இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ இஷ்டப்பிரசாதம்

சுபாவத்திற்கு மேலான காரியத்தின் இந்தப் பகுதி, சுபாவ மான எல்லா ஐக்கியத்திற்கும் மேலாக, மூன்று தேவ ஆட்களுடன் மனித ஆத்துமம் கொள்ளும் ஒரு புதிய ஐக்கியமாகும். இதைக் கொண்டு தமத்திரித்துவ சர்வேசுரன் தமது சாராம்சம் மற்றும் ஆளுமைகளின் ஒரு புதிய, மேலான சாயலை ஆத்துமத்தில் உண்டாக்கி, ஆத்துமத்தின் சாரத்தோடும், சத்துவங்களோடும் அதை ஒட்ட வைத்து, ஒரு தனிப்பட்ட நண்பரைப் போல இந்த தேவ ஆட்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களை நேசிக்கவும் அந்த ஆத்துமத்திற்கு உதவுகிறார்.

தேவ இஷ்டப்பிரசாதத்தின் வரையறையை விளக்குவோம். முதலாவதாக, கடவுளின் தேவ சாராம்சம், அளவற்ற உத்தமதனத்தின் முழுமை, பிதா, சுதன்,இஸ்பிரீத்துசாந்து என்னும் மூன்று தேவ ஆட்களால் ஸ்திரப்படுத்தப்பட்டு, முடித்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு ஆட்களும் (சுதனும் இஸ்பிரீத்துசாந்துவும்) பிறவாததும், மற்றொரு மூலத்திலிருந்து உண்டாக்கப்படாததும், மாறாக சாராம்சத்தோடு ஒரே சுபாவமுள்ளதுமான முதல் முடிவாக இருக்கிறார்கள். முதல் முடிவு என்பது செயல்பூர்வமான புத்தியாகும். அவர் தமது செயல்பாடு மற்றும் நித்தியத்தின் விளைவாக நித்திய மாகவும், நிரந்தரமாகவும் தம்மையும், தமது சுபாவத்தையும் புத்தி யுள்ளவராக்கிக் கொள்கிறார், தமது அளவற்றதனத்தின் வலிமையில் தம்மையும், தமது சுபாவத்தையும் முழுமையாகப் புரிந்துகொள் கிறார். இந்தச் செயல்பாட்டின் பயனும் விளைவுமாக இருப்பது ஓர் அறிவு சார்ந்த உற்பவமாகும். அது அந்தச் செயல்பாட்டிற்குத் தகுதி யுள்ளதாகவும், அதற்கு முற்றிலும் போதுமானதாகவும், அதன் காரணமாக அளவற்றதாகவும் இருக்கிறது. எனவே, தெய்வீகத்தின் முதல் முடிவாகிய செயல்பூர்வ புத்தியாகிய கடவுளை நாம் கொண் டிருக்கிறோம். புரிந்துகொள்ளப்படும் கடவுள் இரண்டாம் முடிவாக இருக்கிறார்.

தமது உற்பவத்திலும், உற்பவத்தின் வழியாகவும் தமது அளவற்ற இலட்சணங்கள் அனைத்தையும் புத்தியுள்ளவையாக்கிக் கொள்ளும் கடவுள் அவரில் பூரண திருப்திகொண்டு, தமது அளவற்ற உன்னதத் தன்மை மற்றும் இருத்தலின் பூரணத்துவத்தின் பொருண்மை சார்ந்த வெளிப்பாடாக அவரைக் கண்டு நேசிக்கிறார். உற்பவமான கடவுள் பிதாவானவரில் பூரண திருப்தி கொண்டு, தமது இருத்தலின் மூலமாகவும், அச்சாகவும் அவரை நேசிக்கிறார்.

இந்தப் பரஸ்பர மதிப்பும், நேசமும், பேரின்பமும் தெய்வீகத்தின் மூன்றாவது முடிவாக, இஸ்பிரீத்துசாந்துவானராக இருக்கிறது.

