பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.

அப்பமானது உடலின் உயிருக்கு ஆதாரமாக இருப்பது போலவே, நம்  ஆண்டவர் அப்பத்தின் தோற்றத்திற்குள் ஆத்துமத்தின் உயிருக்கு ஆதாரமாகத் தம்மையே தருகிறார்.  திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பது ஒரு தேவ கட்டளையாகும்.  “நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்க மாட்டீர்கள்” (அரு. 6:54).

இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கான விசே­ காலம் எதையும் நம் ஆண்டவர் நமக்கு நியமிக்க வில்லை.  அது தமது திருச்சபையாலேயே தீர்மானிக்கப் பட அவர் விட்டு விட்டார்.  குறைந்தது  கிறீஸ்தவ ஆண்டின் மிகப் பெரும் திருநாளாகிய உயிர்ப்பு விழா அன்றாவது விசுவாசிகள் அனைவரும் பக்தியோடு திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டுமென்று லாத்தரன் நான்காம் பொதுச் சங்கம் சட்டம் இயற்றியது.  இந்தப் பாஸ்குத் திவ்ய நன்மை வாங்குவதற்கான காலம் சாம்பல் புதனன்று தொடங்கி, வழக்கமாக தமத்திரித்துவ ஞாயிறு வரை நீளுகிறது.

புத்தி விவரம் அறிந்து, புது நன்மை வாங்கிய அனை வரும், பாஸ்குக் காலத்தில் திவ்ய நன்மை வாங்கக்  கடமைப் பட்டிருக்கிறார்கள்.  தேவத் துரோகமான முறையில் உட்கொள்ளப்படும் திவ்ய நன்மை, இந்தக் கடமையை நிறைவேற்றாது. சரியான காலத்தில் இந்தக் கடமை நிறைவேற்றப் படவில்லை என்றால், அது இன்னும் நீடிக்கிறது.  சமயம் வாய்க்கும் போது, கூடிய சீக்கிரம் அது நிறைவேற்றப் பட வேண்டும்.


அடிக்கடி திவ்ய நன்மை உட்கொள்வதன் மீதான ஆணை மடல்

திவ்ய நன்மை  வாங்கும்  கடமைக்குத் திருச்சபை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை, அதை உட்கொள்ளும் காலத்தின் மீதே கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்பது 1905‡ஆம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று, பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதரால் வெளியிடப் பட்ட ஆணை மடலின் மூலம் முற்றிலும் தெளிவாகிறது.

(1)  கத்தோலிக்கர்கள் அடிக்கடியும், அனுதினமும் கூட திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பது நம் ஆண்டவராகிய கிறீஸ்துநாதருடையவும், அவருடைய பரிசுத்த திருச்சபையினுடையவும் மாபெரும் ஏக்கமாக இருக்கிறது.  இந்த அனுதின நன்மை உட்கொள்ளும் பேறு, சகல விசுவாசிகளுக்கும் கிடைக்க வேண்டும், அவர்கள் வாழ்வின் எந்த அந்தஸ்தில், அல்லது நிலையில்  இருந்தாலும் சரி.  இதன் மூலம், தேவ இஷ்டப்பிரசாத நிலையில் இருப்பவர்களும், சரியான, சுத்தக் கருத்தோடு திவ்ய பந்தியை அண்டிச் செல்வோருமான யாருமே அனுதின நன்மை உட்கொள்வதில் இருந்து  நியாயமான முறையில் தடுக்கப் பட முடியாது.

(2) திவ்ய பந்தியை அணுகிச் செல்கிறவன் பழக்கத்திற்காகவோ, வீண் மகிமைக்காகவோ, அல்லது முகஸ்துதிக்காகவோ அப்படிச் செய்யாமல், சர்வேசுரனை மகிழ்விப்பதற்காகவும், தேவ சிநேகத்தால் அவரோடு அதிக நெருக்கமாக இணைக்கப் படுவதற்காகவும், தனது பலவீனத்திற்கும், குறைபாடுகளுக்கும் எதிரான இந்தத் தெய்வீகமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டும் என்பதுதான் இதற்கான சுத்தக் கருத்தாக உள்ளது.

