இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

தேவ சுதனோடு மாமரிக்குள்ள உறவு

மாமரி தேவ சுதனின் திருத்தாயாராக இருக்கிறார்கள் என்று நாம் மிக அடிக்கடி கூறியிருக்கிறோம். இந்த உறவுதான் ஒரு சிருஷ்டிக்கும், ஒரு தேவ ஆளுக்குமிடையே மனிதன் கற்பனை செய்யக் கூடிய அனைத்திலும் பெரியதும், அனைத்திலும் அதிக நெருக்கமானதுமான உறவாக இருக்கிறது. மனித கற்பனைக்கு எட்டக்கூடிய, சாத்தியமான எல்லா ஐக்கியங்களையும் நாம் ஆராய்ந்து பார்த்தாலும், மாமரிக்கும் கடவுளின் திருக்குமார னுக்குமிடையே உள்ளது போன்ற மிக மேலானதும், மிக அந்நியோந் நியமானதுமான ஐக்கியத்தை நாம் ஒருபோதும் காண முடியாது.

உதாரணமாக, ஆன்மா சரீரத்தோடு மிக நெருக்கமான ஐக்கியத்தில் ஒன்றிக்கப்படுகிறது, என்றாலும் மரணம் எளிதாக இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து விடுகிறது. நேசிக்கும் ஆன்மா மாற்றத்தின்படி தன்னால் நேசிக்கப்படும் பொருளாகவே ஆகி விடு கிறது என்ற தத்துவ ஞான வாக்கியத்தின்படி, ஆத்துமம் தான் நேசிக்கும் வஸ்துவோடு கொள்ளும் ஐக்கியம் இன்னும் அதிக நெருக்க மானதாக இருக்கிறது; என்றாலும், ஒன்றோடொன்று என்றென்றைக்குமாகப் பின்னப்பட்டவையாகத் தோன்றிய இருதயங்களை வெறுப்பும் கோபமும் பிரித்து விடும்போது, இந்த ஐக்கியமும் முறிந்து போகிறது. ஆனால் பெற்றவருக்கும் குழந் தைக்கும் நடுவில் இருக்கும் ஐக்கியத்தை விட அதிக நெருக்க மானதும், அதிக நிரந்தரமானதுமான உறவை யாரும் கற்பனை செய்யவும் முடியாது.

இதை மனிதாவதாரம் மற்றும் அது மாமரிக்கும் அவர்களது திருமகனுக்குமிடையே ஏற்படுத்திய அந்நியோந்நிய வாழ்வு ஆகிய இரண்டு வெவ்வேறு அம்சங்களில் நாம் சிந்திப்போம்.

மனிதாவதாரத்தில் இதுபற்றி நாம் சிந்திப்பது ஏனெனில் மாமரியின் மாம்சம் தேவ சுதனின் மாம்சமாக ஆனது என்பதால் தான். ‘‘காரோ க்றீஸ்தி காரோ எஸ்த் மரியே'' என்கிறார் அர்ச். அகுஸ்தினார். சேசுகிறீஸ்துநாதரின் உற்பவத்திற்காகத் தன் சொந்த இரத்தத்திலிருந்து மாமரி தந்த பொருண்மை, தேவ வார்த்தை யானவரோடு தேவ-மனித ஒன்றிப்பின்படி ஒன்றிக்கப்பட்ட பிறகு எந்த இயல்பான மாற்றத்தாலும் அது ஒருபோதும் மாற்றப்படவே யில்லை. ‘‘எத் குவாம்விஸ் க்ளோரியா ரெசுரெக்ஸியோனிஸ் ஃபுவேரித் க்ளோரிஃபிக்காத்தா, ஏயாதெம் தாமென் மான்ஸித் குவே அஸ்ஸும்தா எஸ்த் தே மரியா'' (அர்ச். அகுஸ்தினார்).

‘சித்தங்களின் ஐக்கியத்தால் கடவுள் அனைவரோடும் இருக்கும் அதே சமயம், அவருடைய சொந்தப் பொருண்மையும், மாமரியின் பொருண்மையும் ஒரே பொருண்மையை, அதாவது, சேசு கிறீஸ்துநாதரை உருவாக்கும் அளவுக்கு அவர் மாமரியின் சித்தத்தோடு மட்டுமின்றி, அவர்களது சொந்த மாம்சத்தோடும் தம்மை இணைத்துக்கொண்டார். அந்த அளவுக்கு, மிக அந்நியோந்நியமான ஓர் ஐக்கியத்தால் அவர் ஒரு தனிப்பட்ட முறையில் மாமரியில் இருக்கிறார்'' என்று அர்ச். பெர்னார்ட் கூறுகிறார். இதே பொருளில் அர்ச். தமியான் இராயப்பர் பேசும்போது, ‘‘எல்லாவற்றிலும் மூன்று வெவ்வேறு விதங்களில் இருக்கிற கடவுள், திவ்ய கன்னிகையில் நான்காவதான ஒரு முறையில்--அதாவது, ஒத்த தன்மையால் -- அவர்களில் இருந்தார். ஏனெனில் அவர்கள் இருப்பது போலவே அவர் இருக்கிறார்'' என்கிறார் ("ளீற்து ம்eற்வி ஷ்ஐ லிதுஐஷ்ணுற்வி reணுற்வி விஷ்மி மிrஷ்ணுற்வி துலிdஷ்வி ).

