இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் மென்னொளியை உற்றுநோக்குதல்!

 ஜூன் 27, 1943

சேசு கூறுகிறார்:

மனிதனின் கண் சூரியனை உற்று நோக்க இயலாது, ஆனால் நிலவை உற்றுநோக்க அதனால் முடியும். ஆத்துமத்தின் கண்ணால் கடவுளின் உத்தமதனத்தை அது உள்ளபடி உற்றுநோக்க இயலாது, ஆனால் மாமரியின் உத்தமதனத்தை உற்றுநோக்க அதனால் இயலும்.

மாமரி சூரியனோடு ஒப்பிடப்படும் நிலவைப் போல் இருக்கிறார்கள். அவர்கள் அவரால் ஒளிர்விக்கப்பட்டு, தன்னை ஒளிர்வித்துள்ள ஒளியை உங்கள் மீது பிரதிபலிக்கிறார்கள், ஆனால் அப்படிச் செய்வதற்கு முன் அவர்கள் தனது பரம இரகசிய மூடுபனி களால் அதை இனிமையாக்கி, இவ்வாறு உங்கள் வரம்புக்குட்பட்ட சுபாவத்தால் தாங்கப்படக் கூடியதாக அதை மாற்றுகிறார்கள். இதனால்தான் பல நூற்றாண்டுகளாக, மிக நுட்பமாக மாமரியில் என் சகோதர, சகோதரிகளாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிற உங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரிகையாக அவர்களை நான் தந்து வருகிறேன்.

அவர்களே தாய். தன் தாயைப் பார்ப்பது குழந்தைகளுக்கு எவ்வளவு இனிமையானதாக இருக்கிறது! இக்காரணத்தினாலேயே நான் அவர்களை உங்களுக்குத் தந்திருக்கிறேன், அவர்களை நான் உங்களுக்குத் தருவது, உங்களைக் குருடாக்க அல்ல, மாறாக, உங்களைப் பரவசப்படுத்தப் போதுமான மகிமையொளியைக் கொண்டுள்ள ஒரு இனிய மகத்துவத்தை நீங்கள் கொண்டிருக்கும் படியாகவே. எந்த சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட காரணங்களுக் காக நான் தெரிந்து கொண்டுள்ள விசேஷமான ஆன்மாக்களுக்கு மட்டும் நான் கடவுள்-மனிதன் என்ற முறையில் என் மகத்துவப் பேரொளியோடும், முழுமையான புத்தியோடும், உத்தமதனத் தோடும் என்னைக் காட்டியிருக்கிறேன். ஆனால் இந்தக் கொடை யோடு நான் அவர்களுக்கு மற்றொரு கொடையையும் தந்திருக் கிறேன். அது என்னைப் பற்றிய அறிவால் அழிக்கப்பட்டு விடாமல், அதைத் தாங்கிக் கொள்ளத் திறனுள்ளவர்களாக அவர்களை ஆக்கியது.

ஆனால் நீங்கள் அனைவருமே மாமரியைப் பார்க்கலாம். அவர்கள் உங்களைப் போன்றவர்கள் என்பதால் அல்ல. ஓ இல்லவே இல்லை! அவர்களுடைய பரிசுத்ததனம் எவ்வளவு உயர்வானது என்றால், அவர்களுடைய மகனும், சர்வேசுரனுமாகிய நானே அவர்களை வணக்கத் தோடுதான் நடத்துகிறேன்! அவர்களது உத்தமதனம் எப்பேர்ப்பட்டது என்றால் பரலோகம் முழுவதும் அவர்களது சிம்மாசனத்திற்கு முன் பணிந்து வணங்கு கின்றன. அந்த சிம்மாசனத்தின்மீது எங்கள் தமத்திரித்துவத்தின் நித்தியப் புன்னகையும், நித்திய மகிமையொளியும் இறங்குகிறது. ஆனால் வேறு எந்த சிருஷ்டியையும் விட அதிகமாக அவர்களை ஊடுருவி, அவர்களை தெய்வீக மயமாக்குகிற இந்த மகிமைப் பேரொளி, அவர்களுடைய மாசற்ற சரீரத்தின் அதீத வெண்மையான மூடுதுகில்களைக் கொண்டு, உள்ளிருந்தே பரவி விரிகிறது. அவர்கள் கடவுளின் ஒளி முழுவதையும் தன்னுள் சேகரித்துக் கொண்டு, ஒரு நட்சத்திரத்தைப் போலப் பிரகாசிக்கிறார்கள், சகல சிருஷ்டிகளின் மீதும் இந்த ஒளியை ஒரு மென்மையான பிரகாசமாகப் பரப்புகிறார்கள்.

மேலும், அவர்கள் நித்தியத்திற்கும் தாயாராக இருக்கிறார்கள். அவர்கள் தாய்க்குரிய அனைத்து இரக்கங்களையும் தன்னில் கொண் டிருந்து, உங்களை மன்னிக்கிறார்கள், உங்களுக்காகப் பரிந்து பேசு கிறார்கள், உங்களுக்குக் கற்பிக்கிறார்கள். ""என் திருமகனை நேசி'' என்று யாரிடமாவது சொல்ல அவர்களால் இயலும்போது, மரியாயின் மகிழ்ச்சி பெரிதாயிருக்கிறது. அப்படியே "என் தாயை நேசி'' என்று யாரிடமாவது சொல்ல இயலும்போது என் மகிழ்ச்சியும் பெரிதாயிருக்கிறது. உங்களில் ஒருவன் என் பாதங்களிலிருந்து இறங்கி மாமரியிடம் போவதை, அல்லது, மாமரியின் மடியை விட்டு இறங்கி, என்னை நோக்கி வருவதைக் காணும்போது, எங்கள் மகிழ்ச்சி மிகப் பெரிதாயிருக்கிறது. ஏனெனில் அன்பால் நிரம்பியுள்ள மற்றவர்களுக்குத் தன் மகனைத் தருவதில் தாய் அக்களிக்கிறார்கள், தாய் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைக் காணும் மகனும் அக்களிக்கிறார். எங்கள் மகிமை தன்னை மற்றவர் மீது சுமத்துவதை விரும்புவதில்லை, மாறாக, மற்றவரின் மகிமையில் அது நிறைவு பெறுகிறது.

இதனாலேயே நான் உங்களிடம்: "மரியாயை நேசியுங்கள், உங்களை நேசிப்பவர்களும், தன் புன்னகையின் மென்மையைக் கொண்டு மட்டுமே உங்களை ஒளிர்விப்பவர்களுமாகிய அவர்களை நான் உங்களுக்குத் தந்திருக்கிறேன்'' என்று சொல்கிறேன்.