(3)  அடிக்கடி, அல்லது அனுதினமும் திவ்ய நற்கருணை உட்கொள்பவர்கள் அற்பப் பாவங்களில் இருந்தும், குறிப்பாக முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்படுகிற அற்பப் பாவங்களிலிருந்தும், அவை தொடர்பான எத்தகைய ஆசாபாசத்தினின்றும் விடுபட்டிருக்க வேண்டும் என்பது மிகவும் விரும்பத் தக்கதுதான்.  என்றாலும் அவர்கள் சாவான பாவத்திலிருந்து விடுபட்டிருப்பது போதுமானது.  இனி ஒருபோதும் பாவம் செய்யக் கூடாது என்கிற நோக்கமும் அவசியம்.  இந்த நேர்மையான நோக்கம் அவர்களுக்கு இருக்குமானால், தினமும் திவ்ய நன்மை வாங்குபவர்கள் படிப்படியாக அற்பப் பாவங்களில் இருந்தும், அவை தொடர்பான சகல ஆசாபாசங்களில் இருந்தும் விடுபடாதிருக்க வாய்ப்பேயில்லை.

(4)  ஆனாலும் புதிய சட்டத்தின் தேவத்திரவிய அனுமானங்கள், அவற்றை வெறுமனே பெறுவதாலேயே, (eமு லிஸ்ரீere லிஸ்ரீerழிமிலி) நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  என்றாலும், அவற்றைப் பெறுபவரின் ஆத்துமத்தின் பண்புகள் அதிக நல்லவையாக இருக்கும் போது, அவை இன்னும் மேலான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  எனவே, திவ்ய நன்மை உட்கொள்வதற்கு முன், ஒவ்வொருவருடைய வலிமை, சூழ்நிலைகள் மற்றும் கடமைகளுக்கு ஏற்றபடி,  நல்ல முறையில் ஆயத்தம் செய்வதிலும், நன்மை வாங்கிய பிறகு தகுதியான விதத்தில் நன்றியறிதல் செலுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தப் பட வேண்டும்.

(5) அடிக்கடி, அல்லது தினமும் திவ்ய நற்கருணை வாங்கும் வழக்கமானது அதிக விவேகத்தோடு செய்யப் பட வேண்டுமென்றும், அதன் மூலம் அபரிமிதமான பேறுபலன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறவர்கள், தங்கள் ஆன்ம குருவின் ஆலோசனையை  அடிக்கடி பெறுவது அவசியமானது.  ஆயினும், ஆன்ம குருக்கள் தேவ இஷ்டப் பிரசாத நிலையிலும், சுத்தக் கருத்தோடும் இருக்கிற யாரையும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கலாகாது என்று யாரையும் தடுத்து விடாதபடி கவனமாயிருக்க வேண்டும்.  

குழந்தைகள் புத்தி விபரம் அறிந்து, அப்பத்தின் வடிவத்தில் தங்களிடம் வருகிற தங்கள் ஆண்டவருக்கும், சாதாரண அப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பகுத்துணரக் கூடியவர்களாக இருந்தால், அவர்கள் புது நன்மை வாங்கி விட வேண்டுமென்று 1910‡ஆம் ஆண்டில் பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர் பிரகடனம் செய்தார்.  பெற்றோர்களும், குழந்தைகளுக்குப் பொறுப்பாக இருக்கிற அனைவரும், தங்கள் வசமுள்ள குழந்தைகள்  பாஸ்குக் கடனைச் சரிவர நிறைவேற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

நள்ளிரவிலிருந்து கடுமையான உபவாசத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாயிருந்த விசுவாசிகளும் அடிக்கடி திவ்ய நன்மை வாங்குவதை இன்னும் அதிகமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் 1957, மார்ச் 25 அன்று, நன்மை வாங்குமுன் கடைப்பிடிக்க வேண்டிய உபவாசத்தை மூன்று மணி நேரமாகக் குறைத்தார்.


