இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஜென்மப் பாவத்திலிருந்து தனிப்பட்ட முறையில் விலக்கப்பட்டிருப்பதில் மாமரியின் இலட்சணங்கள்

இந்தச் சிறு புத்தகத்தில் மாமரி முடிந்த வரை அதிகமாக அறியப் படச் செய்ய நாம் விரும்புகிறோம் என்பதால், அவர்களுடைய இலட்சணங்களைப் பற்றிய ஒரு பொது விளக்கத்தைத தர மட்டுமின்றி, அவற்றின் ஒவ்வொரு விவரத்திற்குள்ளும் இறங்கி, அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் அவற்றை நோக்கி, ஒவ்வொரு கொடையின் தன்மை, அளவு மற்றும் குணம் ஆகியவற் றைத் தரவும் நாம் முயற்சி செய்யப் போகிறோம். இவ்வாறு, மாமரியைப் பற்றி ஆராய்ந்தறிய முயன்றபின், ஒருவன் அவர்களது இலட்சணங்களைப் பற்றி மிகப் போதுமானதும், முழுமையானது மான அறிவைக் கொண்டிருக்கக் கூடும்.

மேலும் இந்தப் பிரிவில் மாமரியின் எதிர் இலட்சணங்களை நாம் சுட்டிக் காட்டி எண்பிப்போம். இவை பின்வருமாறு:

1. ஜென்மப் பாவம் இல்லாதிருப்பது, அதிலிருந்து பாதுகாக்கப் பட்டிருப்பது;

2. எந்த ஒரு சுபாவமான தவறு அல்லது குறைபாட்டிலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டிருத்தல்;

3. நல்லொழுக்கம் சார்ந்த ஒவ்வொரு சாவான பாவத்திலிருந்தும், அற்பப் பாவத்திலிருந்தும், மிகச் சிறியவையும், மிக அற்பமானவை யும், உணரப்பட முடியாதவையுமான பாவங்களிலிருந்தும் கூட விடுபட்டிருத்தல்.

4. இந்த உத்தமமான மாசற்ற நிலையில் நிலையாயிருத்தலும், அதில் உறுதிப்பட்டிருத்தலும்.

முதல் எதிர் இலட்சணத்தைப் பொறுத்த வரை, ஜென்மப் பாவத் திலிருந்து விலக்கப்பட்டிருக்க வேண்டியிருந்தது என்பது தெளிவா யிருக்கிறது. இங்கே நாம் அதை விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. அது மாமரியின் வாழ்வின் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலகட்டங்களிலும் எடுத்துரைக்கப்பட்டு, எண்பிக்கப் படும். இப்போது நாம் காரியத்தின் தகுதி மற்றும் அழகைக் குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதை எண்பிப்பதற்கு, இந்த தியானப் பொருளோடு தொடர்புள்ள வாதங்கள் அனைத்தையும் நாம் முன்வைக்க இருக்கிறோம். நம் செயல்விளக்கத்திற்கு ஒன்றிப்பும், இணக்கமும் தரும்படியாக, பின்வரும் தலைப்புகளில் நாம் அவற்றை ஒன்றுசேர்த்துத் தர முயல்வோம்: மாமரி ஜென்மப் பாவத்திலிருந்து விலக்கப்பட வேண்டியவர்களாக இருந்தார்கள், இதே சலுகையைப் பெற்றுள்ள மற்ற சிருஷ்டிகளோடு மாமரியை நாம் ஒப்பிடுவோம் என்றால்; மாமரியின் மகத்துவத்தோடு ஜென்மப் பாவத்தை நாம் ஒப்பிடுவோம் என்றால்; மூன்று தேவ ஆட்களோடு தொடர்புள்ள விதத்தில் இதை நாம் பார்ப்போம் என்றால்; அதன் விளைவுகளில் அதைப் பற்றி நாம் சிந்திப்போம் என்றால். முதலாவதைப் பொறுத்த வரை, கோடிக்கணக்கான சம்மனசுக்களின் படையணிகள் பரிசுத்ததனத்திலும் அர்ச்சியசிஷ்டதனத்திலும் சிருஷ்டிக்கப்பட்டார்கள், இதன் காரணமாக அவர்கள் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுபட்டிருந்தார்கள். திரிதெந்தீன் பொதுச் சங்கம் கற்பிப்பது போல, நம் ஆதிப் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டபோது, அவர்கள் மாசற்றதனத்திலும், பரிசுத்ததனத்திலும் ஸ்தாபிக்கப்பட்டார்கள்.

