கையில் நன்மை வழங்கக் கூடாது என்பதற்கான காரணங்கள்

1. திவ்ய அப்பத் துகள்கள் தவறி விழுதல், திவ்ய நன்மையின் மீதான ஆராதனை வணக்கக் குறைவு, நமதாண்டவருக்கு அவசங்கை போன்ற பெரும் ஆபத்துக்களுக்கு வழிவகுக்கும் முறையில் கையில் கிறீஸ்து நாதரின் திருச்சரீரத்தைப் பெறும்படி யாரும் நம்மை வற்புறுத்த முடியாது. இந்தக் காரணத்திற்காகவே நன்மை வழங்கப்படும்போது, அதைப் பெறுபவரின் முகவாய்க்குக் கீழே அப்பத் தட்டைப் பீடப் பரிசாரகன் பிடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. 

பூசையில் நன்மை வழங்கிய பின், இந்தத் தட்டில் விழுந்திருக்கும் திரு அப்பத் துகள்களைக் காண்பது ஒன்றே கையில் நன்மை வழங்கக் கூடாது என்பதை உறுதியாக நம்பி ஏற்றுக் கொள்ளச் செய்யப் போதுமான காரணமாக இருக்கும். கையில் நன்மை வாங்கி உட்கொண்ட பின், விசுவாசிகளின் கரங்களிலிருந்து தரையில் விழும் நற்கருணைத் துணுக்குகள் ஒவ்வொன்றிலும் தமது திருச்சரீரத் தோடும், இரத்தத்தோடும், ஆத்துமத்தோடும், தெய்வீகத்தோடும் முழுமையாக இருக்கிற நமதாண்டவர் மனிதரின் பாதங்களில் மிதிபடுவது அவருக்கு எப்பேர்ப்பட்ட அவசங்கையாக இருக்கிறது!

குறிப்பாக மேலை நாடுகளில், சலவைக்குப் போடப்பட்ட கோட் பைகளில் திவ்ய அப்பங்கள் இருப்பது, திவ்ய அப்பம் விசுவாசிகளால் வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவை மறதியாக எங்காவது வைக்கப்பட்டுத் தொலைந்து போவது' போன்ற மிக மோசமான தேவத் துரோக நிகழ்வுகள் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நாவில் திவ்ய நன்மை வாங்கும் வழக்கத்தில் இதுபோன்ற அவல நிகழ்வுகளுக்கு வாய்ப்பேயில்லை.

எல்லாவற்றையும் விட மோசமாக, தேவத் துரோகமான பேய் வழிபாடுகளில் நற்கருணை நாதரை இழிவுபடுத்துவதற்காகவே அவரைத் திருடிச் செல்லும் வாய்ப்புகள் கையில் நன்மை வாங்கும் வழக்கத்தால் வெகுவாக அதிகரித்துள்ளன. கரும்பூசை போன்ற அருவருப்புகளில் நம் அன்புக்குரிய ஆண்டவர் கற்பனைக்கெட்டாத அளவுக்கு, சாத்தானை வழிபடுபவர்களால் மிகவும் அருவருப்பான முறையில் கையாளப்படுகிறார். இது எப்பாடுபட்டாவது தடுப்பது ஒவ்வொரு கத்தோலிக் கனுடையவும் மாபெரும் கடமையாக இருக்கிறது

2. கையில் நன்மை கொடுப்பதில் தான் அதிகமான சுகாதாரக் கேடுகள் இருக்கின்றன. இந்தக் கொரோனா காலத்தில் கைகளை அடிக்கடி கிருமி நாசினிகளைக் கொண்டு கழுவும்படி அரசாங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வருவது இதற்கு மிக நல்ல சான்று. ஏனெனில் கையில் தான் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் மிகப் பெரும் அளவில் இருக்கின்றன. பல மோசமான நோய்கள் கைகளின் வழியாகவே மனித உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. கை குலுக்குவது, நோய் பாதிப்புள்ள பொருட்களைத் தொடுவது, பொது இடங்களிலுள்ள கதவுகளின் கைப்பிடிகள், படிக்கட்டுகளின் கைப்பிடிகள் போன்றவற்றைத் தொடுதல் ஆகியவற்றில் கைகள் தான் நேரடியாகத் தொடர்பு கொண்டு நோயை வரவேற்கின்றன. 

