நமக்கு எல்லாம் மறந்து விட்டதா?

அன்பான கத்தோலிக்க மக்களே ! நமக்கு எல்லாம் மறந்து விட்டதா?

புனிதமாக்கப்பட்டிருந்த  உடன்படிக்கைப் பேழையை கடவுள் தங்கியிருந்த உடன்படிக்கை பேழையைத் தொடத்துணிந்த ஓசாவின் மேல் கடவுளின் சினம் மூண்டது. பேழையின் பக்கத்திலேயே அவன் விழுந்து இறந்தான் ( 2 சாமுவேல் 6 :7).

அடுத்ததாக கடவுள் கார்மேல் மூலம் சீனாய் மலையில் இறங்கினார். (யாத்திராகமம்19: 10-15). அதில் மோயிசன் மூலமாக மக்களிடம் கடவுள் சொல்லிய சுத்தச்சடங்குகள் எத்தனை.. எத்தனை.. அதில் 15-ம் வசனத்தையும் சேர்த்து படியுங்கள். அத்தனை சுத்தப்படுத்தலையும் சொல்லிவிட்டு யாரும் சீனாய் மலையைத் தொடதுணிய வேண்டாம் என்றும். எல்லைக் கல்லைத் தாண்டி யாரும் வரவேண்டாம் என்றும் கண்டிப்பாட கட்டளையிட்டார்...

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களும் எல்லாருக்கும் நன்கு தெரிந்தவையே.. இரண்டிலும் கடவுளின் பிரசன்னம், கடவுள் தங்கியிருந்ததையும் பார்க்கிறோம். அதில் 16-ம் வசனத்திலிருந்து பார்த்துக்கொண்டே வரும்போது மோயிசனோடு ஆண்டவர் திருமுன்னிலையில் வர குருக்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்ததைப் பார்க்க முடிகிறது (19: 22). மக்களுக்கு எல்லைக் கல். குருக்களுக்கு ஆண்டவர் திருமுன்னிலை..

அன்றிலிருந்து இன்றுவரை அதையேதான் கடவுள் செய்கிறார்.. அதற்காகத்தானே கடவுள் குருத்துவத்தைப் படைத்தார்.. பழைய ஏற்பாட்டில் குருக்கள்.. புதிய ஏற்பாட்டில் ஆண்டவர் ஏற்படுத்திய குருக்கள், குருத்துவம்,  திவ்யபலி பூசை குருக்களுக்கு மட்டுமே ஆண்டவர் வழங்கிய உரிமை, அதிகாரம்.. ஆண்டவர் இயேசு பெரிய தலைமைக்குரு, சீடர்கள் குருக்கள்.. அதன் தொடர்ச்சியாக வந்த குருக்கள்.. நாம் கண்ணில் காணும் குருக்கள் எல்லாம் அவர்களின் வழித்தோன்றலகள். . நம் இயேசு என்னும் பெரிய தலைமைக்குருக்களைப் பிரதிபலிப்பவர்கள்..

குருக்கள் வாழ்க ! தேவ அழைத்தல்கள் வாழ்க !

எப்படிப்பார்த்தாலும் மூவொரு கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத கடவுளாகவே இருக்கிறார். அதனால்தான் அவர் பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாடுவரை அவருக்காக பணி செய்ய.. அவரை நெருங்க.. புதிய ஏற்பாட்டில் அவரைத் தொட உரிமை.. அதிகாரம் எல்லாம் குருக்கள்… குருக்களுக்கு மட்டுமே…

நேற்றும், இன்றும், என்றும் மாறாத கடவுள் மட்டும் அப்படியே இருக்கிறார்..

நாம் மட்டும் எல்லாவற்றிலும் மாற்றம், இஷ்ட்டம்போல, சமரசம், விட்டுக்கொடுத்தல் என்று.. ஏதேதோ.. செய்கிறோம்.. அதற்கு எதேதோ காரணங்களைத் தேடுகிறோம்.. சொல்கிறோம்..

உடன்படிக்கை பேழையில் எழுந்தருளிய.. சீனாய் மலையில் இறங்கிய அதே கடவுளின் வல்லமைதான்.. வார்த்தையாகி இருந்து மனுவுருவாகிய இயேசு கிறிஸ்து சுவாமிக்குள்ளும்.. அதாவது திவ்ய நற்கருணை நாதருக்குள்ளும் இருக்கிறது..மறைந்திருக்கிறது.. என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.

அவராலும் அணைக்கவும் முடியும், அடிக்கவும் முடியும் ஏன் இடியைப்போல் இடிக்கவும்.. அடித்து நொறுக்கவும் முடியும்..

அன்பான கத்தோலிக்க மக்களே ! நமக்கு எதுவுமே மறக்க கூடாது..  எல்லாம் சாதாரணம் அல்ல.. எல்லாவற்றிலும் சமரசம் செய்ய முடியாது கூடாது..