திவ்ய நற்கருணை உபவாசத்திற்குரிய புதிய விதிகள்

(1) எப்போது வேண்டுமானாலும் நீர் அருந்தலாம்.

(2) திவ்ய நன்மை வாங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் திட உணவு அருந்தலாம்.

(3)  மது அல்லாத திரவ உணவுகளை ஒரு மணி நேரத்திற்கு முன்  உட்கொள்ளலாம்.

(4) படுத்த படுக்கையாக இருக்க அவசியம் இல்லாத நோயாளிகள் திட, திரவ மருந்துகளையும், மதுவல்லாத திரவ உணவுகளையும் திவ்ய நன்மை வாங்குவதற்கு முன் எந்நேரத்திலும் உட்கொள்ளலாம். இந்தப் புதிய விதிகள் ஒரு நாளில் திவ்ய நன்மை வழங்கப் படுகிற எந்த நேரத்திற்கும் பொருந்தும்.  அவஸ்தை நன்மையின் வி­யத்தில் தவிர, மற்றபடி ஒரே நாளில் இரு தடவைகள் திவ்ய நன்மை வாங்குவது கூடாது.

ஆயினும் முடிந்த வரை, நள்ளிரவிலிருந்தே உபவாசம் இருந்து திவ்ய நற்கருணை உட்கொள்வது, அதிக ஞான நன்மைகளைப் பெற்றுத் தரும். 

வருடத்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.

பாவ சங்கீர்த்தனம் என்றே பெரும்பாலும் அழைக்கப்படுகிற பச்சாத்தாபம் என்னும் தேவத் திரவிய அனுமானம், ஞானஸ்நானத்திற்குப் பிறகு கட்டிக் கொள்ளப்பட்ட பாவங்களின் மன்னிப்பிற்காக நம் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட ஞான வழியாக இருக்கிறது.  பாவங்களை மன்னிக்கவும், மன்னியாமல் இருக்கவும் அப்போஸ்தலர்களுக்குக் கிறீஸ்துநாதரால் வழங்கப்பட்ட அதிகாரம், நாம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமையைக் குறித்துக் காட்டுகிறது.

சர்வேசுரனுடைய கற்பனையானது பாவங்களை சங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமையை நம் மீது சுமத்தினாலும், அந்தக் கடமை எப்போது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான நேரத்தை அறுதியிட்டுக் கூறவில்லை.  விசுவாச காலங்களில், இது காரியத்தில் எந்த விதமான சட்டத்தையும் ஏற்படுத்துவது திருச்சபைக்கு அவசியமாக இருக்கவில்லை.  விசுவாசிகள், பாவசங்கீர்த்தனத் தொட்டியில் தங்கள் மீது பொழியப்படுகிற வரப்பிரசாதங்களை அறிந்தவர்களாக, அடிக்கடி இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைத் தேடி வந்தனர்.  ஆனால் காலப் போக்கில் பலர் இக்காரியத்தில் அசமந்தம் உள்ளவர்களாக மாறிய போது, கி.பி. 1215‡ஆம் ஆண்டில் நடந்த லாத்தரன் பொதுச் சங்கத்தில், வரு­த்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை ஏற்படுத்துவது அவசியம் என்று திருச்சபை உணர்ந்தது.  ஒருவன்  தன்னிடம் சாவான பாவம் இருக்கக் கண்டால், வருடத்திற்கு ஒரு முறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தக் கட்டளையின் பொருள் ஆகும்  சாவான பாவ நிலையில் உள்ள ஒருவன் ஒரு வருடத்திற்கும் மேலாகப்  பாவ சங்கீர்த்தனம் செய்வதை அசட்டை செய்வான் என்றால் அவன் திருச்சபையின் இரண்டாம் கட்டளைக்கு எதிராக சாவான பாவம் கட்டிக் கொள்கிறான்.  

