இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இஸ்பிரீத்துசாந்துவின் கொடைகள்

இஸ்பிரீத்துசாந்துவின் கொடைகள் என்பதன் மூலம், இந்தப் புதிய சுபாவத்திற்கு மேற்பட்ட இருத்தலையும், சத்துவங்களையும் பாதிக்கக் கூடிய சில நிரந்தர மாற்றங்களை நாம் குறிக்கிறோம். இவை அவற்றை அதே இஸ்பிரீத்துவானவரின் தூண்டுதல்களுக்கு எளிதாகக் கீழ்ப்படிபவையாக ஆக்குகின்றன. ‘‘அவை மனிதனுக்குத் தரப்படும் சில இலட்சணங்களாக இருக்கின்றன. இவற்றைக் கொண்டு அவன் இஸ்பிரீத்துசாந்துவின் அந்தரங்க ஏவுதல்களைப் பின்செல்லத் தகுதியுள்ளவனாகிறான்'' என்று அர்ச். தாமஸ் அக்குயினாஸ் கூறுகிறார்.

இவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, இந்தக் கொடைகளில் செயலிலிருந்து வழக்கத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாம் பொதுவாகச் செய்கிற புண்ணியச் செயல்கள் நீதிமான்களின் தாராளத்தால் அனுசரிக்கப்படுகிற சாதாரண அளவைத் தாண்டுவதில்லை. இந்நிலையில், கண்டிப்பான முறையில் பேசும்போது, அவை விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னம் மூன்று சுபாவத்திற்கு மேலான வழக்கங்களுக்குச் சொந்தமானவை யாக இருக்கின்றன.

ஆனால் அடிக்கடி புண்ணியச் செயல்கள் சாதாரண வழியை விட்டு வெளியே செல்கின்றன. அவை வீரத்துவமுள்ளதும், தெய்வீக மானதுமான ஒன்றைத் தங்களில் கொண்டுள்ளன. இதன் காரண மாக, இவை சாத்தியமாகும்படி இஸ்பிரீத்துசாந்துவின் ஒரு குறிப்பிட்ட அந்தரங்கத் தூண்டுதலும், செயல்பாடும் அவசியமா யிருக்கின்றன.

ஆனால் கொடையின் வழக்கம் சுபாவத்திற்கு மேலான ஒரு பண்பாக இருக்கிறது. அது சுபாவத்திற்கு மேலான இருத்தலோடும், விசேஷமாக தேவ இஷ்டப்பிரசாதத்தோடும் நமக்குள் ஊற்றப் படுகிறது. இவை இரண்டிலும் அது தங்குகிறது, இரண்டின்மீதும் சாய்ந்து கொள்கிறது; இஸ்பிரீத்துசாந்துவானவர் ஏதாவது ஒரு தனிப்பட்ட அந்தரங்க ஏவுதலின் மூலம் இத்தகைய செயல்களுக்கு நம்மைத் தூண்டும்போதெல்லாம் அவருக்கு மிக எளிதாக நம் சுபாவத்திற்கு மேலான சத்துசங்களைக் கீழ்ப்படியச் செய்வது இந்தப் பண்பின் பணியாக இருக்கிறது. அது வழக்கம் என்று அழைக்கப் படுவது ஏனெனில் அது நிரந்தரமானது; இஸ்பிரீத்துசாந்துவானவர் எப்போதும் அசாதாரணமான செயல்களுக்கு நம்மைத் தூண்டுவ தில்லை என்றாலும், தமது ஏவுதல்களை நமக்குத் தர அவர் பிரியங் கொள்ளும்போதெல்லாம் அவற்றிற்குக் கீழ்ப்படிய அவர் நம்மை எப்போதும் தயாராக வைத்திருக்கிறார்.

இந்த வழக்கங்களின் எண்ணிக்கை ஏழு. அவற்றில் நான்கு சுபாவத்திற்கு மேலான விசுவாசம் என்னும் சத்துவத்திற்கும், மூன்று, மற்ற புண்ணியங்களுக்கும் சொந்தமானவையாக இருக்கின்றன.