நம் குழந்தைகளை வேண்டுமானால் குருக்களாக்கலாம்.. நாம் ஒருபோதும் குருக்களாக முடியாது..

ஆண்டவரை சர்வசாதாரனமாக கரங்களில் தொடுவது.. நொட்டாங்கையில் தொடுவது.. என்று பயபக்தியில்லாமல் நடந்து கொள்வது நல்லதல்ல. முதலில் நம்முடைய தகுதியைப் பார்க்க வேண்டும்.. யோசிக்க வேண்டும்.. சிந்திக்க வேண்டும்.. 

“ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.

அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின; உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை.

வார்த்தை உலகில் இருந்தார்; அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது; உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.

தமக்குரிய இடத்திற்கு வந்தார்; அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (அருளப்பர் 1 : 1-3, 10-11)

ஆம் உலகம் இன்னும் அப்படித்தான் அவரை அவரை அறிந்துகொள்ளாமல் ஏற்றுக்கொள்ளாமல்தான் இருக்கிறது..

“ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.

வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார்.” (அருளப்பர் 1: 12 & 14).

அதுவும் திவ்ய நற்கருணை ஆண்டவராக.. இன்னும் அவரை அறிந்துகொள்ளாமல்… நம்பாமல்தான் இருக்கப் போகிறோமா? சிந்திப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

யாருக்கு பயப்பட வேண்டும்? உயிருக்கா? உயிரைத் தந்த கடவுளுக்கா?

“நானே உயிர் தரும் உணவு” – அருளப்பர் (யோவான்) 6 : 48

“நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே." – அருளப்பர் 6 :51

“என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.”

“என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம் “ – அருளப்பர் 6 : 54-55.

கடவுள் கொடுத்த உயிர்தானே ? கடவுளை அறிக்கையிடாமல் அந்த உயிர் இருந்து என்ன பயன்..?

கடவுளுக்கு சாட்சி சொல்லத்தானே இந்த வாழ்க்கை? கடவுளுக்கு சாட்சியாய் வாழத்தானே இந்த வாழ்க்கை..

அவருக்கு சாட்சி சொல்லாமல் வாழும் வாழ்க்கையால் என்ன பயன்?

“என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்” என்று சொல்லிய பின்பும் நம்முடைய விசுவாசம் செத்துப்போனால் இப்போது இருப்பது பினம்தானே..

அன்று பூசைக்காக ஒடினார்கள்… பூசை வைக்க ஓடினார்கள்… காட்டுக்குள் முடங்கினார்கள்…குகைக்குள் முடங்கினார்கள்.. வீட்டுக்குள் முடங்கினார்கள் கடவுளுக்காக.. அன்று விசுவாசம் வாழ்ந்தது… வளர்த்தது.. திருச்சபை வளர்ந்தது..

யாரும் உயிருக்கு பயப்படவில்லை.. மிரட்டுவோரை எதிர்த்து நின்றார்கள்..

வாளுக்கு அஞ்சவில்லை… கொதிக்கும் தார் எண்ணெய்க்கு அஞ்சவில்லை… உறுமும் சிங்கத்திற்கு அஞ்சவில்லை…. நெருப்புக்கு அஞ்சவில்லை.. அரசனின் உருட்டலுக்கு அஞ்சவில்லை… மிரட்டலுக்கு அஞ்சவில்லை.. எதற்கும் அஞ்சவில்லை..

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் போல தியோபரஸாக அதாவது உயிருள்ள கடவுளை கொண்டிருப்பவர்களாக துணிந்து நின்றார்கள்.. தீமையை எதிர்த்து நின்றார்கள்..

இப்போது கொரோனாவம்ல… அது கடவுளை விட பெரிசாம்ல.. அதைக் கடவுளால ஒன்னும் செய்ய முடியாதாம்ல..(  கடவுளால் கொராவை மட்டும் அல்ல அவன் அப்பனையும் சேர்த்து அழிக்க முடியும்) கடவுளாக நம்மிடம் வந்தாலும்.. நமக்கு நோயை பரப்பி விட்டுவாரம்ல..

என்ன தைரியம்.. ? எவ்வளவு பெரிய துரோகம் ? உயிருக்கு பயம்.. அவ்வளவு பயம்… ஓடு.. ஓடு.. ஆண்டவரைப் பார்த்து பயந்து ஓடு.. பயம்… பயம்.. பயம்.. உயிருக்கு அவ்வளவு பயம்..

“ இப்போது கொரோனா வந்துருக்கிறதுனால் நாங்க கையில மட்டும்தான் கொடுப்போம்.. அதுவும் நொட்டாங்கையில கொடுப்போம்.. அதுவும் யாரை வேனாலும் ( பொது நிலையினரையும்) வச்சி கொடுப்போம்.. புதுசா புதுநன்மை எடுக்கும் குழந்தைகளுக்கும் நாங்க நொட்டாங்கையிலதான் கொடுப்போம்”

ஏன் நோய்க்கு பயப்படும் அளவுக்கு கடவுளுக்கு பயப்படுவதில்லை.. கடவுள் பயம் எங்கே போனது.. கடவுள் பயமே ஞானத்தின் தொடக்கம்.. நமக்கு ஞானம் வேண்டாம்.. உயிர் மட்டும் போதும்..

