பாற்றுவார்கள்.

வரலாறு

இயேசுவின் திரு இருதயம் புனித மார்கரீத் மரியம்மாள் வழியாக உலகத்துக்குத் தம்மை அறிவித்த சில வருஷங்களுக்குப் பிற்பாடு பாரலேமோனியால் மடத்தில் ஓர் சிறு ஜெபக்கூடம் கட்டப்படுவதைப் பார்த்து இந்தக் கன்னியாஸ்திரி வெகு ஆறுதலடைந்தாள். என்றாலும் இந்த சொற்ப ஆரம்பத்தோடு அவள் திருப்தியடைந்திருக்கவில்லை. ஆதலால் மடத்தின் எல்லைக்குள் இயேசுவின் திரு இருதயத்துக்குத் தோத்திரமாக வேறோர் பெரிய ஜெபக்கூடம், கூடிய சீக்கிரம் கட்ட உத்தரவாகும்படி மடத்துப் பெரிய தாயாரை வெகுவாய்க் கெஞ்சிக் கேட்டாள்.. அவளுடைய விண்ணப்பம் பலித்தது. 1688-ம் வருஷம் ஜெபக்கூடம் கட்டி முடிந்து, அநேகங் குருக்கள், கிறிஸ்துவர்கள் கூடியிருக்க வெகு ஆடம்பரமாய் மந்திரிக்கப்பட்டது. பீடத்தின் மேலே வெகு நேர்த்தியாய் சித்தரிக்கப்பட்ட அழகான இயேசுவின் திரு இருதயப்படம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் புனித மார்கரீத் மரியம்மாளுடைய இருதயமானது சந்தோஷத்தால் அகமகிழ்ந்து பூரித்தது. மந்திரிக்கும் சடங்கு நடக்கும்போது ஜெபக்கூடத்தின் ஓர் மூலையில் முழந்தாட்படியிட்டு பரவசத்திலிருந்தவள் போல் காணப்பட்டாள். திரு இருதய மகிமைக்கு முதல் அடையாளமாக ஏற்பட்ட இந்த ஜெபக்கூடத்துக்கு மார்கரீத் மரியம்மாள் அடிக்கடி வந்து வேண்டிக் கொள்வாள். மாதத்தின் முதல் வெள்ளிகளில் மடத்திலுள்ள சகலரும் இயேசுவின் திரு இருதயத்துக்குத் தோத்திரம் செலுத்த வருவதைப் பார்க்கும்போது, அவள் அனுபவித்த சந்தோஷத்துக்கு அளவில்லை . இந்த ஜெபக்கூடம் இன்னும் இருக்கிறது. திரு இருதய அன்பர்கள் நாளதுவரை அதைப் பக்தியோடு சந்தித்து வருகிறார்கள்.

ஆத்தும் இரட்சண்ய ஆவலால் அயராமல் உழைத்து வரும் கோயம்புத்தூர் மிஷனைச் சேர்ந்த வேத போதகர்கள் தற்போது கோயம்புத்தூர் பட்டணத்திலேயே ஓர் அழகான கோவில் இயேசுவின் திரு இருதயத்துக்குத் தோத்திரமாகக் கட்டியிருக்கிறார்கள். இந்த இடம் இயேசுவின் திருஇருதயப் பக்திக்கு ஆஸ்பதமாகி கிறிஸ்துவர்களுடைய புனிதப்படுத்தலுக்கும் பிறமதத்தினர் மனந்திரும்புதலுக்கும் அவசியமான கொடைகளுக்கு ஊற்றாக விளங்கும் என்பதற்கு சிறிதும் சந்தேகமில்லை .

நம் இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இன்னும் பெங்களூர், கும்பகோணம், மங்களூர், வீராப்புள்ளி, கொல்லம், எர்னாக்குளம், சங்கனாச்சேரி, கொழும்பு, பர்மா, மலாக்கா முதலிய தீவு தீவாந்தரங்களைச் சேர்ந்த மிஷன்களிலும், அநேக நேர்த்தியான தேவாலயங்கள் இயேசுவின் திரு இருதயத்துக்குத் தோத்திரமாகக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்த உன்னத இடத்திலிருந்து இயேசுவின் திரு இருதயமானது, கிறீஸ்துவர்களுடைய அர்ச்சிப்புக்காகவும், அஞ்ஞானம் நிறைந்த இவ்விந்திய தேசமும் இதைப் போன்றே மற்றெந்த நாடுகளும் மனந்திரும்பி இரட்சண்யமடையும் படியாகவும் ஓயாமல் வேண்டிக் கொண்டுவருகிறது.
இத்திரு இருதயத்தோடு நாமும் ஒன்றித்து பர. பிரி. வேண்டிக்கொள்வோமாக.