இந்தக் கட்டளையை நிறைவேற்ற, கடைசியாய்ச் செய்த நல்ல பாவசங்கீர்த்தனத்திற்குப் பிறகு வரும் பன்னிரண்டு மாதங்களுக்குள் வருடாந்தரப் பாவ சங்கீர்த்தனம் செய்யப்பட வேண்டும்.   ஒரு கெட்ட பாவ சங்கீர்த்தனம் இந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை. பாவ சங்கீர்த்தனம் செய்வதற்குரிய மிகச் சரியான நேரம் குறித்துத் தரப்படவில்லை, என்றாலும் வழக்கமாக விசுவாசிகள் தங்கள் பாஸ்காத் திவ்ய நன்மைக்கு முன்பாக பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள்.  வருடாந்தரப் பாவசங்கீர்த்தனம் செய்யத் தவறுகிற எந்த ஒரு கத்தோலிக்கனும், மனச்சான்றில், முடிந்த வரை சீக்கிரமாக இந்தத் தேவத் திரவிய அனுமானத்தைப் பெற்றுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறான்.

ஓருமுறையாவது என்ற வார்த்தையின் மூலம், விசுவாசிகள் அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் திருச்சபை வெளிப்படுத்துகிறது.  இந்த அற்புதமான தேவத் திரவிய அனுமானம் தேவ இஷ்டப் பிரசாதத்தை மட்டுமல்லாது, பாவத்தைத் தடுப்பதற்கான உதவி வரப்பிரசாதத்தையும் நம்மில் அதிகரிக்கிறது.  சாவான பாவத்தில் விழுகிறவர்களுக்கு பாவ சங்கீர்த்தனம் அவசியமான காரியமாகும்.  ஏனெனில், கடவுளோடு பகைமை கொண்டிருக்கும் நிலையில்  மரித்தால், தாங்கள் நித்திய நரகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைக் கத்தோலிக்கர் அறிந்திருக்கின்றனர். இந்தக் காரணத்திற்காகவே  “மனந்திரும்பி ஆண்டவரிடஞ் சேரத் தாமதியாதே;   நாளுக்கு நாள் தாமதஞ் செய்யாதே” என்று கடவுள் பாவிகளை எச்சரிக்கிறார் (சர்வப். 5:8).  மோசமான நோய்வாய்ப் பட்டவன், அல்லது பயங்கர விபத்தில் சிக்கிக் கொண்டவன்  ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறான்.  அவ்வாறே சாவான பாவத்தில் விழுந்து விட்ட ஒரு கத்தோலிக்கனும், முடிந்த வரை சீக்கிரத்தில், ஞான மருத்துவராயிருக்கிற ஒரு குருவிடம் செல்ல வேண்டிய அவசரத்தில் இருக்கிறான்.  “நம்முடைய பாவங்களை நாம் சங்கீர்த்தனம் பண்ணினால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து, சகல அக்கிரமத்திலும் நின்று நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கு அவர் (சர்வேசுரன்) பிரமாணிக்கமும், நீதியும் உள்ளவராயிருக்கிறார் ” என்று அர்ச். அருளப்பர் கூறுகிறார் (1 அரு. 1:9).

ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது.

பழைய சட்டத்தின் கீழ், சர்வேசுரனுடைய மக்கள், அவர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி, பலவிதமான பலிகளைக் கொண்டு அவரை மகிமைப் படுத்தினர்.  ஆயினும் இந்தப் பலிகள், கடைசி இராப் போஜனத்தின் போது சேசு கிறீஸ்து நாதரால் ஏற்படுத்தப் பட்ட புதிய சட்டத்தின் பலியின் மாதிரிகளாக மட்டுமே இருந்தன.  திருச்சபையின் வேதபாரகராகிய அர்ச். அல்போன்சஸ் திவ்ய பலி பூசையைப் பற்றிப் பேசும் போது, “பூசையில், சர்வேசுரன் எந்த அளவுக்கு மகிமைப்படுத்தப்படத் தகுதியுள்ளவராக இருக்கிறாரோ, அந்த அளவுக்கு மகிமைப் படுத்தப் படுகிறார்.  ஏனெனில் கிறீஸ்து நாதர் சிலுவையின் மீது தம்மையே பலியாக்கிய போது, அவருக்கு அளித்த அதே எல்லையற்ற மகிமை, திவ்ய பலி பூசையின் போதும் அவருக்கு அளிக்கப் படுகிறது” என்று கூறுகிறார்.  திவ்ய நற்கருணைப் பலியே சகல பக்திச் செயல்களிலும் அதிக நல்லதும், அதிக ஆதாயமுள்ளதுமாக இருக்கிறது.  ஏனென்றால், பூசையில் சேசுநாதருடைய ஒப்புக் கொடுத்தலின் வழியாகப் பிதாவாகிய சர்வேசுரன் எல்லையற்ற மகிமையையும், ஆராதனையையும் பெறுகிறார்.  இந்தக் காரணத்திற்காகவே ஞாயிற்றுக் கிழமை களிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணும்படி திருச்சபை நமக்குக் கட்டளையிடுகிறது.