கத்தோலிக்க கிறிஸ்துவத்தின் விசுவாச மையம் திவ்ய நற்கருணை.. ஏன் கிறிஸ்தவமே திவ்ய நற்கருணை ஆண்டவரில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.. திவ்ய நற்கருணை இல்லையென்றால் கிறிஸ்தவமே இல்லை.. அப்படியிருக்க  நற்கருணை ஆண்டவரை விசுவசிக்காமல்.. அவரை நம்பாமல்.. அவரை யாரிடம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்துவிட்டு.. அவரைக் காட்டிக்கொடுத்துவிட்டு என்ன சாதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.. எதை சாதிக்கப்போகிறீர்கள்?

 நம் நித்திய தலைமைக் குருவை தொட ஒரு குருவானவருக்குத்தான் தகுதி உண்டு.. அருகதை இருக்கிறது.. யாருக்கும் அல்ல.. எவருக்கும் அல்ல.. யார் வேண்டுமாலும் அல்ல..

அப்படியென்றால் குருத்துவத்தின் மகத்துவம் என்ன? அதன் புனிதத்துவம் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? யார் வேண்டுமானாலும் ஆண்டவரைத் தொடலாம் என்றால் குருத்துவம் எதற்கு ? குருவானவர் எதற்கு? ஒரு குருவானவர் எதை வேண்டுமாலும் விட்டுக்கொடுக்கலாம்.. ஆனால் ஆண்டவரைத் தொடும் அதிகாரத்தை மட்டும் விட்டுக் கொடுக்கவே கூடாது..

பொது நிலையினர் எந்த மமதையோடு ஆண்டவரைத்தொடுகிறார்கள்.. ? உங்களுக்கு அந்த அதிகாரம் கொடுத்தது யார்?  உனக்கு அந்த தகுதி இருக்கா? நீ அவ்வளவு பெரிய ஆளா? எந்த தைரியத்தோடு.. ஆண்டவரை.. கடவுளைத் தொடுகிறாய்?

திவ்ய நற்கருணை ஆண்டவரின் மேல் உள்ள உயிருள்ள விசுவாசம் அசைக்கப்பட்டால்.. தடம்புரண்டால்.. சுருக்கமாக சொல்லப்போனால் திவ்ய நற்கருணை ஆண்டவர் மேல் கை வைத்தால்..வைக்கப்பட்டால்.. அவ்வளவுதான்.. அதன் பின்,

“இல்லை.. இல்லை “ என்ற ஒன்று மட்டுமே இருக்குமே தவிர.. 

“இருக்கு.. இருக்கு “ என்ற ஒன்று இருக்கவே.. இருக்காது..

யோசிப்போம்.. சிந்திப்போம்.. அடுத்தவர் எப்படி இருக்கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்.. என்பது முக்கியமல்ல.. நாம் நம்முடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்கிறோமா ?  நம் கடவுளுக்கு பிரமானிக்கமாய் இருக்கிறோமா? என்பதுதான் முக்கியம்.. 

நமக்கு முன்னால் போகிறவர் என்ன செய்கிறார்? நமக்கு பின்னால் வருபவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்? என்பது எல்லாம் முக்கியமில்லை.. நாம் எப்படி இருக்கிறோம்..நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். 

என் கடவுள் முன் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? என்னைக் காப்பாற்றும் கடவுள் முன் நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? முன்னால் உள்ளவரைப்பற்றியும், பின்னால் வருபவரைப் பற்றியும் நான் ஏன் யோசிக்க வேண்டும்? வெட்கப்பட வேண்டும்..

வெட்கப்பட்டால்.. கடவுள் என்ன செய்வார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்.. அவரும் நம்மைக் குறித்து வெட்கப்படுவார்.. மேலும் அவர் சொல்லிய ஒரு கடினமான வார்த்தை “ உங்களை எனக்குத் தெரியாது”

நான் என் கடவுள் முன் முழங்காலிடாமல் வேறு யார் முன் முழங்காலிடுவேன்.. என்னுடைய தலை என் கடவுளுக்கு வணங்காமல் யாருக்கு வணங்கப்போகிறது?

நான் குருவானவர் அல்லவே.. பின் நான் எப்படி ஆண்டவரை தொட நினைக்க வேண்டும்? தொட ஆசைப்பட வேண்டும்.. வேண்டாம்… வேண்டவே வேண்டாம்..