இந்த இரத்தத்தின் ஒத்த தன்மை, சேசுக்கிறீஸ்துநாத ருக்கும் மாமரிக்குமிடையே, அவர்களுடைய உருவாக்கம், உடற்கூறுகள், நாட்டங்கள், விருப்பு வெறுப்புகள், புண்ணியங்கள் ஆகியவற்றில் ஓர் ஒத்த தன்மை இருப்பதை மறைமுகமாகக் குறித்துக் காட்டுகிறது; இதற்குக் காரணம் இந்த இரத்த உறவு மிக அடிக்கடி இத்தகைய ஓர் ஒத்த தன்மையை உருவாக்குகிறது என்பது மட்டுமல்ல, மாறாக, மரியாயின் காரியத்தில், அவர் களுடைய தாய்மை முற்றிலுமாக சுபாவத்திற்கு மேலான ஒரு நிதர்சனமாக, நிரம்பி வழிகிற வரப்பிரசாதத்தின் விளைவாக, இருப்பதால், இந்த வரப்பிரசாதம், கூடக் குறைய, சுபாவத்தின் இந்தப் பொது விதியை அடிப்படையாகக் கொண்டு, எல்லாவற்றிலும் அவர்கள் தன் திவ்விய குமாரனின் உயிருள்ள பிம்பமாகவும், சித்திரமாகவும் இருக்கும்படியாக, அது அவர்களை வளர்ச்சி பெறச் செய்தது. இதன் காரணமாக, மாமரியைக் காண்பவன் யாராயினும், மிக அற்புதமாகவும், ஒப்பற்ற விதமாகவும் உருவாக்கப்பட்ட சேசுக்கிறீஸ்துநாதரின் ஒரு பிரதிபிம்பத்தை, அவருடைய சாயலை, அவர்களில் கண்டு பிரமிக்கும்படியாக, இந்த வரப்பிரசாதம் அவர்களை முற்றிலும் அவராகவே மாற்றி யமைத்தது.

‘பிதாவானவர் தமக்குச் சரிசமானமாகவும், தம்மோடு ஒரே பொருளானவராகவும், தம்முடைய முழுச் சாயலானவராகவும், தம்முடைய மகிமையின் பேரொளியாகவும் இருக்கும்படி திருச்சுதனை ஜெனிப்பிக்கிறார்; பிதாவானவர் எப்படியோ, அப்படியே சுதனும் இருக்கிறார். பூலோகத்தில், சுபாவ மானதெல்லாம் அதிசயித்துப் போகும் வகையில், திவ்ய கன்னிகை தன் சொந்த சிருஷ்டிகரையே ஈன்றெடுத்தார்கள், அவரோ சர்வேசுரனாக இருக்கிறார், அவர் தம்முடைய மனுஷீகத்தின் காரணமாக, தம்முடைய தாயாரோடு ஒரே பொருளான அவர்களுடைய வாரிசாக இருக்கிறார்; இங்கே, தாயார் எப்படியோ, அப்படியே குமாரனும் இருக்கிறார்!'' என்று அர்ச். அகுஸ்தினார் (20ம் பிரசங்கம்) கூறுகிறார்.

இதே தாய்மை என்னும் உறவு மாமரிக்கும், அவர்களுடைய திருக்குமாரனுக்கும் இடையே, பரஸ்பர உரையாடல்களுக்கும், வாழ்வின் ஐக்கிய நிலைக்குமான ஓர் அந்நியோந்நிய உறவை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இருவரும் பரஸ்பரம் தங்கள் இருதயங் களையும், இரகசியங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஐக்கிய நிலையையும் அது ஏற்படுத்த்யது. இதன் காரணமாக, சேசுநாதரின் நினைவுகளையும், உணர்வுகளையும், நாட்டங்களையும், ஆசைகளையும், நோக்கங்களையும் பிரதிபலிக்கிற கண்ணாடியாக மாமரி இருந்தார்கள். அவரோ, தம் பங்கிற்கு, இன்னும் மேலரான விதத்தில், ஒரு மாசற்ற கண்ணாடியில், மாமரியின் ஆத்துமத்தில் இருந்த மாசற்றதனம், நேசம், அர்ப்பண உணர்வு, மிகப் பெரும் சிநேகம் ஆகிய அற்புதங்களைப் பிரதிபலிப்பவர் ஆனார். ஆகவே, மாமரி புறஜாதியாரின் அப்போஸ்தலரை விட அதிக காரணத் தோடு: ‘‘நான் ஜீவிக்கிறேன், ஆயினும் நானல்ல, சேசுநாதரே என்னில் ஜீவிக்கிறார்'' என்று உரிமையோடு சொல்லக் கூடியவர் களாக இருந்தார்கள்.

