இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பரிசுத்த புதிய ஏற்பாடு - பதிப்புரை

சகலத்திற்கும் துவக்கமும் கதியுமாயிருக்கிற சர்வேசுரன், "ஆதி முதல் மறைந்திருந்த (தம்முடைய) இரகசியங்களின் நியமம் இன்னதென்று சகலருக்கும் பிரத்தியட்சமாக்கினார் (எபேசி. 3:9). இப்பிரத்தியட்சப்படுத்துதலை நாம் சுபாவத்திற்கு மேலான வெளிப்படுத்துதல்கள் (Revelatio Supernaturalis) என்கிறோம்.

இந்த சுபாவத்திற்கு மேலான வெளிப்படுத்தல்கள் (எழுதப்படாத) பாரம்பரியத் திலும், எழுதப்பட்ட பரிசுத்த புத்தகங்களிலும் காணக்கிடக்கிறது. "வேதாகமம் மட்டுமே போதும்” (Sola Scriptura) என்று கருதுகிற புரொட்டஸ்டாண்டு பதிதக் கொள்கைளுக்கு மாறாக, கத்தோலிக்கர்களாகிய நாம், "பாரம்பரியம், வேதாகமம்” என்ற இந்த இரண்டையும் ஏற்றுக் கொள்கிறோம். சேசுநாதருடைய ஞானப் பத்தினியாகிய நம்முடைய தாய்த் திருச்சபை இவ்விரண்டு ஊற்றுக்களையும் களங்கமில்லாமல் பாதுகாத்து, ஒருபோதும் வற்றாத ஜீவிய ஊற்றிலிருந்து நாம் பருகி, நித்திய ஜீவியத்தை அடைந்துகொள்ளச் செய்கிறது.

பதிதர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தப்பறைகளை உள்ளடக்கிய "திருவிவிலியம்” என்ற பொது பைபிள், அதிகார துர்ப் பிரயோகத்தினால் திருவழிபாட்டில் மட்டுமின்றி விசுவாசிகளுடைய தனி உபயோகத்திற்கும் தமிழக கத்தோலிக்கர்கள் மேல் திணிக்கப்பட்டிருப்பதால், இன்று நம் தமிழகத்தில் மெய்யான கத்தோலிக்க வேதாகமம் இல்லாத அவலநிலை தோன்றியுள்ளது. பொது விவிலியத்தை விமர்சனம் செய்தும், புறக்கணிப்பு செய்தும் வந்த நற்கருத்துடைய கத்தோலிக்கர்கள் என்ன செய்வதென்று திகைத்திருக்கும் நேரத்தில், சால்வே ரெஜீனா பதிப்பகம், தமிழில் 300 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த "வுல்காத்தா'' பரிசுத்த புதிய ஏற்பாட்டை அச்சிட முன்வந்தது.

சிறப்பு மிக்க "'வுல்காத்தா” என்று அழைக்கப்படும் இந்த வேதாகமம். சங். திரிங்கால் சே.ச. சுவாமியவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகும்.