ஓர் ஆன்மா தேவ இஷ்டப்பிரசாதத்தால் கடவுளோடு இணைக்கப்படும்போது, நிச்சயமாக, ஓர் அளவுக்குட்பட்ட விதத் தில் தெய்வீகம் முழுவதும் ஆத்துமத்தில் பிறப்பிக்கப்படுகிறது. ஆனால் சுபாவமான சிருஷ்டிப்பின் உலகிலுள்ள எதையும் விட அளவற்ற விதமாக மேற்பட்டதாக இருக்கும் விதத்தில் அது பிறப் பிக்கப்படுகிறது. கடவுள் அதில் ஒரு புதிய ஆற்றலை உருவாக்குகிறார், அது அவரது அளவற்ற சாராம்சம் மற்றும் சுபாவத்தின் ஒரு வெளிப்பாடாக, ஒரு சித்தரிப்பாக, ஓர் ஒப்புமை யாக இருக்கிறது -- இரண்டு கீழ்நிலை ஆற்றல்களாகிய சுபாவத்திற்கு மேலான புத்தி மற்றும் நேசத்தின் மூலமாக இருக்கும் ஒரு புதிய ஆற்றல்.

இந்தப் புதிய ஆற்றல் கீழ்நிலை ஆற்றல்களின் மூலமாக இருப்பதால், அது முதல் ஆளாக இருக்கிறது. அடிப்படை மூலத் திலிருந்து புறப்படும் முதலாவது கீழ்நிலை ஆற்றல், இரண்டாவதன் வெளிப் பாடாக இருக்கிறது; இந்த இரண்டிலிருந்தும் புறப்பட்டு வரும் மற்றொரு கீழ்நிலை ஆற்றல், மூன்றாவதன் சித்தரிப்பாக இருக்கிறது.

தேவ இஷ்டப்பிரசாதத்தைப் பற்றிய இந்த சிந்தனை பரிசுதத வேதாகமங்களால் தரப்படும் சிந்தனையோடு உத்தமமான விதத்தில் ஒத்துப் போகிறது. இது கடவுளோடு கொள்ளப்படும் ஒரு புதிய ஐக்கியம் என்பது நமதாண்டவரின் இந்த வார்த்தைகளில் தெளி வாகிறது:

‘எவனாகிலும் என்னை நேசித்தால், என் கற்பனைகளை அனுசரிப்பான், நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு வாசமா யிருப்போம்'' (அர்ச். அருளப்பர் சுவிசேஷம்).

‘நமக்குத் தரப்பட்டுள்ள இஸ்பிரீத்துசாந்துவால் தேவ சிநேகம் நம் இருதயங்களுக்குள் பொழியப்படுகிறது'' (அர்ச். சின்னப்பர்).

‘நீங்கள் சர்வேசுரனுடைய தேவாலயமாக இருக்கிறீர்கள் எனறும், தேவ இஸ்பிரீத்துவானவர் உங்களில் வாசமாயிருக்கிறார் என்றும் அறியீர்களா?'' (1 கொரி.).

இந்த ஐக்கியத்தின் விளைவு ஒரு புதிய ஆற்றலாகவும், ஒரு புதிய மூலமாகவும் இருக்கிறது என்பது பின்வரும் வேதாகம வாக்கியங்களால் எண்பிக்கப்படுகிறது:

‘நாம் அவருடைய சிருஷ்டிப்பின் தொடக்கமாக இருக்கும் படியாக, சத்தியத்தின் வார்த்çயைக் கொண்டு அவர் நம்மைப் பெற்றெடுத்தார்'' (அர்ச். யாகப்பர்).

‘நாம் அவருடைய தேவசுபாவத்தில் பங்கடைபவர்களாக ஆக்கப்படும்படியாக, மிகப்பெரியதும், விலையேறப்பெற்றதுமான வாக்குத்தத்தங்களை அவர் நமக்குத் தந்திருக்கிறார்'' (அர்ச். இராயப்பர்).