கத்தோலிக்கப் பாரம்பரிய ரீதிப்படி கடன் திருநாட்கள் : கிறீஸ்துமஸ் திருநாள் (டிசம்பர் 25), சேசுநாதருடைய பரலோக ஆரோகணம், தேவமாதாவின் பரலோக ஆரோகணத் திருநாள் (ஆகஸ்ட் 15).

ஆண்டவருக்கு அப்பத்தையும், திராட்சை இரசத்தையும் ஒப்புக் கொடுத்த மெல்கிசெதேக்கின் பலி, பூசைப்பலியின் முன்னடையாளமாக இருந்தது.  “சூரியன் உதயந் தொட்டு அஸ்தமனம் வரையிலும் நமது நாமம் சனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கிறது.  எவ்விடத்திலும் நமது நாமத்துக்குச் சுத்தமான பலி செலுத்தப் படுகிறது” என்று மலாக்கியாஸ் தீர்க்கதரிசி  பூசைப் பலியைப் பற்றித் தீர்க்கதரிசனம் கூறினார்.

நம் ஆண்டவரின் காலம் வரையிலும், ஜெருசலேம் என்னும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பலிகள் செலுத்தப் பட்டு வந்தன.  மிருகங்களின் உடல், இரத்தம் ஆகியவற்றின் இந்தப் பலிகளுக்குப் பதிலாக, சேசு கிறீஸ்து நாதர் அப்ப, இரசத்தின் தோற்றங்களுக்குள் தமது சொந்த சரீரம் மற்றும் இரத்தத்தின் பலியை ஒப்புக் கொடுத்து, “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.

மலாக்கியாஸ் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, சூரியன் உதயம் தொட்டு, அஸ்தமனம் வரை உலகின் ஒவ்வொரு பாகத்திலும் கத்தோலிக்கத் திருச்சபையில் பலி இருந்து வருகிறது.   பூசையில் சர்வேசுரனுக்குச் செலுத்தப் படுகிற இந்த சுத்தப் பலி ஒருபோதும் நின்று போய் விடாது.

திவ்ய நற்கருணைப் பலி நான்கு நோக்கங்களுக்காக ஒப்புக் கொடுக்கப் படுகிறது: 1) சர்வேசுரனுக்கு ஸ்துதியும், மகிமையும் செலுத்துதல், 2) அவரது சகல நன்மைகளுக்கும் நன்றியறிதல்,  3) அவருடைய மன்னிப்பை இரந்து மன்றாடுதல், உலகத்தின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்தல், 4) சேசு கிறீஸ்து நாதர் வழியாக நமக்குத் தேவையான சகல வரப்பிரசாதங்களையும், ஆசீர்வாதங் களையும் பெற்றுக் கொள்ளுதல்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்பது புத்தி விபரம் அறிந்த சகல கத்தோலிக்கர்களுக்கும் உரிய கடமை. திருச் சபையால் நியமிக்கப் பட்ட நாட்களில் இந்தப் பூசைப் பலியில் பங்கு பெறுவது அவர்களுக்கு மிகக் கட்டாயக் கடமையாகும்.  தங்கள் பொறுப்பிலுள்ள குழந்தைகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறார்களா என்று கண்காணிப்பது பெற்றோர், பாதுகாவலர்களின் கடமையாகும்.