இவ்வாறு கைகளில் தொற்றிக்கொள்ளும் நோய்க் கிருமிகள் சில நாட்கள் கூட தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது என்று 'BMC Infectious Diseases" என்னும் பத்திரிகை, 2006-ல் தான் நிகழ்த்திய ஆய்வின் அடிப்படையில் செய்தி வெளியிட்டது. பலர் நோய்த் தொற்றுள்ள இத்தகைய பொருட்களைத் தொட்ட பிறகுதான் ஆலயத்திற்கு, பூசைக்கு வருகிறார்கள். எனவே கையில் நன்மை வாங்குவதன் மூலம் இவர்கள் நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக, கொள்ளை நோய்கள் பரவும் காலத்தில் இந்த அபாயத்தை நாவில் திவ்ய நன்மை வாங்கும் வழக்கம் வெகுவாகக் குறைக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது.

''சில திருச்சபை அதிகாரிகள், கொரோனா போன்ற கொள்ளை நோயை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்துவதாகக் கூட நமக்குத் தோன்றுகிறது. திவ்ய நற்கருணையாகிய தேவத் திரவிய அனுமானத்தில் மேற்கூறிய கொடிய தேவத்துரோக ஆபத்துக்களுக்கு நம் ஆண்டவரின் திருச் சரீரத்தை உட்படுத்தி, அதை அவசங்கைப்படுத்துவதில் பேய்த் தனமுள்ள இன்பம் காண்கிறார்கள் என்ற சந்தேகம் கூட ஏற்படுகிறது'' என்று அஸ்தானாவிலுள்ள செயிண்ட் மேரி மாநகர அதிமேற்றிராசனத்தின் துணை ஆயரான மிக வந். அத்தனாசியுஸ் ஷ்னீடர் என்பவர் குற்றஞ்சாட்டுகிறார்.

2000 ஆண்டு கால திருச்சபையின் வரலாற்றில் நாவில் திவ்ய நன்மை வாங்குவதால் தொற்றுநோய்கள் பரவியதாக ஒருபோதும் எண்பிக்கப் படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பைசாந்தீன் சபையில் குரு சிறு கரண்டியைக் கொண்டும் கூட விசுவாசிகளுக்குத் திவ்ய நன்மை வழங்கும் வழக்கம் இருக்கிறது! எல்லா விசுவாசிகளுக்கும் ஒரே கரண்டி பயன்படுத்தப்படுகிறது. அதன்பின் அந்தக் கரண்டியைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் இரசமும் தண்ணீரும் அந்தக் குருவானவரால் பருகப்படுகிறது. எத்தனை நாவுகளை அந்தக் கரண்டி தொட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நாவில் திவ்ய நன்மை வழங்குவதைத் தடை செய்வதில், நம்முடைய இலத்தீன் ரீதி ஆயர்கள் மற்றும் குருக் களிடம் விசுவாசமில்லாததைக் கண்டு கீழைச் சபைகளைச் சேர்ந்த அநேக விசுவாசிகள் இடறல் படுகிறார்கள். 

திவ்ய நன்மையில் உட்கொள்ளப் படுபவர், நன்மை செய்தபடி எங்கும் சுற்றித் திரிந்தவரும், ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கியவரும், இன்றும் அன்போடும் நம்பிக்கை யோடும், தாழ்ச்சியோடும் தம்மைப் பெற்றுக்கொள்ள வரும் விசுவாசி களைக் கொரோனா நோயினின்று குணப்படுத்த வல்லவருமாயிருக்கிறார் என்பதை இந்த ஆயர்களும் குருக்களும் விசுவசிப்பதில்லை. திவ்ய நற்கருணை ஆண்டவரின் வழியாக நோய்க் கிருமிகள் பரவும் என்று சொல்வது சர்வ வல்லபரான ஆண்டவருக்கு எப்பேர்ப்பட்ட தேவநிந்தையாக இருக்கிறது!

அப்படியானால் கையில் நன்மையைப் பெற்று உட்கொள்வதாலும் கூட நோய் பரவ வாய்ப்பில்லையே என்று இவர்கள் வாதிடலாம். ஆனால் நிந்தையான இந்த வழக்கத்தால் தமக்குச் செய்யப்படும் நிந்தை, துரோகம், அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, நன்மை வழங்கும் குருக் களிடமும், அதை வாங்கும் விசுவாசிகளிடமும், "விசுவாசமில்லாததைக் கண்டு ஆச்சரியப்பட்டு, அங்கே வேறே யாதொரு புதுமையும் செய்யக் கூடாதவராக'' (மாற்கு. 6:5,6), அதாவது, அவர்களுக்கு நோய் பரவுவதைத் தடுக்க விருப்பமில்லாமல் இருக்கிற, ஆண்டவரைத்தான் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

