இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிதாவாகிய சர்வேசுரனுடன் மாமரியின் உறவு

பிதா என்ற பெயரால் அழைக்கப்படுகிற--ஏனெனில் இதுவே அவரது ஆளுமையை உருவாக்குகிற மூலாதாரமாக இருக்கிறது-- இந்த முதலாவது வாக்குக்கெட்டாத தேவ ஆளைப் பற்றி ஆராய்வதில், ஒரு பேச்சு வகைக்கு, அவரது பிதாத்துவத்தில் மூன்று கணங்களை, அல்லது நிலைகளை நாம் காண்கிறோம். இவற்றில் ஒன்று சுபாவமானது, சாராம்சத்தோடு தொடர்புள்ளது, மற்ற இரண்டும் அவருடைய விருப்பத்திற்கும், தேர்வுக்கும் உரியவை.

முதலாவது, அவருடைய ஆளுமையை உருவாக்கும் காரியமாகும். அவர் தமது சுபாவத்தின் சாராம்சமுள்ள, அவசியமான செயல் ஒன்றைக் கொண்டு ஒரு திருச்சுதனை ஜெனிப்பிப்பதால் அவர் பிதாவாக இருக்கிறார். இந்த முழுப் புத்தகத்திலும் நாம் மிக அடிக்கடி குறித்துக் காட்டியுள்ளதுபோல, கடவுள் அவசியமான விதத்தில் புத்தியுள்ளவராக இருக்கிறார். அவரே அளவற்ற புத்தி யாகவும் இருக்கிறார். ஏனெனில் அவரது புத்தி உண்மையில் அவரது சுபாவத்திலிருந்தோ, சாராம்சத்திலிருந்தோ வேறுபட்டதாக இராமல், அவற்றோடு ஒன்றாயிருக்கிறது; அவருடைய சுபாவம் அளவற்றதாக இருப்பது போலவே, அவரது புத்தியும் அளவற்றதாக இருக்கிறது. புத்தி என்பதற்கு ஒரு பொருளைப் புரிந்து கொள்ளும் செயல் என்பது பொருள். அளவற்றதாகிய ஒரு புத்தி அவசியமான விதத்தில் ஓர் அளவற்ற பொருளைப் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். இங்கு அளவற்றதாக இருக்கிற காரியம் தெய்வீக சாராம்சமாகும். ஏனெனில் அதற்கு அப்பால் எதுவும் அளவற்றதாக இல்லை. 

ஆனால் புத்தி என்பது ஒரு பொருளை அதன் செயலைக் கொண்டு மட்டும் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ளப்பட்ட பொருளைப் பற்றிய ஓர் அறிவை, ஓர் உள்ளரங்க வார்த்தையை அல்லது ஓர் உரையாடலை, செயலின் விளைவாகப் பிறப்பிக்க வேண்டும். ஆகவே, கடவுள் தம்மைத் தாமே புரிந்துகொள்வதன் மூலம் தமது புத்திக்குள் ஒரு வார்த்தையை, அல்லது ஒரு சிந்தனையை, புரிந்துகொள்ளப்படக் கூடிய தம்மைப் பற்றிய ஓர் உரையாடலை, உருவாக்குகிறார், அல்லது பெற்றெடுக்கிறார். புத்தியைப் பயன்படுத்தும் ஒரு செயலின் தன்மையைப் போலவே, இவர் சாராம்சத்தில் ஒப்பாயிருக்கும் தன்மையில் ஒரு செயல் மூலம் உருவாக்கப்படுகிறார். சுபாவத்தில் தம்மைக் கருத்தரிப்பவருக்கு நிகராயிருப்பவர், இந்தக் காரணங்களுக்காக அவசியமான முறையில் சுதன் (மகன்) என்றும், கருத்தரிப்பவர் பிதா என்றும் அழைக்கப் படுகிறார்.

இதுவே முதல் தேவ ஆளின் பிதாத்துவத்தின் முதல் நித்திய செயலாக இருக்கிறது--அதாவது தமக்கு சரிசமான மானவரும், தம்மோடு ஒரே பொருளானவரும், தமது உன்னத மகத்துவம் மற்றும் நேசத்தின் அளவற்ற வெளிப்பாடும், தமது அளவற்ற சாராம்சத்தில் மறைந்திருக்கிற ஒளி மற்றும் அழகின் பூரண வெளிப்பாடுமாக இருக்கிற தேவ சுதனை ஜெனிப்பிக்கும் பிதாவின் செயலே அவரது முதன்மையான நித்திய செயலாக இருக்கிறது.