பூசை காணும் கடமையை நிறைவேற்றுவதற்கு, நாம் இந்தப் பூசைப் பலியின்  தொடக்கம் முதல் இறுதி வரை அதில் பங்குபெற வேண்டும்.  சரியான காரணமின்றி பூசைக்குத் தாமதமாக வருவதோ, பூசை முடிவதற்கு முன் சென்று விடுவதோ அற்பப் பாவமாக இருக்கிறது.

வியாதி, அல்லது வியாதியஸ்தரைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம், மூப்பு, தேவாலயத்தில் இருந்து அதிகத் தொலைவு, மிக மோசமான கால நிலை,  அல்லது பூசை நேரங்களின் போது செய்யப் பட வேண்டிய வேலை ஆகிய ஏதாவது ஒரு தீவிரமான அசெளகரிய நிலை இருக்கும் போது, பூசை காண நமக்குக் கடமையில்லை.

நம் பிதாவாகிய சர்வேசுரனுடைய குழந்தைகள் என்ற முறையில், ஓய்வுநாளாக அவர் குறித்திருக்கிற நாளில் அவரை ஆராதித்து வணங்குவது நம் கடமையாகும்.  இப்போது மிகப் பரிசுத்த பூசைப் பலியில் சேசுநாதர் நம் பரலோகப் பிதாவுக்கு மிக உன்னதமான வழிபாட்டு முறையை நமக்காக ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தக் காரணத்திற்காகவே, தாம் புதிய சட்டத்திற்குரிய இந்தப் பலியை ஏற்படுத்திய போது அவர், “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.  எனவே ஞாயிற்றுக் கிழமைகளிலும், கடன் திருநாட்களிலும் கவனத்தோடும் பக்தியோடும் பூசை காண வேண்டும் என்றும், அப்படிச் செய்யாதவர்கள் சாவான பாவம் கட்டிக் கொள்கிறார்கள் என்றும் பரிசுத்த திருச்சபை தனது பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகிறது. நியாயமான காரணமின்றி வேண்டுமென்றே இந்த நாட்களில் பூசைக்கு வரத் தவறுவது, கத்தோலிக்கர்களுக்கு சாவான பாவமாக இருக்கிறது.  சர்வேசுரனுக்குரிய பொது வழிபாட்டை அலட்சியம் செய்கிற கத்தோலிக்கன் தன் சிருஷ்டிகரைத் தனது அரசராகவும், ஆண்டவராகவும், எஜமானராகவும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறான்.

இந்தப் பரிசுத்த நாட்களின் போது சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்யலாகாது என்றும் திருச்சபை தன் பிள்ளைகளைத் தடுக்கிறது.  ஆனாலும் ஞாயிறு அன்று வேலைக்குச் செல்லவில்லை என்றால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றால், அப்போது அவர்கள் அந்த நாட்களிலும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள்.  ஆனாலும்,  இந்தப் பரிசுத்த நாட்களில் சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்வது, சூழ்நிலையின் காரணமாக, தங்களுக்குப் பாவமாகாது என்ற போதும், அதற்குப் பின் அவர்கள் தங்களுக்காக  சரீரப் பிரயாசையான வேலைகளைச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆறு திருச்சபைக் கட்டளைகள்

1) ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப் பூசை காண்கிறது.

2) : வரு­த்துக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்கிறது.

3) : பாஸ்குக் காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து, தேவநற்கருணை உட்கொள்கிறது.

4) : வெள்ளிக் கிழமை முதலிய சுத்த போசன நாட்களில் சுத்த போசனமும், ஒரு சந்தி நாட்களில் ஒருசந்தியும் அனுசரிக்கிறது.

5): விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும் விக்கினமுள்ள உறவு முறையாரோடு கலியாணஞ் செய்யாதிருக்கிறது.

6) : நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.

