இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளோடு சுபாவத்திற்கு மேற்பட்டதும், தனிப்பட்டதுமான உறவில் மனிதன் மீண்டும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். - மாமரியின் ஊழியம்.

சேசுக்கிறீஸ்துநாதரின் பேறுபலன்களின் விளைவாக அன்றி, வேறு எவ்விதத்திலும் மனிதன் கடவுளுடனான நட்புறவில் மீண்டும் ஸ்தாபிக்கப்பட முடியாதவனாக இருந்தான். அவரோ தம்முடைய திருப்பாடுகளாலும், திரு மரணத்தாலும் நம்மை அர்ச்சிக்கிற வரப் பிரசாதத்தைச் சம்பாதித்தார். இதில் இந்நூலில் பல தடவைகள் விளக்கப்பட்டுள்ள ஒரு முறையில் மாமரி ஒத்துழைத்தார்கள். ஆனால் இந்தப் பிரிவில் இந்தக் கருத்தைச் சுட்டிக் காட்டி விளக்குவது நம்முடைய விருப்பமல்ல. மனிதனைத் தம்முடைய நட்புறவுக்குள் திரும்பக் கொண்டு வரவும், அவன் இழந்து போன தனிப்பட்டதும், சுபாவத்திற்கு மேலானதுமான தெய்வீக உறவில் அவனை மீண்டும் ஸ்தாபிக்கவும் கடவுள் தேர்ந்து கொண்ட வழி எவ்வளவு அழகானதாகவும், அளவற்ற ஞானமுள்ளதாகவும் இருந்தது என்பதை இந்தப் பிரிவில் குறித்துக் காட்டி விளக்குவதே நம் நோக்கமாகும்.

மனிதனுக்காக தேவ இஷ்டப்பிரசாதத்தைச் சம்பாதித்த சேசுக் கிறீஸ்துநாதர் வழியாக அன்றி, மனிதனுக்கு இந்த வரப்பிரசாதம் வர முடியாது; ஆனால் இயல்பாகவே மனிதனுடைய அன்பை வெற்றி கொண்டு, இவ்வாறு அந்த வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ள அவனைத் தயாரிக்கும் வழிகளைத் தேர்ந்து கொள்வதால், இந்தச் சுபாவத்திற்கு மேலான கொடையைப் பொழிவதற்கான வழியைக் கடவுளே உருவாக்கித் தந்தார். இந்தத் தியானக் கருத்தைப் பற்றித்தான் இந்தப் பிரிவில் நாம் எடுத்துக் கூறி விளக்க விரும்புகிறோம்.

கடவுள் தம்மையே மனிதனால் தீவிரமாக நேசிக்கப்படக் கூடியவராக ஆக்கிக் கொள்ள விரும்பினார். இத்தகைய ஒரு நோக்கத்தை அடைய என்ன செய்வது? அவர் அளவற்ற அழகுள் ளவர் என்பதும், அவரே அந்த அழகாக இருக்கிறார் என்பதும் உண்மைதான். ஆனால் மனிதன் அதைப் பகுத்துணர இயலாதவனாக இருந்தான். அப்படியிருக்க, அவர் எப்படி மனிதனுக்குத் தம்மைத் தீவிரமாக நேசிக்கப்படத் தக்கவராய் ஆக்கிக் கொள்வது, அந்த அழகைப் பகுத்தறியவும், உணரவும் மனிதன் தவறிவிடாத ஒரு முறையில் இதை எப்படிச் செய்வது என்பதுதான் கடவுளின் ஞானமானது தீர்த்து வைக்க எடுத்துக்கொண்ட பிரச்சினையாக இருந்தது.

அன்பின் நிபந்தனைகளுக்குத் தம்மைக் கீழ்ப்படுத்தத் தயை கூர்ந்ததன் மூலமாக இதை அவர் நிறைவேற்றினார். இந்த நிபந்தனைகள் முக்கியமாக மூன்று ஆகும். அவை: ஒருமித்த தன்மை, ஐக்கியம் மற்றும் பலி ஆகியவை ஆகும்.

முதலாவது ஒருமித்த தன்மை அன்பை வெல்வதற்கு முற்றிலும் அவசியமானது. ஏனெனில் நாம் நேசிக்கும் ஓர் ஆளில், நம்மில் இல்லாத இலட்சணங்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும், அல்லது கண்டுபிடித்துள்ளதாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். இது அந்த இலட்சணங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள அந்த ஆளின்மீது நம்மில் ஒரு நாட்டத்தைத் தூண்டியெழுப்புகிறது, என்றாலும் இந்த இலட்சணங்கள் நம்மை விட மிக அதிக உயரத்திற்கு அந்த ஆளை உயர்த்தி விடக் கூடாது; அந்த இலட்சணங்கள் அந்த ஆளை நம்மால் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் வைத்து விடக் கூடாது, இல்லாவிடில் அந்த ஆளின் அன்பை வெற்றி கொள்வது நம்மால் இயலாத காரியம் என்ற எண்ணம் நம் மனங்களில் பதிந்துவிடுகிறது; சாத்தியமின்மை பற்றிய எந்த ஒரு மனப் பதிவும், அந்த ஆளின் மீதான சகல நாட்டங்களையும் முளையிலேயே கிள்ளி விடப் போதுமானதாக இருக்கிறது.

ஆகவே, மிகவும் கவர்ச்சியானதும் மனதை வெல்வதுமான இலட்சணங்களைப் பற்றிய உணர்தலால் நேசம் வெல்லப்படுகிறது, என்றாலும், அதை வெல்வதற்கான சாத்தியத்தை நாம் காண இயலும்படியாக, அந்த இலட்சணங்கள் நமக்கு எட்டாத உயரத்தில் இருக்கக் கூடாது. இதன் காரணமாக, நேசிக்கப்பட வேண்டிய ஒரு பொருள் மிகவும் கவர்ச்சியான, ஆனால் ஒரு பேச்சு வகைக்கு, அடக்கப்பட்ட, மென்மையாக்கப்பட்ட இலட்சணங்களுடன் தோன்ற வேண்டும், இதன் மூலம் அதனோடு நமக்கு ஒரு வித ஒருமித்த நிலை தோன்றுகிறது, இதனால் அது நம்மால் பற்றிப் பிடிக்கப்படக் கூடியதாக ஆகிறது.

இந்தக் கோட்பாட்டின் விளைவாக, நேசத்தைக் கவர ஆசிக்கும் எவனும், சுபாவக் கொடைகளிலும், தனிப்பட்ட சாதனைகளிலும், மகத்துவத்திலும் மிகவும் உயர்ந்தவனாக இருந்தால், அவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளவும், தான் வெற்றி கொள்ள விரும்பும் ஆளின் அன்பின் அளவுக்குத் தன்னை இறக்கிக் கொள்ளவும், இத்தகைய குறிப்பிடத்தக்க வேறுபாடுகளையெல்லாம் மறைத்துக் கொள்ளவும், அவனோடு ஓர் ஒருமித்த நிலையை எடுத்துக் கொள்ளவும், அவனுடைய சிந்தனைகளையும், அவனுடைய உணர்வுகளையும், அவனுடைய நாட்டங்களையும் தன்னுடையவை யாக்கிக் கொண்டு, இவ்வாறு அவனைக் கவரவும் கடமைப்பட் டிருக்கிறான். இந்த அடிப்படையில் பார்த்தால், நேசம் என்பது தன்னை விடத் தாழ்ந்தவர்களிடம் காட்டப்படும் கருணையாக இருக்கிறது.

இரண்டாவது நிபந்தனை ஐக்கியமாகும். நேசம் ஐக்கியத் தாலும், ஒருவரையொருவர் நேசிக்கும் ஆட்களிடையே எல்லாவற் றையும் பரஸ்பரம் மாற்றிக் கொள்வதாலும் வாழ்கிறது. நேசிக்கிற ஒரு மனிதன் நேசிக்கிற ஒருவன் தன்னுடைய இலெளகீக, ஞான உடைமைகளையும், தன் சத்துவங்களையும், தன் வாழ்வையுமே தன்னால் நேசிக்கப்படுபவனுக்குச் சொந்தமாக்கி விட வேண்டும்; ஏனெனில் நேசத்தினுடையவும், நட்பினுடையவும் சாராம்சம் இப்படி எல்லாவற்றையும் நேசிக்கப்படுபவனுக்குக் கொடுத்து விடுவதிலும், நேசிக்கப்படுபவன் தன்னை நேசிப்பவனுக்குத் தனக்குரிய அனைத்தையும் கொடுத்து விடுவதிலும் அடங்கி யிருக்கிறது.

இறுதியாக, மூன்றாவது நிபந்தனை, பலி, பரித்தியாகம் என்பதாகும். நாம் முதலாவது நிபந்தனையில் விளக்கிக் கூறியுள்ளது போல, நேசத்திற்கு எதிரான தடைகளாக இருக்கிற வேறுபாடு களையெல்லாம் பரித்தியாகம் செய்து விடுவதன் மூலம் நீ நேசிக்கிற மனிதனைப் போல உன்னை ஆக்கிக் கொள்வது என்னும் பொருளில் மட்டுமல்ல, நீ நேசிக்கும்போது உன்னுடைய வாழ்வும், நீ சொந்தமாகக் கொண்டுள்ள அனைத்தும் இனி உன்னுடைய தல்லாமல், வேறு ஒருவனுடையதாகி விடுகிறது என்பதால் மட்டுமின்றி, நேசம் தன் இயல்பிலேயே ஒரு சார்புடைமையாகவும், ஒரு பணிதலின் நிலையாகவும் இருக்கிறது என்ற பொருளிலும், பலி அல்லது பரித்தியாகம் என்பது அவசியமாயிருக்கிறது; ஏனெனில் நீ நேசிக்கும்போது, உன்னுடைய மகிழ்ச்சி மற்றொருவனைச் சார்ந்ததாக ஆகிவிடுகிறது, நீ நேசிக்கிறாய் என்ற காரணத்தாலேயே பலியிடவும்படுகிறாய்.

கடவுள் மனிதனுக்குத் தம்மை மிகுந்த அழகுள்ளவராகவும், வசீகரமுள்ளவராகவும் ஆக்கிக்கொள்ள விரும்பினார். ஆகவே, அவர் தம்முடைய அளவற்ற ஞானத்தில், அன்பின் இந்த மூன்று நிபந்தனை களுக்கும் தம்மையே கீழ்ப்படுத்தினார். அவர் தம்முடைய அளவற்ற மகத்துவத்தை மறைத்துக் கொண்டு, மனிதனுடைய நிலைக்கு இறங்கி வந்து, மனிதனுடைய சுபாவத்தை எடுத்துக் கொண்டு, அதைத் தம்முடைய அளவற்ற ஆள்தன்மையோடு ஒன்றித்ததன் மூலம் அதைத் தம்முடையதாக்கிக் கொண்டார்; அவர் மனிதன் என்னும் வார்த்தையின் மிகக் கண்டிப்பான, மிக உண்மையான பொருளின்படி, மனிதனாகி, பாவம் நீங்கலாக மனிதனின் சிந்தனைகளையும், உணர்வுகளையும், நாட்டங்களையும், மனநிலைகளையும், இரக்கங்களையும் எடுத்துக் கொண்டு, இவ்வாறு, மனிதனுக்குத் தம்மை அழகுள்ளவராக ஆக்கிக் கொள் ளும்படி முதல் நிபந்தனையை அவர் நிறைவேற்றினார். அதில் அவர் வெற்றி பெற்றார். இந்த அழியக்கூடிய வாழ்வில் அவர் மக்கள் கூட்டங்களைத் தம் பின்னால் வரும்படி ஈர்த்தார், மக்கள் அவரு டைய திருவதனத்தின் அழகாலும், அவருடைய திருச்சரீரத்தின் மகத்துவத்தாலும், அவருடைய புருவத்தின் உயர்வாலும், அவரு டைய திருவிழிகளிலிருந்து பாய்ந்த நெருப்பாலும், கனிவாலும், அவருடைய உதடுகளில் விளையாடிக் கொண்டிருந்த இனிய புன்னகையாலும், அவருடைய திருவாயினின்று புறப்பட்டு வந்த பக்தியார்வமுள்ள அன்பினுடையவும் இரக்கத்தினுடையவும் வார்த்தைகளாலும், இன்னும் அதிகமாக, ஒவ்வொரு கேட்டிலும், ஒவ்வொரு துயரத்திலும், வேதனையிலும், தீமையிலும் அவருடைய பிரசித்தமான இரக்கத்தாலும் வசீகரிக்கப்பட்டார்கள்.

அவர் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் மனிதர் களோடு உரையாடினார்; அவர்கள் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தார். இவ்வுலகை விட்டுப் புறப்படுமுன் அவர் தமது பிரசன் னத்தை நிரந்தரமானதாக ஆக்கிய ஒரு தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தினார். அதன் பலனாக மனிதர்கள் அவரோடு தினமும் உறவாடவும், அவரது திருச்சரீரத்தோடும், இரத்தத்தோடும், ஆத்து மத்தோடும், தெய்வீகத்தோடும் நிஜமாகவே இணைக்கப்பட் டிருக்கவும் வழியை ஏற்படுத்தினார், நாம் உண்ணும் உணவோடு நாம் இணைக்கப்படும் அதே முறையில் இதையும் செய்தார், ஒரே ஒரு வித்தியாசத்தோடு: நாம் உண்ணும் சடத் தன்மையுள்ள உணவு நம் சொந்த இரத்தமாக மாற்றப்படுகிறது, ஆனால் திவ்ய நன்மையிலோ, நாம் கிறீஸ்துவாகவே மாற்றப்படுகிறோம்.

மனிதனின் நன்மைக்காக ஒரு பலிப்பொருளாகவும், ஒரு காணிக்கையாகவும் இருக்கும் நோக்கத்திற்காகவே அவர் உலகிற்கு வந்தார் என்பதால், அவர் மூன்றாவது நிபந்தனையையும் நிறை வேற்றினார்.

அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதிலும், குறிப்பாகத் தமது திருப்பாடுகளின் மூன்று நாட்களிலும், ஒரு தகனப் பலியாக இருந்தார். அந்நாட்களின் முடிவில் அவர் தம்முடைய பலியை நிறைவேற்றினார். ஆனால் இந்தப் பொதுவான சிலுவைப் பலி யோடு அவர் திருப்தியடையவில்லை. மாறாக, திவ்விய நற்கருணை ஸ்தாபகத்தின் வழியாக, அவர் அந்தப் பலியை நிரந்தர மாக்கி, அதன் வழியாக, கல்வாரியில் தாம் அனைவருக்காகவும் சம்பாதித்த பேறு பலன்களை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தந்தருளச் சித்தமானார்.

ஆகவே, மனிதனோடு தம்மை ஒன்றாக்கிக் கொள்ளவும், அவனோடு எல்லாக் காலங்களிலும், இடங்களிலும் தங்கியிருக்கும் படியாகவும், தம்முடைய திருச்சரீரத்திலும், இரத்தத்திலும் அவனை நிஜமாகவே பங்கெடுக்கச் செய்வதன் மூலம் அவனுக்குத் தம்மையே சொந்தமாக்கும்படியாகவும், மகத்துவத்திலும் மகிமையிலும் அளவற்றவராகிய சர்வேசுரன் மனிதராக அவதரித்ததை மனிதன் கண்டிருக்கிறான். கடவுள் தனக்காக அவரையே பலியாக்கி யதையும், இந்தப் பலியை அவர் நிரந்தரமானதாக்குவதையும் மனிதன் கண்டிருக்கிறான். ஆகவே, சர்வேசுரன் தம்மையே அளவற்ற வசீகர முள்ளவராகவும், மிகப் பெரும் அளவுக்கு நேசத்திற் குரியவராகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தமக்காக வெடிக்கத் தயாராயிருக்கிற மனிதனுடைய இருதயத்தின் தசைநார் களைத் தொட்டிருக்கிறார்.

தன்னுடைய ஃபியாத்தை (உம்முடைய வார்த்தையின்படியே ஆகட்டும் என்னும் வார்த்தையை) உச்சரித்ததன் மூலம், மனிதாவ தாரம் மற்றும் மனித இரட்சணியம் என்னும் பரம இரகசியங்களில் தன்னுடைய பங்கை நிறைவேற்ற சம்மதித்ததில் மாமரி, தான் கடவுளை ஒரு மனிதனாக மாற்ற இருந்ததையும், அதை விட அதிக மாக, அவர் மனிதனுக்காக எப்போதும் ஒரு பலிப் பொருளாகவும், காணிக்கையாகவும் மனிதனோடு பிரசன்னமாயிருக்கும்படி தான் அவரை மாற்ற இருந்ததையும் அறிந்திருந்தார்கள். அவர்களே கடவுளாக இருந்தவரை மனிதனுக்கு வசீகரமானவராகவும், அழகுள்ளவராகவும் ஆக்கி, மனிதன் இழந்து போன அந்த நட்புறவைப் புதுப்பித்தலுக்கு அவரை ஆயத்தம் செய்தார்கள்.