இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அசாதாரணமான சுபாவத்திற்கு மேலான வரப்பிரசாதம்

சுபாவத்திற்கு மேலான உலகம் சுபாவத்திற்கு மேலான இருத்தலை, அதன் மூன்று தனித்தனி சத்துவங்கள் அல்லது வழக்கங் களாகிய விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகியவற்றோடும், இஸ்பிரீத்துசாந்துவின் கொடைகளோடும் தன்னுள் கொண்டுள்ளது. இந்தக் கொடைகளில் முதல் நான்கும், நாம் பார்த்துள்ளது போல, விசுவாசமாகிய சுபாவத்திற்கு மேலான சத்துவத்தோடும், மற்ற மூன்றும் சுபாவத்திற்கு மேலான சித்தத்தோடும் தொடர்புள்ளவை யாக இருக்கின்றன. இவற்றோடு எட்டு சுவிசேஷப் பாக்கியங்களும், இஸ்பிரீத்துசாந்துவின் கனிகளும் தொடர்புள்ளவையாக இருக் கின்றன. தேவ இஷ்டப்பிரசாதத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு வழக்கமாக, இந்த மற்ற எல்லாக் காரியங்களையும் அதே அளவில் தன்னுடன் சுமந்து வருகிறது. இந்தக் கொடைகளின் செயல்கள் இஸ்பிரீத்துசாந்துவானவரின் நேரடித் தூண்டுதலின் கீழ் அசாதாரண மான முறையில் விளைவிக்கப்படுகின்றன, ஆனால் வழக்கங்களோ சாதாரணமானவையாக இருக்கின்றன, அவை அவசியமான முறையில் தேவ இஷ்டப்பிரசாதத்தைத் தொடர்ந்து வருகின்றன.

ஆனால் சில தனிப்பட்ட வரப்பிரசாதங்கள் அல்லது அதே கொடைகளின் செயல்கள் இருக்கின்றன. இவை அர்ச்சியசிஷ்ட தனத்திற்கு அவசியமேயில்லை. ஏனெனில் இவற்றில் எதுவும் இல்லாமலே ஒருவன் மிக உயர்ந்ததும், பக்திக்குரியதுமான அர்ச்சிய சிஷ்டதனத்திற்கு உயர்த்தப்பட முடியும். இவை காட்சிதியான வேதசாஸ்திரத்தில் பேசப்படும் வரப்பிரசாதங்களாக இருக்கின்றன. இவை அர்ச்சியசிஷ்டதனத்திற்கு அவசியமானவை அல்ல என்றாலும், அதற்கு மிக முக்கியமானவையாகவும், அதற்கு உதவு பவையாகவும் இருக்கின்றன. இவற்றை மாமரிக்குப் பொருத்திக் காட்டும் செயலை நாம் தொடங்குவதற்கு முன் கத்தோலிக்கப் புனிதத்துவத்தைப் பற்றிய சிந்தனையை நிறைவுசெய்யும்படி, இவற்றைப் பற்றி நாம் பேசியாக வேண்டும். காட்சிதியான வேத சாஸ்திரத்தைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையை நாம் இப்போது எழுதிக் கொண்டிருக்கவில்லை என்பதால், இதை எளிய முறையில் விளக்குவது நமக்குப் போதுமானது.

இஸ்பிரீத்துசாந்துவானவர், ஆத்துமத்தின்மீது தமது அசாதாரணச் செயல் ஒன்றால், சகல நித்திய, பக்திக்குரிய செயல் களைக் காணச் செய்கிறார், அந்த ஆத்துமம் சாதாரண அறிவுகள் செய்ய வேண்டியது போல, தனது தியானத்தாலோ, உரையாட லாலோ இந்தச் செயல்களைக் காண்பது இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு மாறாக, அவருடைய சொந்த தெய்வீக அறிவைப் போன்ற அதே முறையில், ஒரே பார்வையில், ஓர் அக ஒளியில் அது அவற்றைக் காண்கிறது; இந்தப் பார்வை அல்லது அக ஒளியுடன், அதே தெய்வீக சத்தியங்களின் அழகிலும், கவர்ச்சியிலும் ஒரு விதமான தெய்வீக இன்பம் அல்லது சுவை சேர்ந்துகொள் ளட்டும். அப்போது, நாம் எவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருக் கிறோமோ, அந்த அசாதாரண வரப்பிரசாதங்களில் முதலாவதைப் பற்றிய ஒரு அறிவை அந்த ஆத்துமம் பெற்றுக்கொள்கிறது. இந்த முதலாவது அசாதாரண வரப்பிரசாதம் காட்சிதியானம் என்று அழைக்கப்படுகிறது.

அதே அளவற்றவராகிய கடவுள் ஏற்கெனவே காட்சிதியான வரமுள்ளவனும், கடவுளைக் காணவும், உணரவும், சுவைக்கவும் கூடிய அளவுக்கு, போதுமான தெய்வீக ஒளியைக் கொண்டவனு மாகிய ஒருவனுக்கு மேற்கூறிய வரத்தைக் கடவுள் தருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அவன் இந்த வரப்பிரசாதங் களில் இரண்டாவதைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வான். அது மெளன ஜெபம் எனப்படுகிறது.