சட்டங்கள் இயற்றுவதற்குத் திருச்சபைக்கு அதிகாரம் உண்டு என்பதால், அவற்றுக்குக் கீழ்ப்படிய அதன் உறுப்பினர்களுக்குத் தீவிர கடமையுண்டு.  திருச்சபையின் கட்டளை ஒன்றுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது சாவான பாவம்.  “உங்களை நிந்திக்கிறவன் என்னை நிந்திக்கிறான்” என்று நம் திவ்ய ஆண்டவர் அறிவித்திருக்கிறார்.  அவரே மீளவும், “அவன் திருச்சபைக்கு காதுகொடா விட்டால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும், ஆயக்காரனைப் போலவும் இருக்கக் கடவான்” என்றும் மொழிந்திருக்கிறார்.

சேசுநாதர், நம் முன்மாதிரிகை

அவருடைய நடத்தையையும், செயல்களையும் உன் இருதயத்தில் ரூபிகரம் செய்து கொள். சகல மனிதர்களுக்கும் மத்தியில் அவருடைய இருத்தலானது, எவ்வளவு சாந்தமும், அமைதியுமுள்ளதாயிருக்கிறது! அவருடைய சொந்த மக்களிடையே, அவர் எத்துணை அன்போடு பழகுகிறவராக, ஊக்கமும், மகிழ்ச்சியும் தருகிறவராக இருக்கிறார்! உண்பதிலும், பானம் பண்ணுவதிலும் எவ்வளவு கட்டுப்பாடு உள்ளவராயிருக்கிறார்! ஏழைகள் மட்டில் அவர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார்! எல்லாக் காரியங்களிலும் அவர்களைப் போலவே தம்மை ஆக்கிக் கொண்டவர் அவர்; அவருடைய சொந்த உள்ளார்ந்த வட்டத்திற்குள்தான் அவர்கள் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு யாரையும் புறம்பே தள்ளிவிடாதவராக அவர் இருந்தார்! எந்த அளவுக்கு யாரிடமிருந்தும், குஷ்டரோகிகளிடமிருந்தும், பாவியிடமிருந்தும், இழிந்தவர்களிடமிருந்தும், வெட்கமற்றவர்களிடமிருந்தும் கூட அவர் தம்மைச் விலக்கிக் கொள்ளாதவராக இருந்தார்!

உயர்ந்த நிலையினரிடம் எவ்வாறு அவர் நயந்து நடவாதிருந்தார்! எவ்வாறு அவர் யாரிடமும் அடிமையின் பணிவும், முகஸ்துதியும் காண்பிக்காதிருந்தார்! எந்த அளவுக்கு உலகக் கவலைகளிலிருந்து தம்மை அவர் உயர்த்தி வைத்திருந்தார்! எந்த அளவுக்கு அவர் தமது சரீரத்தின் தேவைகளை சட்டை பண்ணாமலிருந்தார்! அவருடைய கண்கள் எவ்வளவு கட்டுப்பாடுள்ளவையாக இருந்தன! பரிகசிக்கப்பட்ட போது அவர் எவ்வளவு பொறுமையோடு நின்றார்! அவருடைய பதில்கள் எவ்வளவு மென்மையாயிருந்தன! எந்த அளவுக்கு ஒரு கூர்மையான, அல்லது கசப்புள்ள பதிலால் தமது மகிமையை அவர் வெளிப்படுத்தாமல் இருந்தார்! எவ்வாறு அவர் தமது மெளனத்தாலும், அமைதியாலும், சத்தியத்தை உறுதிப் படுத்தியதாலும், தமது நேசத்தைத் தந்ததாலும் பழிவாங்கும் வன்ம உணர்வை விலக்கினார்! மேலும், அவருடைய ஒவ்வொரு அசைவும் எவ்வளவு கம்பீரமும், அமைதியுமுள்ளதாயிருந்தது! அவருடைய ஒவ்வொரு செயலும் எந்த அளவுக்கு எந்தக் குறையுமின்றி இருந்தது!

