இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மனிதாவதாரத்திற்குப் பின் மாமரியின் அசாதாரண வரப்பிரசாதம்

முந்தின அத்தியாயங்களில் பேசப்பட்ட ஒப்பற்ற வரப் பிரசாதக் குவியலுக்குப் பிறகு, மாமரி மேற்கொண்டு எந்த வரப்பிரசாத்தையும் பெறுவது சாத்தியமில்லை என்று தோன்று கிறது. ஆனால் அர்ச். தாமஸ் அக்குயினாஸோடு சேர்ந்து, வரப்பிரசாத நிறைவில் மூன்று வகைகள் உள்ளதாக நாம் அனுமானிக்கலாம் என்று நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அவை: ஆயத்தத்தின் நிறைவு, உருவாக்கத்தின் நிறைவு, இறுதி நிறைவு ஆகியவை ஆகும். இந்த அத்தியாயத்தில் நாம் இரண்டாவது வகையைப் பற்றி--அதாவது, வரப்பிரசாதம் பெற்றுக்கொள்ளக் கூடிய சுபாவமான முழு உத்தம தனத்தையும், ஒரு பேச்சு முறைக்கு, அது தன் சொந்த சுபாவத்தில் எதைக் கொண்டு தன்னையே அலங்கரித்துக் கொள்ள வல்லதாக இருக்கிறதோ, அந்த சகல அலங்காரங்களையும், இறுதி அழகுபடுத்தல்களையும் பற்றிநாம் பேசுவோம்.

இந்த சுபாவமான அலங்காரத்தின் முதல் ஆதாரம், தத்துவ ஞான ஆசிரியர்களால், ‘‘எக்ஸ் ஓப்பெரே ஓப்பெராத்தோ''-- அதாவது, அனைவரிலும் அதிக மகிழ்ச்சியான ஆத்துமம் தனது நற்செயல்களில் வெளிப்படுத்திய அக்கறையின் காரணமாக அன்றி, தமது பார்வைக்கு எது பிரியமாயிருந்ததோ, அதை அந்தப் பூரண மகிழ்ச்சியுள்ள ஆத்துமத்தில் செயல்படுத்திய கிறீஸ்துநாதரின் காரணமாக வழங்கப்பட்ட வரப்பிரசாதமாக இருக்கிறது. சில வேறுபட்ட தலைப்புகளின் கீழ் இந்த வரப்பிரசாதக் குவியலை சேகரிக்க நாம் முயலுவோம். உதாரணமாக, மாமரியின் கன்னிமை யுள்ள அடைபட்ட தோட்டத்தினுள் தாம் முதன்முதலாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, அவர்களுடைய ஆத்துமத்திற்குள் நித்திய வார்த்தையானவர் பொழிந்த வரப்பிரசாதத்தின் பாதாளத்தை யார் புரிந்து கொள்ள முடியும்? தனது மாசற்ற திருவுதரத்தில் அவர்கள் அவரைச் சுமந்திருந்த அந்த ஒன்பது மாதங்களின் ஒவ்வொரு கணத்திலும் அவர்களது ஆத்துமத்தில் பொழியப்பட்ட அதே வரப்பிரசாதப் பெருவெள்ளத்தின் ஆழத்தை யார் அளந்தறிய முடியும்? அவதரித்த வார்த்தையானவர் அந்த முத்திரையிடப் பட்ட தோட்டத்தினுள் ஒரு ஜீவ நதியைப் போலவும், தெய்வீக சீராட்டல் களின் ஒரு நீரோடையைப் போலவும், பரலோக இலட்சணங்களின் ஒரு பாதாளத்தைப் போலவும், அளவற்ற வரப்பிரசாதத்தின் ஒரு பெருங்கடலைப் போலவும், அளவற்ற அர்ச்சியசிஷ்டதனத்தின் ஒரு கடலைப் போலவும் தங்கியிருந்து, அவர்களது ஆன்மாவையும், அவர்களது சத்துவங்களையும், அவர் களது இருதயத்தையும் சூழ்ந்திருந்து, பொங்கிப் பெருக்கெடுத்து, அவர்களது திருச்சரீரத்தினுள் வழிந்தோடினார் என்று நமக்குத் தோன்றுகிறது.

தெய்வீகத்தின் பரலோகக் காட்சியில் பொதியப்பட்டவர் களாக மாமரி கடவுளின் நித்திய மகிமையையும், அவரது அளவற்ற, மறைந்த வாழ்வையும், மனிதாவதாரத்தின் தன்மை யையும், சாராம்சத்தையும் கண்டு, ஒரு கெருபிமின் பார்வையை விட அதிகப் பரவசமுள்ள பார்வையைக் கொண்டும், ஒரு பக்திச்சுவாலக ருடையதை விட அதிகம் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளோடும் அவற்றைப் பற்றிப் பிரமிப்படைந்தபோதும், கன்னியர்களின் இராக்கினியாக அவர்களுக்கு முடிசூட்டுகிற அந்த ஒப்பற்ற, பக்திக்குரிய சலுகைக்கு பங்கம் வராமலே, ஒரு கண்ணாடியை ஊடுருவிச் செல்லும் சூரியக் கதிரைப் போல அவதரித்த வார்த்தை யானவர் தன்னிடமிருந்து பிறந்த விதத்தை அவர்கள் கண்டபோதும் மாமரியின் ஆத்துமத்தினுள் தேவ வார்த்தையானவர் பொழிந் தருளிய வரப்பிரசாதப் பெருங்கடலின் ஆழத்தை யார் நிதானித்துணர முடியும்? தேவ மகவானவர் முதல் முறையாகத் தம் கண்களைத் திறந்து, மாமரியின் பரவசமுள்ள, ஆராதிக்கிற கண்களை மழலைக்குரிய பார்வையோடு உற்றுநோக்கிய போது, அந்த மாசற்ற இருதயத்தினுள் பாய்ந்தோடிய வரப்பிரசாதங்களின் நீரோடைகளை யார் ஆழங்காண முடியும்? அவர் அவர்களோடு இருந்து, அவர்கள் தாய்க்குரிய பாசமிக்க அன்போடும், அதே வேளையில் அனைத்திலும் தாழ்ந்ததாகத் தன்னையே மதித்த சிருஷ்டியின் அச்சத்தோடும், மரியாதையோடும், ஆராதனையோடும், சுய அர்ப்பணத்தோடும் தமக்குச் செய்த பணிவிடைகளை ஏற்றுக் கொண்ட அந்த முப்பது நீண்ட வருடங்களின் ஒவ்வொரு கணத்திலும் மாமரியின்மீது பொழியப்பட்ட வரப்பிரசாதங்களை யார் ஆழங்காண முடியும்? அவரது பொது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், அவருடைய மூன்று நாள் துன்பங்களின் ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதங்களையும், தேவ தாயாருக்கு மட்டுமே தகுதியுள்ளதாயிருந்த வீரத்துவமுள்ள திட தைரியத்தின் பெருந்தன்மையோடு சிலுவையடியில் நின்றிருந்தபோது, அவரது மரண அவஸ்தையின் ஒவ்வொரு கணத்திலும் அவரது இரத்தம் வடியும் திருக்காயங்களிலிருந்தும், திருவிலாக் காயத்திலிருந்தும் மாமரி பெற்றுக்கொண்ட வரப்பிர சாதங்களையும் யாரால் அளவிட முடியும்? அந்நேரத்தில் மாமரி நம் இரட்சணியத்தின் தன் திவ்ய சுதனோடு இணைந்து ஒத்துழைப் பவர்கள் என்ற தன்னுடைய நிலைக்குத் தகுதியுள்ள விதத்தில் தன்னையும் பலியாக்கினார்கள், ஆயினும் இதற்காக மிக பிரமாண்டமானதும், மிகக் கடுமையானதும், மிகக் கொடிய வேதனையளித்ததுமான துக்கத்தை அவர்கள் தாங்கி னார்கள், இவ்வாறு வேதசாட்சிகளின் இராக்கினி என்னும் மகத்துவத்திற்கு அவர்கள் உயர்த்தப்பட்டார்கள்; மேலும் உயிர்ப்பிலும், பரலோக ஆரோகணத்திலும் அவர்கள் பெற்ற வரப்பிரசாதங்களை யாரால் அறிய முடியும்?

இன்னும் அதிகமாக, சேசுநாதரின் பரலோக ஆரோகணத் திற்குப் பிறகு மாமரி 24 ஆண்டுகள் உலகில் வாழ்ந்தார்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்தக் காலத்தில், ஆதிக் கிறீஸ்தவர் களின் வழக்கப்படி மாமரி தினமும் திவ்ய நன்மை உட்கொண் டார்கள்; இதன் விளைவாக, அவர்கள் தன் திவ்ய சுதனை 8,850 தடவைகளுக்கும் அதிகமாகப் பெற்றுக்கொண்டார்கள். இனி, பீடத்தின் தேவத்திரவிய அனுமானத்தை எவ்வளவு பக்தியுள்ள மனநிலையோடு ஒருவன் அணுகிச் செல்கிறானோ, அவ்வளவு அதிகமான வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்கிறான் என்பது அனைவரும் அறிந்ததே. மாமரியின் நற்கருணை ஆயத்தமோ மனித கற்பனைக்கு எட்டாத மேன்மையுள்ளதாக இருந்தது. அப்படி யானால், மனிதனாக அவதரித்தவரும், தேவத்திரவிய அனுமானத் தில் தன்னில் வருபவருமான தனது திருமகனின் திரு இருதயத் திலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதம், அர்ச்சியசிஷ்டதனம், இன்பங்கள், நேசம் ஆகியவற்றின் எப்பேர்ப் பட்ட பெரும் பொக்கிஷங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள்! அவர் இந்த மூடுதுகில்களின் கீழ் தமது பிரசன்னத்தை அவர் களிடமிருந்து மறைத்துக் கொண்டார், ஆனால் தம்முடைய அளவற்ற நேசத்தையும், சீராட்டல்களையும் அவ்வாறு அவர்களிட மிருந்து மறைத்துக் கொள்ளவில்லை! தனது மாக்னிஃபிக்காத்தைப் பாடிய போதும், தனது சொந்த மாசற்ற திருச்சரீரத்தில் தனது திருமகனின் திருச்சரீரத்தின் தொடர்பையும், தொடுதலையும் அவர்கள் உணர்ந்தபோதும், அது தன் சொந்த மாம்சம் என்று அவர்கள் உணர்ந்தபோதும் அனுபவித்ததை விட எவ்வளவு மேலான விதத்தில் திவ்ய நன்மை உட்கொண்ட போது அவர்கள் அக்களித்து, அகமகிழ்ந்து களிகூர்ந்திருப்பார்கள்! திவ்ய நன்மை உட்கொண்ட போது, தான் அவருக்கு அளித்த மகா விலையேறப்பெற்ற திரு இரத்தம் மீண்டும் தனக்குள் வந்ததை எண்ணியும், தனது திருவுதரத்தில் பல வருடங்களுக்கு முன் அவரைச் சுமந்தபோது தான் அனுபவித்த மறைவான இன்பங்களையும், நேசப் பரவசங்களையும் நினைவுகூர்ந்தபோதும் எப்பேர்ப்பட்ட பேரின்பம் அவர்களை நிறைத்திருக்கும்!

ஆனால் இவையெல்லாம் மனித புத்திக்கெட்டாத அளவுக்கு மிக உயர்ந்தவை, மனித வார்த்தைகளுக்கோ இன்னும் அப்பாற் பட்டவை. மாமரியின் வரப்பிரசாதம் மற்றும் இலட்சணங்களைப் பற்றி நம்மால் முடிந்ததையெல்லாம் எழுதி விட்டோம். ஆயினும் நாம் சொன்னதெல்லாம் ஏறக்குறைய ஒன்றுமேயில்லை என்ற அதிருப்தியோடு இதை நிறுத்துகிறோம். இன்னும் அளவற்ற விதமாக இதைப பற்றி எழுதுவது அவசியம் என்று உணர்கிறோம். ஒரு நாள் மாசற்றவர்களும் இனியவர்களுமாகிய நம் திருமாதா, கடவுளின் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் இராச்சியங்களின் மீது அர்ச்சியசிஷ்டதனத் தினுடையவும், தேவ அழகினுடையவும் இராக்கினியாக அரசாளும் அந்தப் பரலோக வாசஸ்தலத்தில் இவை அனைத்தினுடையவும் காட்சியை நமக்குத் தருவார்கள் என்று நம்பியிருக்கிறோம்.

மாமரியின் மகிமையைப் பற்றிப் பேசும்போது, வரப் பிரசாதத்தின் கடைசி உத்தமதனத்தைப் பற்றி நாம் பேசுவோம்.