ஆனால் இதே ஒளி அதிகரிக்கப்படுகிறது, அதன் காரணமாக, கடவுளின் பிரசன்னம் ஆத்துமத்தை மிக அந்தரங்கமாக, அதன் சாராம்சத்திலேயே ஊடுருவும் விதமாக உணரப்படுகிறது, சுவைக்கப்படுகிறது, கடவுளின் பிரசன்னத்தின் இன்பமான சுவையின் இந்த உணர்வு அதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது, இதனால் அந்த ஆத்துமம் அந்த மகிழ்ச்சியால் தாங்கப்பட்டு, போதை கொண்ட ஒருவனைப் போல, தொடர்பற்ற உணர்விலும், நேசத்தின் வாக்குறுதிகளைத் தருவதிலும் இறங்குகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அது இந்த வரப்பிரசாதங்களில் மூன்றாவதின் இயல்பைக் கொண்டிருக்கிறது என்று நாம் சொல்ல வேண்டும். அது நேசத்தின் போதை எனப்படுகிறது.

இனி, அறிவு வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்க முடியாத விதத்தில் தெய்வீக இலட்சணங்களோடு கட்டப்படும் படியாக, கடவுள் அந்த ஒளியை ஆழப்படுத்தி, அதிகரிக்கிறார், ஆத்துமம் கடவுளில் முற்றிலுமாகத் தொலைந்து போகும்படியாக, தெய்வீகத்தின் அந்தச் சுவையுள்ள அறிவும், உணர்வும் ஆத்துமத்தை ஊடுருவுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, அது இந்த வரப்பிரசாதங்களில் நான்காவதின் இயல்பைக் கொண் டிருக்கிறது என்று நாம் கூறலாம். இது காட்சிதியான ஐக்கியம் எனப் படுகிறது.

ஆனால் இந்த ஒளி புலன்களைக் கூட உணர முடியாதபடி ஆத்துமத்தை மிகுந்த வல்லமையோடு நிரப்பும் அளவுக்கு, அதில் அதிகரிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது அது பரவச ஐக்கியம் என்னும் வரப்பிரசாதத்தைக் கொண்டுள்ளது.

ஆத்துமம் தன்னை உணர இயலாதபடி கடவுள் அதைப் பிடுங்கியெடுத்து, தம்மிடம் அதை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு, ஒரு பலமான மின்னல் வீச்சைப் போல, சற்றும் எதிர்பாராமலும், மிக அதிகமான விசையோடும் இந்த ஒளியைத் தருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது பரவச ஆக்கிரமிப்பு என்னும் நிலைக்கு ஆத்துமம் உட்படுகிறது. இந்த ஒளியும் சுவையும் தனது பொருண்மைக்குள் ஆத்துமத்தின் சகல சத்துவங்களையும் ஈர்த்து, தன்னுள் அவற்றைக் குவியச் செய்யும் அளவுக்கு அவை அதிகரிக்கப் படுகின்றன, கடவுளாலும், இஸ்பிரீத்துசாந்துவாலும் ஆத்துமம் மிகுந்த இனிமையோடும், கருணையோடும் தொடப்பட்டு, அவரோடு இணைக்கப்பட்டு, அவரில் மாற்றமடைகிறது, இவ்வாறு அது அவரில் வாழ்கிறது, அவரது நேசததையே சுவாசிக்கிறது, உண்மையில் அவரிடமிருந்து பிரிக்க முடியாததாக ஆகிறது என்றால், இவற்றில் கடைசியான வரப்பிரசாதத்தை அது அடைந்து விட்டது என்று சொல்ல வேண்டும். அது ஞான விவாகம் எனப் படுகிறது.

இந்த பக்திக்குரிய வரப்பிரசாதங்களைப் பற்றிய ஒரு சிறு விளக்கத்தை மட்டுமே தர நாம் அவசியமான விதத்தில் கடமைப் பட்டிருக்கிறோம். இந்த ஒவ்வொரு அல்லது எல்லா வரங்களையும் புரிந்துகொள்வது பொதுவாக நம் வாசகர்களுக்கு எளிதாக இல்லா திருக்கலாம்; ஆயினும் தெய்வீகக் காரியங்கள் சிருஷ்டிப்பில் தங்கள் சாயலைக் கொண்டுள்ளன, தேவசிநேகம் மனித சிநேகத்தில் தனது எதிரொலியை, அல்லது தொலைவான பதிவைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் ஒரே நிலைகளைப் பின்பற்றுகின்றன என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டும்.

இனி, மனித சிநேகத்தின் நிலைகளைக் குறித்துக் காட்டுவதன் மூலம் அசாதாரணமான தேவசிநேகத்தின் பக்திக்குரிய நிலைகளை விளக்குவது நமக்கு சாத்தியமாகலாம்.