ஆனால் இந்த முதல் தேவ ஆள், தமது சொந்தப் பொருண்மையின் வெளிப்பாட்டைப் பெற்றெடுப்பதில், தமது திருச் சுதன் அல்லது வார்த்தையானவரின் வழியாக, தம்முடைய மற்ற வெளிப்பாடுகளையும் காணக் கூடியவராக இருக்கிறார். இந்த வெளிப்பாடுகள் போதுமானவையாகவோ, அளவற்றவையாகவோ இல்லாமல், குறையுள்ளவையாகவும், அளவுக்கு உட்பட்டவை யாகவும் இருக்கின்றன. தமது அளவற்ற வார்த்தையின் வழியாக, அளவுக்குட்பட்டவைகளும், ஏராளமான வகைகளைச் சார்ந்தவை யுமான தம்முடைய வெளிப்பாடுகள் இருக்கும் சாத்தியத்தை அவர் காண முடிகிறது. தம்மைத்தாமே பிரியப்படுத்துவதற்காக இவற்றை உண்மையான இருத்தலுக்குள் உருவாக்க அவரால் முடியும். ஏனெனில் இவை அவருக்கு அவசியமேயில்லை. ஏனெனில் அவரது அளவற்றதாகிய புத்தி அவரது அளவற்ற வார்த்தையானவரை ஜெனிப்பித்தலிலேயே போதுமானதாக இருக்கிற தமது செயலை அவர் கொண்டிருந்திருக்கிறார். ஆகவே இந்த சாத்தியக்கூறுகளின் ஒரு மிகப் பெரும் தொடரை அவர் விரும்பினால் நிதர்சனத்திற்குக் கொண்டு வரலாம், அதாவது படைக்கலாம், அல்லது படைக் காமலும் இருக்கலாம். அவர் இதைச் செய்தால், இது அவருடைய புத்தியின் தன்னிச்சையானதும், சுதந்திரமானதுமான செயலாக மட்டுமே இருக்கும்.

எனவே சிருஷ்டிப்பு என்பது சுதந்திரமான தேவ புத்தி மற்றும் நேசத்தின் ஒரு செயலாக இருந்தது. கடவுள் அவசியமான விதத்தில் சாத்தியமான, அளவுக்குட்பட்ட தமது வெளிப்பாடுகள் அனைத்தையும் பற்றிய அறிவைக் கொண்டிருக்க வேண்டும், இந்த விதத்தில் அவற்றைப் பற்றிய அவரது அறிவு அவசியம்தான், என்றாலும் அவரது செயல்பூர்வமான புத்தி அவற்றிற்கு நிதர்சன இருத்தலைத் தருமா, தராதா என்பது முற்றிலும் அவருடைய சுதந்திரமாக இருக்கிறது, அது அவருடைய சுதந்திரமான தேர்வையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனால்தான் சிருஷ்டிப்பு சுதந்திரமான புத்தியினுடையவும், நேசத்தினுடையவும் செயலாக இருந்தது என்று நாம் சொல்கிறோம். இந்த அளவுக்குட்பட்ட வெளிப்பாடுகளின் ஒரு மிகப் பெரிய எண்ணிக் கையிலான வகைகளை அவர் படைத்தார் என்று நாம் அறிந்திருக்கிறோம். இவற்றினிடையே முதல் நிலை புத்தியுள்ள சிருஷ்டிகளும் அடங்குவார்கள். இவை சுத்த அரூபிகளும் (சம்மனசுக்களும்), பருப்பொருளோடு (சரீரத்தோடு) இணைக்கப் படும் அரூபிகளுமாக (ஆத்துமங்களுமாக) இருக்கிறார்கள். இவர்கள் அதிகக் குறிப்பாக தனது சுபாவமான ஒத்த தன்மையிலுள்ள சிருஷ்டிப்பை உருவாக்கும் செயலால் உண்டாக்கப்படுகிறார்கள் என்பதாலும், இவர்கள் சிருஷ்டிகரின் அளவற்ற பேரழகின் உயிருள்ள சாயலாகவும் இருக்கிறார்கள் என்பதால், இவர்களும் மகன்கள் என்றும், கடவுள் இவர்களுடைய தந்தை என்றும் அழைக்கப்படவேண்டும். இது முதல் தேவ ஆளின் பிதாத்துவத்தின் இரண்டாம் நிலையாக-- சிருஷ்டிப்பின் பிதாத்துவமாக-- இருக்கிறது.