இனி, நாம் இங்கு தந்துள்ள முதல் கொள்கையின் மூலம், எந்த ஒரு சிருஷ்டிக்கும் எப்போதாகிலும் தந்தருளப்பட்ட சுபாவமான அல்லது சுபாவத்திற்கு மேலான, சாதாரண அல்லது அசாதாரணக் கொடை அல்லது வரப்பிரசாதம் எதுவாயினும் அதை மாமரி பெற்றிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆகவே, தேவதூதர் களும், நம் முதல் பெற்றோரும் ஜென்மப் பாவத்திலிருந்து விலக்கப் பட்டிருந்தார்கள் என்றால், இது மாமரிக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.

மாமரியின் மகத்துவம் தொடர்பாக ஜென்மப் பாவத்தைப் பற்றி நாம் சிந்திப்போம் என்றால் இந்த உண்மை அதிக அவசியமானதாகத் தோன்றும். நித்தியத்திலிருந்தே மாமரி கடவுளின் மனதில், தனது தெய்வீக சுதனின் தாயார் மற்றும், அவரது இரட்சணிய அலுவல்கள் அனைத்திலும் அவரோடு ஒத்துழைப்பவர்கள் என்னும் தனது இரு மடங்கான மகத்துவத்தில் தோன்றுகிறார்கள். நித்தியத்திலிருந்தே மாமரிக்கு நியமிக்கப்பட்டிருந்தது இதுதான்.

ஆகவே, ஒருபோதும் வேறு எந்த அம்சத்திலுமன்றி, மாமரி இந்த விதமாகவே கடவுளின் மனதில் தோன்றினார்கள். இனி, இது கடவுளோடு ஓர் ஐக்கியத்தைக் குறிக்கிறது. மாமரி தேவ-மனித முறையில் தெய்வீகத்தோடு ஒன்றிக்கப்படாமல் இருந்திருந்தால், மேற்கூறிய ஐக்கியத்தை விடப் பெரிதான ஓர் ஐக்கியத்தைக் கற்பனை செய்யவும் இயலாது. கடவுளோடு அனைத்திலும் அதிக நெருக்கமான ஐக்கியமானது, கடவுளுக்கும் சிருஷ்டிக்குமிடையே பாவத்தால் ஏற்படுத்தப்படுகிற அனைத்திலும் பெரிய பிரிவை முழுவதுமாகவும், எந்தத் தகுதியுமின்றியும் கடவுளோடு ஒன்றிக்கப் பட்டவரை விலக்குகிறது என்பதை யார் காணத் தவற முடியும்?