மாபெரும் சுபாவமான கொடைகளையும், புண்ணியங் களையும் பெற்றுள்ள ஓர் ஆளை நான் காண்கிறேன்; அவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து, கொஞ்சங் கொஞ்சமாக சிந்திப்பதன் மூலம் அந்த ஆளின் மீது நான் மரியாதை கொள் கிறேன். ஒரு நேசர் அந்த எல்லாக் கொடைகளையும், புண்ணியங் களையும், அவற்றிலுள்ள சுவைகளையும், இன்பங்களையும் ஒரே பார்வை யிலும், அக ஒளியாலும் கண்டுகொள்கிறார். நான் அவற்றை தியானிக்கிறேன், அவற்றைப் படிப்படியாக தியானிக் கிறேன். அவரோ தமது உள்ளொளியாலும், ஒரே பார்வையாலும் அவற்றைக் காண முடிவதால், அவர் அவற்றைக் கண்டு தியானிக்கிறார்.

இந்த நேசம் அதிகரிக்கிறதாக வைத்துக் கொள்வோம். இதனால் அவரது நேசத்திற்குரியவரின் பிரசன்னம் மட்டுமே அவரைத் திருப்திப்படுத்தி, மகிழ்ச்சியால் அவரை நிரப்பப் போதுமானதாக இருக்கிறது. இதனால், அந்த இன்பமான பிரசன்னத்தின் வெறும் மவுனமான, அசைவற்ற காட்சிதியானத்தைத் தவிர வேறு எதையும் அவர் விரும்பாதபடி அது செய்கிறது. அவர் மவுனமாக உரையாடுகிறார் என்று சொல்லலாம்--ஏனெனில் ஏற்கெனவே நேசத்தின் அவசியமான உயரத்திற்கு வளர்ந்து விட்ட புனிதர் கடவுளின் பிரசன்னத்தைக் கொண்டு திருப்தியடைகிறார், மவுன ஜெபத்தைக் கொண்டு அவரிடம் ஜெபிக்கிறார்.

ஆனால் நேசிக்கப்படுபவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பது, தொடர்பற்ற, பாசம் மிக்க உணர்வுகளுக்குள்ளும், நேசத்தின் சீராட்டல்களுக்குள்ளும் அவரைத் தள்ளும் அளவுக்கு, கொந்தளிக்கிற மகிழ்ச்சியாலும், ஊதாரித்தனமுள்ள இன்பத்தாலும் அவரை நிரப்பும் அளவுக்கு இந்த நேசம் முழுமையானதாகவும், மேன்மையானதாகவும, ஆக்கிரமிப்பதாகவும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மனித நேசத்தின் போதையை நாம் கொண்டிருப்போம். ஏனெனில் தெய்வீகத்தின் போதை என்பது, பாசம் மிக்க, தொடர்பற்ற நேசத்தின் தெய்வீக உணர்வு களுக்குள் ஆத்துமத்தைத் தள்ளும் அளவுக்கு மிகுந்த ஆவலையும், கொந்தளிக்கிற இன்பத்தையும் கொண்டு அதை நிரப்புவதாக இருக்கிறது. ஆனால் இந்த மனித சிநேகம் மனதின் சகல சத்துவங் களோடும், இருதயத்தின் சகல உணர்வுகளோடும் கிரகித்துக் கொள்ளப்படும் அளவுக்கு மேலெழுப்பப்படுகிறது, அந்த ஆளின் ஞான ரீதியான பாகம், அவரைச் சுற்றியுள்ள உணரக் கூடிய பொருட்களின் தேவைகளை சந்திக்க இயலாததாக இருக்கும் அளவுக்கு இது நிகழ்கிறது, அந்த ஆள் அந்த அளவுக்கு கிரகித்துக் கொள்ளப்பட்டவராக இருக்கிறார்; இந்நிலையில் நாம் நேசப் பரவசத்தின் ஒரு நிழலைக் கொண்டிருப்போம்.

இங்கே ஒப்புமை ஏறக்குறைய தவறிப் போகிறது; ஆனால் இன்னும் கூட நேசத்திற்குரிய ஒரு பொருளை, நிஜமான, அல்லது கற்பனையான குணங்களோடு நம்மால் கற்பனை செய்ய முடியும். தன்னைக் காண்பவரைத் திடீரென பரவசத்தில் ஆழ்த்தும் அளவுக்கு மிகுந்த வசீகரமும், கண்ணைப் பறிக்கும் ஒளியும் உள்ளதாக அதைநாம் கற்பனை செய்ய முடியும். அப்போது நாம் ஆக்கிரமிக்கிற பரவச ஐக்கியத்தின் ஒரு மங்கலான காட்சியைக் கொண்டிருக் கிறோம்.

இறுதியாக, மனித நேசம் ஒருவரை மற்றொருவராக மாற்றும் அளவுக்கும், ஒருவரை மற்றொருவரில் வாழச் செய்யும் அளவுக்கும், மற்றொருவரின் சுவாசத்தில் வாழும் அளவுக்கும் உயர்த்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஞான விவாகத்தின் இன்னும் அதிக மங்கலான ஒரு காட்சியை இது தரக் கூடும்.