சேசுவின் திரு இருதயத்திற்கு நவநாள் ஜெபம்

“கேளுங்கள், கொடுக்கப்படும், தேடுங்கள் அகப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருவுளம்பற்றியிருக்கிற திவ்விய சேசுவே!  தேவரீருடைய இருதயத்தினின்று உற்பத்தியாகி, ஆராதனைக்குரிய உமது திரு நாவினால் உரைக்கப்பட்ட இந்த வாக்குத்தத்தங்களை நம்பிக் கொண்டு உயிருள்ள விசுவாசத்தால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தில் இதோ அடியேன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கித் தாழ்ச்சியுடன் கேட்டுக் கொள்ளும் மன்றாட்டேதென்றால் சகல நன்மைகளுக்கும் பேறுபலன்களுக்கும் வற்றாத ஊறுணியாகிய தேவரீருடைய திரு இருதயத்தினின்றல்லாமல் வேறே யாரிடத்தினின்று இதைக் கேட்கப் போகிறேன்?  தயாள சம்பன்ன ஐசுவரியங்களெல்லாம் அடங்கிய பொக்கிஷத்திலன்றி வேறெங்கே நான் இதைத் தேடப் போகிறேன்?  சர்வேசுரன் தானே பிரசன்னமாகிறதுமாய் நாங்கள் அவரிடத்திற்குப் போக வழியுமாயிருக்கிற உமது திரு இருதய வாசலிடத்தில் வந்து தட்டாமல் வேறெங்கே தட்டிக் கேட்கப்போகிறேன்?  ஆகையால் என் நேச சேசுவின் திரு இருதயமே!  தேவரீருடைய தஞ்சமாக ஓடி வந்தேன். இக்கட்டிடைஞ்சலில் என் ஆறுதல் நீரே. துன்ப துயரத்தில் என் அடைக்கலம் நீரே.  சோதனைத் தருணத்தில் எனக்கு ஊன்றுகோல் நீரே. தேவரீருக்குச் சித்தமானால் அற்புதம் வேண்டியிருந்தாலும் நடத்தி இந்த வரத்தை எனக்குத் தந்தருளுவீரென்று நம்பியிருக்கிறேன். தேவரீர் சித்தம் வைத்தாலே போதும், என் ஜெபம்  பிரார்த்தனைகள் அனுகூலமாகும். திவ்விய சேசுவே!  தேவரீருடைய நன்மை உபகாரங்களுக்கு நான் முழுதும் அபாத்திரவான் தான்.  ஆகிலும் நான் இதனாலே அதைரியப் பட்டுப் பின்னடைந்து போவேனல்ல. தேவரீர் இரக்கத்தின் தேவனாகையால் துக்க மனஸ்தாபப்படும் தாழ்ச்சியுள்ள இருதயத்தைத் தேவரீர் தள்ளுவீரல்ல.  உமது இரக்கமுள்ள கண்களால் என்னை நோக்கியருளும்.  என் நிர்ப்பாக்கியத்தையும் பலவீனத்தையும் கண்ட மாத்திரத்தில் தேவரீருடைய கிருபை நிறைந்த இருதயம் எனக்கிரங்காமல் போகாது.

இரக்கமுள்ள திரு இருதயமே! என் விண்ணப்பத்தின் மட்டில் தேவரீர் என்ன தீர்மானம் செய்தாலும் சரியே.  தேவரீர்  வாழ்த்தி வணங்கிப் போற்றிப் புகழ்ந்து சேவிக்க நான் ஒருக்காலும் பின்வாங்குவேனல்ல. அன்புக்குரிய இரட்சகரே, ஆராதனைக்குரிய உம்முடைய திவ்விய இருதயத் தீர்மானத்திற்கு முழுதும் அமைந்து நடக்க நான் செய்யும் சுகிர்த முயற்சியைக் கிருபையாய்க் கையேற்றுக்கொள்ளும்.  நானும் சகல சிருஷ்டிகளும் இப்படி உமது சித்தத்தை நாடி நடந்து சதா காலத்திற்கும் இதை நிறைவேற்ற ஆசையாயிருக்கிறேன். ஆமென்.

சேசுநாதருடைய திரு இருதயத்தின் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும்
கிறீஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.

கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

1. நித்திய பிதாவின் சுதனாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

2. பரிசுத்த கன்னித்தாயின் உதரத்திலே இஸ்பிரீத்து சாந்துவினால் உருவான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

3. தேவ வார்த்தையான சுதனோடு ஒரே பொருளாய் ஒன்றித்திருக்கும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

4. அளவற்ற மகத்துவ பிரதாபம் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

5. சர்வேசுரனுடைய அர்ச்சிக்கப்பட்ட ஆலயமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

6. அதி உன்னத ஆண்டவரின் வாசஸ்தலமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

7. சர்வேசுரனுடைய வீடும் மோட்சத்தின் வாசலுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

8. சிநேக அக்கினி சுவாலித்தெரியும் சூளையான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

9. நீதியும் சிநேகமும் தங்கியிருக்கும் இல்லிடமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

10. தயாளமும் சிநேகமும் நிறைந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

11. சகல புண்ணியங்களும் சம்பூரணமாய் நிறையப் பெற்ற சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

12. எவ்வித ஸ்துதி புகழ்ச்சிக்கும் முற்றும் உரிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

13. இருதயங்களுக்கெல்லாம் அரசும் அவைகளின் மத்திய ஸ்தானமுமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

14. ஞானமும் அறிவும் நிறைந்த பூரண பொக்கி­மான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

15. தெய்வத்துவ சம்பூரணம் தங்கி வாசம் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

16. உமது பிதாவுக்கு உகந்த பிரிய நேசமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

17. உம்மிடத்தில் நிறைந்திருக்கும் நன்மைகளை நாங்கள் அனைவரும் பெற்று மகிழச் செய்யும் சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

18. நித்திய சிகரங்களின் ஆசையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

19. பொறுமையும் மிகுந்த தயாளமுமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

20. உம்மை மன்றாடிப் பிரார்த்திக்கும் சகலருக்கும் சம்பூரணங் கொடுக்குந் தாராளமுள்ள சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

21. சீவியத்துக்கும் அர்ச்சியசிஷ்டதனத்துக்கும் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

22. எங்கள் பாவங்களின் மன்னிப்புக்கேற்ற பரிகாரமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

23. நிந்தை அவமானங்களால் நிறைந்து மிகுந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

24. எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நொந்து வருந்தின சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

25. மரணமட்டும் கீழ்ப்படிந்திருந்த சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

26. ஈட்டியால் குத்தி ஊடுருவப்பட்ட சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

27. சர்வ ஆறுதலின் ஊற்றாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

28. எங்கள் சீவனும் உத்தானமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

29. எங்கள் சமாதானமும் ஒற்றுமைப் பந்தனமுமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

30.பாவங்களின் பலியான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

31. உம்மிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுடைய இரட்சணியமான சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

32. உம்மிடம் மரிக்கிறவர்களின் நம்பிக்கையாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

33. சகல அர்ச்சியசிஷ்டவர்களின் ஆனந்தமாகிய சேசுவின் திவ்விய இருதயமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.

இருதயத்தில் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ள சேசுவே! எங்கள் இருதயம் உமது இருதயத்தைப் போலாகும்படி கிருபை செய்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வ வல்லவரான நித்திய சர்வேசுரா!  உமக்கு மிகவும் பிரிய குமாரனுடைய இருதயத்தையும், அவர் பாவிகள் பேரால் உமக்குச் செலுத்தின பரிகாரத்தையும் ஸ்துதி புகழ்ச்சியையும் கிருபையாய்ப் பார்த்தருளும் சுவாமி.  உமது இரக்கத்தை மன்றாடிக் கேட்பவர்களுக்குத் தேவரீர் இரங்கி மன்னிப்புக் கொடுத்தருளும். இந்த மன்றாட்டுக்களையயல்லாம் தேவரீரோடும் இஸ்பிரீத்து சாந்துவோடும் சுயஞ்சீவியராய் சதா காலமும் இராச்சிய பரிபாலனஞ் செய்யும் உமது திவ்விய குமாரன் சேசுகிறீஸ்துநாதர் பெயரால் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி. 

ஆமென்.

1899-ம் வருடம் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி பதின்மூன்றாம் சிங்கராயர் என்னும்  அர்ச்சியசிஷ்ட பாப்பானவர் இந்தப் பிரார்த்தனையைப் பக்தியோடு சொல்லுகிற ஒவ்வொரு விசைக்கும் 300 நாள் பலனைக் கட்டளையிட்டிருக்கிறார்.