இந்த மகத்துவத்தின் தொடக்கத்தை நாம் ஆராய்வோம் என்றால், இந்த வாதம் பலப்படுத்தப்படுகிறது. கண்டிப்பான விதத்தில் பேசும்போது இத்தகைய ஓர் உயரத்திற்கு உயர்த்தப்பட மாமரியிடம் எந்தத் தகுதியோ, உரிமையோ இருக்கவில்லை. மாமரியின் பேரில் கடவுள் கொண்டிருந்த நன்மைத்தனமே இதற்குக் காரணமாக இருந்தது. அவர் அவர்களை எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலாக நேசித்தார். அப்படியிருக்க, மிகப் பெரியதும், பக்திக் குரியதும், அதியற்புதமானதும், மலைப்பூட்டுவதும், அளவற்றது மான இந்த நேசம், ஒரு பேச்சு வகைக்கு, ஓர் அதியற்புதப் படைப்பை, ஓர் அற்புதத்தை, ஒரு மகத்துவமுள்ள அதிசயத்தை, நேசத்தின் முழுமையான முயற்சி என்று அழைக்கப்படத்தக்க ஓர் ஆளுமையை உருவாக்க விரும்பியதுமான ஒரு நேசம், எப்படித் திடீரென்று நின்று போய் வெறுப்பாக மாறக் கூடும்? ஏனெனில் மாமரி பாவத்தில் கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தார்கள் என்றால், இதுவே அதன் விளைவாக இருந்திருக்கும்; கடவுளின் நேசம் வெறுப் பாக மாறிப் போயிருக்கும், இந்தப் பாவம் நம்மைக் கடுங் கோபத்தினுடையவும், அழிவினுடையவும் மக்களாக ஆக்கி யிருக்கும்.

மேலும், நாம் பார்த்துள்ளபடியும், இனி விரிவாகப் பார்க்க இருக்கிறபடியும், எந்த விதத்திலும் அளவிட முடியாத ஒரு மாபெரும் அர்ச்சியசிஷ்டதனம் மாமரியின் மகத்தவத்திற்குத் தேவையாயிருந்தது. இந்த அர்ச்சியசிஷ்டதனம், தங்கள் பரிசுத்த தனம் மற்றும் உத்தமதனத்தின் சிகரத்தை அடைந்த எல்லா சிருஷ்டி களின் அர்ச்சியசிஷ்டதனத்தை விட உயர்ந்ததாக இருந்தது மட்டுமல்ல, மாறாக, அத்தகைய ஓர் அர்ச்சியசிஷ்டதனத்தை அது அதிசயத்திற்குரிய விதத்தில் பாரதூரமான அளவுகளில் வெகுவாக உயர்ந்திருந்தது. உண்மையில் அது எல்லா அளவுகளுக்கும் அப்பாற் பட்டதாக இருந்தது, ஏனெனில் அவர்களது மகத்துவம் எல்லா அளவுகளுக்கும் அப்பாற்பட்டதாகவும், ஈடிணையற்றதாகவும் இருந்தது.

அப்படியிருக்க, இந்த அளவுக்கு பரிசுத்ததனத்தின் அதிசயமாக இருக்க வேண்டியிருந்த ஓர் ஆத்துமத்தில் ஒரே ஒரு கணமாகிலும் பாவம் இருந்திருக்கக் கூடும் என்று எப்படி மனித அறிவால் கற்பனை செய்ய முடியும்? மாமரியின் இருத்தலின் முதல் கணத்திலேயே, ஏற்கெனவே மகிமையில் உத்தமதனத்தை அடைந்திருந்த எல்லா சிருஷ்டிகளின் அர்ச்சியசிஷ்டதனத்தை விட மேலான அர்ச்சிய சிஷ்டதனத்தைக் கொண்டிருந்தது என்றும் கூட நாம் வாதிடலாம். மாமரியின் இந்த அர்ச்சியசிஷ்டதனம் அவர்களது தொடக்கத்தில் இருந்து, அத்தகைய ஒரு வாழ்வில் மற்ற நிலைகளில் அதிகரித்து வந்தது. அப்படியிருக்க, இத்தகையதொரு தொடக்கம் பாவத்தால் கறைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று யார் நினைக்க முடியும்?

மேலும், மாமரியைப் பொறுத்த வரை, தமத்திரித்துவத்தின் மூன்று தேவ ஆட்களோடு ஓர் உறவை இந்த மகத்துவம் ஏற்படுத்து கிறது. இந்த உறவைப் பற்றி நாம் பின்னர் விரிவாக விளக்குவோம். இப்போது அதை வெறுமனே குறித்துக் காட்டுவதை மட்டும் செய் வோம். தமத்திரித்துவத்தின் முதல் தேவ ஆளுடனான உறவு, நித்திய பிதா தமது அதே திருச்சுதனை உருவாக்க மாமரியைத் தம்மோடு இணைத்துக் கொள்வதாக இருக்கிறது. அவதரித்த வார்த்தையான வரின் உலகப் பிறப்பு அவருடைய நித்திய ஜெனித்தலிலிருந்து வேறுபட்டதாக இல்லாமல், இரண்டும் ஒரே விதமானவையாக இருக்கின்றன. பிதாவானவர் இஸ்பிரீத்துசாந்துவின் வரப்பிரசாதப் பொழிதல்களின் வழியாக, தமது அதே சுதனை மீண்டும் பிறப்பிக் கும்படி, ஒரு பேச்சு வகைக்கு, தமது சுபாவமான பிறப்பின் வல்லமை யோடு தொடர்புள்ள ஒரு வரப்பிரசாத வல்லமையை மாமரியின்மீது பொழிகிறார்.

இதன் காரணமாக, மாமரி கண்டிப்பான முறையிலும், அதிக முறையான விதத்திலும் நித்திய பிதாவின் மணவாளி என்று அழைக்கப்பட முடியும். அப்படியிருக்க, இந்த தெய்வீக ஆள், தமது மணவாளியின் மகிமைக்கு உயர்த்தப்பட்ட ஒரு சிருஷ்டி ஒரு கணமாவது பாவத்தால் தம்மை விட்டுப் பிரிந்திருக்க அனுமதிப்பார் என்று நாம் நினைக்க முடியுமா?

இரண்டாவது தேவ ஆளுடன் மாமரிக்குள்ள உறவில், கடவுளின் நிஜமான, உண்மையான, சுபாவமான தாயாரைப் பாவத்தோடு தொடர்புபடுத்துவது நிச்சயமாக வடிகட்டிய மூடத்தனமாக மட்டுமே இருக்கும். இத்தகைய ஒரு காரியத்தை வெறுமனே கற்பனை செய்வதும் கூட நம்மைக் கடும் அச்சத்தில் ஆழ்த்துகிறது. ஜென்மப் பாவத்தின் பொதுத் தன்மையை, அத்தகைய ஒரு சட்டத்தின் மாறாத தன்மையை அளவுக்கு மீறி மதிப்பிட்டு, அதைக் கடவுளின் தாயாரோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் தவறாக வழி நடத்தப்பட்டவர்கள் மட்டுமே இத்தகைய ஒரு காரியத்தைக் கற்பனை செய்திருக்க முடியும். ஆனால் தற்காலத்திலும் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், மாமரி கடவுளின் தாயாராக இருக்கிறார்கள் என்பதை நிஜமாகவே புரிந்து கொள்ளாதவர்களாக மட்டுமே அவர்கள் இருக்க முடியும்.

