இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நமதாண்டவரின் திருநாமம் “சேசு”வா? “யேசு” வா?

தமிழ்நாட்டில் கத்தோலிக்க விசுவாசம் தொன்றுதொட்டே வேரூன்றி வளர்ந்தது. நாமறிந்த வரையிலும் ஆண்டவரின் பெயர் "சேசு” என்றே வழங்கப்பட்டது.

பழைய ஜெபப் புத்தகங்களில் "சேசு'' என்றே காணப்படுகிறது. 'சேசு சபை' என்றே அர்ச். இஞ்ஞாசியாரின் சபை அழைக்கப்பட்டது. தாய்மார் சேசு படத்தைத் தொட்டு குழந்தையின் முகத்தைத் தடவி 'சேசு காப்பாத்தும்' என்றே சொல்வார்கள்.

ஆயினும், லத்தீன் மொழியில் ஆண்டவரின் பெயர் Jesus என்பது, தமிழில் 'சேசு' என்றும் 'யேசு' என்றும் உச்சரிக்கப்படலாம்.

ஆனால் 'யேசு' என்று சொல்வது தமிழ் மரபுப்படி இலக்கணப் பிழையாகும். 'ஆவோடு அல்லது யகரம் முதலாது' என்பது தொல்காப்பிய விதி.

இலக்கணப்பிழை இல்லாத நல்ல தமிழில் சொன்னால் சேசு என்றுதான் சொல்லவேண்டும். அதன்படியே நாமும் 'சேசு' என்றே இந்த வேதாகமப் பதிப்பில் குறிப்பிடுகிறோம்.