திவ்ய நன்மையில் நம் ஆன்மாக்களில் வந்து உறைபவர் சர்வேசுரன் அல்லவா? அவர் நம்முடைய எல்லா ஆராதனைக்கும் மகிமைக்கும், துதி புகழ்ச்சிக்கும் தகுதியானவர் அல்லவா? இவரைக் குறித்துத்தானே அர்ச். சின்னப்பர், "சர்வேசுரன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்கு அளித்து, சேசுவின் நாமத்திற்குப் பரமண்டலத் தாரும், பூமண்டலத்தாரும், பாதாளத்தாருமாகிய சகலரும் முழந்தாட் படியிடவும் (இசை. 45:24; உரோ . 14:11), ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறாரென்று எல்லா நாவும் அறிக்கையிடவும் பண்ணினார்" (பிலிப். 2:9-11) என்று அறிக்கையிட்டார்! சேசுநாதரின் திருப் பெயருக்கே மூன்று உலகத்தாரும் முழந்தாட்படியிடும்படி பரிசுத்த வேதாகமம் கட்டளை பிறப்பித்திருக்க, அவரே திவ்விய அப்ப வடிவ மாக நேரில் தோன்றும் போதும்கூட, "வணங்காக் கழுத்துள்ளவர் களைப்" போல, அவருக்கு எந்த மரியாதையும் இன்றி நின்று கொண்டு, பிடிவாதமாகக் கையில் நன்மை வாங்குபவர்கள் இந்தக் கட்டளைக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியத் தவறுகிறார்கள் அல்லவா?

நாம் செய்ய வேண்டியது

எனவே, அன்புச் சகோதரரே, நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. முதலாவதாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்று கொண்டோ, கையிலோ நன்மை வாங்குவதைத் தவிர்த்து விடுவோம். அதை விட, ஆசை நன்மை உட்கொள்வது எவ்வளவோ அதிக வரப்பிரசாதத்தையும், பலனையும் நமக்குப் பெற்றுத் தரும். இரண்டாவதாக, நம் ஜெபங்களையும், தவ முயற்சிகளையும், குறிப்பாக, மரியாயின் மாசற்ற இருதய பரிகார பக்தியாகிய முதல் சனி பக்தியையும் கடைப்பிடிப்பதையும் கொண்டு இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவோம். வெறும் வார்த்தைப் போர்களால் பெரிய அளவில் பலன் விளையப் போவதில்லை. அன்று உயிர் பயத்தோடும், பதட்டத்தோடும் ஆண்டவரை எழுப்பி, அவரால் கடிந்துகொள்ளப் பட்ட அப்போஸ்தலர்களைப் போலன்றி, விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் நம் ஜெபங்களையும், பரிகாரச் செயல்களையும் கொண்டு அவரை எழுப்ப முயலுவோம். சாத்தியத் திருச்சபையாகிய இராயப்பரின் படகின் பின்னணியத்தில் படுத்து உறங்குபவராகத் தோன்றுகிற நம் ஆண்டவர் எழுந்து, "அமைதியாயிரு , இரையாதே!" என்று ஒரு வார்த்தை சொல்ல, தீமையின் இந்தக் கொந்தளிப்புகள் எல்லாம் ஒரே கணத்தில் அடங்கிப் போகும் (மத். 8:24-26; மாற். 4:38,39; லூக். 8:23, 24).

கையில் திவ்ய நன்மை வழங்குவதற்கு எதிரான பாப்பரசர்கள், அர்ச்சியசிஷ்டவர்கள் மற்றும் திருச்சபையின் பொதுச் சங்கங்களின் அறிக்கைகள்

அர்ச். முதலாம் சிக்ஸ்துஸ் (கி.பி. 115)

''ஆண்டவருக்கென்று அபிஷேகம் செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் திவ்ய நற்கருணைக்குரிய புனிதப் பாத்திரங்களைக் கையாளக் கூடாது."

திவ்ய நற்கருணைக்காகப் பயன்படுத்தப்படும் திருப்பாத்திரங்களைக் கூட குருக்களைத் தவிர மற்றவர்கள் தொடக்கூடாது என்று இந்த அர்ச். பாப்பானவர் கூறுகிறார். ஆனால் அதற்கெதிராக, பாத்திரங்களை அல்ல, நற்கருணை ஆண்டவரையே விசுவாசிகளும் கூட தொடத் துணிவது எப்பேர்ப்பட்ட பாவமாக இருக்கும் என்று சிந்தித்துக் கொள்ளுங்கள்! 