யார் மேல் வைத்த சிநேகத்திற்காக மனிதனாகவும், மரிக்கவும் அவர் சித்தங் கொண்டாரோ, அந்த ஆத்துமங்களின் இரட்சணியத்திற்காக அவர் எவ்வளவு ஏங்கினார்! தமது நடத்தை முழுவதிலும் எவ்வாறு அவர் சகல நன்மைகளுடையவும் முன்மாதிரிகையாகவும், சகல மனிதருக்கும் ஒளியாகவும், அவர்களது வழியாகவும், அவர்களது சத்தியமாகவும், அவர்களது ஜீவியமாகவும் இருந்தார்!

மீளவும், உழைப்பின் கடுமையையும், குறைபாடுகளையும், பசி, தாகத்தையும், கடும் களைப்பையும் அவர் எவ்வாறு தாங்கிக் கொண்டார்! துன்புறுகிற அனைவரிடமும் அவர் எவ்வளவு தயையுள்ளவராக இருந்தார்! எவ்வாறு பலவீனர்களுக்கு ஒத்த விதமாக அவர் தம்மை மாற்றிக் கொண்டார்; தாழ்ந்தவர்களுக்கு முன்பாக அவர் எந்த அளவுக்குத் தம்மையே எளிமைக்கு உட்படுத்தினார்! துர்மாதிரிகையை அவர் எவ்வாறு விலக்கினார்! எப்படி எந்தப் பாவியையும் மறுதலிக்காதிருந்தார்! மனந்திரும்பிய ஒவ்வொருவரையும் எவ்வளவு இரக்கத்தோடு வரவேற்றார்! எந்த அளவுக்குத் தம் வார்த்தைகளில் சமாதானமுள்ளவராகவும், நல்ல மனமுள்ளவர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தார்! இறுகிய இருதயங்களிடம் அவர் எவ்வளவு கடுமையாயிருந்தார்! ஜெபிக்க அவருக்கு எவ்வளவு ஏக்கம்! ஊழியஞ் செய்வதில் எவ்வளவு வேகம்! “ஓர் ஊழியனைப் போல நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன்” என்று அவர் தம்மைப் பற்றிக் கூறுகிறார்.

மீளவும், ஜெபத்தில் எத்தனை மணித்தியாலங்களை அவர் செலவிட்டார்! தம் பெற்றோருக்கு எவ்வளவு கீழ்ப்படிந்திருந்தார்! பெருமையடித்துக் கொள்வதன் ஒவ்வொரு அடையாளத்தையும், தனிப்பட்டவராயிருப்பதன் ஒவ்வொரு காட்சியையும் அவர் எவ்வாறு வெறுத்துத் தள்ளினார்! எவ்வாறு அவர் இந்த உலக மகிமை அனைத்தையும், இந்த உலக அதிகாரம் அனைத்தையும், இந்த உலக வெற்றியின் வழிகள் அனைத்தையும் தவிர்த்தார்!

அவரைப் பற்றி நாம் சிந்திக்கிற போது, இந்த எல்லாச் சிந்தனைகளும், இன்னும் அதிகமான சிந்தனைகளும் நம் மனத்தில் எழுகின்றன. நம் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும், அசைவுக்கும், நிற்றலுக்கும், அமர்தலுக்கும், உண்பதற்கும், அமைதியாயிருப்பதற்கும், பேசுவற்கும், தனியாயிருப்பதற்கும், மற்றவர்களோடு இருப்பதற்கும் முன்மாதிரிகைகளை நாம் அவரில் காணலாம். அவருடைய நட்புறவில் நீங்கள் இனிமையையும், நம்பிக்கையையும் பெற்றுக் கொள்வீர்கள். அவருடைய ஒவ்வொரு புண்ணியத்தாலும் நீங்கள் பலப்படுத்தப் படுவீர்கள்.

அவரை எப்போதும் மனத்தில் கொண்டிருப்பதும், அவரைக் கண்டுபாவிப்பதும், அவருடைய சிநேகத்தை உங்களுக்கென சம்பாதித்துக் கொள்வதுமே உங்கள் ஞானமாகவும், உங்கள் தியானமாகவும், உங்கள் ஆராய்ச்சியாகவும் இருக்கக் கடவன.

அதிமேற்றிராணியார் கூடியர், சே. ச.