நம் ஆண்டவரைப் பெற முதலில் நம்மை தகுதியுள்ளவர்களாக்குவோம்.. நம்மை தயாரிப்போம்.. அதன் பின் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் ஆண்டவரைத் தேடிச்சென்று முழங்காலில் நின்று பக்தியோடு நாவில் மட்டுமே வாங்குவோம்.. நமக்கு நம் ஆண்டவர் நாவில் தரப்படவில்லை என்றால் ஆசை நன்மை வாங்கி எழுந்து நம் இடம் வந்து நம்மிடம் வந்த இயேசுவிடம் ஒரு பதினைந்து நிமிடமாவது பேசுவோம்.. உறவாடுவோம்.. அவரை ஆராதிப்போம்.. நன்றி கூறுவோம்.. நம் தேவைகளைக் கேட்போம்..

நாவில் தரப்பட்டாலும் இதையே செய்வோம்.. தகுதியான உள்ளத்தோடு அவரை வாங்கினால் என்ன நன்மை செய்வாரோ.. அதையே அவர் ஆசை நன்மை வழியாகவும் செய்வார்.. ஏனெனில்..

“ கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை “ – லூக்காஸ் 1: 37

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

ஆலயம் திறந்த பின்பும் டி.வி திருப்பலி எதற்கு?

டி.வி. திருப்பலிக்காரர்களே.. விழித்து எழுங்கள்..

ஆலயம் திறக்கப்பட்டுவிட்டது.. திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது.. பின் ஏன் இன்னும் டி.வியில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.. மக்களை நேரடி திருப்பலியில் பங்கேற்கத்தானே வலியுறுத்த வேண்டும்.. முதலில் டி.வி திருப்பலிக்கு அறிக்கையிட்டவர்கள் இப்போது நேரடி திருப்பலிகளில் மக்களைப் பங்கேற்க வலியுறுத்த வேண்டும் அல்லவா? இது தவறான வழிகாட்டுதல் ஆகிவிடாதா?

அன்பான கத்தோலிக்க மக்களே! இப்போது நேரடியாக திருப்பலிகள் நிறைவேற்றப்படுகிறது. நாம் ஆலயம் சென்று நம்மை தயாரித்து தயாரான மன நிலையில் திருப்பலியில் பங்கேற்று நம் திவ்ய நற்கருணை ஆண்டவரை நாவில் பெற்று அவரை ஆராதிப்பதுதான் முறை.. சரியான.. தகுதியான செயல்.. ஆனால் அதை விட்டுவிட்டு

ஆனால் நான் டி.வி திருப்பலிதான் பார்ப்பேன்.. அதுதான் எனக்கு சவுகரீகமாக இருக்கிறது.. என்று நினைப்போரே.. ஐயோ உங்களுக்கு கேடு வந்தே தீரும்.. அதுவும் கண்டிப்பாக வந்தே.. தீரும்..

எதையுமே ஆரம்பித்து வைப்பது சுழபம்.. ஆனால் அதை மறுபடி மாற்றி பழைய நிலைக்கு கொண்டு செல்வது மிகவும் கடினம்.. இதில் கொடுமை என்னவென்றால்.. ஆரம்பித்து  வைக்க மெனக்கெட்டவர்கள்.. அதை மாற்றி அமைக்க மெனக்கெடுவது இல்லை..

இப்போது டி.வி திருப்பலிகள் தவறான முன்னுதாரங்களாக மாறி வருகின்றன. பலர் அதையே பார்த்துவிட்டு ஆசை நன்மை வாங்கிக்கொண்டு சோம்பேரிகளாக மாறி வருவது வேதனைக்குரியது..

ஆன் லைன் திருப்பலிகள் இனி வேண்டாம்.. 

ஆலயத்திற்கு நடக்க தெம்பிருந்தும், கால்கள் நன்றாக இருந்தும்.. கடவுளை ஏமாற்றிக்கொண்டு.. அதாவது கடவுளை ஏமாற்றுவதாக நினைத்து உங்களை  நீங்களே ஏமாற்றும் சோம்பேரிகளே ! நொண்டிச்சாக்குகள் சொல்லும் சாக்குபோக்கிகளே ! தயவு செய்து உடனடியாக உங்களைத் திருத்துங்கள்..

கடவுள் இனிமையானவர்.. மென்மையானவர்.. மட்டுமல்ல அடித்து நொறுக்குவதிலும், தண்டிப்பதிலும் வல்லவர்.. கடவுளின் நீதிக்கு முன் நாம் யாரும் நிற்கக் கூட முடியாது..

அன்பான மக்களே.. நமக்கு எது சவுகரீயம் என்பது முக்கியமல்ல.. எதைச் செய்ய வேண்டும்.. எதைச் செய்யக் கூடாது என்பதுதான் முக்கியம்.. ஒளிபரப்புபவர்கள் ஒளிபரப்பட்டும்.. அதில் நடக்க முடியாதவர்கள்.. நோயாளிகள் பயன் அடையட்டும்..