ஆனால் கடவுள் இத்துடன் ஓய்வெடுக்க விரும்பவில்லை. அவர் புத்தியுள்ள சிருஷ்டிகளைத் தமது மகன்களுக்குரிய அதிக உயர்வான மகத்துவத்திற்கு உயர்த்த அவர் சித்தங்கொண்டார். தமது சாராம்சத்தையும், சுபாவத்தையும் கொண்டுள்ளவரும், தமது அளவற்ற, போதுமான வெளிப்பாடுமாகிய திருச்சுதன் தமது தெய்வீக ஆள்தன்மையில் மனித சுபாவத்தோடு இணைக்கப்பட வேண்டும், இவ்வாறு, கண்டிப்பாகப் பேசும் முறையில், இந்தக் குறிப்பிட்ட மனித சுபாவத்தைத் தேவ-மனிதனாக்க வேண்டும் என்று அவர் சித்தங்கொண்டார். அதன்பின், தமது வல்லமையை அசாதாரணமான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம் மனுவுரு வான இதே திருச்சுதனின் சுபாவத்திற்கு மேலான ஒத்த தன்மை ஒன்றை உருவாக்கி, அதை சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமைகளுக்குத் தந்து, அவர்களை அதே திருச்சுதனோடு ஒரு சுபாவத்திற்கு மேலான ஐக்கிய நிலைக்கு உயர்த்த வேண்டும், நித்தியத்திலிருந்தே ஜெனிப் பிக்கப்படுகிறவராகிய தமது ஏக சுதனாகிய கிறீஸ்துநாதரின் சுபாவத்திற்கு மேலான ஒத்த தன்மையையும், அவரோடு ஐக்கியத் தையும் கொண்டிருப்பவர்களாக அவர்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் சித்தங்கொண்டார். 

எனவே, பிதாவின் பிதாத்துவத்தில் மூன்று நிலைகளை நாம் காண வேண்டும். முதலாவது, அவசியமானது, சாராம்சத்தோடு தொடர்புள்ளது. அது: தமது திருச்சுதனின் நித்திய ஜெனிப்பித்தல் ஆகும்; மற்ற இரண்டும் கடவுளின் சுதந்திரத்தையும், தேர்வு செய்யும் உரிமையையும் பொறுத்தவை. அவை சிருஷ்டிப்பின் பிதாத்துவமும், சுவீகாரத்தின் பிதாத்துவமுமாகும்.

மாமரி நித்திய பிதாவின் இந்தப் பிதாத்துவத்தின் மூன்று நிலைகளிலும் அவரோடு ஒத்துழைக்கும் உன்னதமான மகத்துவத் திற்கு உயர்த்தப்பட்டார்கள். ஏனெனில், முதலாவதாக, ஓர் ஒப்பற்ற தயாளத்தின் வழியாக, நித்திய பிதா, தமது சுபாவம் மற்றும் தேவ இலட்சணங்களைப் பற்றிய ஓர் அளவற்ற பெருவியப்பின் பரவச நிலையில் நித்தியத்திலிருந்தே தாம் ஜெனிப்பிக்கிறவரும், அனைத் தையும் கடந்த தமது அழகு மற்றும் உன்னத மகத்துவத்தின் அளவற்ற, பொருண்மை சார்ந்த வெளிப்பாடுமாயிருக்கிற அதே நித்திய சுதன், மாமரி தரவிருந்த பருப்பொருளோடு அவர்களது திருவுதரத்தில் இணைக்கப்படும்படியாக, அவரை அவர்களது திருவுதரத்திற்குள் அனுப்பினார். இந்த மாமரியின் பருப்பொருளுடனும், ஒரு மனித ஆத்துமத்துடனும் தேவ வார்த்தையானவர் தேவ-மனித ஒன்றிப்பின் முறைப்படி ஐக்கியமாக வேண்டும். 

மேலும் பிதாவானவர் இந்த ஐக்கியத்தை எவ்வளவு திறமையாகவும் அற்புதமாகவும் ஏற்பாடு செய்து இணைக்கிறார் என்றால், மாமரியின் செயல்பாடு, அல்லது அவர்களது கருத்தரிப்பின் கனியும் விளைவுமானது, அந்த ஐக்கியத்தை விட அதிக சீக்கிர மாகவோ, அதிக தாமதமாகவோ நிகழ்கிற, பகுத்துணர முடியாத ஒரு கணமாக இல்லாமல், முற்றிலும் நிகழ்காலத்திற்கு உரியதாக இருக்கிறது; இதன் காரணமாக, மாமரியின் கருத்தரிப்பின் விளைவு ஒரு மனித ஆள் அல்ல, மாறாக, வார்த்தையானவரின் தேவ ஆளுமையாகவே இருக்கிறது. ஏனெனில் நிஜமாகவும், உள்ளபடியும், மாமரியின் கருத்தரிப்பு அந்த தெய்வீக ஆளுமையிலேயே முடிவு பெறுகிறது. இவ்வாறு மாமரி, அதே தேவ சுதனைப் பெற்றெடுக்கும் பக்திக்குரிய மகத்துவத்திற்கு உணர்த்தப்பட்டிருப்பதன் மூலம் நித்திய பிதாவின் பிதாத்துவத்தின் முதல் நிலையில் அவரோடு ஒத்துழைப் பவர்களாக இருந்தார்கள்.

பிதாவின் மற்ற இரு பிதாத்துவ நிலைகளிலும் மாமரி இரு வழிகளில் அவரோடு ஒத்துழைக்கிறார்கள்: முதலாவதாக, சிருஷ்டிக்கப்பட்ட அல்லது மறுபிறப்படைகிற சிருஷ்டிகளின் தொடரில், அல்லது இருத்தல்களின் படி நிலையில் கீழான நிலையில் இருக்கும் இருத்தல்களை அல்லது சிருஷ்டிகளை, இந்தத் தொடரில் உயர்நிலையில் இருப்பவையும், அதிக உயரத்தில் நிற்பவையுமான சிருஷ்டிகளுடனான உறவில் ஒரு விதத்தில் வழிகளாக அல்லது கருவிகளாக நாம் கருத வேண்டும். இதன் காரணமாக, தாதுக்கள் தாவர இராச்சியத்திற்காக உண்டாக்கப்பட்டன, தாவர இராச்சியம் மிருக இராச்சியத்திற்காகவும், மிருக இராச்சியம் மனிதனுக்காகவும், மனிதன் சம்மனசுக்களுக்காகவும், மனிதர்களும் சம்மனசுக்களும் மாமரிக்காகவும், மாமரி சேசுகிறீஸ்துநாதருக்காகவும், கடவுளின் நன்மைத்தனம் மற்றும் அளவற்ற உன்னத மகத்துவத்தின் உன்னத வெளிப்பாடாகிய சேசுநாதர் கடவுளுக்காகவும் உண்டாக்கப் பட்டார்கள்.

இந்தக் கொள்கை இருவகை அர்த்தங்களில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். மேலான ஒரு சிருஷ்டி, ஒரு வகையில் கீழ்நிலை சிருஷ்டியின் இருத்தலுக்கான காரணமாக இருக்கிறது என்பது முதலாவது அர்த்தமாகும்; இரண்டாவதாக, தனது சொந்த சுபாவத்திலும், இலட்சணங்களிலும் அது கீழான சிருஷ்டியை உருவாக்குவதற்குரிய அச்சாகவும், மாதிரியாகவும் உதவுகிறது. ஒரே வார்த்தையில் கூறுவதானால், சுபாவ ஒழுங்கையும், சுபாவத்திற்கு மேலான ஒழுங்கையும் சேர்ந்த இருத்தல்களின் தொடரில், மேல் நிலையிலுள்ள சிருஷ்டி முதலாவதாகவும், கீழ்நிலை சிருஷ்டியின் இருத்தலின் காரணமாகவும் இருக்கிறது, அது கீழ்நிலை சிருஷ்டியின் சுபாவத்திற்கும், இலட்சணங்களுக்கும் அச்சாகவும், மாதிரியாகவும் உதவுகிறது.

இந்த இரு வகைப் பிதாத்துவங்களைப் பொறுத்த வரையும் மாமரி இந்த இரு அர்த்தங்களின்படியும்: காரணமாகவும், மாதிரி யாகவும், நித்திய பிதாவோடு ஒத்துழைத்தார்கள். காரணமாக ஒத்துழைத்தார்கள் என்கிறோம், ஏனெனில் அவர்களே அனைவரிலும் மேலான சிருஷ்டிக்கப்பட்ட ஆளுமையாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர்களே சுபாவமானதும், சுபாவத்திற்கு மேலானதுமான உலகங்கள் தத்தமக்குரிய இலட்சணங்களோடு இருத்தலுக்குக் காரணமாக இருக்கிறார்கள்; மாதிரியாகவும் ஒத்துழைத்தார்கள் என்கிறோம், ஏனெனில் சுபாவமானவையும், சுபாவ்திற்கு மேலானவையுமான மாமரியின் இலட்சணங்கள் சுபாவமானதும், சுபாவத்திற்கு மேலானதுமான உலகங்களின் சகல இலட்சணங்களும் வடிவமைக்கப்படுவதற்குரிய அச்சாகவும், மாதிரி யாகவும் இருந்தன.

முதல் சிந்தனை, திருச்சபையால் அதன் வழிபாட்டுச் சடங்கு களில் மாமரிக்குப் பொருத்திக் காட்டப்படுகிற வேதாகம வாக்கியங்களை விளக்குகிறது. உதாரணமாக, பழமொழியாகமம், அத்.8, வசனம் 22:

‘ஆண்டவர் தமது வழிகளின் துவக்கத்திலேயே, ஆதியில் யாதொன்றையும் உண்டாக்குமுன்னரே என்னைச் சுதந்தரித் திருந்தார்.

பூர்வங்களில் பூமி உண்டாகு முன்னமே நித்தியந் தொட்டு நான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றேன்.

பாதாளங்கள் இன்னும் இருக்கவில்லை; நான் ஏற்கனவே கர்ப்பந்தரிக்கப்பட்டிருந்தேன்; நீரூற்றுகள் இன்னும் புறப்படவில்லை.

பாரச் சுமையுள்ள பர்வதங்களும் இன்னமும் உண்டாக வில்லை; குன்றுகளுக்கு முன்னமே நான் பிறப்பிக்கப்பட்டிருந்தேன்.

இன்னமும் பூலோகத்தையும், நதிகளையும், பூமிச் சக்கரத்தின் துருவங்களையும் (தேவன்) உண்டாக்கவில்லை. 

அவர் வான மண்டலங்களைச் சித்தஞ்செய்கையில் நான் கூட இருந்தேன்; அவர் நிச்சயமான சட்டத்தாலும் வட்டத்தாலும்

பாதாளங்களைச் சுற்றி அடைக்கையிலும்.

அவர் மேலே ஆகாயத்தை உறுதிப்படுத்தி, நீரூற்றுகளை நிலையாக நிறுத்திவைக்கையிலும்.

சமுத்திரத்திற்குக் கோடியைக் கட்டி தன் எல்லையைக் கடக்காதபடி தண்ணீருக்குச் சட்டத்தை வைக்கையிலும், பூமியின் அஸ்திவாரங்களை நிறுத்திடுகையிலும், அவரோடுதானே சகலத்தையும் சீர்படுத்தி வைத்துக்கொண் டிருந்தேன்.'' 

பழமொழியாகமத்தின் இந்த அற்புதமான வார்த்தைகளின் நேரடிப் பொருள் நித்திய வார்த்தையானவருக்கும், அவதரித்த வார்த்தையானவருக்குமே பொருந்துகின்றன என்பது உண்மை தான்; ஆயினும் மேலே விளக்கப்பட்ட பொருளின்படி அவை மாமரிக்கும் பொருந்துகின்றன. ஏனெனில் கடவுளின் தெய்வீக மனதில் உலகின் இருத்தலுக்கு அவர்களே காரணமாக இருந் தார்கள்.

இரண்டாவது சிந்தனை மாமரியின் மகிமையினுடைய மேலும் ஓர் அழகான உலகைத் திறந்து வைக்கிறது. கடவுளைப் பொறுத்த வரை, அவர் இலட்சணங்களையும், அழகையும் தமது அபரிமித தாராளமுள்ள கரங்களால் சிருஷ்டிகளின்மீது வாரி இரைத்தபோது, மாமரி என்னும் இந்த அதியற்புதமான ஆளுமையின் மீது ஒரு நாள் தாம் குவித்து வைக்க இருக்கிற தேவ இலட்சணங்களை அவர் வெறுமனே காட்சிப்படுத்திக்கொண் டிருந்தார். அவரது அளவற்ற மனதில் நித்தியத்திலிருந்தே உருவானதும், நித்தியத்திலிருந்தே இருப்பதுமாகிய அந்த அற்புத ஆளுமையின் மாதிரி அந்தக் கொடைகளையும் இலட்சணங் களையும் சிருஷ்டிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் அவரது கரத்தை வழிநடத்திக் கொண்டிருந்தது.

வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு காரியத்திலும், ஒவ்வொரு ஆளிலும், ஒவ்வொரு வகையிலும் திருச்சபைத் தந்தையர்கள் காண்கிற மாமரியின் முன்னடையாளங்களின் தத்துவ ஞானம் மேற்கூறிய வாதத்தில் அடங்கியுள்ளது; ஏனெனில் மற்ற சகல சிருஷ்டிகளின் சுபாவம் மற்றும் இலட்சணங்களின் மாதிரியாகக் கடவுளின் மனதில் இருந்த மாமரியின் உத்தமமான இருத்தலைப் பொறுத்த வரை, திருச்சபைத் தந்தையர் இயலபாகவே அனைத் திலும் மாமரியின் கொடைகள் மற்றும் இலட்சணங்களின் ஓர் அடையாளத்தைக் கண்டார்கள்.

சுபாவ உலகத்தைப் பற்றி நாம் கூறியுள்ள காரியத்தை சுபாவத்திற்கு மேலான உலகத்தைப் பற்றியும் நாம் சொல்ல வேண்டும். ஏனெனில் மனிதரிடையேயும், தேவதூதர்களிடை யேயும் வினியோகிக்கப்பட்ட சகல வரப்பிரசாதங்களும், மாமரியின் ஆத்துமமாக இருக்க வேண்டிய ஒளி மற்றும் அழகின் பிரமாண்டமான குவியத்திலிருந்து இங்குமங்கும் வீசப்பட்ட ஏராளமான ஒளிக் கதிர்களைப் போல் இருந்தன. ‘‘நீ முழுமையும் அழகுள்ளவள். அநேக புதல்வியர் செல்வங்களை சேகரித்திருக் கிறார்கள். நீயோ அவர்கள் அனைவரையும் கடந்தவளா யிருக்கிறாய்.''

‘ப்ரோப்தெர் இப்ஸாம்'' - அர்ச். பெர்னார்து கூறிய ஆழ்ந்த பொருளுள்ள இந்த வார்த்தைகளோடு நாம் முடிப்போம்: ‘‘ப்ரோப்தெர் இப்ஸாம் தோத்துஸ் முந்துஸ் ஃபாக்துஸ்.'' திருச்சபைத் தந்தையர் அனைவரிலும் மிக இனியவராக இருந்தவரின் இந்த வார்த்தைகள் ஒரு பக்தியுள்ள மிகைப்படுத்தலாகக் கருதப்படு கின்றன. ஆனால் இந்த வாக்கியத்தின் தத்துவவாத பக்திக்குரிய உயர்ந்த தன்மையை உணரத் தவறும் அறியாமையிலுள்ள மனிதர்களின் மனங்களில்தான் இந்த பக்தியுள்ள மிகைப்படுத்தல் என்னும் காரியம் இருக்கிறது.

கடவுளின் வெளிச் செயல்பாட்டின் மத்தியஸ்தியாகவும் ஆக்கப்பட்டிருக்கிற தனது மகத்துவத்தின் விளைவாகவும் நித்திய பிதாவின் பிதாத்துவத்தோடு, அதன் இரு நிலைகளில், மாமரி இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மாமரியின் சுதந்திரமான, சுய விருப்பமுள்ள சம்மதமின்றி கடவுள் மனிதாவதாரத்தைச் செயல்படுத்தியிருக்க மாட்டார் என்று நாம் எண்பித்திருக்கிறோம்; கடவுளுக்குப் பிறகு, மனிதாவதாரமே அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பதால், மாமரியின் சம்மதமின்றி அனைத்திற்கும் காரணமாக இருக்க வேண்டியதைக் கடவுள் உருவாக்கியிருக்க மாட்டார் என்பது இதன் மூலம் விளங்குகிறது. ஆகவே, சுபாவ உலகத்தினுடையவும், சுபாவத்திற்கு மேலான உலகத் தினுடையவும் இரண்டாந்தரக் காரணமாக இருப்பவர்கள் மாமரியே என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும்.

நித்தியப் பிதாவின் மூன்று பிதாத்துவ நிலைகளோடு மாமரி இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதால், திருச்சபைத் தந்தையரால் தனக்குத் தரப்பட்டுள்ள நித்தியப் பிதாவின் மணவாளி என்னும் திருப்பெயருக்கு மாமரி முற்றிலும் தகுதியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.