இவற்றில் முதலாவது கொடை ஞானமாகும். இது நமது சுபாவத்திற்கு மேலான புத்திக்குத் தரப்படும் மிகப் பரிசுத்தமான, எளிய ஒளியாகும். இது சுபாவத்திற்கு மேற்பட்ட, தெய்வீக சத்தியங்களை அறியவும், தீர்மானிக்கவும் நமக்கு உதவுவது மட்டுமின்றி, சுபாவத்திற்கு மேலான இன்பத்தோடு அவற்றைச் சுவைக்கவும் நமக்கு உதவுகின்றன.

அது ஓர் ஒளியாக இருக்கிறது, அது ஆத்துமத்தில் தேவ சத்தியங்களைப் பற்றிய எத்தகைய உறுதிப்பாட்டை உண்டாக்கு கிறது என்றால், ஒரு பேச்சுக்கு, அவற்றின் எல்லா சாட்சியங்களும் அவற்றின் நம்பகத் தன்மைக்குரிய எல்லா நோக்கங்களும் அடிபட்டுப் போகின்றன என்றே வைத்துக் கொண்டாலும், மனம் இன்னமும் மிக உறுதியாகவும், விடாப்பிடியாகவும் அவற்றைப் பற்றிக் கொண்டு, அவற்றோடு இணைந்திருக்கும். கடவுளின் அளவற்ற மகத்துவத்திற்கு ஒரு மேரை மரியாதையையும் அது பிறப்பிக்கிறது. அவருடைய அளவற்ற தெய்வீக இலட்சணங்களை மகிமைப்படுத்தி, ஏற்றிப் போற்றுகிற மனிதர்கள் மற்றும் சம்மனசுக் களின் சகல நாவுகளும் கூட அதற்கு இணையான மேரை மரியாதையைக் கடவுளுக்குத் தர முடியாது. ஏனெனில், இவை, ஆத்துமத்திற்கு வெளியே செயல்படுவதால், இந்த ஞானமாகிய பக்திக்குரிய கொடையால் கடவுள் ஆன்மாவின் மீது பதிக்கிற தேவசிநேகத்தின் நிழலைக் கூட இவை பிறப்பிப்பதில்லை. ஆனால் இதன் அனைத்திலும் மேலான விசேஷ சலுகை என்னவெனில், ஓர் உறுதியான உணர்வு அல்லது சுவையோடு தெய்வீக சத்தியங்களை ஏற்றுக் கொள்வதாகும். ஏனெனில் ஞானம் என்பதற்கான இலத்தின் வார்த்தையாகிய ஸாப்பியென்ஸியா என்பதற்கு, ஆத்துமத்தை இன்பத்தால் நிரப்பும் சுவையுள்ள அறிவு என்பது பொருளாகும். ஆகவே, இந்தக் கொடை ஏன் ஆத்துமத்தில் தெய்வீக சத்தியங் களைப் பற்றிய இத்தகைய உறுதிப்பாட்டைப் பதியச் செய்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் இது சத்தியத்தைப் பற்றிய இன்பமிக்க அறிவின் ஒரு பரிசோதனையாக இருக்கிறது. ஆகவே, இது ஆத்துமத்தில் மிக ஆழமாகப் பதிக்கப் படுகிறது.

அறிவு என்னும் கொடை, நம் சுபாவத்துக்கு மேலான புத்தியோடு சேர்க்கப்படுகிற ஒரு தெய்வீக ஒளியாக இருக்கிறது. கடவுளின் மாபெரும் இலட்சணங்களுக்குள் மிகத் துரிதமாகவும், மிக ஆழ்ந்த விதமாகவும் ஊடுருவ இக்கொடை அதற்கு உதவுகிறது. ஞானத்திற்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், ஞானம் ஒரு சுவையான அறிவின் பரிசோதனையாக இருக்க, அறிவு என்பது சத்தியத்திற்குள் அந்நியோந்நியமான முறையில் ஊடுருவு வதாக இருக்கிறது.

இந்தக் கொடை பிரமிப்பையும், பரவசத்தையும் பிறப்பிக் கிறது. ஏனெனில் பக்திக்குரிய சத்தியங்களைக் கண்டுபிடிப்பது இயல்பாகவே அறிவைப் பெரும் ஆச்சரியத்திற்கும் பரவசத்திற்கும் உள்ளாக்குகிறது.

அறிவு என்னும் கொடை நம் ஆத்துமத்திற்குள் இஸ்பிரீத்து சாந்துவானவரால் ஊற்றப்படும் ஒளியாக இருக்கிறது. இதைக் கொண்டு ஆத்துமம் தான் விசுவசிக்க வேண்டியது எது என்பதைச் சரியாகத் தீர்மானிக்கிறது. நம்பகமான காரியங்களைப் பற்றிய அறிவின்படி, இந்தக் கொடை, அது என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று அறியச் செய்து, அதன் செயல்களை ஒழுங்குபடுத்து கிறது (அர்ச். தாமஸ் அக்குயினாஸ்).

இவ்வாறு அறிவாகிய கொடை நேரடியாக, கடவுளைத் தன் நோக்கமாகக் கொண்டிராமல், நம் மனிதச் செயல்களையே தன் நோக்கமாகக் கொண்டுள்ளது; ஏனெனில் இந்தக் கொடையின் அலுவல் என்னவெனில், தனது ஒளியைக் கொண்டு, பாதுகாப்பான முறையில் எதை விசுவசிக்கலாம், எதை விசுவசிக்கக் கூடாது என்று மனித அறிவுக்கு வெளிப்படுத்துவதேயாகும். இவ்வாறு, அது நம் விசுவாச அனுசரிப்பை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, முந்தின இரு கொடைகளுக்கும், அறிவாகிய கொடைக்குமிடையே உள்ள வேறுபாடு இதுதான்: முந்தின இரண்டு கொடைகளும் தங்களில் தெய்வீகக் காரியங்களைப் பற்றியவையாக இருக்கின்றன, அவற்றோடு நம்மை ஒன்றிக்கின்றன. அறிவு இந்த சத்தியங்களின் நம்பகத் தன்மையை மட்டுமே நமக்கு வெளிப்படுத்தி, அதே விசுவாசத்தின் அதிகாரபூர்வ போதனைகளின்படி நம் செயல்களை ஒழுங்குபடுத்துகிறது.

விமரிசை என்னும் கொடையாகிய ஒளியைக் கொண்டு இஸ்பிரீத்துசாந்துவானவர், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சூழ்நிலை யிலும் நாம் உத்தமதனத்தையும், நித்திய இரட்சணியத்தையும் அடையும் படி என்ன செய்ய வேண்டும், எதைச் செய்யாமல் விட வேண்டும் என்று நாம் அறியச் செய்கிறது. இந்தக் கொடை மற்ற மூன்றிடமிருந்தும் பின்வருமாறு வேறுபடுகிறது: ஞானம், புத்தி, அறிவு ஆகியவை பொதுவாக நம் சுபாவத்திற்கு மேலான இறுதிக்கதியை அடைய என்ன செய்யப்பட வேண்டும் என்று மட்டும் கற்பிக்கின்றன--இவற்றில் ஒன்று கடவுளைப் பற்றிய உயர்ந்த அறிவின் பரிசோதனையாக இருக்கிறது; மற்றொன்று, தேவ காரியங்களுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது; மூன்றாவது, விசுவசிக்கப்படுகிற சத்தியங்களைப் பற்றிய அறிவைத் தருகிறது -- ஆனால் அவை தனிப்பட்ட செயல்களின் அளவுக்குத் தங்களைத் தாழ்த்துவதில்லை. இவற்றை ஒழுங்குபடுத்துவது விமரிசையாகிய கொடைக்கு உரியதாக இருக்கிறது.

மீதமுள்ள கொடைகள் சுபாவத்திற்கு மேலான சித்தத்தோடு தொடர்புள்ளவை. திடம் என்னும் கொடை ஒரு வல்லமையுள்ள இயக்கமாகும். இதன் மூலம், நம் சுபாவத்திற்கு மேலான சித்தம் கடினமானதையும், சிரமமானதையும் எதிர்கொண்டு, தேவ ஊழியத் தில் எதிர்ப்படும் சிரமங்கள் அனைத்தின்மீதும் வெற்றி கொள்ளும் படி இஸ்பிரீத்துசாந்து அதைப் பலப்படுத்துகிறார். ஒரு கொடை யாக, திடமானது அதே பெயருள்ள தார்மீகப் புண்ணியத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது, ஏனெனில் திடம் என்னும் புண்ணியம் பொதுவான கஷ்டங்களுக்கு எதிராக பலப்படுத்துகிறது, ஆனால் திடம் என்னும் கொடை தனிப்பட்ட, அசாதாரணமான கஷ்டங் களுக்கு எதிரானதாக இருக்கிறது.

பக்தி என்னும் கொடை, அர்ச். தாமஸ் அக்குயினாஸின் கூற்றுப்படி, மனதை ஒளிர்விப்பதும், கடவுளுக்குரிய ஆராதனையை அவருக்குச் செலுத்தவும், அவருடைய சாயலாக நம் அயலானுக்கு உதவி செய்யவும் இருதயத்தைப் பயிற்றுவிப்பதுமான ஒரு தெய்வீக ஒளிக்கதிராகும். இந்தக் கொடையை நன்றாகப் புரிந்துகொள் வதற்கு, அதற்கு ஒப்பான சில புண்ணியங்களிலிருந்து அது எதில் வேறுபடுகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். வழிபாடு என்பது கடவுளின் அளவற்ற மகத்துவத்தை நாம் மிக உறுதியாக ஏற்றுக் கொள்ளும் செயலாக இருக்கிறது. நம் இருதயத்தையும், மனதையும் அவருக்குக் கீழ்ப்படுத்துவதன் மூலம் இந்த நம் உறுதிப்பாட்டை நாம் அவருக்குக் காட்டுகிறோம். இதன் மூலம் நாம் உள்ளரங்கமான விதத்தில் அவரை வழிபடுகிறோம். 

இந்த உள்ளரங்க அமைதலானது, காணிக்கைகள், பலிகள், வாய்ச் செபங்கள் மற்றும் இது போன்ற வெளிச்செயல்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்போது நாம் வெளி வழிபாட் டைக் கொண்டிருக்கிறோம். சிருஷ்டிகர், தமது தேவ பராமரிப்பைக் கொண்டு பிரபஞ்சத்தை ஆண்டு நடத்துகிறவர் என்ற முறையில் கடவுளுக்கு இத்தகைய வழிபாடு செலுத்தப்படுமானால், அது பக்தி என்னும் புண்ணியத்திற்குச் சொந்தமானதாக இருக்கிறது. மிகுந்த நேசத்திற்குரிய ஒரு தந்தையாக அவருக்கு இந்த வழிபாடு செலுத்தப் படும்போது, அது பக்தி என்னும் கொடையில் தொடங்குகிறது. அவரோ நம்முடைய ஒவ்வொரு ஆராதனை, வணக்கம், மரியாதைக் கும் தகுதியுள்ளவராக இருக் கிறார்.

மேலும், நாம் பல காரணங்களுக்காக நம் அயலாருக்கு உதவவும் வேண்டும். இச்செயல் தன்னிலேயே நல்லதாக இருக்கிறது என்பதாலும், அவர்கள் மீதுள்ள இரக்கத்தாலும் நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்றால், இந்தச் செயல் இரக்கம் என்னும் புண்ணியத்திலிருந்து எழுவதாக இருக்கிறது; மாறாக, அவர்கள் நம் பரலோகப் பிதாவின் உயிருள்ள சாயல்களாக இருக்கிறார்கள் என்பதற்காக நாம் அவர்களுக்கு உதவுகிறோம் என்றால், அது தேவ பக்தி என்னும் கொடையிலிருந்து எழுகிறது.

தெய்வபயம் என்பது தேவ ஆவியானவரால் நமக்குள் பொழியப்படுகிற வணக்கத்துடன் கூடிய பாசமாக இருக்கிறது. இதன் மூலம் கடவுளிடமிருந்து பிரிந்திருக்க நாம் அச்சப்படு கிறோம். மூன்று வகையான பயங்கள் இருக்கின்றன என்பதை நாம்இங்கு குறிப்பிடவேண்டும். அவை: மனித பயம், அடிமையின் பயம், மகனின் பயம் ஆகியவை ஆகும். மனித பயம் எந்த விதத் திலும் இஸ்பிரீத்துசாந்துவின் கொடைக்குச் சொந்தமானது அல்ல, ஏனெனில் அது ஏதாவது ஒரு உலக ஆதாயத்தை இழந்து விடுவது பற்றிய ஒழுங்கற்ற பயத்திலிருந்து வருகிறது. அடிமையின் பயம் கடவுளின் திருச்சட்டத்தை அனுசரிக்காதவர்களுக்கு எதிராக அவரால் தரப்படக் கூடிய பயங்கரத் தண்டனை பற்றிய அச்சுறுத்தலின் காரணமாக ஒருவன் கடவுள் மீது கொள்ளும் பயமாக இருக்கிறது. ஆனால் மகனுக்குரிய பயமோ கடவுளை நோகச் செய்து விடுவோமோ என்ற அச்சத்தை நமக்குத் தருகிறது. ஏனெனில் நாம் நம் அன்புள்ள தந்தையாக அவரை நேசிக்கிறோம். அவரை நோகச் செய்யாதிருக்க நாம் எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்த பயமே இஸ்பிரீத்துசாந்துவானவரின் கொடைகளில் ஒன்றாக இருக்கிறது.

‘சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் தேவ மக்கள் எனப்படுவார்கள்'' என்ற ஏழாவது பாக்கியத் தோடு ஞானம் என்னும் கொடை தொடர்புள்ளதாக இருக்கிறது. ஏனெனில் ஞானமாகிய கொடை எல்லாவற்றையும் கடவுளை நோக்கித் திருப்பி விடுகிறது, சமாதானம் இந்த சரியான திசையில் அடங்கியிருக்கிறது. அல்லது ஞானம் நம் இருதயங்களைக் குழப்பக் கூடிய எதையும் நாம் உணராதபடி செய்கிறது. ஏனெனில் ஞானத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறவன், தெய்வீகமான இராஜரீக நன்மைத்தனத்தைச் சுவைப்பதில் பழக்கப்பட்டிருக்கிறான் என்பதால், உலக நன்மைகளில் அவன் எந்த சுவையையும் உணர்வதில்லை, உலகத் தீமைகளால் அவன் எளிதில் பாதிக்கப் படுவதில்லை.

இந்தக் கொடையோடு தொடர்புள்ள இஸ்பிரீத்துசாந்துவின் கனி விசுவாசம் என்னும் கனியாகும். ஏனெனில் தெய்வீகக் காரியங் களைச் சுவைப்பது அவற்றை அதிக உறுதியாக விசுவசிக்கும்படி செய்கிறது. அவற்றைப் பற்றி அது கொண்டுள்ள பரிசோதனைத் தன்மையுள்ள அறிவு அவற்றின் சாட்சியத்தை அதிசயத்திற்குரிய முறையில் அதிகரிக்கிறது.

அறிவாகிய கொடையோடு தொடர்புள்ள பாக்கியம், ‘‘தூய இருதயமுள்ளவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் சர்வேசுரனைத் தரிசிப்பார்கள்'' என்பதாகும். அர்ச். தாமஸின் கருத்துப்படி, இந்தத் தூய்மை ஆத்துமத்தின் சகல சத்துவங்களுக்கும் பரவி, ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற பசிகளையும் தூண்டும் காரியங்களையும், சித்தத்தின் தீய நாட்டங்களையும், புத்தியின் தவறுகளையும், தவறான நடத்தைகளையும் அகற்றுகிறது. மேலும், காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ற சிந்தனைகளைத் தவிர வேறு எதுவும் ஆத்துமத்தினுள் வராதபடியும், அப்படி வரும் சிந்தனைகள், செயல் செய்து முடிக்கப்படுவதற்குத் தேவையான நேரத்திற்கு அதிகமாக ஆத்துமத்தில் நிலைத்திராதபடியும் அது ஆத்துமத்தின் ரூபிகரத்தை (மனித மனத்தின் கற்பனையை) கட்டுப்படுத்துகிறது. இந்தக் கொடையோடு தொடர்புள்ள இஸ்பிரீத்துசாந்துவின் கனியும் விசுவாசமே. இந்தக் கொடையால் இந்தக் கனி உத்தமமாக்கப் படுகிறது.

அறிவாகிய கொடையோடு தொடர்புள்ள சுவிசேஷ பாக்கியம், ‘‘அழுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்'' என்பதாகும். ஏனெனில் இஸ்பிரீத்து சாந்துவானவர் தரும் அறிவு என்னும் கொடையானது, நம் குறைகளையும், இவ்வுலகின் நிர்ப்பாக்கியங்களையும், சகல காரியங்களுடையவும் வெறுமையையும் காட்டி, ஆத்துமத்தில் ஒரு வகையான நிரந்தரமான அழுகைப் புலம்பலை எழுப்புகிறது. நம் செயல்களையும், சிருஷ்டிகளின் செயல்களையும் பற்றிய நம் அறிவை உத்தமமானதாக்கும் விசுவாசத்தின் கனி, இந்த பாக்கியத்தோடு தொடர்புள்ளதாக இருக்கிறது.

‘இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்ற பாக்கியம் விமர்சையாகிய கொடையோடு தொடர்புள்ளது, ஏனெனில், அர்ச். அகுஸ்தினார் குறிப்பிடுவது போல, கடவுள் மற்றவர்களுக்கு உதவு பவர்களுக்குத் தமது ஒளியைக் கொண்டு உதவி செய்ய கடவுள் ஒருபோதும் தவறுவதில்லை.

‘சாந்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்ற பாக்கியம் தேவ பக்தியாகிய கொடையோடு தொடர்புள்ளது, ஏனெனில் சாந்தம் பக்திச் செயல்களிலிருந்து தடைகள் அனைத்தையும் அகற்றி, அதன் வளர்ச்சியில் அதற்கு உதவுகிறது.

திடமாகிய கொடையோடு தொடர்புள்ள பாக்கியம், ‘‘நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்'' என்பதாகும். ஏனெனில் இஸ்பிரீத்துசாந்துவின் பலத்தைக் கொண்டிருப்பவர்கள் பெரிய காரியங்களைச் செய்யவும், பெரும் துன்பங்களை அனுபவிக் கவும் ஓர் அடங்காத தாகம் கொண்டிருக்கிறார்கள். இஸ்பிரீத்து சாந்துவானவரின் கனிகளாகிய தயாளமும், பொறுமையும் இந்தக் கொடையோடு தொடர்புள்ளவை.

‘மனத்தரித்திரர் பாக்கியவான்கள்'' என்ற பாக்கியம் தேவ பயத்தோடு தொடர்புள்ளது. ஏனெனில் பட்டம், பதவி, உலக மகிமை, செல்வங்கள், மற்றும் இது போன்றவற்றிலுள்ள பற்று இல்லாதிருப்பது தெய்வபயத்தின் அவசியமான விளைவாக இருக் கிறது. அது தேவ சித்தத்திற்கு எல்லா நேரங்களிலும், எந்தச் சூழ்நிலை யிலும் முழுவதுமாக நாம் பணிந்திருக்கச் செய்கிறது. அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு ஆகிய கனிகள் இந்தக் கொடைக்குச் சொந்தமானவை--இவ்வாழ்வின் சுகங்களையும், சரீர இன்பங்களையும் பயன்படுத்துவதை அடக்குவதில் இச்சையடக் கமும், நிறைகற்பும் தெய்வ பயத்தோடு சேர்ந்து, இச்சையைக் கட்டுப் படுத்த உதவுகின்றன என்பதால் இந்த இரு கனிகளும், அடக்க வொடுக்கத்தைப் போல வேறெதுவும் தெய்வ பயத்தை மிக அதிகமாக அதிகரிப்பதில்லை என்பதால், அதுவும் தெய்வ பயத் திற்குச் சொந்தமானவையாக இருக்கின்றன.

இறுதியாக, மனித நேசம் ஒருவரை மற்றொருவராக மாற்றும் அளவுக்கும், ஒருவரை மற்றொருவரில் வாழச் செய்யும் அளவுக்கும், மற்றொருவரின் சுவாசத்தில் வாழும் அளவுக்கும் உயர்த்தப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஞான விவாகத்தின் இன்னும் அதிக மங்கலான ஒரு காட்சியை இது தரக் கூடும்.