இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இத்தகைய உத்தமதனத்தின் அவசியம்

கடவுள் ஒரு குறிப்பிட்ட மகத்துவத்திற்கு அல்லது அலுவலுக்கு ஒருவனைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்கு அவசியமான எல்லா வரப்பிரசாதங்களையும், அல்லது தகுதிகளையும் அவன் மீது பொழி கிறார் என்பது வேதசாஸ்திரக் கொள்கையாகவும், அறிவுபூர்வமான தாகவும் இருக்கிறது. இந்த விதி பின்வரும் வார்த்தைகளில் அர்ச். சியென்னா பெர்னார்தீனால் எடுத்துரைக்கப்படுகிறது:

‘கடவுள் ஒருவனை ஒரு குறிப்பிட்ட அந்தஸ்திற்கு உயர்த்தும் போதெல்லாம், அதில் நிலைத்திருக்கவும், அபரிமிதமாக அந்த அந்தஸ்தை அலங்கரிக்கவும் அவர் அவன் மீது எல்லா நற்குணங் களையும் பொழிகிறார் என்பது பரிசுத்த வேதசாஸ்திரத்தின் ஒரு விதியாக இருக்கிறது.''

அர்ச். சின்னப்பர் அப்போஸ்தலர்களைப் பற்றிப் பேசுகையில், கடவுள் அவர்களைப் புதிய உடன்படிக்கையின் ஊழியர்களாக இருக்கத் தகுதியுள்ளவர்களாக்கினார் என்று சொன்னபோது, அவர் இந்த விதியை உறுதிப்படுத்துகிறார். மேலும், யூத மக்களை நிர்வகிப் பதும், அவர்களது வழக்குகளைத் தீர்ப்பதுமான பணிகளை மோயீச னோடு பகிர்ந்துகொள்ளும்படி கடவுள் எழுபது மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தபோது, அவர் மோயீசனிடம்: ‘‘அவர்கள் உன்னோடு மக்களின் பாரத்தைத் தாங்கும்படியாக, நான் உன் ஆவியில் சிறிது எடுத்து அவர்களுக்குத் தருவேன்'' என்று கூறுகிறார். இதன் மூலம் அவர் நமக்கு ஒரு காரியத்தை விளங்கச் செய்கிறார்: மோயீசன் அந்த மக்களின் முழுப் பொறுப்பையும் தம்மீது கொண்டிருந்த வரைக்கும், அந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றப் போதுமான வரப்பிரசாதத்தையும், உதவியையும் கடவுள் அவருக்குத் தந்திருந் தார். ஆனால் இப்போது, அந்த பாரத்தை அவரோடு பகிர்ந்து கொள்ளும்படி மற்றவர்களும் அழைக்கப்பட்டபோது, அந்த வரப் பிரசாதங்களிலும், தகுதிகளிலும் அவர்களும் பங்குபெறுவது நீதியாக இருந்தது. அறிவிலிருந்தும் இந்தக் கொள்கையை நாம் நிரூபிக்க முடியும். ஆனால் அது அவசியமில்லை, ஏனெனில் இது கடவுளின் ஞானத்திற்கும், நன்மைத்தனத்திற்கும், நீதிக்கும் எவ்வளவு உகந்ததாக இருக்கும் என்பதைக் காண்பது யாருக்கும் எளிதான தாகவே இருக்கிறது.

இனிமாமரியின் மகத்துவத்தோடு இணைக்கப்பட்ட பக்திக் குரிய கடமைகளை அலங்கரிக்கவும், அவற்றை நிறைவேற்றவும் அவர்கள் தகுதியுள்ளவர்களாக இருக்கும்படி எத்தகைய வரப்பிர சாதங்கள் அவர்களுக்குத் தேவையாயிருந்தன? இந்தக் கேள்விக்குப் பதில் கூறுவதற்கு, பின்வருவதை நினைவுகூர்வது நல்லது: மாமரியின் மகத்துவம் இருவகையானது: முதலாவது, அவர்கள் நிஜமாகவும், உண்மையாகவும் கடவுளின் தாயாராக இருக்கிறார்கள், இதன் காரணமாக அவர்கள் மனுக்குலத்தின் தாயாராக இருக்கிறார்கள். இரண்டாவது, அவர்கள் மட்டுமே கடவுளின் புறச் செயல்பாடு களில் செயல்பூர்வமான முறையில் பங்குபெற்ற சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமையாக இருந்தார்கள். அவர்களே அவற்றின் மத்தியஸ்தியாக இருந்தார்கள்.