நமக்கு வேண்டாம்.. நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.. ஆலயங்களில் திருப்பலி நடைபெறும் போது அதற்கு செல்லாமல் வீட்டில் திருப்பலி பார்த்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்காது.. மாறாக சாபம்தான் வந்து சேரும்.. கடவுளின் சாபத்தை வீட்டில் இருந்து சம்பாதிக்கப்போகிறீர்களா? மாறாக கடவுளைத் தேடி சென்று ஆசீர்வாதத்தைப் பெறப்போகிறீர்களா?

உங்களுக்கு சாபம் வேண்டுமா? ஆசீர்வாதம் வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..

குறிப்பு : ஏதோ ஒரு இடத்தில் டி.வி. திருப்பலிக்காக யாரோ ஒருவர்.. ஆலயத்திலிருந்து திவ்ய நற்கருணை கொண்டுவந்து டி.வி. திருப்பலிக்காரர்களுக்கு கொடுப்பதாக தகவல்..

கொண்டுவந்து கொடுப்பவரும்.. உண்பவர்களும்… சாபத்தை அல்ல அதற்கும் மேலான தண்டனையை பெற்றுக்கொண்டு வருகிறார்கள்.. இந்த கொலைபாதகச் செயலைத் தடுக்காதவர்களும், அதை கண்டுகொள்ளாதவர்களும் சேர்ந்து சம்பாதிக்கிறார்கள்..

நம் பரிசுத்த கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது.. அவரிடம் நொண்டிச்சாக்குகள் பலிக்காது..அவர் முகத்தாட்சண்யம் பார்க்காத நீதியுள்ள கடவுள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது… மறக்கவே கூடாது..

டி.வி. திருப்பலிக்காரர்களே..  விழித்து எழுங்கள்.. ஆலயம் நோக்கி விரையுங்கள்.. உங்களை கடவுளின் கோபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

மறையுரையில் பிற மத புத்தக மேற்கோள்கள் ஏன்?

(இது எல்லாருக்கும் உள்ள பதிவு அல்ல)

சில தந்தையர்கள் மறையுரையில் மேற்கோள்களை காட்ட பகவத் கீதை, தேவராம் என்று எங்கெல்லாமோ போகிறார்கள்.. பழமொழி உதாரணங்களுக்கு கூட நாடுகளைக் கடந்து சென்று விடுகிறார்கள்..

ஏன் பைபிளில் அவர்களுக்கு அந்த அளவுக்கு தட்டுப்பாடாகிப்போனதா? புதிய ஏற்பாட்டிலும், பழைய ஏற்பாட்டிலும் உதாரணங்கள் இல்லையா? பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாட்டில் கடவுளுக்கு பிரியமாக வாழ்ந்த, சாட்சியாக வாழ்ந்த  எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

நம் சர்வேசுவரன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எத்தனையோ எளிய உவமைகளைச் சொல்லியிருக்கிறார்.. இரு புறமும் கருக்கு வாய்ந்த உயிருள்ள வார்த்தைகளைப் பேசியிருக்கிறார்..

அந்த உதாரணங்கள், வார்த்தைகள் எல்லாம் கண்களுக்கு தெரியவில்லையா?

ஏன் அங்கு சென்று எடுக்க வேண்டும்..? என்ன காரணமாக இருக்க முடியும்?

1. இன்றைக்கு பாதர் சூப்பராக பிரசங்கம் வைத்தார்..

2. அவரு நிறைய நூல்கள், புத்தகங்களை வாசிக்கிறார்..

3. அவருக்கு நிறைய மொழிகள் தெறியும்.

4. அவர் பல நாடுகளுக்கு போய் வந்தவர்..

5. அவருக்கு அறிவு அதிகம்.. என்னாமா பிரசங்கம் வைக்கிறார்.

என்று மக்கள் பேச வேண்டுமா?

1. இன்றைக்கு பாதர் பிரசங்கம் என் உள்ளத்தைத் தொட்டது..

2. என் ஆன்மாவை ஊடுருவியது..

3. நான் எவ்வளவு பெரிய பாவியா இருந்திருக்கிறேன்..

4. இனி நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்..

5. இன்றிலிருந்து மனம் திரும்புவேன்..  நாலையில இருந்து ஒரு புது மனுசன், மனுஷியை பார்க்கபோறீங்க..

இவற்றில் எது முக்கியம்?

சாதாரன கடல் தொழில் செய்து ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராயப்பர் ஆற்றிய முதல் மறையுரையில் மனம் திரும்பிய ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5000. அப்படியென்றால் பெண்கள், சிறுவர்களைச் சேர்த்தால் கண்டிப்பாக 8000 பேராவது இருக்கலாம் அல்லவா? ( அப்போஸ்தலர் பணி 4 :4)

ராயப்பர் எந்த எந்த நூல்களையெல்லாம் புரட்டி பார்த்துவிட்டு பிரசங்கம் வைத்தார்? இன்னும் சொல்லப்போனால் அப்போது பைபிள் கூட கிடையாது.. அல்ல சொல்லாடல்கள், அடுக்கு மொழிகள் எதையாவது பயன்படுத்தினாரா? அல்ல வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தினாரா?