பாப்பரசர் அர்ச். யூட்டீஷியன் (கி.பி. 275-283) 

விசுவாசிகள் தங்கள் கைகளில் திவ்ய அப்பத்தை எடுப்பதை அதிகாரபூர்வமாகத் தடை செய்தார். திருச்சபையின் வேதபாரகரான (Doctor of the Church) 

அர்ச். பெரிய பேசில் (கி. பி. 330-379):

''கையில் திவ்ய நன்மையைப் பெற்றுக்கொள்ளும் உரிமை வேத கலாபனைக் காலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.''

கையில் திவ்ய நன்மை பெறுவது கனமான பாவம் என்று சொல்ல இந்தப் புனிதர் சற்றும் தயங்காத அளவுக்கு அவர் இதைப் பெரும் ஒழுங்கீனமாக மதித்தார். 

சரகோஸாபொதுச்சங்கம் (கி.பி. 380)

"கையில் திவ்ய நன்மையைப் பெறத் துணியும் எவனும் திருச்சபை விலக்கத் தண்டனைக்கு உள்ளாவான்." சங்கத்தின் இந்தப் பிரகடனம் அதன்பின் டொலேடோசங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. 

பாப்பரசர் அர்ச். பெரியசிங்கராயர் (கி.பி. 440-461)

விசுவாசிகளுக்கு நாவில் மட்டுமே திவ்ய நன்மை வழங்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி குருக்களுக்கும், நாவில் மட்டுமே அதைப் பெறும்படி விசுவாசிகளுக்கும் இந்தப் புனித பாப்பரசர் கட்டளை யிட்டார்.

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மாபெரும் அர்ச்சியசிஷ்டவர் நாவில் நன்மை வழங்கும் பாரம்பரிய வழக்கத்திற்கு ஒரு தொடக்க கால சாட்சியாக இருக்கிறார். அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தின் ஆறாம் அதிகாரத்தைப் பற்றிய தம்முடைய விளக்கவுரையில், அவர் நாவில் நன்மை வழங்குவது பற்றிப் பேசுகிறார். "ஒருவன் விசுவாசத்தால் தான் விசுவசிப்பதையே நாவில் பெற்றுக்கொள்கிறான்" என்று அவர் கூறுகிறார். "Hoc enim ore sumiter quod fide creditur.'" Serm. 91.3. இது ஏதோ புதிதாகத் தோன்றிய ஒரு வழக்கம் என்பது போல அவர் பேசாமல், இது உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரிய வழக்கம் என்ற முறையில் அவர் இதைப் பற்றிப் பேசுகிறார். 

பாப்பரசர் அர்ச். பெரிய கிரகோரியார் (590-604)

இவர் நாவில் மட்டுமே நன்மை வழங்கும் கத்தோலிக்கப் பாரம்பரிய வழக்கத்திற்கு மற்றொரு உறுதியான சாட்சியாக இருக்கிறார். அர்ச். சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய திருமுகம், 3:3 திருவாக்கியத்திற்குத் தமது விளக்கவுரையில், பாப்பரசர் அர்ச். அகாப்பித்தோ (490-522) என்பவரின் பூசையில், அவர் விசுவாசிகளில் ஒருவருக்கு திவ்ய நன்மை வழங்கியவுடன் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைக் குறித்துப் பேசுகிறார்.

பாப்பரசர் அர்ச். யூட்டீஷியன் (கி.பி. 275-283), சரகோஸா பொதுச் சங்கம் (கி.பி. 380), பாப்பரசர் அர்ச். பெரிய சிங்கராயர் (கி.பி. 440-461), பாப்பரசர் அர்ச். பெரிய கிரகோரியார் (590-604) ஆகிய இந்த சாட்சிகள், திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கையில் அல்ல, மாறாக வாயில் தான் திவ்ய நன்மை வழங்கும் வழக்கம் இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறார்கள். ஆகவே, சிலர் விதண்டாவாதம் செய்வது போல, "பத்தாம் நூற்றாண்டு வரை கையில் நன்மை வழங்குவதுதான் அதிகார பூர்வ வழக்கமாக இருந்தது" என்பது அப்பட்டமான பொய்யாகும். 