இறுதியாக, இதே தாய்மை உறவு, மாமரிக்கு சேசுக்கிறீஸ்து நாதரின் மீது ஒரு வகையான அதிகாரத்தை, ஒரு தாய் தன் சந்ததியின் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தை, அவர்களுக்குத் தந்தது. நம் ஆண்டவர் சர்வேசுரனாயிருந்தார் என்பது உண்மைதான், அந்நிலையில் எந்த சிருஷ்டியும் அவர் மீது எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்க முடியாது என்பதும் உண்மைதான். இதன் காரணமாக, அவருடைய தெய்வீக ஆள்தன்மையோடு மட்டுமே நம்முடைய தியானத்தை நாம் நிறுத்திக் கொள்வோம் என்றால், மாமரி சேசுநாதரின் மீது எந்த அதிகாரத்திற்கும் உரிமை பாராட்ட முடியாது.

ஆனால், இது நித்திய பிதாவானவரின் காரியத்திலும் கூட, உண்மையாகவே இருக்கிறது. கண்டிப்பான முறையில் பேசும்போது, அவர் தம்முடைய திருச்சுதனின் ஆள்தன்மையில் எந்த அதிகாரத்தையும் தம் உரிமைப்படி கொண்டிருக்க முடியாது. ஏனெனில் தேவ சுதனானவர் தேவ பிதாவோடு சரிசமானமானவராகவும், அவரோடு ஒரே பொருளானவராகவும் இருக்கிறார்.

ஆனால் நித்திய பிதாவானவர் தம்முடைய வார்த்தையானவரின் மூல ஆதாரமாக இருக்கிறார் என்ற முறையில், அவர் தம் திருச்சுதனின் மீது ஒரு வித அதிகாரத்திற்கு உரிமை பாராட்ட முடியும். இது, பிதா சுதனை விட மேலானவர் என்ற வகையிலோ, சுதன் பிதாவுக்குக் கீழ்ப்பட்டவர் என்ற முறையிலோ வரும் அதிகாரம் அல்ல. மாறாக, இது ஓர் ஒழுங்கின் அதிகாரமாக இருக்கிறது. இதன் காரணமாக, தேவ சுபாவத்தில் பிதாவுக்குத் தாழ்ந்தவர் என்ற முறையில் அல்லாமல், தம்முடைய ஆள்தன்மைக்காகப் பிதாவைச் சார்ந்திருக்கிறவர் என்ற முறையில் அவர் பிதாவின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறார். அப்படியே, மாமரியும், எந்த விதத்திலும் தன்னுடைய திருக்குமாரனுக்கு மேற்பட்டவர்கள் என்பதாலோ, அல்லது குறைந்தபட்சம் அவருக்குச் சமமானவர்கள் என்பதாலோ அவர் மீது எந்த அதிகாரத்திற்கும் உரிமை பாராட்ட இயலாது என்றாலும் கூட, தான் அவருடைய தாயாராக இருப்பதால், அவர் மீது அதிகாரம் செலுத்த உரிமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, சேசுநாதர் தம்முடைய மனித சுபாவத்தைப் பொறுத்த வரை, தம்முடைய திருமாதாவைச் சார்ந்திருக்க வேண்டியவரானார் என்பதன் காரணமாக, அவர் மாமரியின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு ஆள், தான் அதிகாரம் கொண்டிருக்க உரிமை பாராட்டுகிற மற்றொரு ஆளை விட, தன் சுபாவத்தில் அல்லது தகுதியில் உயர்ந்திருக்க வேண்டும் என்ற அவசியமேயின்றி, தனக்கு மேற்பட்ட ஓர் ஆளின் மீதும் அதிகாரம் கொண்டிருப்பது சாத்தியம்தான் என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஒரு நியாயமான பதவியின் (இங்கே, தெய்வீகத் தாய்மை) அடிப்படையில், இந்த உரிமை மாதாவுக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது போதுமானது. மூலாதாரம் அல்லது பெற்றவள் என்னும் பதவி அதிகார உரிமையை ஏற்படுத்தப் போதுமானதாக இருக்கிறது. யார் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்கிறாரோ அவர், தம்மீது அதிகாரம் செலுத்துபவருக்கு மேற்பட்டவராக இருப்பது, இந்த அதிகாரத்திற்கு முற்றிலும் அந்நியமான காரியமாகவே இருக்கிறது.