சாதாரன, எளிய மறையுரை அவர் கண்டதையும், கேட்டத்தையும் விசுவசித்ததையும், அனுபவித்ததையும் போதித்தார். பரிசுத்த ஆவியானவர் செயல்பட்டார்.. அங்கு மனமாற்றம் நிகழ்ந்தது..

நாம் எதை அடிப்படையாக வைத்து போதிக்கிறோம்.. மனமாற்றத்தை அடிப்படையாக வைத்து போதிக்கிறோமா? அல்லது சுய பாராட்டுகள்களுக்காக பிரசங்கம் வைக்கிறோமா? இரண்டாவது என்றால் அந்த மறையுரை அர்த்தமற்றது; தேவையற்றது; குப்பைக்குச் சமம்.

ஒரு புனிதர் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் நாம் உதாரணமாகக் கொள்ளலாம்..

புனித சுவாமி நாதர் (St.Dominic) மறுநாள் பாரீசில் ஒரு புகழ் பெற்ற ஆலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது.. அது உலகில் சிறந்த அறிவாளிகள் என்று மக்கள் கருதுபவர்கள் வரக்கூடிய இடம்..

அதற்காக நம் புனிதர் இரவெல்லாம் கண்விழித்து பெரிய பெரி மேற்கோள்கள் எல்லாம் தயார் செய்து விழுந்து விழுந்து பிரசங்கம் தயார் செய்துவிட்டார். ஆனால் நம் திரு மாதா காட்சிகொடுத்து “ மகனே நீ தயாரித்து வைத்திருக்கும் பிரசங்கம் வேண்டாம். இதோ இந்த புத்தகத்தில் இருப்பதை வாசித்து இதை போய் போதி “ என்று சொல்லிவிட்டார்கள்..

நம் புனிதர் மாதா கொடுத்த புத்தகத்தை நன்றாக வாசித்து மனதில் இருந்தி போதித்தார்.. அதுவும் எளிய மறையுரைதான்.. அந்த மறையுரையைக் கேட்டு அங்கு வந்திருந்தவர்கள் கிட்டதட்ட அனைவருமே மனம் திரும்பினர்..

ஒரு மறையுரையின் வெற்றி வாய்ஜாலத்திலும், வார்த்தைஜாலத்திலும் அடங்கியிருக்கவில்லை.. ஆன்ம மனமாற்றத்தில்தான் அடங்கியிருக்கிறது..

அதுவுமில்லாமல் வேறு மத புத்தகங்களை மேற்கோள் காட்டுவது என்பது கிட்டதட்ட கடவுளைக் காட்டிக்கொடுப்பதற்கு சமம்.. ஏனென்றால் அதனுடைய விளைவு விபரீதமானது.. அது தயவு செய்து வேண்டாமே…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம்!

மீண்டும் திவ்ய நற்கருணை சிந்தனை..

முன்பெல்லாம் சனிக்கிழமை மாலையில் நாம் ஆலயத்தில் இருப்போம்..

மாலை ஜெபமாலைக்குப்பின் பங்குத்தந்தையின் பாவசங்கீர்த்தனத் தொட்டியைப் பார்த்துக்கொண்டே இருப்போம்..

அவர் சரியாக ஜெபமாலை முடியவும் ஆலயத்தின் பின்பகுதிக்கு வந்து சிறிது நேரம் முழங்காலில் நின்று ஜெபித்துவிட்டு.. பாவசங்கீர்த்தனத்தொட்டியில் அமர்வார்..

ஒரு புறம் பெண்கள், மறு புறம் ஆண்கள் என்று முழங்காலில் நிற்க நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய ஆர்வமோடு முன்டியடித்துக் கொண்டு ஆயத்தமாகுவோம்.. பாவசங்கீர்த்தனம் செய்த பின்புதான் வீடு செல்வோம்  நண்பர்களோடு பேசிக்கொண்டு..

மறு நாள் திருப்பலிக்கு வெறும் வயிரோடு செல்வோம்.. திவ்ய திருவிருந்து நேரத்தில் நாமே சென்று பீடத்தின் முன்புறம் இருக்கும் கிராதி முன்பு முழங்காலில் இருந்து பக்தியோடு ஆண்டவரை  நாவில் வாங்கிக்கொண்டு எவ்வித பராக்குகளுக்கும் இடங்கொடுக்காமல் நாம் இருந்த இடம் வந்து முழங்காலில் நின்று சிறிது நேரம் ஜெபிப்போம்.. ஜெபித்துவிட்டு அமர்வோம்.. அமர்ந்ததும் பங்குத்தந்தை ஜெபிக்க ஆரம்பிப்பார்..