மூன்றாவது தேவ ஆளோடுள்ள உறவிலிருந்தும் இதே காரியம் தெளிவாகிறது. ஒரு பேச்சு வகைக்கு, மாமரி, உள்ளபடி இஸ்பிரீத்து சாந்துவின் முயற்சியாக இருக்கிறார்கள். கடவுளின் அந்தரங்கத்தில் பிறப்பிக்கும் வளமை இல்லாதவராக இருக்கும் அவர், கடவுளுக்கு வெளியே அந்த வளமை உள்ளவராக இருக்க விரும்பினார். எனவே அவர் மாமரியின் ஆத்துமத்தில் தமது கூட்டை அமைத்து, அவர்கள் மீது தமது எல்லாக் கொடைகளையும் முழுத் தாராளத்தோடு பொழிந்தருளினார்; அவர்களில் தமது வரப்பிரசாதங்களும் கொடை களும் முழுமையாகக் குவியச் செய்தார். இவ்வாறு அவர்கள் கருத்தரித்து, ஒரு தேவ-மனிதனைப் பெற்றெடுக்கச் செய்தார். இந்த தேவ மனிதன் வரப்பிரசாதம் மற்றும் அர்ச்சியசிஷ்டதனத்தின் மொட்டும் மலரும், அனைத்திலும் அதிக இனிமையானதும், அனைத் திலும் அதிக மென்மையானதும், அனைத்திலும் அதிக அழகுள்ளதுமான மலருமாகவே இருக்கிறார். இங்கே, இத்தகைய வரப்பிர சாதத்தின் அதியற்புதத்தோடு பாவத்தைத் தொடர்புபடுத்துவது உண்மையில் ஒரு கத்தோலிக்கனால் தாங்கிக் கொள்ளவும் இயலாத காரியம்!

மாமரி கடவுளின் செயல்களின் மத்தியஸ்தியாக இருந்தார்கள் என்னும் அவர்களுடைய மகத்துவத்தின் இரண்டாவது பக்கத்தை நாம் வலியுறுத்தியிருக்கிறோம். அவர்களது சம்மதத்தின் பேரில்தான் மனிதாவதாரம் நிகழ்ந்தது. முன்னறியப்பட்டதும், அனுமானிக்கப் பட்டதுமான அவர்களது சம்மதத்தின் பேரில்தான் மனிதாவதாரத் திற்கு முன்பாக நிகழ்ந்த அனைத்தும் உருவாக்கப்பட்டன, நிகழ்த்தப் பட்டன. இனி, இந்தச் செயல்களில் எல்லாம் முதன்மையானது ஜென்மப் பாவத்திலிருந்தும், கர்மப் பாவத்திலிருந்தும், அவற்றின் விளைவுகளிலிருந்தும் மனுக்குலத்தை மீட்டு இரட்சிப்பதாக இருந்தது. இது மாமரியின் சுதந்திரமான, அவர்கள் தானே விரும்பி அளித்த சம்மதத்தாலும், இதற்கு அவசியமான மாமரியின் தகுதி களாலும் நிறைவேற்றப்பட்டது. பாவத்தை அழிப்பதில் ஒத்துழைக்கும் நோக்கத்திற்காக மாமரி உண்டாக்கப்பட்டிருக்க, இந்த ஒத்துழைப்பின் ஓர் அவசியமான விளைவாகப் பாவம் அழிக்கப்பட வேண்டியிருக்க, அந்த உத்தமமான ஆளுமை பாவத் தால் கறைப்படுத்தப்பட முடியும் என்று யார் நினைக்க முடியும்?

மேலும் ஜென்மப் பாவம் ஆத்துமத்தில் முடிவடைந்து விடுவதில்லை. அது பொங்கி வழிந்து, சரீரமும் அதை உணரச் செய்கிறது. ஏனெனில் அது, வேதசாஸ்திர மொழியில், இச்சை என்று அழைக்கப்படும் காரியத்தை மறைமுகமாகக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது மாம்சத்தைக் கறைபடுத்திக் கெடுக்கிறது; அது சரீரத்தின்மீது உண்டாக்கப்பட்ட ஒரு காயத்தைப் போல் இருக்கிறது. ஆகவே, மாமரி பாவத்தில் கருத்தரிக்கப் பட்டிருந்தார்கள் என்றால், அந்தக் கறை அவர்களது சரீரத்தையும், அவர்களது இரத்தத்தையும் கூட கறைப்படுத்தியிருக்கும். இனி, அவர்களது இரத்தத்திலிருந்தே கிறீஸ்துநாதரின் திருச்சரீரம் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. ஆகவே கிறீஸ்துநாதர் பாவ சரீரம் ஒன்றையே தமக்கென மாமரியிடமிருந்து எடுத்திருப்பார்.