ரூவென் ஆயர் சங்கம் (650)

கையில் நன்மை வழங்கும் வழக்கத்தால் மிக அதிகமாக நிகழ்ந்த அவசங்கைகளைத் தடுத்து நிறுத்தும்படியாகவும், இந்தத் தேவத்துரோகத் திற்கு எதிரான ஒரு பாதுகாப்பாகவும் இந்த வழக்கத்தை இந்தச் சங்கம் கண்டனம் செய்தது. "பொது நிலை விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் கையில் திவ்ய நன்மை தராதீர்கள், மாறாக, அவர்களது வாய்களில் மட்டுமே நன்மை வழங்குங்கள்" ("Do not put the Eucharist in the hands of any layman or laywomen, but ONLY in their mouths.") என்று இச்சங்கம் கட்டளையிட்டது.

கான்ஸ்டாண்டிநோப்பிளில் நடைபெற்ற ஆறாவது பொதுச் சங்கம் (680-681)

விசுவாசிகள் கையில் திவ்ய அப்பத்தை எடுப்பதை இந்தப் பொதுச் சங்கம் தடை செய்ததோடு, இந்தப் பாவத்தைச் செய்பவர்கள் திருச்சபை விலக்கத் தண்டனை பெறுவார்கள் என்றும் அச்சுறுத்தியது. அர்ச். 

தாமஸ் அக்குயினாஸ் (1225-1274)

"(திவ்ய நற்கருணையாகிய) இந்தத் தேவத்திரவிய அனுமானம் (திருவருட்சாதனம்) ஆராதனைக்குரியது என்பதால், அபிஷேகம் செய்யப் பட்டது தவிர வேறு எதுவும் அதைத் தொடலாகாது; இதன் காரண மாகவே, திருமேனித் துகிலும், பூசைப் பாத்திரமும், அவ்வாறே குருவின் கரங்களும், இந்த தேவத்திரவிய அனுமானத்தைத் தொடுவதற்காக அபிஷேகம் செய்யப்படுகின்றன." (Summa Theologica, Part III, Q. 82, Art. 3, Rep. Obj. 8). 

திரிதெந்தீன் பொதுச்சங்கம் (கி.பி. 1545-1565)

"குருவானவர் அபிஷேகம் பெற்ற தமது கரங்களால் திவ்ய நன்மை வழங்குவது அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம் ஆகும்.''

பாப்பரசர் ஆறாம் சின்ன ப்பர் (கி.பி. 1963-1978)

"(நாவில் நன்மை வழங்கும்) இந்த முறைமையே தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட வேண்டும்" ('மெமோரியாலே தோமினி' மடல், மே 29, 1969).

பாப்பரசர் இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope John Paul II)

"திவ்ய அப்பங்களைத் தொடுவதும், அவற்றைத் தங்கள் சொந்தக் கரங்களால் வழங்குவதும் அபிஷேகம் பெற்றவர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாகும்" ('தோமினிக்கே ச்செனே' மடல், எண் 11, பிப்ரவரி 24, 1980).

''விசுவாசிகள் தாங்களாகவே தேவ வசீகரம் செய்யப்பட்ட அப்பங்களையும், புனித பூசைப் பாத்திரத்தையும் தங்கள் கையில் எடுப்பதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. அதைவிட, அவர்கள் ஒருவருக்கொருவர் அவற்றைத் தருவதற்கு சற்றும் அனுமதிக்கப்படவில்லை '' ('இனெஸ்தி - மாபிலே தோனும், ஏப்ரல் 17, 1980, பிரிவு 9).

எந்தச் சூழ்நிலையிலும் விசுவாசிகள் கையில் நன்மை பெற்று உட்கொள்வது அனுமதிக்கப் படவேயில்லை என்று நாம் வாதிடவில்லை. தொடக்க காலத்திலிருந்தே குருவானவர் திவ்ய நன்மை வாங்குபவருக்கு அதை நாவில் வழங்குவதுதான் வழக்கமாக இருந்தது. என்றாலும், கலாபனைக் காலங்களில், குருக்கள் யாரும் இல்லாத சூழ்நிலைகளிலும், விசுவாசிகள் இந்தத் தேவத்திரவிய அனுமானத்தைத் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றபோதும், அவர்கள் வேறு வழியின்றி, தங்கள் சொந்தக் கரத்தால் திவ்ய நற்கருணையை எடுத்து உட்கொண்டார்கள் என்பது உண்மைதான். இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நித்திய ஜீவியத்திற்குரிய திவ்ய அப்பத்தை உட்கொள்வதிலிருந்து முற்றிலுமாகத் தாங்கள் விலக்கப்படாதவாறு, வேறு வழியே இன்றி, தங்கள் ஆன்ம போஷிப்பிற்காக அவர்கள் தங்கள் கரங்களால் திவ்ய நன்மை உட்கொள்ள வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டுகளின் வழக்கப்படி, பாலைவனங்களிலும் காடுகளிலும் தவம் செய்த துறவிகளும், ஒரு குருவானவரின் உதவி தங்களுக்கு இல்லாத சூழ்நிலைகளில், தங்கள் கரங்களாலேயே அனுதின திவ்ய நன்மை உட்கொண்டார்கள்.