‘கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவம் செய்வதில்லை, ஏனெனில் அவருடைய வித்து அவனில் நிலைத்திருக்கிறது'' (அர்ச். அருளப்பர்).

இறுதியாக, தேவ இஷ்டப்பிரசாதமானது, கடவுளைக் கண்டு, அவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பதாகிய நோக்கத்தை அடைவதற்காக நியமம் செய்யப்பட்டுள்ளதால், அது அதிகரிக்க வல்லதாக இருக்கிறது, தேவ விசுவாசம், தேவ நம்பிக்கை, தேவ சிநேகம் ஆகிய சத்துவங்களை உயரச் செய்கிறது. இவை தத்தமது நோக்கங்களோடு தங்களுக்குள்ள ஐக்கியத்தால் அந்தப் புதிய ஆற்றலை வளரச் செய்து, அதை இறுதி உத்தமநிலைக்குக் கொண்டு வருகின்றன.

கடவுளே இந்த சத்துவங்களின் நோக்கமாக, ஆனால் வெவ்வேறு அம்சங்களில், இருக்கிறார், உன்னதராகவும், நித்திய ராகவும், தவறான சத்தியமாகவும் இருப்பவரும், சுபாவத்திற்கு மேலான விதத்திலும், புத்திக்கு எட்டாத வகையிலும் மனிதருக்குத் தம்மை அறிவிக்கிறவருமாக இருக்கிறவர் என்ற முறையில் கடவுள் சுபாவத்திற்கு மேலான புத்தி அல்லது விசுவாசத்தின் நோக்கமாக இருக்கிறார்; உன்னதமான பிரமாணிக்கமுள்ளவர், தமது வாக்குத் தத்தங்களுக்கு உண்மையுள்ளவர் என்ற முறையில் கடவுள் சுபாவத்திற்கு மேலான நம்பிக்கையின் நோக்கமாக இருக்கிறார்; உன்னதமானவர், அளவற்ற நன்மைத்தனமானவர் என்ற முறையில் கடவுள் சுபாவத்திற்கு மேலான சிநேகத்தின் நோக்கமாக இருக்கிறார்.

இந்தப் புதிய ஆற்றல், தனது சுபாவத்திலும் சத்துவங்களிலும் அளவுக்கு உட்பட்டதாகவும், சார்புள்ளதாகவும் இருப்பதால், தான் தொடர்ந்து பிழைத்திருப்பதற்கும், இந்த சத்துவங்களைச் செயல் பாட்டுக்குத் தூண்டுவதற்கும், அவற்றின் செயல்பாட்டில் ஒத்தாசை செய்வதற்கும், அந்தச் செயல்பாட்டை உத்தம நிதர்சனத்திற்கு அல்லது இருத்தலுக்குக் கொண்டு வருவதற்கும் கடவுளின் சுபாவத் திற்கு மேலான நிரந்தரமான செயல்பாடு அதற்கு அவசியமாயிருக் கிறது. இந்த ஆற்றலையும் சத்துவங்களையும் விளைவிக்கிற கடவுளின் நிரந்தரச் செயல்பாடு, இந்தப் புதிய ஆற்றலின் சாராம்சத்திற்குத் தொடர்புள்ள விதத்தில் வழக்க வரப்பிரசாதம் என்றும், சத்துவங்கள் தொடர்பாக வழக்கங்கள் அல்லது புண்ணியங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சத்துவங்களைச் செயலுக்குத் தூண்டும் கடவுளின் செயல் முந்திய வரப்பிரசாதம் எனப்படுகிறது; அவற்றிற்கு ஒத்தாசை செய்வது, தொடர்ந்து வரும் வரப்பிரசாதம் எனப்படுகிறது. இந்தக் கடைசி மூன்று வரப்பிரசாதங்களும், ஒரு பொதுப் பெயரால் உதவி வரப்பிரசாதம் எனப் படுகின்றன.

ஆகவே, ஓர் அர்ச்சிக்கப்பட்ட சிருஷ்டியாக இருப்பவன், தன்னில் உருவாக்கப்படுகிற புதிய சுபாவத்திற்கு மேலான இருத்தலால் தமத்திரித்துவத்தோடு சுபாவத்திற்கு மேலான ஐக்கியம் கொள்ளும் மனிதன் ஆவான். இந்த சுபாவத்திற்கு மேலான இருத்தல் விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் மூன்று சத்துவங்களாக அல்லது வழக்கங்களாகப் பிரிகிறது. இவை, புதிய செயல்களின் மூலம் தங்களையே வளர்த்துக் கொள்வதன் மூலம், அந்த சுபாவத் துக்கு மேற்பட்ட புதிய இருத்தலையும் வளரச் செய்து, அதை உத்தமமாக்குகிறது. ஆனால் இத்தகைய ஒருவனை நிஜமாகவே அர்ச்சிப்பது சிநேகத்தின் வழக்கமேயாகும். இதன் காரணமாக, சுபாவத்திற்கு மேலான இருத்தல்தான் வேதசாஸ்திர மொழியில், "குணம்' என்று அழைக்கப்படுகிறது என்பதை வாசகர்கள் கவனமாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் அனைத்து வழக்கங் களும் இழக்கப்படும்போதும் கூட, இது ஒருபோதும் இழக்கப்படக் கூடாது, அர்ச்சிக்கப்படுதல் தேவ சிநேகப் புண்ணியத்தில் அடங்கியிருக்கிறது. அது உண்மையில் கடவுளின் உன்னதத் திருச்சித்தமும், அளவுக்குட்பட்ட மனிதனின் சித்தமுமாகிய இரு சித்தங்களையும் இணைக்கிறது. ஏனெனில் ஒரு மனிதன் நல்லொழுக்கத்தின் உன்னத அடிப்படை விதியோடு உண்மையான தொடர்புள்ளவனாக இருக்கும்போது மட்டுமே அவன் பரிசுத்தன் என்றும், நீதிமான் என்றும் அழைக்கப்பட முடியும். இனி, தான் இருக்கிறபடியே, கடவுளின் உரிமையின் நித்திய புத்தியோடு ஒன்றாகவும், ஒத்ததாகவும் இருக்கிற கடவுளின் உன்னதத் திருச்சித்தத்தில்தான் நல்லொழுக்கத்தின் உன்னதமான அடிப்படை விதி அடங்கியிருக்கிறது. 

ஆகவே, மனிதனின் சித்தம் கடவுளின் உன்னதத் திருச்சித்தத் தோடு தனிப்பட்ட தொடர்பில் இணைக்கப்படும்போதுதான் அவன் அர்ச்சிக்கப்பட்டவன், பரிசுத்தன், நீதிமான் என்றெல்லாம் சொல்லப்பட முடியும். தேவ சிநேகப் புண்ணியத்தின் வழியாக மட்டுமே இந்தத் தனிப்பட்ட தொடர்பு சாத்தியமாகிறது. ஆனால் சுபாவத்திற்கு மேலான இருத்தலைப் பற்றிய ஒரு முழுமையான அறிவைத் தரும்படியாக, அந்த இருத்தலையும், அதன் சத்துவங்களையும் பற்றிப் பேசுவதில், நாம் இஸ்பிரீத்துசாந்துவின் கொடைகளையும் கனிகளையும், பாக்கியங்களையும், வெவ்வேறு சீர்திருத்தங்களையும் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும். இந்த சுபாவத்திற்கு மேலான இருத்தல், அதே இஸ்பிரீத்துசாந்துவின் செயலால் இவற்றை வெளிப்படுத்தக் கூடும்.