எப்படி என்றால், “ சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இப்போது நம்மிடம் வந்திருக்கும் இயேசு ஆண்டரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. என்று சொல்லிவிட்டு அவர் மவுனமாக ஜெபிப்பார்.. நாமும் நம் உள்ளத்தில் வந்த ஆண்டவரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. அதன் பின்புதான் “நன்றி கூறி மன்றாடுவோமாக.. ஜெபத்தை குருவானவர் ஜெபிப்பார்…

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை.. நாம் செய்த பாவசங்கீர்த்தனம் எங்கே?

முழங்காலில் நின்று நாவில் மட்டும் திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பழக்கம் எங்கே ?

திவ்ய நற்கருணை வாங்கிய பின்பு ஆண்டரோடு மவுனமாக செலவழித்த 10 நிமிடங்கள் எங்கே?

ஓரு மூன்று மணி நேரமாவது ஆண்டவரை வாங்கும் முன் வெறும் வயிரோடு இருந்த பழக்கம் எங்கே?

திவ்ய நற்கருணை பேழையை கடந்த போதெல்லாம் ஒரு கால் முட்டி போட்ட பழக்கம் எங்கே?

ஆண்டவரை தாழ்ந்து பணிந்து ஆராதித்த பழக்கம் எங்கே?

இப்படியிருந்த நாம் எப்படி மாறிப்போனோம்..?

நின்று கொண்டு வாங்க ஆரம்பித்தோம்..

அப்புறம் நொட்டாங்கையில் (இடது கையில்) வாங்க ஆரம்பித்தோம்?

இப்போது நாமே துணிச்சலோடு திவ்ய நற்கருணை பாத்திரத்தில் கையை விட்டு  நம் அர்ச்சிக்கப்படாத கரங்களால் ஆண்டவரை தொட்டு, திவ்ய திரு இரத்தப்பாத்திரத்தில் நம் கையை விட்டு ஆண்டவருடைய திவ்ய திருஇரத்தத்தில் தோய்த்து நாம் ஆண்டவரை உட்கொள்ளும் அளவுக்கு நமக்கு துணிச்சலும், அகங்காரமும் பெருகிவிட்டதே அது எப்படி?

வர.. வர.. விசுவாசம் வளர வேண்டுமா? அல்லது தேய வேண்டுமா?

இதைத்தான் ‘கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை ‘ என்பார்கள்..

தயாரிப்பு இல்லாமல் ஆண்டவரை வாங்கும் பழக்கம் எப்படி வந்தது..?

சனிக்கிழமை இரவு தூங்கும் வரை டி.வி பார்த்துவிட்டு அப்படியே தூங்கி முழித்து ‘ ஆ! இன்று ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போக வேண்டுமே ! என்ற எண்ணத்தில் கிளம்பி பூசைக்கு கால் பூசை, அரை பூசை முக்கால் பூசைக்கு நுழைந்து எந்தவித தயாரிப்புமில்லாமல் தெய்வீக விருந்தில் துணிச்சலோடு நுழைந்து ஆண்டவரை வாங்கும் பழக்கமும், வழக்கமும் எப்படி நுழைந்தது..

அது மட்டுமா செய்கிறோம்…

உபவாசத்தோடு நன்மை வாங்கிய பழக்கம் போய் நன்றாக வெளுத்து கட்டி உண்ட பிறகு திருப்பலியில் பங்கேற்றல்..

நன்மை வாங்கிய உடனே பொங்கலை வாயில் போட்டு அமுக்குதல், நன்மை வாங்கிய பின் டீ பிஸ்கட் வயிற்றில் ஊற்றுதல்..

நன்மை வாங்கிய உடனே அறிக்கைக்கு செவி சாய்த்து பராக்குகளுக்கு இடம் கொடுத்து சப்பென்று தரையில் அமர்ந்துகொள்ளும் பழக்கம் எப்போது முளைத்தது?

அப்படியிருந்த நாம் இப்படி மாறிவிட்டோம் ? இப்படியிருக்கும் நாம் மறுபடியும் அப்படி எப்போது மாறப் போகிறோம்?

நம் அன்பின் ஆண்டவர்.. தெய்வீக ஆண்டவர்.. அன்றும் அப்படித்தான் இருந்தார்.. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.. எப்போதும் அப்படித்தான் இருக்கப் போகிறார்.. அவர் மாறாத தெய்வம்.. 

நாம் மட்டும் ஏன் அடிக்கடி மாறுகிறோம்…

உயிர் அச்சத்தோடு வாழும் நாம் ஏன் கடவுளின் மேல் அச்சத்தோடு வாழக் கூடாது?

“ஞானத்தின் தொடக்கம் தெய்வபயம் “  - சீராக் 1 : 16

“ தெய்வபயமே ஞானத்தின் நிறைவு “ – சீராக் 1 :20

ஞானத்தின் தொடக்கமும், ஞானத்தின் நிறைவும் தெய்வ பயமே..

மேலும் கடவுளின் சில உயிருள்ள வார்த்தைகள்..

“ தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.

தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்; அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக் காலத்தில் பேறு பெற்றவன் ஆவான்; மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.

கடவுள்பால் உள்ள நேசமே மேன்மையுள்ள ஞானம்.

யார் யாருக்கு அது காணப்படுகிறதோ அவர்கள் தாங்கள் அதைக் கண்டதாலும், அதன் மாட்சிகளை அறிந்ததாலும் அதை நேசிக்கிறார்கள்.”

சீராக் 1: 11-15

நற்கருணை நாதரை நேசிவிப்போம்.. விசுவசிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

திருவழிபாட்டு பாடல் குழுவினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

“ஒரு முறை பாடுதல்  நான்கு முறை ஜெபிப்பதற்கு சமம்” உங்கள் பணி மகத்தான பணி.. உங்கள் இசையும் பாடலும் பரலோக யாழிசைக்கு சமம். நீங்கள் ஒவ்வொரு திருப்பலியிலும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்பது நிதர்சமான உண்மை..

இப்போது ஒரு சில வேண்டுகோள்கள்..

1. முக்கியமான பாடல்களில் அதுவும் திருப்பலிக்கு வந்திருக்கும் அனைத்து மக்களும் ஆர்வத்தோடு பாடும் பாடல்களின் மெட்டுக்களை தயவு செய்து மாற்றாதீர்கள்.. அப்போது என்ன நடக்கிறது? உங்களுடைய புதிய ராகம் அவர்களுக்குத் தெரியாததால் உங்களைத் தவிர இறைமக்கள் யாரும் பாடுவதில்லை.. உங்களால் அவர்கள் பாடுவது தடைசெய்யப்படுகிறது.. குறிப்பாக “ ஆண்டவரே இரக்கமாயிரும், உன்னதங்களிலே, பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, தூயவர் கீதம் போன்ற பாடல்கள். ஆசீர்வாதத்தில் “ மான்புயர் கீதம் “. நித்திய ஸ்திக்குரிய பாடல்கள்.

2. வருகைப்பாடல், பதிலுரைப்பாடல், காணிக்கைப்பாடல், திருவிருந்துப்பாடல், நன்றிப்பாடல் அதிலெல்லாம் பின்னியெடுங்கள் உங்களை யார் கேட்கிறது.. சரிகமபதனிச எல்லாம் சேருங்கள்.. ஆனால் எல்லாரும் பாடும் வழிபாட்டுப்பொது பாடல்களிலும் சரிகமபதனிச- வை சேர்த்த்தால் நாங்கள் எப்படிப்பாடுவது.. கண்டிப்பாக நாங்கள் உங்கள் அளவுக்கு திறமைசாலிகள் அல்ல..

3. இசை இசைப்போரின் கரங்கள் சும்மாவே இருக்காது. குருவானவர் “இவர் வழியாக… இவரோடு.. இவரில் பாடும்போது  அப்போதான் பின்னனி இசைகொடுப்பார்.. இது மிகவும் தவறானது.. ஆண்டவருக்கு செய்யும் அவசங்கை.. இது திருப்பலி ஒழுங்கிற்கு எதிரானது. மேலும் மக்கள் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருக்கும்போது இசைக்கருவியை சரி செய்வார்.. அது ஜெபமாலையின் இடையே மக்களின் கவனத்தை திசை திருப்பி விநோத இசையை எழுப்புவார்.. 

4. இப்போது நிறைய ஆலயங்களில் “ இவர் வழியாக.. இவரோடு..இவரில்" குருக்களோடு மக்களும் சேர்ந்து பாடுகிறார்கள். இது முற்றிலும் தவறு. சில இடங்களில் குருக்களே மக்களை பாடுமாறு சொல்கிறார்கள்.. இதுவும் திருப்பலி ஒழுங்குமுறைக்கு எதிரானது..

5. இறுதியாக ஒரே ஒரு வேண்டுகோள் நம் பழைய பாரம்பரிய பாடல்களை முற்றிலும் ஒதுக்கிவிடாதீர்கள்.. அவற்றில் ஒன்றிரண்டு பாடல்களையாவது சேர்த்து திருப்பலியில் பாடுங்கள்..

6. ஒரு நினைவூட்டல் ஒரு சில பாடல்கள் “வரம் கேட்டு வருகின்றேன் இறைவா”, “  நீர் ஒருவர் மட்டும் இயேசுவே என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ, தெய்வீக அன்பால்தானோ”, பலி பீடத்தில் வைத்தேன் என்னை, மனம் தரும் மலரில், செம்மரியின் விருந்துக்கு, மாதாவே துணை நீரே உம்மை, மாதாவே சரணம், இயேசுவே என்னிடம் நீ பேசு, உம் திருயாழில், சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, யாரிடம் செல்வோம் இறைவா, அன்பின் தேவ நற்கருணையிலே, நற்கருணை நாதரே… இன்னும் நீங்கள் யோசித்துப்பார்க்கும் பாடல்கள்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !