இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி தமத்திரித்துவத்தை முழுமைப்படுத்துகிறார்கள்!

மாமரி தமத்திரித்துவத்தை முழுமை பெறச் செய்வது பற்றி நாம் பேசும்போது, உள்ளபடியே, தேவத்துவத்தின் அவசியமான, இன்றியமையாத, முழுமையான, உள்ளரங்க நிறைவு என்னும் பொருளில் அது புரிந்துகொள்ளப்படக் கூடாது. அத்தகைய ஒரு காரியம் அபத்தமாக இருக்கும், அப்படி நாம் செய்வோமானால், நாம் நம்முடைய எல்லாப் புத்தகங்களிலும் எதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பாந்தேயிஸத் தப்பறைக்குள் நாமே விழுந்து மூழ்கிப் போவோம்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளின்படி, மாமரி, தன் ஒத்துழைப்பால் தமத்திரித்துவத்தை முழுமை பெறச் செய்கிறார்கள் என்று நாம் உண்மையாகவே சொல்ல முடியும். சர்வேசுரன் இரு விதமான ஜீவியத்தைக் கொண்டிருக்கிறார்--ஒன்று முழுமையானது, எதையும் சாராதது, உள்ளரங்கமானது. மற்றொன்று சிருஷ்டிகளோடு சார்புள்ளது, வெளியரங்கமானது. தம்முடைய முழுமையான, எதையும் சாராத, உள்ளரங்க வாழ்வில் அவர் அளவற்ற உத்தமதனம் உள்ளவராயிருக்கிறார். தமது சார்புள்ள, வெளியரங்க ஜீவியத்தில் அவர் உத்தமதனத்தை நோக்கி வளரக்கூடியவராயிருக்கிறார். அவருடைய வெளியரங்க வாழ்வு என்பது தாம் நிறைவேற்றியுள்ள செயல்களின் வழியாகத் தமது அளவற்ற, உள்ளரங்க, உன்னத மகத்துவத்தை அவரே பிரியத்தோடு வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இனி, கடவுள் தம்மை ஒரே சமயத்தில் முழுமையாக வெளிப்படுத்தி விடவில்லை என்பதும், மாறாக, படிப்படியாகவும், பல நிலைகளிலும் அவர் தம்மை வெளிப்படுத்தினார் என்பதும், இந்த ஒவ்வொரு படியும், நிலையும் கடவுளின் இலட்சணங்களின் வெளிப்பாட்டை அதிகரிக்கின்றன என்பதும் எல்லோரும் அறிந்ததாக இருக்கிறது. ஆகவே, கடவுள் தம்முடைய வெளியரங்க வாழ்வில் வளர்ச்சி பெறவும், நிறைவு பெறவும் வல்லவராக இருக்கிறார்; இந்த அர்த்தத்தில்தான் தமத்திரித்துவத்தை மாமரி முழுமை பெறச் செய்தார்கள் என்று நாம் கூறுகிறோம். இது கடவுளின் சுபாவத்திலோ, இலட்சணங்களிலோ, ஆள்தன்மை களிலோ நிறைவேற்றப்பட்டதாக இல்லாமல், அவருடைய அளவற்ற ஜீவியத்தின் வெளியரங்க வெளிப்பாட்டைச் சார்ந்த முழுமைப்படுத்தலாக மட்டுமே இருக்கிறது.

இந்தப் பொதுக் கருத்தைப் பின்வரும் பிரிவுகளில் நாம் விரித்துக் கூறுவோம்.