ஆனால் அதற்கு நேர்மாறாக, ஒன்றுக்குப் பத்து குருக்கள் ஆலயத்தில் இருக்கும் போதும் கூட, எந்த அவசியமுமின்றி விசுவாசிகளுக்குக் கைகளில் நன்மை வழங்கப்படுவது ஆதித் திருச்சபையிலிருந்தே அனுமதிக்கப்படவில்லை என்பதை மேற்கூறப்பட்ட சாட்சியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

''கிறீஸ்தவ அகழ்வாராய்வு அகராதியில்" (Dictionaire d'Archeologie Chretienne), கான்ஸ்ட ண்டைன் அரசரால் ஆதித் திருச்சபையில் விளைந்த சமாதானத்தோடு விசுவாசிகள் தங்கள் சொந்தக் கரங்களால் நன்மை உட்கொள்ளும் வழக்கம் அடியோடு முடிவுக்கு வந்தது என்று லெக்ளெர்க் என்பவர் அறிவிக்கிறார். கலாபனைக் காலங்களில் மட்டுமே கையில் நன்மை என்பது அனுமதிக்கப்பட்டது என்ற அர்ச். பெரிய பேசிலின் கூற்று இவ்வாறு எண்பிக்கப்படுகிறது.

இந்தத் தொடக்க காலங்களில், குருக்களும் கூட அவசியமின்றி திவ்ய நற்கருணையைத் தொட அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி நமக்கு வியப்பும், மறுபுறம் மகிழ்ச்சியும் தருகிறது. உண்மையில் திவ்ய பலிபூசை நிறைவேற்றும் குருவானவரைத் தவிர, வேறு யாரும், அவர் பூசையில் பங்குபெறும் ஒரு குருவாகவே இருந்தாலும் கூட, கையில் நன்மை வாங்குவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருந்தது. அவர் மற்றொரு குருவிடமிருந்து நாவின் மீதுதான் திவ்ய நன்மையைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஆயராக இருந்தாலும் சரி, பாப்பரசராகவே இருந்தாலும் சரி, அவர்களுக்கும் இதுவே சட்டமாக இருந்தது.

உதாராணமாக, பாப்பரசர் அர்ச். பத்தாம் பத்திநாதர், 1914 ஆகஸ்ட் மாதத்தில் தமது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவருக்கு அவஸ்தை நன்மை கொண்டு வரப்பட்டது. அப்போது, அவர் கத்தோலிக்கத் திருச்சபையின் திருச்சட்டப்படியும், வழக்கப்படியும் நாவில் தான் நன்மை பெற்றுக் கொண்டார்.

இது ஓர் அடிப்படை உண்மையை உறுதிப்படுத்துகிறது. திவ்ய நற்கருணை நாதர் நம் சர்வேசுரனாக, பழைய ஏற்பாட்டில் தமது ஆவிக் குரிய பிரசன்னத்தைக் கொண்டிருந்த புனித உடன்படிக்கைப் பேழையைத் தொடத் துணிந்த ஓஸா என்பவனை அந்த இடத்திலேயே அடித்து வீழ்த்திய (2 அரசர். 6:6,7) அதே சர்வேசுரனாக, ஆனால் இப்போது, எரிச்சலுள்ள தேவனாக அன்றி, அளவற்ற இரக்கமுள்ள சர்வேசுரனாக இருக்கிறார். ஆகவே, குருக்களானாலும் சரி, விசுவாசிகளானாலும் சரி, காரணமும் தேவையுமின்றி அவரைத் தொடுபவர்கள் யாவரும் அவர் நீதியுள்ள நடுவராக வரும்போது, நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை .