இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாமரி தொடர்பாக அவர்களுடைய மகத்துவத்தின் விளைவுகள்

அத்தியாயம் 4

மாமரி தொடர்பாக அவர்களுடைய மகத்துவத்தின் விளைவுகள்

தமத்திரித்துவத்தோடும், மனுக்குலத்தோடும் உள்ள தொடர் பில் மாமரியின் மகத்துவத்தை ஆராய்ந்த பின்பு, நம் அலுவலை நிறைவாக்க, மாமரியின் சுயத்தில் அவர்களைப் பற்றித் தியானிப்பது நமக்கு எஞ்சியிருக்கிறது. பின்வரும் பிரிவுகளில் அதை நாம் செய்வோம்.

பிரிவு 1

மனிதர்களின் தாயான மாமரி

மனித சட்டங்கள் மற்றும் தெய்வீக சட்டங்கள் ஆகிய இரண்டும், பிதாத்துவத்தின் இரு வகைகளையும், அதன் விளைவாக, தாய்மையின் இரு வகைகளையும் ஒப்புக்கொள்கின்றன. இவற்றில் ஒன்று சுபாவமானது, மற்றொன்று சுவீகாரத் தன்மையுள்ளது. மாமரி மனிதர்களின் தாய் என்று நாம் சொல்லும்போது, நாம் அனைவரும் மாமரியின் சுவீகார மக்கள் என்னும் பொருளிலேயே அப்படிச் சொல்கிறோம்.

இந்தப் பிரிவில், நாம் எந்தக் காரணங்களால் மாமரியின் பிள்ளைகளாக இருக்கும்படி சுவீகரிக்கப்பட்டோம் என்பதையும், மனுக்குலத்தின் மீது ஒரு தாய்க்குரிய உரிமைகளை அவர்கள் எப்படி சம்பாதித்துக் கொண்டார்கள் என்பதையும் நாம் ஆராயப் போகிறோம்.

முதலாவதாக, அவர்கள் சேசுக்கிறீஸ்துநாதரின் தாயாராக இருக்கிறார்கள் என்ற உண்மையே கூட, அவசியமான விதத்தில் அவர்களை நம் தாயாராக்குகிறது; இந்தத் தொடர்பைப் புரிந்து கொள்வதற்கு, நாம் எப்படி நித்திய பிதாவின் பிள்ளைகள் ஆகிறோம் என்பதை மட்டும் பார்ப்பது போதுமானது.

நாம் முழுக் கிறீஸ்தவர்கள் ஆன போது, அதாவது, நாம் கிறீஸ்துநாதரை விசுவசித்து, அவரை நேசித்து, அவருடைய சட்டங்களைக் கடைப்பிடிக்கும்போது, நாம் அவரோடு ஒன்றாகிறோம். அவருடைய வாழ்வு கண்டுபாவிக்கப்படுகிறது, அது ஒரு விதத்தில் நமக்குள் செலுத்தப்படுகிறது.

அப்போது அவருடைய மனதைக் கொண்டு நாம் அறிகிறோம், அவருடைய திரு இருதயத்தைக் கொண்டு நாம் நேசிக்கிறோம், அவருடைய வாழ்வை நாம் வாழ்கிறோம். அவரே அர்ச். அருளப்பர் சுவிசேஷத்தில், திராட்சைச் செடியைப் பற்றிய அழகிய உவமையின் மூலம் இந்த சத்தியத்தை எடுத்துரைத்திருக்கிறார்: ‘‘என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால், தானாகக் கனி கொடாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி தரமாட்டீர்கள். நான் திராட்சச் செடி, நீங்கள் கொடிகள்; ஒருவன் என்னிலும், நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுதியான கனியைத் தருவான்.'' ஒரே வாக்கியத்தில் கூறுவதானால், நாம் ஓர் உயிருள்ள விசுவாசத்தோடு கிறீஸ்துநாதரை விசுவசிக்கும் போது, அவருடைய திருச்சரீரத்தின் உறுப்புகளாக்கப்படுகிறோம்: ‘‘சரீரம் ஒன்றானாலும், அதற்கு உறுப்புகள் அநேகம். சரீரத்தின் உறுப்புகள் பலவாயிருந்தாலும், அவைகள் ஒரே சரீரமாகவே யிருக்கின்றன. அப்படியே கிறீஸ்துநாதருமிருக்கிறார்... நாம் எல்லோரும் ஒரே இஸ்பிரீத்துவினாலே ஒரே சரீரமாயிருக்கும்படிக்கு ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்'' (1கொரி.12:12,13).

கிறீஸ்துநாதரில் நம்முடைய இந்த ஐக்கியமும், அவரில் நாம் அடையும் இந்த மாற்றமும் ஞானஸ்நானத்தில் தொடங்குகிறது, உறுதிப்பூசுதலில் பலப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்படுகிறது. திவ்விய நற்கருணையில் பங்கெடுப்பதால் நாம் அதன் அனுதின ஆதரவையும், வளர்ச்சியையும் பெற்றுக் கொள்கிறோம். ஏனெனில் அங்கே, நம் மீதான சர்வேசுரனுடைய நேசத்தின் மிக உன்னதமான அந்த வாக்குத்தத்தத்தில், நாம் நிஜமாகவும், பொருண்மை சார்ந்த முறையிலும் கிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தோடு ஒன்றிக்கப்பட்டு, அவருடைய சுவாசத்தையே சுவாசிக்கிறோம். அவருடைய மகா பரிசுத்த மாம்சம் நம் மாம்சத்தைத் தொட்டு, தன்னுடைய ஸ்பரிசத்தால் அதை அர்ச்சிக்கிறது; அவருடைய திரு ஆத்துமம் நம் ஆத்துமத்தைத் தொட்டு, தன்னுடைய புத்தியுள்ள ஒளித் தாரைகளையும், மகிமையொளியையும் பொழிந்து, நம் இருதயங் களில் நேசத்தின் பெரும் தீச்சூளை ஒன்றைப் பற்றியெரியச் செய்கிறது. இந்தத் தேவத்திரவிய அனுமானத்தால் நாம் ஸ்திரமான முறையில் அவருடைய வாழ்வை வாழ்கிறோம். அப்போது நாமும் அர்ச். சின்னப்பரோடு சேர்ந்து: ‘‘நான் ஜீவிக்கிறேன், ஆயினும் நானல்ல, கிறீஸ்துநாதரே என்னில் ஜீவிக்கிறார்'' என்று சொல்ல முடியும்; அல்லது, கிறீஸ்துநாதர்தாமே இதை எடுத்துரைத்திருப்பது போல, நாம் எத்தகைய உண்மையான வாழ்வை வாழ்கிறோம் என்றால், அதனுடன் ஒப்பிடும்போது, மற்ற வாழ்வெல்லாம் சாவாகவே இருக்கிறது. ‘‘நீங்கள் மனுமகனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால், உங்களிடத்தில் ஜீவனைக் கொண்டிருக்கமாட்டீர்கள். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிற வனுக்கு நித்திய ஜீவியம் உண்டு. கடைசி நாளிலே நான் அவனை உயிர்ப்பிப்பேன். ஏனெனில் என் மாம்சம் மெய்யாகவே போஜனமும், என் இரத்தம் மெய்யாகவே பானமுமாயிருக்கின்றது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணு கிறவன் என்னில் வசிக்கிறான், நானும் அவனில் வசிக்கிறேன். சீவியராகிய பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் சீவிக்கிறது போலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னால் சீவிப்பான்'' (அரு.6).

ஆகவே, ஞானஸ்நானம் நம்மில் கிறீஸ்துநாதரின் சாயலையும், அவரோடு ஐக்கியத்தையும் தொடங்கி வைக்கிறது; உறுதிப்பூசுதல் அதைப் பலப்படுத்துகிறது; திவ்விய நற்கருணை அதைத் தாங்கி, கிறீஸ்துநாதரின் முழு வயதில், அவருடைய உத்தமமான சாயலை வந்தடையும் வரையில் அதை வளரச் செய்கிறது.

இவ்வாறுதான் நாம் நித்திய பிதாவின் குழந்தைகள் ஆகிறோம். அவர் தம்முடைய ஏக பேறான திருச்சுதனின் சாயலையும், ஒப்புமையையும் நம்மில் கவனிக்கிறார். தாம் யாரில் பூரண பிரியமா யிருக்கிறாரோ, அவருடைய சாயலை நம்மில் கண்டு அவர் நம்மை நேசிக்கிறார். அவருடைய அளவற்ற பேறுபலன்கள் நம்மீது பொழியப்பட்டிருப்பதை அவர் காண்கிறார்.

நாம் கிறீஸ்துநாதரை விசுவசிப்பதையும், அவரை நேசிப் பதையும், அவரோடு ஒரே சரீரமாகவும், ஒரே இஸ்பிரீத்துவாகவும், ஒரே ஞான ஆளாகவும் உருவாவதையும் அவர் காண்கிறார். இதனால் அவர் நம்மைத் தமக்குச் சொந்தமானவர்களாகவும், அவருடைய சொந்த சந்ததியாகவும் நினைக்கிறார்; அநேக சகோதரர் களிடையே தலைப் பேறானவராக இருக்கிற கிறீஸ்துநாதர் மட்டில் தாம் உணர்கிற தந்தைக்குரிய உணர்வுகளை, தந்தைக்குரிய அந்த அன்பை, நமக்கும் அவர் தருகிறார், நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறார். ‘‘அவர் சேசுக்கிறீஸ்துநாதர் வழியாக, தம்முடைய சுவீகாரப் பிள்ளைகளாகும்படி நம்மை முன்நியமகம் பண்ணியிருக்கிறார்; தம்முடைய நேச குமாரனில் அவர் நமக்குத் தயவு காண்பித்திருக்கிறார்'' (அர்ச். சின்னப்பர்). 

இனி பிதாவாகிய சர்வேசுரனுடைய பிள்ளைகளாக நம்மை ஆக்குகிற அதே காரணம்தான் நம்மை மாமரியின் குழந்தை களாகவும் ஆக்குகிறது. ஏனெனில் மாமரி கிறீஸ்துநாதருடைய உண்மையான, நிஜமான தாயாராக இருக்கிறார்கள். நித்திய பிதாவோடு அவர்கள் ஒரு பொதுவான மகனை, அவதரித்த வார்த்தையானவரைக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களும் தன் அன்புக்குரிய திருமகனின் சாயலை, அவருடைய பாவனையை, அவருடைய சித்திரங்களை நம்மில் காண்கிறார்கள். அவருடைய பேறுபலன்களால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிற, அவருடைய சரீரத்தின் மிக அநேக உறுப்புகளாகவும், அவருடைய ஜிவியத்தில் பங்குபெறுகிறவர்களாகவும் நம்மைக் காண்கிறார்கள். ஆகவே, நம்மைத் தன்னுடைய சொந்த சந்ததியாக நினைக்கவும், அநேக சகோதரர்களிடையே தன்னுடைய தலைப் பேறானவர் மட்டில் தான் கொண்டுள்ள தாய்மையின் உணர்வுகளை நம் வரைக்கும் அவர்கள் நீட்டிக்கிறார்கள். தான் கடவுளின் திருத்தாயாராக ஆன கணத்திலேயே அவர்கள் நம்முடைய தாயாராகவும் ஆனார்கள். நாம் சுவீகாரப்படி அவர்களுடைய உண்மையான, இயற்கையான ஒரே திருமகனின் சகோதரர்களாகவும், அவரோடு ஒரே சரீர மாகவும் இருப்பதால், நாமும் மாமரியின் பிள்ளைகளாக இருக் கிறோம்.

இரண்டாவது காரணம் மாமரியின் ஒத்துழைப்பிலிருந்து பெறப்படுகிறது. மனிதாவதாரம், அதன் எல்லா விளைவுகளோடும் மாமரியின் கரங்களில் வைக்கப்பட்டது என்றும், அவர்கள் இந்தப் பரம இரகசியத்திலும், அதன் விளைவுகளிலும், அதன் பலன்களைப் பகிர்ந்தளிக்கும் மத்தியஸ்தியாக ஆக்கப்பட்டார்கள் என்றும் நாம் எண்பித்திருக்கிறோம். இனி, இந்தப் பரம இரகசியத்தின் முதன்மையான நோக்கங்களில் ஒன்று நம் இரட்சணியமாகும். தேவ திருச்சுதன் பாவத்தின் கொடுங்கோன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றும்படி யாகவும், நமக்குப் பதிலாக இருந்து தேவ நீதியை சாந்தப்படுத்தும் படியாகவும், கடவுளின் மக்களாக நம்மை மீண்டும் ஸ்தாபிக்கும் வரப்பிரசாதத்தால், ஜென்மப் பாவம் நம்மீது ஏற்படுத்திய காயங்களைக் குணப்படுத்தும்படியாகவும், இறுதியாக, நம்மை அர்ச்சித்து, நம் நித்திய கதிக்குத் தகுதியுள்ளவர்களாக நம்மை ஆக்கும்படியாகவும், நம் சுபாவத்தை எடுத்துக்கொள் ளவும், மனிதனாகவும் தயவுகூர்ந்தார். மாமரி இந்த நோக்கத்தை நன்றாக அறிந்திருந்தார்கள், அவர்கள் கடவுளுக்குத் தாயாரா யிருக்கச் சம்மதித்தபோது, அதில் குறித்துக் காட்டப்பட்ட அனைத்திற்கும் தன்னுடைய சம்மதத்தைத் தந்தார்கள்; ஆகவே, நாம் இரட்சிக்கப்படும்படியாக, அவர்கள் தன் சம்மதத்தைத் தந்தார்கள்.

தன்னுடைய அதியற்புதமான ஃபியாத்தை அவர்கள் உச்சரித்த போது, நம் அனைவரையும் அவர்கள் வரப்பிரசாதத்திற்குக் கருத் தரித்தார்கள். அதே ஃபியாத்தை மீண்டும் சொல்லவும், அதை உறுதிப்படுத்தவும் அவர்கள் சிலுவையடியில் நின்றபோது, அவர்கள் நம்மை வரப்பிரசாதத்திற்கு ஈன்றெடுத்தார்கள். ஆகவே அவர்கள் நம்முடைய உண்மையான, நிஜமான, ஞானத் தாயாராக இருக்கிறார்கள்.

நம் ஆண்டவர் கல்வாரியின்மீது அவர்களைத் தம் சீடரிடமும், அவரால் குறிக்கப்பட்ட நம் அனைவரிடமும் தாயாராக ஒப்படைத்தபோது, அந்த இரண்டு உண்மைகளையும் மட்டுமே அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், அதாவது, மாமரி மனிதாவதாரத்திற்குத் தன் சம்மதத்தாலும், கல்வாரியில் அதே சம்மதத்தைத் தான் உறுதிப்படுத்தியதன் மூலமும் நம் தாயாராக ஆனார்கள் என்ற உண்மையையே அவர் அங்கு வெளிப்படுத்தினார். என்றாலும், மாமரி சம்பாதித்துக்கொண்ட உரிமையை நம் ஆண்டவர் அவர்களுக்கு அறிக்கையிட்ட அந்தப் பலியின் காட்சியை நாம் சற்று நேரம் கண்டுதியானித்து, அதை ஆராய் வோமாக.

‘அத்தறுவாயில் சேசுநாதருடைய சிலுவையின் அருகே அவருடைய தாயாரும் .... நின்று கொண்டிருந்தார்கள். ஆகையால் சேசுநாதர் தமது தாயாரையும், அங்கு நின்ற தம்மால் சிநேகிக்கப் பட்ட சீஷனையும் கண்டபோது, தம்முடைய தாயாரை நோக்கி: ஸ்திரீயே, இதோ உன் மகன் என்றார். பின்னும் சீஷனை நோக்கி: இதோ உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்த சீஷன் அவர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொண்டார்'' (அரு.19:25-27).

இனி, கடவுளின் வார்த்தை ஒரு நேரடிப் பொருளும், ஒரு ஞானப் பொருளுமாக இரண்டு அர்த்தங்களைக் கொண்டுள்ளது, நேரடிப் பொருள் என்பது வார்த்தைகளால் நமக்கு அறியத் தரப்படுவது, ஞானப் பொருள் என்பது வார்த்தைகளால் பொருட்கள் அல்லது ஆட்கள் மறைமுகமாகக் குறிக்கப்படுவது, இந்த இரண்டுமே உண்மையானவை, நிஜமானவை என்ற உண்மைகளின் அடிப் படையில், சற்றுமுன் மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகள் நேரடிப் பொருளில், அர்ச். அருளப்பருக்கு வழங்கப்பட்ட ஓர் ஒப்பற்ற சலுகையைக் குறிப்பதாக இருந்தாலும், ஞானப் பொருளில், இவ்வார்த்தைகள் சகல மனிதர்கள் மீதும் மாமரியின் ஞானத் தாய்மைக்கு மிகப் பெரும் சாட்சியத்தை ஸ்தாபிக்கின்றன.

மூன்று வாதங்கள் இந்த சத்தியத்தை அதன் மிகத் துணிவுள்ள ஒளியில் எண்பிக்கின்றன. அவை: சேசுநாதரின் ஊழியத்தின் தன்மை, மாமரிக்குத் தரப்பட்ட தனிப்பட்ட பெயர், அர்ச். அருளப்பருக்குத் தரப்பட்ட பெயர் ஆகியவையாகும். முதலாவதாக, நம் இரட்சக ராகவும், நம் மத்தியஸ்தராகவும், நம் தலைமைக் குருவாகவும் இருப்பதாகிய சேசுகிறீஸ்துநாதருடைய ஊழியத்தின் தன்மைக்கு, அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும், அவர் செய்த ஒவ்வொரு செயலும் மனுக்குலம் முழுவதற்கும் போதனையாகவும், அனுகூல மாகவும் இருக்க வேண்டியது அவசியமாயிருந்தது. சேசுக்கிறீஸ்து நாதர் நித்திய பிதாவானவரால் நமக்குத் தந்தருளப்பட்ட முற்றிலும் இலவசமான கொடையாக இருக்கிறார் என்பது உண்மைதான்; அவர் தாமே முன்வந்தும், சுயாதீன சித்தத்தோடும் நம் பலிப்பொரு ளாகவும், நம் இரட்சணியததின் கிரயமாகவும் தம்மையே ஒப்புக் கொடுத்தார் என்பதும் உண்மைதான்; ஆயினும், ஒப்புக்கொடுத்தல் ஒரு முறை செய்யப்பட்ட பிறகு, அதன் விளைவுகள் அவசிய மானவையாகவும், மாற்றப்பட முடியாதவையாகவும் இருக்கின்றன, அவை நம் நன்மைக்காக, நம் இரட்சகரின் ஆளுமைக்கு ஓர் உண்மையானதும், நிஜமானதுமான ஒரு பட்டத்தைத் தருகின்றன. அவர் முழுவதுமாக நமக்குச் சொந்தமானார். இதன் காரணமாகவே இசையாஸ் அவருடைய வருகையை இந்த வார்த்தைகளில் முன்னுரைத்தார்: ‘‘ஒரு பாலன் நமக்குத் தரப்பட்டிருக்கிறார்; நமக்காக ஒரு மகன் பிறந்திருக்கிறார்.'' இந்த திவ்ய பாலனின் பிறப்பை இடையர்களுக்கு அறிவிக்க வந்த சம்மனசானவர்: ‘‘இன்று உங்களுக்காக இரட்சகர் பிறந்திருக்கிறார்'' என்றார். நித்திய பிதா, தம்முடைய திருச்சுதனை நமக்குத் தந்தபோது, அவரோடு சேர்த்து எல்லாவற்றையும் நமக்குத் தந்தருளினார் என்று தெளிவாக அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஆகவே, அவருடைய வாழ்வின் மிகுந்த மதிப்புள்ள எல்லாத் தருணங்களும், அவருடைய எல்லா சிந்தனைகளும், அவருடைய எல்லா நாட்டங்களும், அவருடைய எல்லாச் செயல்களும் முற்றிலுமாக நமக்காக அர்ப்பணிக்கப்பட்டன. அவசியமான விதத்தில் நாம் அவருடைய திட்டங்கள் அனைத்திலும், அவருடைய செயல்கள் அனைத்திலும் பங்கெடுக்கிறோம். அவர் நமக்குத் தொடர்பில்லாமல் எதையாவது செய்தோ அல்லது சொல்லியோ இருந்திருந்தால், அவர் தம்முடைய ஒப்புக்கொடுத்தல்களின் தார்மீக மகத்துவத்திலிருந்தும், பொதுத் தன்மையிலிருந்தும், உத்தமதனத் திலிருந்தும் விலகிப் போயிருந்திருப்பார்.

இந்த விதி எவ்வளவு உண்மையானது என்றால், இதுவே பரிசுத்த சுவிசேஷத்தின் எல்லா விளக்கவுரைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது. சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நம் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும், சகல மனிதர்களையும், சகல வருங்காலங்களையும் தொடுவதாகிய ஒரு பொருளில்தான் திருச்சபைத் தந்தையரால் விளக்கப்பட்டிருக் கின்றன; ஏனெனில் கிறீஸ்துநாதரின் ஊழியத்தின் தன்மையின் விளைவாக, அவர் கூறிய அனைத்தையும், அவர் செய்த அனைத் தையும், அனைவருக்குமான ஒரு பொது நோக்கத்தோடுதான் சொன்னார், செய்தார் என்று திருச்சபைத் தந்தையர் உறுதியாக நம்பினார்கள்.

ஆகவே, நாம் எப்போதும் அவருடைய மனதில் இருந்தோம்; ஒரே ஒரு கணம் கூட விதிவிலக்கின்றி, அவருடைய வாழ்வு முழுவதும் ஒரு தொடர்ச்சியான பொதுப் பலியாக, முழுமை யானதும், உத்தமமானதுமான பலியாக, பொது இரட்சணியத்தை நோக்கமாகக் கொண்ட இடைமறிக்கப்படாத ஓர் ஒற்றைச் செயலாக இருந்தது.

ஆகவே, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், அவர் செய்த ஒவ்வொரு செயலும் மனிதனின் பொது நன்மைக்காகவே செய்யப் பட்டன என்றால், சிலுவையின் மீது, தமது திவ்விய பலியின் திருப் பீடத்தின் மீது, பலிச் செம்மறி கொல்லப்படும் அந்த கணத்தில், தமது சொந்தப் பலிக்கு அடுத்ததாக, தமது அனைத்திலும் மகா உன்னத மான செயலில், அதாவது தம் சொந்தத் தாயாரை ஒப்புக் கொடுக்கும் ஒரு மிக முக்கியமான செயலில் அவர் நம்மையெல்லாம் மறந்து போயிருக்க வேண்டுமா? மறந்து போயிருக்க முடியுமா? ‘‘இதோ, உன் தாய்!'' என்று அர்ச். அருளப்பரிடம் சொல்லப்பட்ட வார்த்தைகள் அவருக்கு மட்டுமே தனிப்பட்ட முறையில் வழங்கப் பட்ட ஒரு சலுகையாக இருந்திருக்குமானால், எப்போதும் பொது நன்மைக்காகவே செயல்பட்டவரான நம் ஆண்டவர், நமக்கான தம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றி, அதை முழுமைப் படுத்திக்கொண்டிருந்த அந்த மிக முக்கியமான கணத்தில் தம் நடத்தையை மாற்றியிருந்திருப்பார்.

ஆகவே, அந்தச் சலுகையில் கிறீஸ்தவர்கள் அனைவருமே மறைமுகமாகக் குறித்துக் காட்டப்பட்டார்கள், அர்ச். அருளப்பரின் ஆள்தன்மையில், எல்லாக் கிறீஸ்தவர்களுக்குமே மாமரி தாயாகத் தந்தருளப்பட்டார்கள் என்ற முடிவுக்குத் தான் நாம் வர வேண்டும்.

நம் ஆண்டவர் பொதுவில் தம் தாயாரிடம் பேசியபோதெல் லாம், அல்லது அவர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய போதெல்லாம், மனுக்குலம் முழுவதற்கும் ஒரு போதனையைத் தரும் விதத்தில்தான் எப்போதும் பேசினார் என்பதை நாம் சிந்திக்கும் போது, இந்தக் காரணம் இன்னும் அதிக பலம் பெறுகிறது. இவ்வாறு, மூன்று நாட்களாக அவரைத் தேடியபின், மாமரி அவரைத் தேவாலயத்தில் கண்டுபிடித்து, கனிவான விதத்தில் நடந்ததை அவருக்கு நினைவூட்டியபோது, ‘‘ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தெரியாதோ?'' என்று அவர் கேட்டார். மாமரி தம்மைத் தேடியதற்காக அவர் அவர்களைக் கடிந்து கொண்டார் என்று இவ்வார்த்தைகளுக்கு நாம் பொருள் கொள்ள முடியாது, ஏனெனில் அப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிப்பது மாமரியின் தெளிவானதும், அவர்கள் மேல் சுமந்ததுமான கடமையாக இருந்தது; ஆனால் தங்கள் பிள்ளைகள் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணிக்கும்படி அழைக்கப்படும்போது, அவர்களை எந்த விதத்திலும் தடை செய்யக்கூடாது என்று கிறீஸ்தவப் பெற்றோர் அனைவருக்கும் ஒரு பாடத்தைத் தருவதற்காக அவர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

நம் ஆண்டவரின் வாய்ச் சாலகத்தால் பரவசமடைந்து, அவருடைய தாயாரைப் புகழ ஒரு பெண் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, ‘‘உம்மைத் தாங்கிய உதரமும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே'' என்று அறிக்கையிட்டபோதும் இதே நோக்கத்தோடு, அவர் பதில் மொழியாக: ‘‘ஆயினும், கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிக்கிறவர்கள் அதிலும் பாக்கியவான்கள்'' என்று அவர் கூறினார். மற்றொரு சமயத்தில், ஒரு மனிதன் நம் ஆண்டவரின் பிரசங்கத்தின் நடுவே அவரை இடைமறித்து, அவருடைய தாயும் சகோதரர்களும் அவரோடு பேசுவதற்காக அவரைத் தேடுகிறார்கள் என்று கூறியபோது: ‘‘யார் என் தாயும் சகோதரரும்?' கடவுளின் வார்த்தையைக் கேட்டு அனுசரிக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறார்கள்'' என்று அவர் கூறினார்.

ஆகவே, நம் ஆண்டவர் தம் வாழ்நாள் முழுவதும் பொது நன்மையையே எப்போதும் கருத்தில் கொண்டிருந்தார் என்பது தெளிவாயிருக்கிறது; அப்படியிருக்க, தம்முடைய வாழ்வின் கடைசியானதும், மிக மிக முக்கியமானதுமான செயலில், அவர் அந்தப் பொது நன்மையை ஒதுக்கி விட்டிருப்பார் என்று நாம் நினைக்க முடியுமா?

இரண்டாவதாக, மாமரியிடம் பேசும்போது, நம் ஆண்டவர் பயன்படுத்திய வார்த்தைகளும் இதே உண்மையை எண்பிக்கின்றன: ‘‘ஸ்திரீயே, இதோ உம் மகன்!'' இதுவே அனைத்திலும் மிகச் சிறந்த புகழ்ச்சியாகவும், தம் திருத்தாயாரைப் புகழ்ந்து சேசுநாதர் உச்சரித்த அதியற்புதமான வார்த்தைகளாகவும் இருக்கின்றன! இரண்டு முறைகள் இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தினார், இரு முறையும் அதே பக்திக்குரிய புகழ்ச்சிதான் அவரால் குறிப்பிடப் பட்டது. பதித, பிரிவினை சபையினர் இந்த இரண்டு சந்தர்ப்பங் களும் மாமரியை இழிவுபடுத்துவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் பண்டைய யூதர்களைப் போல, இவர்களும் கடவுளின் வார்த்தையின் எழுத்தை மட்டுமே தங்களிடம் கொண்டிருக் கிறார்கள்; அதன் உயிர் எப்போதோ அவர்களிடமிருந்து விலகி விட்டது. இதன் காரணமாக, எப்போதெல்லாம் வெறும் வார்த்தை ஒரு பரம இரகசியத்தை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறதோ, அப்போதெல்லாம் அது அவர்களுக்கு ஒரு முத்திரையிடப்பட்ட புத்தகமாகவே இருக்கிறது.

ஏன்! ஏனெனில் இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நம் ஆண்டவர் மாமரியின் ஒப்பற்ற மகத்துவத்தையும், அவர்களுடைய பக்திக்குரிய நியமத்தையும், அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உன்னதமான அலுவலையும் அறிக்கையிட்டார். தம்முடைய பரிசுத்த சுவிசேஷத்திலுள்ள எல்லாப் பக்கங்களையும் மாமரிக்காக அர்ப்பணித்திருந்தால் அவர் என்ன செய்திருப்பாரோ, அதை விடப் பல மடங்கு உரத்த சத்தமாக, இந்த இரு சந்தர்ப்பங்களிலும் மாமரியை அவர் மகிமைப்படுத்தினார்.

‘ஸ்திரீயே, இதோ உம் மகன்!'' அந்த வார்த்தையின் பொருள் என்ன? இந்த ‘‘ஸ்திரீயே!'' என்னும் வார்த்தையை நாம் ஆதியாகமம் 3:15-ம் திருவாக்கியத்தில் காண வேண்டும். ஆதியாகம வாக்கியங்கள்: ‘‘உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவேன். அவள் உன் தலையை நசுக்குவாள்...'' அவதரித்த வார்த்தையாகிய தேவனின் வார்த்தைகள்: ‘‘ஸ்திரீயே, இதோ உம் மகன்!'' இவ்வார்த்தைகள் முந்தின தீர்க்கதரிசனம் நிறைவேறியது பற்றிய பிரகடனமாக இருப்பதைக் காணுங்கள்! ஒரு பெண்ணால் நாம் வீழ்த்தப் பட்டோம். ஏவாள் நன்மை தீமை அறியும் கனி இருந்த மரத்தின் அருகில் நின்று கொண்டு, அவிசுவாசம், ஆங்காரம், சரீர இச்சை என்னும் பாவத்தில் இன்பம் கண்டு, கடவுளின் கட்டளையை மீறி, அதன் மூலம் நம் அழிவுக்குக் காரணமாகி, மிகவும் துர்ப்பாக்கிய முள்ள ஒரு இனத்தின் பரிதாபத்திற்குரிய தாயாக ஆனாள். சர்வேசுரன் ஆதிசர்ப்பத்திற்கு சாபமாக முன்னுரைத்தபடி, மாமரி, ஏவாள் தவற விட்ட இடத்தை நிரப்புபவர்களாக இருக்க வேண்டி யிருந்தது.

அவர்கள் சிலுவை மரத்தின் அருகில் நின்றுகொண்டு, தன் திருச்சுதனின் திவ்விய பலிக்குத் தன் சம்மதத்தைத் தந்து கொண்டும், தாழ்ச்சி, விசுவாசம் ஆகியவை நிரம்பிய மகா வீரத்துவமுள்ள செயலைச் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவர்கள் துக்கத்தினுடையவும், கொடிய வேதனையினுடையவும் பெருங் கடலில் அமிழ்த்தப்பட்டு, இவ்வாறு நம் இரட்சணியத்தை நிறைவேறச் செய்தார்கள், இவ்வாறு அவர்கள் புதுப்பிறப்படைந்த மனுக்குலம் முழுவதற்கும் தாயாராக ஆனார்கள். ஆகவே, தம்முடைய அந்த வார்த்தைகளில் நம் ஆண்டவர் குறிப்பிடுவது என்னவெனில்: ‘‘பெண்மையின் மலரே, பெண்மையின் உத்தம மாதிரிகையே, உண்மையான ஸ்திரீயே, இரண்டாவதான, முதல் பெண்ணை விட அதிகம் சிறந்த ஸ்திரீயே, என் சிலுவையினடியில் நின்ற இரண்டாவது ஏவாளே, ஏவாள் மனுக்குலத்தின் அழிவைப் பிறப்பித்திருக்க, மனுக்குலம் முழுவதையும் நீங்கள் நேசிக்கிற அந்தப் பொதுவான சிநேகத்தின் காரணமாக, என் பலிக்கு நீங்கள் தந்த சம்மதத்தாலும், விசுவாசம், தாழ்ச்சி, அர்ப்பணிப்பு என்னும் புண்ணியங்களை மகா வீரத்துவமுள்ள அளவில் அனுசரித்ததன் மூலமாகவும், மனுக்குலம் முழுவதற்கும் நீங்கள் இரட்சணியத்தைப் பிறப்பித்தீர்கள்; ஆகவே நீங்கள் அவர்களுடைய தாயாராகியிருக் கிறீர்கள். ஸ்திரீயே, மகா கசப்பின் பெருங்கடலின் பிரவச வேதனை யில் இப்போதுதான் நீங்கள் பெற்றெடுத்திருக்கிற உங்கள் மகனைப் பாருங்கள்!''

இறுதியாக, அர்ச். அருளப்பருக்குத் தரப்பட்ட பெயரும் இதே உண்மையை எண்பிக்கிறது.

நம் ஆண்டவர் அர்ச். அருளப்பருக்கு ஓர் ஒப்பற்றதும், தனிப் பட்டதுமான ஒரு சலுகையைத் தந்தருளும் நோக்கத்தோடு அவரிடம் தம்முடைய திருமாதாவை ஒப்படைக்க எண்ணியிருந் திருப்பார் என்றால், அவரை அழைக்க அருளப்பர் என்னும் அவருடைய பெயரை அவர் பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் தம் சீடனிடம், ‘‘இதோ, உன் தாய்'' என்று கூறினார் என்று பரிசுத்த சுவிசேஷம் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆகையால், சீடர், பிரதிநிதியான ஒருவர், கிறீஸ்துநாதரைப் பின்செல்பவர்கள் என்னும் அதே மகிழ்ச்சியைத் தம்மோடு பங்கிட்டுக் கொள்ள இருந்த அனைவரின் பெயராலும் அங்கே இருந்த ஒருவர் என்னும் முறையிலேயே இந்தச் சலுகை அவருக்கு வழங்கப்பட்டது. ஆகவே, அவரிலும், அவர் வழியாகவும் விசுவாசிகள் அனைவரும் மாமரியைத் தாங்கள் தாயாராகப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்தப் பிரிவை முடிக்குமுன்பாக, நம் ஆண்டவரால் மாமரியின் தாய்மை அறிக்கையிடப்பட்ட அந்தக் கணத்தில் தீர்மானிக்கப் பட்டு, நியமிக்கப்பட்டபடி, நம் பேரில் மாமரி கொண்டுள்ள தாய்க்குரிய உணர்வுகளின் தன்மை பற்றிய ஒரு சிந்தனையை நாம் இங்கு தராமல் இருக்க முடியாது.

மாமரி பக்திக்குரியதும், வீரத்துவமிக்கதுமான ஒரு மனநிலை யில் சிலுவையின் அடியில் நிற்கிறார்கள். தன்னுடைய கையளித் தலில் அசைக்கப்படாதவர்களாகவும், தன்னுடைய கொடிய துயரத்தில் பரவசப்பட்டவர்களாகவும் அவர்கள், வெளிறிப் போனதும், உருக்குலைந்ததும் மரணத் தறுவாயில் இருப்பதுமான திருச்சரீரத்திலிருந்து திரு இரத்தச் சிற்றோடைகளை வடித்துக் கொண்டிருக்கிற காயங்களால் மூடப்பட்டிருக்கிற தன்னுடைய திருச்சுதனைக் கண்டுதியானித்துக் கொண்டிக்கிறார்கள். அவரைச் சுற்றி நிற்கும் வெறிபிடித்த முரட்டுக் கூட்டம் அவரை நோக்கி ஏவுகிற வெட்டிப் பிளக்கும் பரிகாச நகைப்புகளையும், அவபக்தியுள்ள தேவதூஷணங்களையும், கசப்பான அவமானங் களையும் அவர்கள் கேட்கிறார்கள். மரணம் நெருங்கி வருவதாகத் தோன்றும்போது, தங்கள் வெறுப்பை ஆற்றிக் கொள்ளும்படி அவர்கள் இன்னும் அதிகப் பொறுமையின்மைக்கும், கோப வெறிக்கும் ஆளாகிறார்கள் என்பதை தேவ அன்னை கண்டுபிடிக் கிறார்கள். என்றாலும், இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தின் மிகப் பெரும் அட்டூழியங்களையும் மீறி, தன்னுடைய திவ்விய சுதன், தம்மை மறந்து, தம் துன்பங்களின் அகோரத்தை மறந்து, தம் இரத்தத்தைச் சிந்திக் கொண்டிருப்பவர்களுக்கு அது பாவப் பரிகாரப் பிணையாக ஆக வேண்டுமென்றும், தம்முடைய மரணம் அதை வருவிப்பவர்களுக்கு இரட்சணியமாக வேண்டுமென்றும் தம் நித்திய பிதாவிடம் ஜெபிப்பதை அவர்கள் கேட்கிறார்கள்.

அவருடைய திரு இருதயம் திறந்திருப்பதையும், அவரை நிந்திப்பதிலும், அவருடைய மரணத்திற்காக ஓலமிட்டபடி காத்திருப் பதிலும் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்களும், மறு ஒன்றிப்பிற்கும், மன்னிப்பிற்கும் தங்களை அழைக்கிற ஒரு நேசத்தின் கனிவுள்ள அழைப்புகளுக்கு ஆங்கார நிந்தனையைக் கொண்டு பதிலளிப்பவர் களுமாகிய அந்த வெறி பிடித்த கூட்டத்தை நோக்கித் அவர் தம் கரங்களை விரித்திருப்பதையும் அவர்கள் காண்கிறார்கள். இப்போது இந்த இணையற்ற காட்டுமிராண்டித்தனத்திற்கும், மட்டற்ற சிநேகத்திற்குமிடையே உள்ள முரண்பாடும், அதீத இரக்கத்திற்கும், மிகத் தீவிரமான அதீத கோபவெறிக்குமிடையே உள்ள முரண் பாடும், யூதர்களிடம் பொங்கி வழியும் அநீதி, துர்க்குணம் மற்றும் குற்றத்திற்கு எதிராக சேசுநாதருடைய பொங்கி வழிகிற தயாள இனிமையும் இரக்கமும் மாமரியை விரைவாகத் தாக்குகின்றன; அவை அவர்களை ஆணியடித்தது போல அசையாதபடி நிறுத்தி, அவர்களைத் தன்னந்தனியாக்கி, தன் திருமகன் தனக்கு இல்லாமல் போகும் சோகமான உண்மையிலும், எவ்வளவோ அதிகமான அவமானங்கள் மற்றும் கொடிய சித்திரவதைகளின் புயல்வீசுகிற பேரலைகளும் கூட அணைக்க முடியாத சாந்தம், பொறுமை மற்றும் தேவசிநேகத்தின் அற்புதத்தைப் பற்றிய சிந்தனையிலும் கிரகிக்கப் பட்டும், பரவசப்பட்டும் அவர்கள் இருக்கும்படி செய்கிறது. அதனுடைய பக்திக்குரிய உச்சத்தையும், அதன் பரம இரகசியமான விஸ்தாரத்தையும், ஆழத்தையும் தன் சிந்தனையில் எட்டுவது மாமரிக்கு இயலாததாயிருக்கிறது.

அவர்களுடைய வாழ்வு முழுவதிலும், அவர் அவர்களுக்குப் பணிந்திருந்த முப்பது ஆண்டுகளின்போது, அவர் அதிக அளவில் மெய்யாகவே கடவுளாக ஒருபோதும் அவர்களுக்குத் தம்மைக் காட்டிக் கொண்டதில்லை, ஆனால் இப்போது, இந்தக் கணத்தில் ஒரு மனிதனுக்கும் கீழாக அவர் மதிக்கப்படுவதை அவர்கள் காண்கிறார்கள்; அளவற்ற நேசத்திற்குத் தகுதியுள்ளவராக அவர் அவர்களுக்குத் தம்மைக் காண்பித்ததில்லை, ஆனால் இப்போதோ, மிகத் தீவிரமான முறையில் வெறுக்கப்படுபவராக அவர்கள் அவரைக் காண்கிறார்கள். தன் சொந்த இருதயம் தன் நெஞ்சிலிருந்து வெடித்துப் புறப்பட்டுத் தன் திருமகனை நோக்கிப் பறக்கப் போவதாக அவர்கள் உணர்ந்தார்கள். இப்போது எவ்வளவோ அளவற்ற மேன்மையுள்ளவராகவும், எவ்வளவோ அதிகத் தீவிரத் தோடு நேசிப்பவராகவும், எவ்வளவோ அதிகப் பிரியத்தோடு இரக்கம் காட்டுபவராகவும் அவர் அவர்களுக்குத் தோன்றுகிறார். எத்தகைய ஒரு நேசத்தைக் கொண்டு அவர்கள் தன் வாழ்வு முழுவதிலும் அவரை நேசித்தார்கள் என்றால், சகல அர்ச்சியசிஷ்ட வர்களுடையவும், சம்மனசுக்களுடையவும் நேசம் அவர்களுடைய நேசத்தோடு ஒப்பிடப்படும்போது, வெறும் வெளித் தோற்றமாக மட்டுமே இருக்கிறது. என்றாலும் அந்தக் கணத்தில் மாமரி அவரை நேசித்த அளவுக்கு முன்பு ஒருபோதும் அவரை அவர்கள் நேசித்த தில்லை. அந்தக் கணத்தில் இருந்தது போல வேறு ஒருபோதும் அவர்களுடைய முழு ஆத்துமமும், முழு மனதும், முழு இருதயமும் அவரில் முழுவதுமாகப் பொதியப்பட்டிருந்தன. எப்போதும் மிகுந்த கனிவுள்ளதாகவும், மிகுந்த ஆற்றலுள்ளதாகவும், மிகுந்த தீவிரமுள்ள தாகவும், இப்பேர்ப்பட்ட கனிவுள்ள நேசத்தையும், தயவிரக்கத் தையும் காண்பதால் இன்னும் அதிகத் தீவிரமடைவதாகவும் இருக்கும் அவர்களுடைய நேசம், இந்தக் கணத்தில் அதிகக் கனிவுள் ளதாகவும், அதிக வல்லமையும், அதிகத் தீவிரமும் உள்ளதாகி, ஒரு பேச்சு வகைக்கு, அதனுடைய உச்சபட்ச அளவை எட்டுகிறது. கடவுளின் கட்டளை சிலுவையின் அடியில் அவர்களை அசைய விடாமல் நிறுத்தி வைத்திருக்காமல் இருந்திருந்தால், ஒன்றுகூட்டப் பட்ட சகல மனிதர்களின் முயற்சிகளும், யூதர்களின் கோபவெறி முழுவதும் கூட, சேசுநாதரின் சிலுவையை நோக்கி அவர்கள் பறந்துசெல்வதையும், ஓக் மரத்தைச் சுற்றிப் படரும் திராட்சைக் கொடி போல, அவரைச் சுற்றித் தன்னையே பின்னிக் கொள் வதையும், அவரோடு சேர்ந்து அவர்களும் பலியாவதையும் தடுக்கப் போதுமானவையாக இருந்திருக்காது; அவருடைய திரு இருதயத்தின் அளவற்ற தாராளத்தையும், அவருடைய ஆத்துமத்தின் பக்திக்குரிய உயர்வையும், அவருடைய அளவற்ற கருணையையும் வேறு எப்போதையும் விட இப்போது அவர்கள் மிக நன்றாக உணர்கிறார்கள்.

இப்போது, மாமரியின் இருதயம் நேசத்தால் மென்மை யாக்கப்பட்டும் உருக்கப்பட்டும், நேசிக்காமல் இருக்க முடியாதது மாக இருக்கும் இந்த நிலையில், அவர்களுடைய முழு ஆத்துமமும் மிக இனிய உணர்வுகளுக்கும், மிகுந்த கனிவுள்ள பாசங்களுக்கும், மிகுந்த வல்லமையுள்ள பரவசங்களுக்கும் இரையாகியிருக்கும் இந்த நிலையில், நம் ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டவர், ஒரு பேச்சு வçக்கு, அவர்களைப் பிடித்து, நம் தாயாராக இருக்கும்படி அவர்களை நியமித்து, அந்தக் கணத்தில் அவர்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருந்த அந்த மாபெரும் கனிவுள்ள நேச உணர்வை நம்மிது திருப்பும்படி அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ‘‘சேசுநாதரின் சிலுவையின் அருகில் அவருடைய தாயார் நின்றுகொண்டிருந் தார்கள். சேசுநாதர் தம் தாயாரைப் பார்த்து, ஸ்திரீயே, இதோ உம் மகன் என்றார்.'' இது எப்படி இருக்கிறதென்றால், அவர் தம் திருமாதாவிடம்: ‘‘ஸ்திரீயே! மகா அதிசயத்திற்குரிய நேசம் ஒருபோதும் கேள்விப்பட்டிராத கொடிய வேதனையை நீங்கள் உணரும்படி செய்கிறது. ஸ்திரீயே! என் மீதான மகா கனிவுள்ள வையும், மிகுந்த உத்வேகமுள்ளவையுமான நேச உணர்வுகளுக்கு நீங்கள் இரையாகியிருப்பதை நான் கவனிக்கிறேன். உங்களைச் சூழ்ந்துள்ளதும், உங்கள் சுயம் முழுவதையும் நிரப்புவதுமான மிகத் துரிதமானதும், மிக ஆழமானதும், மிகத் தீவிரமானதும், மிக வன்மையானதுமான இந்த நேச உணர்வை என் விசுவாசிகளை நோக்கித் திருப்பும்படி நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன். இதோ, என் சீடனில் என் முழுத் திருச்சபையும் இங்கே இருக்கிறது; இதோ என் சகல விசுவாசிகளும் இங்கே இருக்கிறார்கள்; இப்போது முதல் உங்கள் தாய்க்குரிய அன்பை நீங்கள் அவர்களை நோக்கித் திருப்ப வேண்டும், ஏனெனில் நான் அவர்களை என் இடத்தில் வைக்கிறேன், நான் உங்கள் உண்மையான ஒரே மகனாக இருப்பது எப்படியோ, அப்படியே அவர்களும் இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டும். இதோ உங்கள் மகன். இப்போது முதல் அவர்களில் உங்கள் உண்மையான திருமகனை, உங்கள் சொந்த சேசுவை, நீங்கள் காண வேண்டும்!''

சேசுநாதரின் இந்த வார்த்தைகள் மாமரியின் மனதில் உண்டாக்கிய ஆழ்ந்த பாதிப்பை யாரால் எடுத்துரைக்க இயலும்? அவை அவர்களுடைய இருதயத்தினுள் ஆழமாக இறங்கின, அவை அழக்ஷியாத எழுத்துக்களில் அதன்மீது பதிக்கப்பட்டன, அதற்குக் கிளர்ச்சியூட்டி, அதை உருக்கி, ஒரு தாயின் அனைத்திலும் இனியதும், அனைத்திலும் அதிகக் கருணையுள்ளதுமான இருதய மாக அதை வார்த்தெடுத்தன. அவர்கள் தன்னைத் தாயாக உணர்ந் தார்கள், தன் சேசுவின் மீது அவர்கள் கொண்டிருந்த அந்த அளப்பரிய சிநேகத்தை அவர்கள் நம்மை நோக்கித் திருப்பி, தன் சொந்தக் குழந்தைகளைப் போல் நம்மை அரவணைத்துக் கொண் டார்கள்!

மனுக்குலத்தின் மீது மாமரி கொண்டுள்ள தாய்க்குரிய நேசத்தின் இயல்பு இதிலே அடங்கியிருக்கிறது. அது இரவல் வாங்கப்பட்ட அன்பல்ல. அது சேசுக்கிறீஸ்துநாதரின் மீதே அவர்கள் கொண் டிருந்ததும், நம்மை நோக்கித் திருப்பப்பட்டதும், நம்மை நோக்கிச் செலுத்தப்பட்டதும், நம் மீது பதிக்கப்பட்டதுமான மகா பெரியதும், மிக ஆழ்ந்ததும், மகா பக்திக்குரியதும், உரைக்கப்பட இயலாததுமான நேசமாக இருக்கிறது. நாமும் சேசுகிறீஸ்துநாதரும் இரு வேறு ஜீவியர்களாக நேசிக்கப்படவில்லை, நாம் அவரோடு ஒருவராக ஆக்கப்பட்டிருக்கிறோம், அதை விட மேலாக, நாம், அவருடைய கட்டளையால், மரியாயின் மாசற்ற இருதயத்தில், அவருடைய இடத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம்; சர்வேசுர னுடைய மிகுந்த மகிமையுள்ள திருமாதாவாக இருக்கிற அவர்கள், மனிதர்களின் மகா நேசமுள்ள திருத்தாயாராக ஆக்கியிருக்கிறார்கள். கடவுளின் கட்டளையால், அவர் மீது தான் உணர்ந்த அதே நேசத்தைக் கொண்டு அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள்!