ஆகவே, மாமரியின் தகுதிகளும், இலட்சணங்களும் இந்த இரு மடங்கான மகத்துவத்தோடு ஒத்துப் போகிறவையாகவும், அவற் றோடு ஒரே பொருளானவையாகவும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனை திருச்சபைத் தந்தையர் அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. அவர்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் சுருங்கக் கூறும் அர்ச். பெர்னார்தீனின் வார்த்தைகளை நாம் நினைவு கூர்வோம். முதல் மகத்துவத்தை, அதாவது மாமரி கடவுளுக்குத் தாயாராக இருப்பதில் அவர்கள் கொண்டுள்ள மகத்துவத்தைப் பொறுத்த வரை, அவர் சொல்வதாவது:

‘கடவுள் ஒரு கடவுளைக் கருத்தரிப்பதற்கு எந்த வகையான ஒழுங்கும், ஏற்பாடும் தேவையில்லாதிருந்தது. ஏனெனில் மொத்தத் திலும், எல்லா விதத்திலும் தமக்குச் சரிசமமான ஒரு வார்த்தையானவரை, ஓர் அகச் செயல்பாட்டின் வழியாகக் கருத்தரிப்பது அவரது தேவ சுபாவத்திற்கு முற்றிலும் உகந்ததாக இருந்தது. ஆனால் ஒரு மனிதப் பெண் ஒரு கடவுளைக் கருத்தரித்துப் பெற்றெடுப்பது என்பது, புதுமைகளில் எல்லாம் மேலான புதுமையாக இருந்தது; ஏனெனில், நான் இப்படிச் சொல்லலாம் என்றால், இந்தப் பெண் ஒரு சிருஷ்டிக்கு ஒருபோதும் தந்தருளப்பட்டிராத அளவற்ற தெய்வீக உத்தமதனங்கள் மற்றும் வரப்பிரசாதங்களின் வழியாக, ஒரு விதத்தில் கடவுளுக்குச் சமமாயிருக்கும் நிலைக்கு உயர்த்தப்படுவது அவசிய மாயிருந்தது.

இதன் காரணமாக, மாமரியின் தெய்வீக உற்பவத்தின் வேளையில் தெய்வீகக் கன்னிகையின் மீது இறங்கி வந்த இஸ்பிரீத்துசாந்துவானவரின் சகல கொடைகளுடையவும் ஆழங்காண முடியாத பாதாளத்தின் ஆழத்தை எந்த மனித அறிவும், சம்மனசுக்களின் அறிவும் ஒருபோதும் ஆராய்ந்து அறிந்ததில்லை.''

கடவுளின் சகல புறச் செயல்களின் கதிகளுக்கும் மத்தியஸ்தியாக ஆக்கப்பட்டிருந்த அந்த ஆளுமையை அலங்கரிக்க வேண்டியவை யாக இருந்த ஈடிணையற்ற இலட்சணங்களை தியானிப்பதும் எளிதானதே.

ஆகவே, மாமரியின் இருமடங்கான மகத்துவத்திற்குத் தகுதி யுள்ளவர்களாக அவர்களை ஆக்கும்படி அவர்களது ஆளுமையை அலங்கரிக்க வேண்டியவையாயிருந்த இலட்சணங்கள் மனித புத்திக்கு எட்டாதவை, எந்த ஒப்புமைக்கும் மேற்பட்டவை, அவை மற்ற சகல சிருஷ்டிகளிடமிருந்தும் ஒரு மிகப் பெரும் தொலைவில் இருக்கின்றன. ஏனெனில் அவர்களுடைய ஆளுமை மற்ற எல்லா ஆளுமைகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கிறது. இதன் காரணமாக, அர்ச். எஃபிபானுஸ்: ‘‘திவ்ய கன்னிகையின் வரப்பிரசாதம் பிரமாண்டமானது'' என்கிறார். அர்ச். ஆன்செல்ம், திவ்ய கன்னிகையிடம் பேசும் விதமாக: ‘‘ஓ கன்னிகையே, உங்கள் வரப்பிரசாதத்தின் பாதாளத்தை ஆராய்ந்தறிய விரும்பும் ஒருவனது மனம் தவறிப் போகிறது, நாவு அசைவற்றுப் போகிறது'' என்கிறார். மற்றொரு திருச்சபைத் தந்தை இது பற்றி: ‘‘திவ்ய கன்னிகையின் உத்தமதனத்தைக் கடவுள் மட்டுமே அறிய முடியும் என்னும் அளவுக்கு அது மிக மேலானது'' என்கிறார்.

இதிலிருந்து, மாமரியின் உத்தமதனத்தைப் பற்றி அறிவதில் நம்மை ஆண்டு நடத்தக் கூடிய பின்வரும் விதிகளை அல்லது கொள்கை களை நாம் வரையறுப்போம்:

முதல் கொள்கை: எந்த ஒரு சிருஷ்டிக்கும் தரப்பட்டுள்ள சுபாவமானதும் அல்லது சுபாவத்திற்கு மேலானதும், சாதாரண மானதும் அல்லது அசாதாரணமானதுமாகிய எந்த ஒரு கொடை அல்லது வரப்பிரசாதமும் மாமரியில் எப்போதும் உறுதிப்படுத்தப் பட வேண்டும்.

இந்தக் கொள்கை மேலே எண்பிக்கப்பட்ட அளவோ, வரம்போ இல்லாத ஓர் உத்தமதனத்தின் தேவையிலிருந்து தெளிவாகிறது.

இரண்டாவது கொள்கை: சுபாவமானவையும், சுபாவத்திற்கு மேலானவையுமான மாமரியின் இலட்சணங்கள், குறிப்பாக அவர்களது சுபாவத்திற்கு மேலான வரப்பிரசாதங்கள் எண்ணிக்கை யிலும், உள்ளரங்க மேன்மையிலும் மதிப்பிலும், தங்கள் உத்தமதனத்தின் சிகரத்தை அடைந்த புனிதர்கள், சம்மனசுக்கள் உட்பட சகல சிருஷ்டிகளின் ஒட்டுமொத்த வரப்பிரசாதங்களையும் விட மேலானவையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த எல்லா வரப்பிரசாதங்களும் அளவில் பிரமாண்டமாகவும், கணக்கிட இயலாதவையாகவும் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் கடவுளுக்குத் தகுதியுள்ள தாயாரும், கடவுளின் கைவேலைகளின் பரம இரகசியங்களில் ஒத்துழைப்பவர்களுமாகிய பெண்ணை அவற்றால் உருவாக்க முடியாது. அத்தகைய மகத்துவம் எந்த ஒரு புனிதர் அல்லது சம்மனசானவரின் தனி மகத்துவத்தையும் விட மேலானதாக இருப்பது மட்டுமின்றி, அவர்களுடைய ஒருமித்த மகத்துவங்களையும் விட அளவற்ற விதமாய் உயர்ந்து நிற்கிறது.ஷ

மூன்றாவது கொள்கை: மாமரி தனது இருத்தலின் முதல் கணத் திலேயே சகல சம்மனசுக்கள் மற்றும் புனிதர்களின் ஒருமித்த வரப்பிரசாதங்களை விட மேலான ஒரு வரப்பிரசாதத்தால் நிரப்பப்பட்டிருந்தார்கள், அவர்கள் அவற்றின் உத்தமதனத்தை வந்தடைந் திருந்தார்கள் என்றே நாம் நம்ப வேண்டும். ஏனெனில் மரியாயின் வரப்பிரசாதத்தின் மேன்மை, வெறுமனே அவர்களது இருமடங்கான மகத்துவத்தின் தகுதி என்று கருதப்பட்டாலும் கூட அது எவ்வளவு அதிசயத்திற்குரியதாக இருக்கிறது, இருக்க வேண்டும் என்றால், அதன் தொடக்கமும் கூட மற்ற அனைவரின் முற்றுப் பெற்றதும், ஒருமித்ததுமான வரப்பிரசாதத்தை விடப் பாரதூரமான அளவுக்கு உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

நான்காம் கொள்கை: தகுதியின் உத்தமதனம் என்பது மற்ற எந்த ஒரு சிருஷ்டிக்கும் கொடுக்கப்பட்டுள்ள எதிலிருந்தும் வேறுபட்ட தாகவும், எதற்கும் மேலானதாகவும், அல்லது அவை அனைத்திற்கும் தரப்பட்டுள்ள எதற்கும் மேலானதாகவும், இணையற்றதாகவும், ஒப்பற்றதாகவும் இருப்பதாகும்.